இந்தியாவின் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்பில் தங்கியுள்ளது.

srilanka india partners

இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு

ஈழத்தமிழரும் இந்தியாவும் பாரம்பரிய நண்பர்கள். ஒருவரின் நலன் பரஸ்பரம் இன்னொருவரில் தஙக்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்பில் தங்கியுள்ளது.

ஈழத்தமிழரின் பிரச்சனையானது தோற்றத்தில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையேயான பிரச்சனை போல்காணப்பட்டாலும் அது அடிப்படையில் இந்திய உபகண்டப் புவிசார் அரசியல் பிரச்சனையின் வெளிப்பாடாகும்.

ஈழத்தமிழர் புவிசார் அரசியல் பிரச்சனையின் கைதிகளாய் உள்ளனர் என்பதே உண்மை.

வரலாற்று ரீதியாக கடந்த 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து படையெடுப்புக்களும் அரசியல் ஆதிக்கப் பரவலும் அருகிலிருக்கும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்பட்டு வந்ததால் சிங்கள-பௌத்த இனத்தவர்களிடம் இந்திய எதிர்ப்புவாத சிந்தனை ஆழ வேரூன்றியுள்ளது. சிங்களவர் தமது முதல் எதிரியாகவும் தமக்கான முதலாவது சவாலாகவும் வரலாற்று அடிப்படையில் இந்தியாவையே கருதிவருகின்றனர்.

இந்நிலையில் சிங்களவர் ஈழத்தமிழரை இந்தியாவுடன் இணைத்துப் பார்பப்தால் நவீன வரலாற்றில் இந்திய ஆதிக்கம் இலங்கையில் பரவுவதற்கு ஈழத்தமிழர் கருவியாக அமைவர் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை சிங்கள இனமும் சிங்கள அரசும் ஈழத்தமிழர் மீது புரிந்து வருகிறது. அதாவது சிங்களவரிடம் காணப்படுகின்ற வரலாற்று ரீதியான இந்திய எதிர்ப்புவாதத்தின் வெளிப்பாடே ஈழத்தமிழர் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறையாகும்.

இலங்கைத்தீவில் ஈழத்தமிழரை ஒழித்துவிட்டால் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் பரவுவதற்கான அடிப்படை வாய்ப்பு இந்தியாவிற்கு இல்லாது போய்விடும் எனக்கருதி ஈழத்தமிழரை ஒழிப்பது அல்லது அரசியல் மற்றும் குடியடர்த்தி தீதியில் பலவீனமான நிலைக்கு உள்ளாக்குவதற்கு ஏற்ப ஈழத்தமிழரை சிதறடிப்பது என்ற இறுதி இலட்சியத்தை நோக்கி சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்கள அரசின் அனைத்து அரசாங்கங்களும் செயற்பட்டு வருகின்றன.

இதில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துச் சிங்கள கட்சிகளும், சிங்களத் தலைமைகளும் ஓரே இலட்சியத்துடனும், ஓரே இறுதி இலக்குடனுமான ஆனால் காலகட்டத் தேவைக்கேற்ற வேறுபட்ட அணுகுமுறைகளுடன் செயற்பட்டு வருகின்றன என்பதே உண்மை.
ஈழத்தமிழரை அரசியல் ரீதியிலும் மற்றும் குடியடர்த்தி ரீதியிலும் பலமற்றவர்களாக்கிவிட்டால் அதன் பின் இந்தியாவிற்கு எதிரான எந்தொரு அந்நிய வல்லரசுடனும் சிங்கள அரசு கூட்டுச்சேர்ந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட முடியும்.

இந்தியாவிற்கு அருகில் கடல்வழியே இந்தியாவிற்கான வாசற்படியில் கேந்திர முக்கியத்துவம் வாயந்த புவியியல் இட அமைவை ஈழத்தமிழரின் தாயகமும் அவரின் குடியமர்வும் கொணடுள்ளன. ஆதலால் இந்தியாவைச் சூழ்ந்த பரந்த கடற்பரப்பில் அரபிக்கடல் வங்களாவிரிகுடாவை உள்ளடக்கிய பரந்த கடற்பரப்பில் இந்தியாவின் பாதுகாப்புடன் அச்சாணியாய் ஈழத்தமிழரும் அவர்களின் மண்ணும் அமைந்திருப்பதைக் காணலாம். அதேவேளை விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாதவகையில் ஈழத்தமிழரின் பாதுகாப்பும் இந்தியாவின்கையில் உள்ளது. அதாவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஈழத்தமிழரின் குடியடர்த்தி குறையாத அரசியல் பலமும் பாதுகாப்பும் அவசியம். அதேவேளை ஈழத்தமிழரின் பாதுகாப்பிற்கும் இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் இந்தியாவின் பலமும் பாதுகாப்பும் அவசியம்.

