இனி வருவது தேன்நிலவுப் பொழுது

அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீது விமானங்கள் மோதிய பொழுதில் அமெரிக்க அதிபர். புஸ் ஒரு கோடு கிழித்தார். எம்முடன் நிற்கலாம். இல்லையென்றால் அவர்களுடனேயே.mahinda_maithripala

அதனைப் போன்றதொரு தெரிவே தமிழர்களுக்கு இந்த சிங்கள தேச அதிபர் தேர்தலில் கொடுக்கப்பட்டு இருந்தது. அறுபது ஆண்டுகளாக தொடரும் இனப்பாரபட்சம், இனஅடையாளம் சிதைத்தல், இனஅழிப்பு என்பனவற்றை உச்சமாக நிகழ்த்தியவன் ஒரு பக்கம், அவனுக்கு பாதுகாப்பு மந்திரியாக இருந்தவன் இன்னொரு பக்கம்.

ஆனாலும் தமிழர்கள் தமது சத்திய ஆவேசத்தை வாக்குகளில் காட்டி இருந்தார்கள்.

இனப் படுகொலையாளி மகிந்த தோற்று அம்பாந்தோட்டையின் தனது சொந்த ஊருக்கு மூட்டை கட்டிவிட்டார். மைத்திரி சிங்கள தேசத்தின் அதிபராக பதவி ஏற்றுமுள்ளார்.

சீனாவின் அரசின் வெளிவிவகார பேச்சாளர் கொங் லீ மற்றும் அமெரிக்க ஜோன் கெரி தொடக்கம் ஒட்டுக்குழு பச்சோந்தி டக்ளஸ் வரைக்கும் அனைவரும் புதிய அதிபருடன் சேர்ந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ தனது வேலை இன்னும் நூறு நாட்கள்தான் என்று நூறு நாள் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த நாட்களில் பல தரப்பினரை அவர் சமாளித்தாக வேண்டும். இதனையே இன்னொரு பக்கமாக சொல்வது என்றால் பல தரப்பினர் தாம் உறுதி கொடுத்த தமது மக்கள் இவரை தொடர்ந்து நம்ப வைத்தாக வேண்டிய தேவையும் இருக்கிறது.

இந்திய அரசியல்வாதிகளுக்கு சற்றேனும் குறைந்தவராக தம்மை காட்டிக் கொள்ளாமல் மைத்திரியும் ஏராளம் சலுகைகளையும், மானியங்களையும், கொடுப்பனவுகளையும் அறிவித்திருக்கிறார்.

இந்த மானியங்கள், இலவசங்கள் என்பனவற்றை வழங்குவதால் ஓரளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இந்த தேன் நிலவு காலத்தை பெரிய பிரச்சினைகள் ஏதும் இன்றி கடந்துவிட முடியும் என்று நம்புகின்றார்.

இவற்றை வழங்க அல்லது நிறைவேற்ற பல பில்லியன் நிதி தேவைப்படும். இந்த நிதிக்கான தேடலாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் கடன் வழங்கும் நாடுகளை அணுகும் போது நிதி வருகின்றதோ இல்லையோ அந்த அமைப்புகள், நாடுகள் போடும் புதிது புதிதான நிபந்தனைகள் வந்து சேரும் என்பது தேன்நிலவு காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை, சமாளித்தே ஆகவேண்டும்.

இப்படியான ஒரு அழுத்தத்துடன் கூடிய நிபந்தனையினால்தான் யூகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் ஸ்லோபடான் மிலோசவிச்சை சர்வதேச நீதிமன்றத்துக்கு 28 யூன் 2001ல் மேற்குலகம் கொண்டு வந்தததையும் மைத்திரி மறந்திருக்க மாட்டார்.

எரிக் சொல்கெ்ய்முக்கே வரிப்புலி சீருடை அணிவித்து கொழும்பில் கொடும்பாவி கொளுத்திய இனம் அல்லவா சிங்களஇனம். மைத்திரி நாட்டின் மானத்தை விற்றுவிட்டார் என்ற பெரும் குழப்பம் ஏற்படுவதை இந்த தேன்நிலவு காலத்துள் தவிர்க்கவே அவர் விரும்புவார்.

