இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது

இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது என தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் சி.க. சிற்றம்பலம் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.R Sampanthan TNA

சுதந்திரதின நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கலந்துகொண்டமை தொடர்பில் அவர் இன்று வெளியிட்டு;ள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது உருவாகிய ஒற்றையாட்சி அமைப்பு அதன் பின்பு அழுலுக்கு வந்த அரசியல் அமைப்புக்களும் சிறுபான்மை தேசிய இனங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை ஏற்காது பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கே வழிவகுத்ததால் சுதந்திரமென்பது பெரும்பான்மை மக்களாகிய பௌத்த சிங்கள மக்களே என்ற கோட்பாட்டின் அடிப்டையானது தமிழ் அரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட இன்றைய தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகியன மாறி மாறி வந்த சுதந்திரதின வைபங்களில் கலந்துகொள்ளாது அவற்றை பகிஸ்கரித்தது மட்டுமன்றி கறுப்புக்கொடி போராட்டங்களும் நடத்தியதும் வரலாறாகும்.

எமக்கான நியாமான அரசியல் தீர்வு இன்று வரை கிடைக்காத நிலையில் இத் தீர்வை நோக்கித் தம்மையே அழித்த நமது தலைவர்கள், மக்கள், போராளிகள் ஆகியோராது அளப்பரிய தியாகமே இன்று தமிழருக்கு நியாயமான தீர்வை வழங்கும் கடப்பாடும் தார்மீக பொறுப்பும் சர்வதேசத்திற்கே உண்டு என்று இன்றும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை உலுப்பி நிற்கின்றன.

இச் சூழலில் எமது போராட்டம் விட்டுச்சென்ற அங்கவீனர்கள், விதவைகள், காணாமல் போனோர் , இடம்பெயர்ந்தோர் காட்சிப்பொருளாக இருக்க தமிழ் தேசியத்தின் காவலர்கள் நாமேதான் என்று மார்தட்டிக்கொண்டு சிங்கள இனத்தின் மேலான்மை சின்னமாக விளங்கும் சிங்க கொடியின் கீழ் தமது மனச்சாட்சியையும் மக்களின் தியாகத்தையும் விலை பேசி விட்டு விருந்தோம்புவதை மனச்சாட்சி உள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இவ் ஈனச்செயலை மன்னிக்கவும் மாட்டார்கள்.

ஆதலால் எமது மக்கள் செய்த அளப்பரிய தியாகத்தை மறந்து ஒற்றையாட்சியையும் 13 ஆவது சீர் திருத்தமே எமது மக்களின் தியாகத்திற்கு தீர்வு என்று மட்டுமன்றி சர்வதேச விசாரணைகளையும் மழுங்கடிக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளும் அரசின் விருந்தினராக காட்சி அளிப்பதும் எமது மக்களுக்கும் போராட்டத்திற்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமன்று வேரொன்றும் இல்லை.

இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது. இதற்குரிய தீர்க்கமான மாற்று நடவடிக்கையை பற்றி ஆழமாக சிந்திக்கும் காலம் வந்துவிட்டது.

ஆதலால் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி அவர்களின் வழி நடத்தலில் செயற்படாது இவ்விழாவில் கலந்து கொண்டோர் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் மத்திய செயற்குழுவுக்கே உரியதால் இதனை உடனடியாக கூட்டவேண்டும் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

– சி.க. சிற்றம்பலம்

**
அனந்திக்கு விசாரணையென்றால் சம்பந்தருக்கு? கேள்வி எழுப்புகின்றார் குருபரன்!!

1972 ஆம் ஆண்டு ‘சிலோன்’ குடியரசாகி ‘சிறீலங்கா’வாக மாற்றப்பட்ட அரசியலமைப்புச் செயன்முறையில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தமிழரசுக் கட்சியும், அது அங்கமாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன புறக்கணித்துள்ளன. சிறீலங்காவின் அரச கட்டமைப்பு தமிழர்களை உள்ளடக்கவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த முடிவு 40 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இது விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்த முடிவல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே செல்வநாயகம் எடுத்த முடிவு. இம்முடிவு ஒரு நாட்டிற்குள் தீர்வு காண்பதற்காண நிலைப்பாட்டுக்கு முரணானதென்று கொள்ளப்படுவதற்கும் இல்லை. எனின் இவ் 40 வருட கால கால முடிவை இன்று மாற்றுவதற்கு திருவாளர். சம்பந்தன் சொல்லும் நியாயம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன்.

நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்த போது தமிழர் தொடபான விடயங்களில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சாட்டியதாக ஏஎவ்பி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது ஒரு சில அரசியல் கைதிகளின் விடுதலையையாவது எதிர்பார்ப்பதாக தெரிவித்ததாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இது கூட நடைபெறாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் எக்காரணத்துக்காக இவ்வளவு பெரிய தடம் மாறும் முடிவை மேற்கொண்டார்? தமிழரசுக் கட்சியின் சனாதிபதி தேர்தல் தொடர்பிலான முடிவொன்றை மீறியமைக்காக அனந்தி சசிதரனுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகின்றது. 40 வருட முடிவை மீறியோருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பதெனவும் அவர் கேள்வியை முன்வைத்துள்ளார்.

**

srilanka america
பெப்ரவரி 4, 2015 – சிறிலங்காவின் சுதந்திர தினம். ஈழத் தமிழர்களுக்கோ அது கரி நாள்

ஆட்சி மாற்றம் தமிழர்க்கு விடுதலை தந்துவிடும் என்ற நம்பிக்கையை சர்வதேசம் ஈழ மக்களுக்கு கொடுக்க முயல்கின்றது. ஆனால் இதற்கு முன்பிருந்த சிங்கள அரசுகள் போலவே இன்று ஆட்சியில் இருக்கும் மைத்திரி அரசும் தமிழர்க்கான எந்த அடிப்படை பிரச்சனையையும் கூட தீர்க்க முயலாமல் சிங்கள ஆக்கிரமிப்பை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கின்றது. இன்னமும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், எம் ஈழத்து தமிழ் மக்களும் மறுக்கப்பட்ட நீதிக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டு இருப்பதை நாம் காணலாம்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் ஈழ மக்களின் உரிமை போராட்டத்தின் பின்னணியில் சிங்கள ஆதிக்க அடக்குமுறைகளுக்குள் ஈழத்து தமிழினத்தின் வாழ்வும் கலை கலாச்சார பண்பாடும் நிலமும் உயிருமாக பறிகொடுப்புகள் தொடர்ந்து வரும் கொடுமையே காரணமாக உள்ளது.

இந்நிலையில் இந்த சிக்கல்களை தீர்த்து வைக்க எள்ளளவும் முயலாத சிங்கள அரசுகள் போலியாக கண் துடைப்பாக கொண்டு வந்த தீர்த்து திட்ட ஒப்பந்தங்களையே இதுவரையில் நடைமுறைப்படுத்த வல்லமை இல்லாத அரசுக்களாக காலம் காலமாக வந்த சிங்கள அரசுகள் இருந்து வந்துள்ளன. அந்த வகையில் இதுவரையில் இலங்கைத் தீவை ஆண்ட சிங்கள அரசுகள் தமிழர்களோடு மேற்கொண்ட ஒப்பந்தங்களான டட்லி – செல்வா ஒப்பந்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்த்தை, சந்திரிகா – தமிழர் தரப்பு ஒப்பந்தம் போன்ற சிங்கள தேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையே நடைமுறைப்படுத்த முடியாத சிங்கள அரசுகள் தமிழரின் பன்னெடுங்கால அரசியல் உரிமை போராட்டத்தை வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே கொண்ட அடிப்படை அதிகாரப் போக்கில் எந்த மாற்றமும் இல்லாத அரசான மைத்திரி அரசின் காலத்தில் தமிழ் மக்களிற்கு விடுதலையை பெற்று தரும் என்பது ஏற்புடையது அல்ல.

சிங்கள பகுதியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையே ஏற்க முடியாத சிங்கள அரசால் எப்படி எந்த ஒப்பந்தங்களும் இல்லாமல் வெறும் வாய் வார்த்தைகளால் உறுதி மொழியும் தீர்வுகளை பெற்று தர முடியும் என எம் மக்கள் நம்புவார்கள்?

சிங்கள தரப்பு முன்வைத்த ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களையே நடைமுறைப்படுத்த முன்வராத அரசு எப்படி சர்வதேச அரசுக்களின் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றி எம் மக்களின் சிக்கல்களை தீர்த்து வைக்க முன்வரும்?

சர்வதேச தீர்வுப் பொதிகளாக ஒஸ்லோவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் என்பனவற்றையே உதாசீனப்படுத்தி சர்வதேசங்களையே அவமானப் படுத்தி அவற்றினூடாக கூட தமிழ் மக்கள் சிக்கல்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க விரும்பாத சிங்கள அரசு எப்படி தமிழர்க்கு தமிழர்கள் கேட்கும் அடிப்படை உரிமைகள் அபிலாசைகளை முன்வைக்கும் தீர்வினை முன் வைக்கும் என ஈழத் தமிழர்கள் நம்ப வேண்டும் என சர்வதேச அரசுகள் ஈழத்து தமிழ் மக்களிடம் எதிர்ப்பர்க்கின்றன?

புலத்து தமிழர்களை இனி இலங்கை வாருங்கள் இங்கு எந்த சிக்கலும் இல்லை என அழைக்கும் சிங்கள தேசம் தான் இன்னமும் பல்லாயிரம் குடி மக்களை கேட்பாரின்றி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அது மட்டுமன்றி புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கட்டமைப்புக்கள் மீதும் பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் பயங்கரவாதிகள் முத்திரை குற்றி இருக்கின்றது.

உலகெங்கும் சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளில் இருந்து தப்பி அகதிகளாக வெவ்வேறு தேசங்களில் வாழ்ந்தாலும் எங்கள் மண்ணின் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் புலம் பெயர் தமிழர் அமைப்புகளின் அடிப்படை சனநாயக உரிமையையே மதிக்கத் தெரியாது தடை சட்டம் பாய்ச்சும் சிறி லங்கா அரசு எப்படி சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டு நாதி இன்றி அல்லலுறும் தமிழ் மக்களின் அரச பிரதிநிதியாக செயல்ப்பட அருகதை பெறும்?

சுதந்திர தேசத்தின் புதல்வர்கள் வகை தொகையாக இன வெறி கொண்டு சொந்த மண்ணில் வாழும் அருகதை இன்றி சிறைகளுக்குள் கால எல்லை இன்றி, குற்ற தாக்குதல் இன்றி, விசாரணை வழக்குகள் எதுவும் இன்றி, இருக்கின்றார்களா இல்லையா என்ற எந்த பதிவுகளும் இன்றி இன்னமும் சிறைகளுக்குள் முடக்கப்பட்ட நிலையில் இலங்கை சுதந்திர தினம் என்பது இன்று வரை ஒரு கரி நாளே.

தமிழர்கழுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மண்ணில், சொந்த நிலங்கள் பறிக்கப்பட்டு சொந்த மண்ணில் அகதிகளாக அலைய விடப்பட்ட மண்ணில், போராட்டதிற்க்கு துணை நின்றார்கள் என்ற வஞ்சனையில் பழி வாங்கப்படும் எம் மக்களிற்கு இலங்கை சுதந்திர தினம் என்பது இன்று வரை ஒரு கரி நாளே.

காணமல் போன பிள்ளைகள் எங்கு என கேட்டுப் போராடும் எங்கள் தாயவரின் கண்ணீர் வாழ்விடையே அவர்களுக்கு இலங்கை சுதந்திர தினம் என்பது இன்று வரை ஒரு கரி நாளே.