இந்நிலையில் ஈழத்தமிழருக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நட்புறவு ஓங்கி வளரவேண்டிய பரஸ்பர தேவையும் அவசியமும் இருக்கிறது. பாரம்பரியமாக இந்தியாவுடனான தொப்புள்கொடி உறவுடனும், நெருக்கமான கலாச்சார உறவுடனும் பின்னிப்பிணைந்த அரசியல் வேட்கையுடனும் ஈழத்தமிழர் இந்தியாவின் நண்பர்களாய் இருந்துவருகின்றனர். ஆனால் சிங்கள அரசும்பதவிக்குவரும் அனைத்து சிங்கள அரசாங்கங்களும் பாரம்பரியமாக இந்தியாவிற்கு எதிரான நிலையிலேயே செயற்பட்டு வந்துள்ளன.

இலங்கையில் எந்தவொரு சிங்களகட்சியும் ஒருபோதும் இந்தியாவிற்குச் சார்பாக இருந்தது இல்லை. சுதந்திரகாலத்தின் ஆரம்பம் தொட்டே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களாக இருந்தால் என்ன, சுதந்திர கட்சி அரசாங்கங்களாக இருந்தால் என்ன, சிங்கள அறிஞர் குழாமாக இருந்தால் என்ன, சிங்கள ஊடகங்களாக இருந்தால் என்ன அவை அனைத்தும் இந்திய எதிர்பபு நாடுகளுடன் சார்பாகவும் ஆதரவாகவும் செயற்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா பாகிஸத்தான் யுத்தங்கள் மற்றும் இந்திய – சீனாயுத்தம் போன்ற யுத்தங்களின் போதும் இந்து சமுத்திரத்தில் வல்லரசுகளின் இராணுவ போட்டிகள் தலையெடுக்கும் போதும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு எதிராகவே செயற்பட்டுவந்துள்ளனர்.

சுதந்திர இலங்கையின் முதலாது அரசாங்கமான டி.எஸ்.சேனநாயக தலைமையிலான ஐக்கியத் தேசியகட்சி அரசாங்கம் இந்திய ஆட்சியாளர்களின் மனதில் சினத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்திய எதிர்பபுக் கொள்கையை தெளிவாக பின்பற்றியது. இதேபோல பனிப்போர் காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் இந்தியாவிற்கு சவால்விடும் வகையிலான இந்திய எதிப்புக் கொள்கையை பின்பற்றியது.

சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலானஅரசாங்கங்கள் 1962 ஆம் ஆண்டு இந்தியா – சீனா யுத்தத்தின் போதும் 1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் முறையே சீனாசார்பு, பாகிஸத்தான் சார்பு நிலைப்பாட்டைக்கொண்டிருந்தன என்பது கண்கண்ட உண்மைகளாகும்.

இராஜபகஷ் அரசாங்கம் சீனாவுடன் இராணுவ கூட்டுக்கு போகக்கூடிய அளவிற்கு சீனசார்பு கொள்கையைப் பின்பற்றியது. இந்தியாவிற்கு எதிரான சீனாவின் கேந்திர ரீதியான சுற்றிவளைப்பு (Encirclement) இபொருளாதார ரீதியிலான அணியமைப்பு (Envelopment), இந்தியாவைச் சூழ உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் வியூகம் (Entanglement) என்ற சீனாவின் இந்து சமுத்திரம் சார்ந்த நீண்டகால நோக்கிலான மூலோபயத்தின் நடுநாயகமாக சிங்கள அரசு இக்காலகட்டத்தில் தன்னை ஆக்கிக் கொண்டது.

மேற்படி இந்தியாவிற்கு எதிரான சீனாவின் நீண்டகால நோக்கம் கொண்ட மூலோபாயத்தின் முதுகெலும்பாய் விளங்கிய இராஜபக்ஷ அரசாங்கத்தை தற்போது ஈழத்தமிழர் தமது வாக்குப் பலத்தால் மாற்றியதன் மூலம் மேற்படி மூலோபாயத்தின் முதுகெலும்பில் ஓங்கி ஓர் அடி விழுந்துள்ளது. இங்கு இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக சிங்கள அரசியலில் உள்ள குடும்ப ஆதிக்கச் சக்திகளிடையே காணப்பட்ட போட்டியின் விளைவாக சிறிசேன-சந்திரிகா-ரணில் அரசாங்கம் தன்னை சீனசார்பு அல்ல என காட்டி இந்தியாவின் உடனடி ஆதரவைப் பெறும் அரசியல் கபடத்தை கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவர்களும் சீன சார்பு மற்றும் இந்திய எதிர்ப்புவாத கொள்கைகளைக் கொணட்வர்களே. தருணம் வரும் போது தம்மை அவர்கள் ஆட்சியில் நிலைநிறுத்தியபின் அவர்களின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு முதன்மைபெறும்.

