மக்களின் வெற்றியே மைத்திரியின் வெற்றி

நாட்டின் இறைமையைக் காப்பாற்றும் அரசின் தலைவர், முப்படைகளின் தலைவர், சகல அதிகாரங்களும் பொருந்திய ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்று முடிந்துவிட்டது. தற்போது மக்களின் வாக்குப்பலத்தின் பெறுமதியை தேர்தலில் குதித்தவர்கள் உணரத்தொடங்கியுள்ளனர். 7ஆவது ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகளின் பிரகாரம் எதிரணியினர் சார்பில் போட்டியிட்ட பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28%) வாக்குகளைப் பெற்று உத்தியோகபூர்வமாக வெற்றி வாகை சூடியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்­வால் 57,68,090 (47.58%) வாக்குகளையே பெறமுடிந்தது. இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­ அலரி மாளிகையிலிருந்து நேற்றுக் காலை (09.01.2015) வெளியேறிச் சென்றுவிட்டார்.Sri Lanka president Maithripala Sirisena

மஹிந்த ராஜபக்­ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணிலுக்குமிடையில் நேற்று அதிகாலைவேளை இடம்பெற்ற பேச்சுகளை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கவே, தான் அலரி மாளிகையிலிருந்து செல்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­ தெரிவித்திருந்தாகவும் கூறப்படுகின்றது.

ஜனநாயக மரபுகளின் பிரகாரம் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை கெளரவத்துடன் வழங்கியுள்ள மஹிந்த ராஜபக்­ஷ தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கதாகும். உண்மையில் கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பல்வேறு துறைகள் ஊடாக அபிவிருத்தியை மையப்படுத்திய வேலைத்திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் அண்மைக்காலமாக மஹிந்த ஆட்சியின் நடைமுறைகளில் மாற்றங்கள் காணத் தொடங்கியதன் விளைவே மக்கள் இந்தளவுக்கு மைத்திரியின் வெற்றிக்கு ஆதரவாக இருந்துள்ளமை தெளிவாகின்றது.

அதுமாத்திரமன்றி, புதிய ஜனாதிபதி மைத்திரி, மாற்றத்திற்காக ஒன்றிணைந்து நிலையான ஆட்சியை நாடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நூறு நாட்களில் புதிய நாட்டை உருவாக்கும் முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் பொது எதிரியை வீழ்த்துவதற்காக நிலைகொண்டமையால் மஹிந்தவால் எதுவுமே செய்யமுடியாமல் போய்விட்டது. அதேவேளை, கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலின்போது முன்வைத்த மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் அடிப்படையில் நாட்டின் வளமான எதிர்காலத்திற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதாவது, ஐந்து அதிகாரங்களை மையப்படுத்திக்கொண்டிருக்கும் ஆசியாவில் தலைசிறந்த நாடு. வீடு, மின்சாரம், நீர் மற்றும் தொடர்பால் வசதிகள் சகலருக்கும் கிடைக்கப்பெற்ற நாடு. விருத்தியடைந்த வீதி முறைமை மற்றும் போக்குவரத்துச் சேவைகள் கொண்ட நாடு. ஒழுக்கம் மற்றும் சட்டத்துக்கு மதிப்பளிக்கும் நாடு. வெற்றிகொண்ட தேசம் மீண்டும் பிரிக்கப்படமுடியாத நாடு. பெரும்பான்மை மக்களால் கட்டியயழுப்பப்பட்ட நீடித்து நிலைக்கும் சமாதானம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நாடு. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் சுபமான நாடு. ஆகாயம், பூமியை வெற்றிகொள்ளக்கூடிய திறமையுள்ள மாணவக் குழுக்கள், மேல்நாட்டு மற்றும் உள்ளூர் வைத்தியம் சிறந்த முறையில் காணப்பட்டு நோயின்றிக் காணப்படும் நாடு. தேசிய வளம் மற்றும் தேசிய அறிவின் மூலம் வெளிநாடுகளை வெற்றிகொண்ட தேசிய வர்த்தகம், இலக்கிய கலை சம்பந்தமான பிரசங்க மேடைகளில் பிரகாசிக்கும் நாடு. வெளிச்சென்ற மக்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் திரும்புவதற்கு ஆதரவு வழங்கும் நாடு போன்றவற்றை முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், இந்தகைய விடயங்கள் சில நடைபெற்றாலும் அதற்குரித்தான மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. இவற்றில் ஏற்பட்ட விரக்தி மஹிந்த அரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சிறுபான்மையினர் மீது கடந்த காலங்களில் ஏற்படுத்திய பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அந்த மக்கள் மஹிந்த சிந்தனையை மாத்திரமன்றி, அனைத்துச் செயற்பாடுகளிலும் விரக்தியுற்ற நிலையிலேயே காணப்பட்டனர். நாட்டில் அமைதியை ஏற்படுத்திய வகையில் மஹிந்த ராஜபக்­ஷ முன்னிலை வகித்திருந்தாலும் அதற்கான பரிசை கடந்த 2010ஆம் ஆண்டில் மக்கள் வழங்கிவிட்டனர். ஆசை பொல்லாதது என்பார்கள். அந்த ஆசையின் மேலீட்டால் புதிய அரசமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மீண்டும் ஒரு தடவை ஆட்சியில் அமர்வதற்கு ஆசைப்பட்டார் நமது முன்னாள் ஜனாதிபதி.

அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு முன்னர் நாட்டு மக்களை நல்ல முறையில் கவனிக்கத் தவறிவிட்டமை மஹிந்த செய்த மிகப்பெரிய தவறாகும். விலைவாசி அதிகரிப்பு, ஊழல், அதிகாரம், யுத்தத்தின் பின்னர் அந்த மக்கள் மீது கொண்ட அழுத்தங்கள், மதரீதியான நிந்தனைகள், அரசியல் பழிவாங்கல்கள் போன்றவற்றை மக்கள் ஏற்றுக்கொண்டதுபோல நடித்தாலும் இறுதி நேரத்தில் சில விடயங்களை மஹிந்த அரசு மேற்கொண்டிருந்தது. ஆனாலும் மக்கள் விடாப்பிடியாக ஒன்றுசேர்ந்தமைக்கு மற்றொரு காரணம், நாட்டின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முஸ்லிம்களின் முழுமையான ஆதரவுடன்
இயங்கிக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையில் இயங்கிக்கொண்டிருக்கின்ற கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் தரப்பிலுள்ள தமிழரசுக் கட்சிகள் போன்றன இணைந்தமை – சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கப்பெற்றமை மைத்திரி வெற்றியடைவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்திருந்தன.

மேலும், அரச ஊழியர்களைப் பொறுத்தளவில் கடந்த பத்தாண்டுகளாக உயர்வான சம்பளத்தை கடந்த அரசு மேற்கொள்ள வில்லை என்பது அவர்களது ஆதங்கமாகும். பொதுவாக தேர்தல் ஒன்று நடைபெறுகின்றபோது ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கின்ற முதலாவது அணியினர் தபால் வாக்குகளை வழங்குகின்ற அரச ஊழியர்களாவர். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தபால் வாக்குகளை அளித்திருந்த அரச ஊழியர்களில் நியாயமானோர் மைத்திரிக்கே வாக்களித்திருந்தனர். காரணம், பல இருந்தாலும் முக்கியமாக மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்மையில் இந்த நாட்டுக்கு மிகமிக அவசியமானவை என்பதை அறிந்தமையினாலாகும்.

அந்தவகையில் கூடுதலான நிவாரணம் வழங்கக்கூடியவாறு மக்கள் வாழ்வை நோக்கிய விசேட இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மற்றும் கொடுப்பனவுகளைக் குறைத்து சம்பள உயர்வை அதிகரித்தல், சகல மக்கள் பிரதிநிதிகளும் பின்பற்றக்கூடிய ஒழுக்க விதியயான்றை சட்டமாக்கல், சுதந்திர ஆணைக்குழு அமைத்தலும், அதற்கான நியமனங்களும், தகவல் அறிகின்ற சட்டமூலம் உருவாக்கல், அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதத்துடன் 5,000 ரூபா சம்பளம் வழங்குதல், சகல கொடுப்பனவுகளும் படிகளும் உள்வாங்கப்பட்டு எஞ்சிய தொகையும் விரைவில் வழங்கப்படுதல், அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குதல், பட்டதாரிகளுக்கு அவர்களது பட்டத்திற்கேற்றவாறு அரச நியமனங்கள், எரிபொருட்களின் விலை குறைத்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்வைத்திருந்தமை மைத்திரியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருந்த விடயங்களாகவும் கூறலாம்.

இன்று அதிகாரம், பொது எதிரணியினர் சார்பாக தேர்தலில் குதித்துள்ள மைத்திரியின் பக்கம் சாய்ந்துள்ளது. கடந்த கால அரசியல் பாதையில் பல்வேறு சறுக்கல் உள்ளமையால்தான் மக்கள் தீர்ப்பு மாற்றம் கண்டுள்ளது. மக்கள் ஒன்றுசேர்ந்தால் அரசியல் மாத்திரமன்றி, அனைத்து விடயங்களிலும் தாம் நினைப்பதை சாதிக்கலாம். அந்த சாதானைக்கு இம்முறை தேர்தல் நல்லதோர் படிப்பினையாகும்.

அதாவது, மக்களின் பக்கம் அரசியல்வாதிகள் கூட ஓடிவந்தார்கள். உதாரணமாக, தேசிய காங்கிரஸில் இருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் இறுதிநேரத்தில் தனக்குப் பதவியை ஏற்படுத்திய கட்சியையும், தலைவரையும் தூர ஒதுக்கிவிட்டு மக்களோடு மக்களானார். மக்கள் எந்தப்பக்கம் நிற்கின்றார்களோ அந்தப்பக்கம் நிற்பதுதான் சாலச்சிறந்தது என்பதை ஊகித்துக் கொண்டமையால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கூட மக்கள் பக்கம் வந்தது. ஆட்சியில் பங்காளர்களாக இருந்தவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வீசிவிட்டு வருவது என்பது மிகப்பெரிய தியாகம் என்பதை சில தலைவர்கள் சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இன்று நிலைமையே மாறிவிட்டது. இன்னும் இரண்டாண்டுகள் ஆட்சி செலுத்தும் அதிகாரம் இருந்தபோதிலும் தனக்குத்தானே மடுவெட்டி அதில் விழுந்த நிலைமைக்கு ஒப்பான நிலையில் மஹிந்த ராஜபக்­ஷவின் நிலைமை மிகமோசமாக அமைந்துள்ளதைப் பார்க்கின்றபோது மீதியான இரண்டாண்டுகள் சந்தோ­மாக ஆட்சியதிகாரத்தில் இருந்துவிட்டு தாமாகவே சென்றிருக்கலாம். ஆசை அலைபோல தொடர்ந்து வருவது போலதான் காணப்படும். நிலையாக இருப்பதில்லை என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

மக்களுக்காகத்தான் அரசியலும், அரசியல்வாதிகளும் என்பதை நிலைநிறுத்தி ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தமக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை உணர்ந்து மக்களின் சேவகனாக மாறுகின்றபோது மக்களும் ஆதரவு வழங்குவார்கள். அல்லது அந்த மக்களே அவர்களை தூரவீசிவிடுவார்கள். அவர்களால் எழும்பவே முடியாமல் போகும் என்பதற்கு அரபு வசந்தத்தில் அகப்பட்டுப்போன கடாபியின் வாழ்க்கை வரலாறும், அதேவேளை, மக்கள் புரட்சியாளன் நெல்சன் மண்டேலாவின் வாழ்வும் அரசியல்வாதிகளுக்கு நல்லதோர் படிப்பினையாகும்.

எனவே, புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன தமது அதிகாரத்தை இன்றோ, நாளையோ பொறுப்பெடுத்ததன் பின்னர் இந்நாட்டுக்கும் மக்களும் கூறியதுபோன்று ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி மாற்றத்தை நோக்கிய ஒன்றிணைவில் 100 நாட்களில் புதிய நாட்டை ஏற்படுத்துவது முக்கியமாகும். எல்லோரும் கூறியதுபோல குடும்ப ஆட்சி முறையின் கீழ் சர்வாதிகார முறையான நாடும், நாட்டு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் நொந்துபோன மக்களின் வாழ்வு காணப்படுகின்றது. சமூக கலாசார கட்டமைப்பு சீரழிக்கப்பட்டுள்ளது. ஊழல், பயங்கரவாதம், அச்சம், அழிவு போன்ற பல்வேறு துன்பங்களுக்கும் மத்தியில் மக்கள் சமூகம் பீதியுடன் வாழ்கின்றது. இவற்றை மறுசீரமைத்து அவ்வாறான சூழ்நிலையிலிருந்து மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி ஜனநாயக வழிக்குக் கொண்டுவந்து சமூகப் பொருளாதார மறுசீரமைப்புக் கொண்ட சமூகத்தை கட்டியயழுப்பும் சந்தர்ப்பம் மைத்திரியின் முன்னால் வைக்கப்படுகின்றது.

இதனை ஒழித்துக்கட்டி மக்களின் நல்வாழ்வுக்கான நிலைமையை ஏற்படுத்த மக்கள் வழங்கியுள்ள சந்தர்ப்பத்தை அனைத்து கட்சியினரும் ஒன்றுசேர்ந்து ஜனாதிபதி மைத்திரி சிறிசேன ஊடாக நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டும். அதுவரை மக்கள் ஒன்றாக இருப்பார்கள். மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுமாக இருந்தால் அது இன்று மஹிந்த ராஜபக்­ஷவுக்குக் கிடைத்த பரிசாக இருக்கும்.
ஆட்சியும், அதிகாரமும் மக்கள் ஊடாக இறைவன் கொடுத்த வரம். அதனை நிறைவான முறையில் நிறைவேற்றவேண்டும். இறை தண்டனை என்பது மிகவும் பயங் கரமானது. முஸ்லிம்களின் பள்ளி வாசலுக்குள் அவர்களால் வெறுக் கப்படுகின்ற பன்றி இறைச்சியை வீசியமை, இறைவனுக்கே பொம்மை கட்டிய இந்த நாட்டில் இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அரசை இறைவனாகப் பார்த்து மாற்றியுள் ளான் என்றே இறைநம்பிக்கை கொண்ட மக்கள் கூறுகின்றனர்.

எது எப்படியாக இருந்தபோதிலும் புதிய ஆட்சியாளர்கள் இதனை உணர்ந்து மக்களுக்கான ஆட்சி யின் மூலம் மக்கள் நல்வாழ்வுக் கான பொதுநலத் திட்டங்கள் ஊடாக மக்களின் வாழ்வு செழிப்படைய வும், நல்லாட்சி நடைபெறவுமே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 100நாட்களில் நடைமுறைக்கு வரும் வகையில் கூறியதுபோல வேலைத்திட்டங்களை மேற்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் புதிய ஆட்சிக்கு நாமும் வாழ்த்துவோம்.

சுடர் ஒளி