பொய்துப்போன மாவையின் சாத்வீகப் போராட்டம்! மீண்டும் புதிய அரசாங்கத்திற்கு காலக்கெடுவாம்!!

R Sampanthan TNAஇலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் சாத்வீக வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் சாத்வீகப் போராட்டத்துக்கு தயாராகிவிட்டோம். அறவழிப் போராட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்பது மிக முக்கிய தீர்மானமாக இருக்கும் என அறுதியிட்டுக் கூறுகின்றேன். என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கடந்த வருடம் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் பேராளர் மாநாட்டில் உரையாற்றும் போது மூன்றுமாத கால அவகாசம் வழங்கியிருந்தார். இதுவரைவில் எதுவித சாத்வீகப் போராட்டங்களையும் அவர் நடத்தவில்லை. தற்போது புதிதாக அமைந்துள்ள மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கத்திற்கும் கால அவகாசம் கொடுத்துள்ளார் மாவை சேனாதிராஜா.

நேற்று சனிக்கிழமை வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் கிளையான ”தாயகம்” திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த தேசத்தில் குறிப்பாக தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழுகின்ற இடங்களில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ராஜபக்‌ஷவின் சர்வாதிகாரம் தலைதூக்கியிருந்தது. தென்னிலங்கையில், நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்றும் குடும்ப ஆட்சிக்கும் அவர்களது ஊழல்களுக்கும் எதிராகவும் கிளர்தெழுந்தார்கள்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் கூட இந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் தமது நிலம், மதம், பண்பாடு, ஜனநாயகம் என்பவற்றை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர். நாம் எமது உரிமைக்காக எத்தனை உயிர்களை கொடுத்தோம். எத்தனை போராட்டங்களை நடத்தினோம். இராணுவ மயமாக்கலை செய்த அந்த அரசாங்கம் எமது இன அடையாளங்களையே அழித்தது. தென்னிலங்கையில் இருந்து இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என குரல் வலுத்த போது நாங்களும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டியிருந்தது. எமது நிலங்களை இராணுவத்தின் துணையுடன் பறித்து, அங்கு சிங்களவர்களையும் இராணுவ குடும்பங்களையும் குடியமர்த்தினார்கள். இதற்கு மஹிந்தவின் ஆட்சிதான் காரணமாக அமைந்தது.

அதுபோன்ற காரணங்களால் தான் நாம் ஆட்சிமாற்றத்தை விரும்பினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் மக்களிடம் கருத்துக்களை கேட்ட போது இது ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் என கூறினார்கள். இது அப்பட்டமான பொய். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட ரீதியாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடமும் கட்சி உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டே தீர்மானமெடுத்தது. நாம் எதற்காக இதுவரை போராடினோமா அதை பெற வேண்டுமானால் எமது நிலம் எமது நிலமாக இருக்க வேண்டும். அதை அழித்தவனையே நாம் தோற்கடித்தோம்.

நாங்களும் தேசிய இனம். எங்களுக்கும் இறைமை இருக்கிறது. எங்களாலும் ஆட்சியாளரை தீர்மானிக்க முடியும் என்பதை ராஜபக்‌ஷவுக்கு காட்டியுள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்‌ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கூறிய பின்னர் சிலர் பத்திரிகை மாநாடுகளை நடத்தி, இந்த தேர்தலை புறக்கணிக்கக் கோரினர். எம்மோடு இருந்தவர்கள்கூட விமர்சித்தார்கள். சிலர் வாக்காளிக்காது விட்டார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்கள் எடுபடவில்லை. இனியும் எடுபடாது. அவர்களின் கருத்தை நம்பியிருந்தால் இன்று ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்திருப்பார். நாங்கள் இந்த புதிய அரசையும் நம்பி நடக்கவில்லை. இந்த அரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.

ஆனால் தற்போது எமது மக்களின் காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, தீர்வுத் திட்டம் குறித்து பேசி வருகின்றோம். அவர்களும் சிலதை செய்கிறார்கள். செய்வதாக கூறுகிறார்கள். நாம் வவுனியாவில் நடந்த கட்சி மாநாட்டில் இந்த அரசு எமது பிரச்சினையை தீர்க்காது போனால் தைத்திங்களில் ஜனநாயக போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தோம். ஆனால் இன்று புதிய அரசு வந்துள்ளது. சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மீள்குடியேற்றுவதாக சொல்கிறார்கள். வடமாகாணசபையில் மாற்றம் வந்துள்ளது. காணிகளை மீள வழங்குவதாக கூறியுள்ளார்கள். இதனால் எமது பிரச்சினையை தீர்க்க காலம் தேவை. நாம் கால அவகாசம் வழங்கி எமது போராட்டத்தை பிற்போட்டுள்ளோம். எமக்கு தீர்வு கிடைக்காது போனால் எமது மக்களை தயார்படுத்தி கூறியபடி எமது ஜனநாயக போராட்டம் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements