சிறிலங்காவை எதற்காக அரவணைக்க வேண்டும்? – ஒரு அமெரிக்கப் பார்வை

srilanka americaஅமெரிக்க-சிறிலங்கா உறவுகளை மீளவும் நிறுவுவதற்கான திட்டங்கள் எதனையும் அமெரிக்கா முன்னெடுக்காது விட்டால், 21 மில்லியன் மக்களைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வாய்ப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

இவ்வாறு The Wall Street Journal இதழில், மூத்த ஆய்வாளர் லிசா கேட்டிஸ் எழுதியுள்ள Sri Lanka Is Ready to Take Center Stage ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க மற்றும் பாதுகாப்புத் திணைக்கள முன்னாள் உயர் அதிகாரிகளான ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மற்றும் காரா பியூ ஆகியோருடன் இணைந்து லிசா கேட்டிஸ் எழுதியுள்ளார்.

சிறிலங்கா கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாட்டை முதன்மைப்படுத்தி செயற்பட்டது மிகவும் அரிதாகும். ஆனால் கடந்த மாத ஆரம்பத்தில் சிறிலங்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலின் பெறுபேறானது ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்ததன் பின்னர், அமெரிக்கா தொடர்பான வெளியுறவுக் கோட்பாடு சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

பத்து ஆண்டுகளாக அதிகாரத்துவ மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியை நடாத்திய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தல் மூலம் தோற்கடிக்கப்பட்டமையானது ஒரு அதிர்ச்சி தரும் விடயமாகும்.

தேர்தல் இடம்பெறுவதற் கு முன்னர் சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச ஒரு குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தியிருந்தார். இவரது ஆட்சிக்காலத்தின் போது இவருக்கு எதிராக ஒரு பலமுள்ள அரசியற் கட்சி செயற்படவில்லை.

உள்நாட்டுப் போரின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீளிணக்கப்பாடு மற்றும் பொறுப்புக்கூறுதல் போன்றவற்றையும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளவில்லை.

இந்த நாட்டின் முக்கிய பொறுப்புக்களை ராஜபக்சவின் குடும்ப அங்கத்தவர்கள் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்த அதேவேளையில் அதிபர் தேர்தலின் பெறுபேறானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜபக்சவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலரான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான எதிரணியை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். சிறிலங்கா அதிபர் கொண்டுள்ள நிறைவேற்று அதிகார முறைமையை மட்டுப்படுத்தி, சுதந்திரமான செயற்பாட்டிற்கு வழிவகுக்கக்கூடிய வகையில் நாட்டின் அரசியல் யாப்பில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதாக சிறிசேன தனது தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவுடன் சிறிலங்கா கொண்டிருந்த மிகவும் நெருக்கமான உறவில் மிகவும் எச்சரிக்கையுடன் நடப்பதாகவும் வாக்களித்தார்.

சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள அமைதி நிலையை கவனிக்கத் தவறக்கூடாது. யாருடன் இணைந்து நாட்டை முன்னேற்ற முடியும் என்பது இலங்கையர்களின் முன்னுள்ள தற்போதைய தெரிவாகும்.

சீனா மட்டும் சிறிலங்காவின் நட்பு நாடாக இருக்க வேண்டும் என்பதல்ல. சிறிலங்காவில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கத்துடன் தொடர்பைப் பேணுவதற்கான நகர்வுகளை அமெரிக்கா விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

இதன் முதற்கட்டமாக, சிறிலங்காவின் அதிபர் சிறிசேனவை வொசிங்டனுக்கு அழைத்துப் பேச்சுக்களை நடத்த வேண்டும். அதாவது இன மீளிணக்கப்பாடு, சிறிலங்காவில் மீண்டும் ஜனநாயக நிறுவகங்களை மீளவும் நிறுவுதல், சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டை பரந்துபடச் செய்தல் போன்றன உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமெரிக்கா பேச்சுக்களை நடத்த வேண்டும்.

மிகவிரைவாக அமெரிக்கா சிறிசேனவைத் தனது நாட்டிற்கு வருமாறு அழைப்பதன் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கேள்விகளுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என உந்துதலளிப்பதற்குமான ஒரு வாய்ப்பாகக் காணப்படும்.

சிறிலங்காவில் அமெரிக்கா தனது வர்த்தகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு தக்கதருணமாக இது காணப்படுகிறது. தென்னாசியாவில் வர்த்தகச் செயற்பாடுகளுக்கான சிறந்த சூழலைக் கொண்ட நாடாக சிறிலங்கா காணப்படுவதாக Heritage Foundation-Wall Street Journal இன் 2015ம் ஆண்டிற்கான பொருளாதார சுதந்திரத்திற்கான சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் ஆடை உற்பத்தியானது தற்போது அதிகரித்துள்ளது. அதாவது கடந்த பத்தாண்டில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் வருமானமானது 1000 டொலர்களிலிருந்து 3300 டொலர்களாக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா ஏற்கனவே சிறிலங்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளியாகக் காணப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவானது சிறிலங்காவின் முன்னைய போர் வலயமான வடக்கு கிழக்கில் அடிக்கட்டுமானத் திட்டங்களுக்கு முதலீடு செய்வதன் ஊடாக தனது பொருளாதார ஈடுபாட்டை மேலும் அதிகரிக்க முடியும்.

நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பங்குபற்றுவதற்குத் தகுதியற்றவர்களாவர். ஆனால் இது தொடர்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக அமெரிக்காவானது சிறிலங்காவுடன் இராணுவ சார் தொடர்புகளை மீளவும் நிலைநிறுத்துவது தொடர்பாக கருத்திற்கொள்ள வேண்டும். சிறிலங்காவுடன் இத்தகைய இராணுவ சார் தொடர்புகளை அமெரிக்கா பேணிய போதிலும் 2008ல் சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களை அடுத்து இது குறைக்கப்பட்டது.

யப்பான், இந்தியா போன்று அமெரிக்காவும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதுடன் அடிப்படை அரசியற் கோட்பாட்டு நகர்வுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

சிறிலங்காவின் புதிய தலைமையானது ராஜபக்சவின் சீன ஆதரவுக் கோட்பாடுகளை நீக்குவதற்கான தனது நல்லெண்ண சமிக்கையைக் காண்பித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க, இந்திய மற்றும் யப்பான் அரசாங்கங்கள் சிறிலங்காவுடன் இணைந்து உறுதியான நகர்வுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் தேசிய மீளிணக்கப்பாடு போன்றவற்றை அமெரிக்க அரசாங்கம் முன்னுரிமைப்படுத்தும் அதேவேளையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தனது நாட்டில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவது உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களை அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் மூலோபாயப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் அவாக்களைத் தீர்த்து வைப்பதாக சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார். ஆனால் இவர் இதனைச் செயலாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், ஜனநாயகத்தை மீளநிறுவுதல் மற்றும் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துதல், வர்த்தக மற்றும் பிராந்திய பொருளாதார ஒருமைப்பாட்டை நிறுவுதல், இந்திய-பசுபிக் பிராந்திய நலனைப் பாதுகாத்தல் போன்றன உள்ளடங்கலாக அமெரிக்கா தனது நலன்களை அடைந்து கொள்வதற்காக சிறிலங்காவுடன் நெருங்கிய உறவைப் பேணுவதற்கான நேரம் இதுவாகும்.

அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை மீளவும் நிறுவுவதற்கான திட்டங்கள் எதனையும் அமெரிக்கா முன்னெடுக்காது விட்டால் இது 21 மில்லியன் மக்களைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் மிக்க சிறிலங்காத் தீவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வாய்ப்பை இழப்பதற்கான ஆபத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

நாட்டில் ஜனநாயகத்தை மீளவும் நிறுவுவதற்கான மிகப்பெரிய நகர்வை இலங்கையர்களை முன்னெடுத்துள்ளனர். சிறிசேனவின் தலைமையின் கீழ் சிறிலங்காவானது சீனாவால் இந்திய மாக்கடலில் மேற்கொள்ளப்படும் ‘முத்துமாலைத்’ திட்டத்தை நீக்குவதற்கான நகர்வை முன்னெடுத்துள்ளது.

குறிப்பு-

ரிச்சர்ட் ஆர்மிரேஜ் 2001 முதல் 2005 வரை அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலராக இருந்தவர்.
காரா பியூ 2003 தொடக்கம் 2005 வரை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலராக இருந்தவர்.
லிசா கேட்டிஸ் The Heritage Foundation இன் மூத்த ஆய்வாளர்.

புதினப்பலகை-நித்தியபாரதி.

Advertisements