இங்கு பதவிக்கு வந்துள்ள இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள வார்த்தைகளை அப்படியே பார்ப்போம்…
சில பத்தாண்டுகளுக்கு முன் பண்டாரநாயக்காவால் பின்பற்றப்பட்ட முன்னைய அணிசாரா கொள்கைக்கு நாங்கள் திரும்பிச் செல்வோம். இக்கொள்கையை ராஜபக்ஷ புறக்கணித்தார். எமது முதலாவதும், பிரதானமானதுமான ஈடுபாட்டுக்குரிய நாடு இந்தியா. ஆனால் அதேவேளை நாங்கள் சீன முதலீடுகளுக்கு எதிரானவர்களும் அல்ல. நாங்கள் சீனாவுடனும் நல்லுறவை பின்பற்றுவோம். இந்தியாவுடனும் சீனாவுடனும் நாங்கள் சம அளவிலான நல்லுறவைவிரும்பி நிற்கிறோம். என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது.

“We will revert to the old, nonaligned policy as adopted by Bandaranaike decades ago. Rajapaksha ignored this policy. India is our first, main concern. But we are not against Chinese investment either. We will maintain good relations with China too… We want equally good relations with India and China” – Sirisena interview to the Hindustan Times. 9th January 2015.)

ராஜபகஷ்வை எதிரத்து தம்மை நிலை நிறுத்துவதற்கு ஏற்றவகையில் இந்தியாவுடனான நல்லுறவு பற்றி அதிபர் சிறிசேன மெருகானவார்த்தைகளை கூறியுள்ள போதிலும் அவரது கூற்றை இங்கு இராஜதந்திர மொழியில் பிரித்துப் பார்த்தால் நாங்கள் இந்தியாவுக்கு நெருக்கமாகவும் இருக்கமாட்டோம், சீனாவிற்கு தொலைவிலும் இருக்கமாட்டோம் என்று கூறியுள்ளதன் மூலம் உரிய நேரத்தில்

அவர்கள் தீவிர சீனசார்பு நிலைக்கு திரும்புவற்கான ஏதுநிலைகளே அதிகம் என்பது உண்மை. சிங்களத் தலைவர்கள் நடைமுறை சார்ந்து நெளிவு சுளிவான திறமைமிக்க இராஜதந்திர பாரம்பரியம் மிக்கவர்கள். இந்திய இராஜதந்திரத்தின் தந்தையான
கௌடில்யர் கூறிய „Your neighbor was your natural enemy and your neighbor‟s neighbor on the other side your natural ally‟ இக்கூற்றை பின்பற்றி சிங்கள அரசானது இந்தியாவை தனது பாரம்பரிய எதிரியாகவும், சீனாவை தனது இயல்பான கூட்டாளியாகவும் கருதுகின்றது என்பது அரசியல் சதுரங்கத்தின் மையப் போக்காகும்.

பிரம்மாண்டமான இந்தியாவிற்கு அருகே அமைந்துள்ள சிறிய சிங்கள அரசை 2500 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவால் வெற்றிகொள்ள முடியவில்லை என்றால், இந்தியாவிற்கு எதிராக பெரும் அந்நிய அரசுகளுடன் இலங்கை அரசால் கூட்டுச்சேர்ந்து இந்தியாவிற்கு சவால்விட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்றால் அதற்கு சிங்கள ஆட்சியாளர்களின் சிறப்பான இராஜதந்திர கையாளல்களே காரணமாகும்.

காலகட்ட நெருக்கடிகளையும் மற்றும் அவ்வப்போது ஏற்படும் நிலைமைகளையும் உத்தேசித்து அவ்வப்போது தந்திரோபாய அடிப்படையில் அணைத்துக் கெடுக்கும் (Killbykindness) என்ற தந்திரோபாயத்தை பின்பற்றி இந்தியாவுடன் நட்புறவை பற்றி சிங்கள ஆட்சியாளர்கள் பேசினாலும் அது இறுதியில் ‘ஓர் அடி பின்னால் ஈரடி முன்னால்’ (One step back, two steps forward) என்ற வகையிலான இறுதி வெற்றிற்கான இலக்கை நோக்கிய அவர்கள் நகர்வே அன்றி வேறில்லை.

