சிங்களத் தலைமைகளை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழ் பேசும் மக்கள்!

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தமிழர்களே தீர்மானித்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொண்டுள்ளார்.

உண்மையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர் என்பதே யதார்த்தமானதாகும்.rajapakse

கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும், அதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களே தீர்மானித்திருந்தார்.

குறிப்பாக 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிகுந்த ஆதரவு இருந்தபோதும் அப்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ரணிலை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வடகிழக்கு தமிழர்களை தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிரந்தார்.

அதேபோன்று வடகிழக்கு தமிழ் மக்களும் தேர்தலை புறக்கணித்திருந்தனர். இதனால் அப்போது ஜனாதிபதியாக வரவேண்டிய ரணில் விக்கிரமசிங்க, சராசரியாக ஒரு லட்சம் வாக்குகளினால் தோல்வியடைந்து மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அன்று எவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தேர்தலை புறக்கணித்து ரணில் விக்கிரம சிங்கவை தோற்கடித்தாரோ, அதேபோன்று இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மைத்திரிபாலவை ஆதரித்து மகிந்த ராஜபக்சவை தோற்கடித்துள்ளனர்.

இதனை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கருத்துதெரிவிக்கும்போது, என்னை வடகிழக்கு தமிழர்களும், மலையகம், கண்டி, கொழும்பு போன்ற பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுமே தோல்வியடையச் செய்துள்ளனர். என்னை தோல்வியடையச் செய்ததினால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எனவே தமிழர்களினால் ஏற்படுத்தப்பட்ட தோல்வியை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

எனவே இலங்கையின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக மாற்றமடைந்துள்ள தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதியாக வருபவர்களிடம் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை பேரம்பேசிப் பெற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

தமிழர்களின் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள மைத்திபால சிறிசேன அவர்கள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவரும் தமிழர்களுக்கா தீர்வை முன்வைக்காவிட்டால் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் இவரையும் தமிழ் மக்கள் ஆட்சியில் இருந்து தூக்கியெறிவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனவே இனிவரும் காலங்களில் ஆட்சியை தக்கவைக்க விரும்பும் சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதனையே நடந்து முடிந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளதுடன், அதனை முன்னாள் ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளமையானது, இலங்கையின் சிங்களத் தலைமைகளையும் தீர்மானிக்கும் சக்தி தமிழ் பேசும் மக்களுக்கு உண்டு என்ற செய்தியையும் அது குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தையும் இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது என்பது திண்ணம்.

elanilavan

Advertisements