ஈழத்தமிழருக்கும் இந்தியாவிற்கும் இடையே பாரம்பரியமாக மிகநெருக்கமான நல்லுறவு தெளிவாக இருந்தது. ஆனால் 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒபப்ந்தத்தை அணைத்துக் கெடுக்கும் தந்திரோபாயத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெவாத்தன கையாண்டு தனது சாணக்கியத்தால் தொப்புள் கொடி உறவுகளான இந்தியாவையும் ஈழத்தமிழரையும் பகைமை கொண்ட இருதுருவங்களாக்குவதில் வெற்றிகண்டார்.

இநத் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இராஜதந்திர திறமையைப் பற்றியும் அவரால் தாம் ஏமாற்றப்பட்டது பற்றியும் அக்காலகட்டத்தில் இலங்கைக்காக இந்திய தூதராக இருந்த ஜே.என். தீட்சித் (J.N. Dixit) „Assignment Colombo‟ என்ற தனது நூலில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். இந்திய -இலங்கை ஒபப்ந்தத்தை ஜே.ஆர். யுத்தத்தை நோக்கி இட்டுச் சென்றதைப் பற்றியும், குறிப்பாக அப்போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அதுலத்முதலி யுத்தத்தை தோற்றுவித்த முறையைப் பற்றியும், அதில் தான் செயலற்று இருந்தது பற்றியும்

வேதனையுடன் மேற்படி தனது நூலில் எழுதியுள்ளதை அரசியல் ஆர்வலர்கள் கண்டிப்பாக படித்தறிய வேண்டும்.
இவ்வாறு இந்தியாவுக்கு நட்புக்கரம் காட்டுவது போல்காட்டி தனது இராஜதந்திர திறமையால் பாரம்பரிய நண்பர்களான இந்தியாவிற்கும் ஈழத்தமிழருக்கும் இடையே ஜே.ஆர். ஆப்பு வைத்து பகைமையை மூட்டினார். இப்படிச் சிங்களத் தலைவர்களின் நட்புக்கரங்களுக்குப் பின்னால் ஆபத்துகள் அதிகம் உள்ளன எனும் துயரம் தோய்ந்த வரலாற்று அனுபவத்திற்கு நாம் உள்ளாகியுள்ளோம். இந்த இருதரப்பினரையும் சிங்களத் தலைவர்கள் தமது மெருகான இராஜதந்திர திறமையினால் மேற்படி பெரும் துயரத்திற்கு உள்ளாக்க முடிந்துள்ளது என்பதை முள்ளிவாய்க்கால் வரையிலான அனுபவம் எமக்கு எடுத்துக்காட்டுகிறது. இப்படி நட்புக்கரம் நீட்டி அழிக்கும் தந்திரம் அனைத்து சிங்களத் தலைவர்களுக்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தும்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக மகாத்மாகாந்தியை இலங்கைக்கு அழைத்து இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு நிதி சேகரித்து மகாத்மா காந்தியிடம் ஈழத்தமிழர்கள் கையளித்தது தொடக்கம் இந்திய – பாக் யுத்தங்கள், இந்தோ-சீன யுத்தம் மற்றும் உலக அரங்கில் இந்தியாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எப்போதும் ஈழத்தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பது வரலாற்று உண்மை. ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது இராஜதந்திர நுட்பத்தால் இந்தியாவிற்கும் ஈழத்தமிழருக்கும் இடையே பகைமை உருவாக்குவதில் பெற்ற அத்தற்காலிக வெற்றிக்கு முடிவுகட்டி எம்மிடையேயான பாரம்பரிய தொப்புள்கொடி உறவை இருதரப்பினரும் மேலும் வலுவாக்குவதன் மூலமே எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் சுபிட்சத்திற்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இப்பிராந்திரயத்தின் சமாதானத்திற்கும் வழியமைக்க முடியும்.

இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் பலம்பொருந்திய இந்தியா அவசியம் என்றே ஈழத்தமிழர்கள் கருதுகின்றனர். இநத்வகையில் இருதரப்பினருக்கும் இடையேயான பரஸ்பர நலன்களின் அடிப்படையில் எம்மிடையே நல்லுறவை வளர்க்க வேண்டிய, இணைந்து செயற்படவேண்டிய அரசியல் புவிசார் நிர்ப்பநத்மும் அவசியமும் எமக்குண்டு. இருகரம் கோத்து நல்லுறவை வளர்ப்போமாக.

இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையம்

Advertisements