இந்த தேன்நிலவுக் காலத்தில் தமிழ் பாராளுமன்ற அரசியல் தரப்பு, முஸ்லிம் தரப்பு, மலையகத் தரப்பு என்பன மைத்திரியை வைத்து தமது மக்களுக்கு இருக்கின்ற அழுத்தங்களை, பயங்களை ஓரளவு குறைக்கவே முனைவர். அது யதார்த்தமே.

ஆனால் இதிலே மிக முக்கியமானது என்னவென்றால், யார் மைத்திரிக்கு ஆக பக்கத்தில் நெருங்குவது என்பதே. அதற்கான ஆதாரமாக இந்த மூன்று தரப்புகளும் தங்களது நாலு லட்சம் வாக்குகளே மைத்திரியின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லி வைக்கும்.

அந்த நாலு லட்சமா இந்த நாலு லட்சம் என்று குழம்பி போகத்தான் முடியும் மைத்திரியால்..தேன்நிலவின் முதல் ஊடல் இந்த தரப்பிலிருந்தே முதல் ஆரம்பித்து உள்ளது.

பதவியேற்ற பின்னர் உரையாற்றிய சிங்களதேச அதிபர் மைத்திரி தமது வெற்றிக்கு உழைத்தவர்களின் பெயர்களில் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் பெயரை சொல்லாமல் விட்டுவிட்டதை மனோகணேசன் சுட்டி காட்டியுள்ளார்.

ஆக, இந்த தரப்புகளில் ஒன்றை அணைத்து மற்றதை தவிர்த்து தேன்நிலவில் மூழ்கிட முடியாது என்பதுதான் இன்றைய நிலை.

ஆனால் கடந்த கால சிங்கள தலைமைப்பீடத்தில் அமர்பவர்களின் அரசியல் என்பது வடக்கு-கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் ஆகிய மூன்று தரப்பினுள்ளும் பேதங்களை, பிரிவுகளை, முரண்களை உருவாக்கி அதனூடாக எப்படித்தான் அரசியல் ரதத்தை செலுத்தினார்கள் என்பது இந்த தேன்நிலவு காலப் பகுதியில் மைத்திரி கற்றுக்கொள்ள போகும் பால பாடம்.

தேர்தல் விஞ்ஞாபனத்திலோ தென்னிலங்கையின் முக்கிய தேர்தல் பிரச்சார கூட்டங்களிலோ இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக எதுவுமே சொல்லாத மைத்திரி அந்த மௌனத்தையே அதிபர் நாற்காலியிலும் தொடர முடியாது என்பதை இப்போதே 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்து அது இது என்று பக்கத்து உபகண்டத்தில் இருந்து குரல்கள் வரத்தொடங்கியுள்ளன.

சர்வதேசம் அடிக்கடி உச்சரிக்கும் அதே வார்த்தையான தமிழர்களின் பிரச்சினைக்கு கௌரவமான ஒரு தீர்வை காணும்படி மேற்குலகும் சொல்லத் தொடங்கியுள்ளன.

தமிழர்களுக்கு ஏதும் வழங்கினால் அதனை எதிர்ப்பதையே அரசியலாக பல தசாப்பதங்களாக நடாத்தி சிங்கள மக்களை உசுப்பேத்தி வைத்திருக்கும் தார்மீக பொறுப்பு மைத்திரிக்கும் உண்டு (ரணிலுக்கும் கூட)

ஆக, இப்போது ஏதாவது ஒப்புக்கு தன்னும் வழங்கியே ஆகவேண்டிய இடத்தில் மைத்திரி. இவரால் தமிழின எதிர்ப்பை சொல்லியே அரசியல் செய்த சிங்கள மக்கள் இன்னமும் அதே மாறாத சிங்கள பேரினவாத நினைப்புடனும் தமிழின விரோதத்துடனுமே..

தேன் நிலவுக் காலத்தின் மிகப்பெரும் சவால் இதுவே..

இன்னுமொரு பெரும் பிரச்சனை இந்த தொண்ணூறு நாட்களுக்குள் காத்திருக்கிறது.

மகிந்தவை விட்டு கடைசி நேரத்தில் கழன்று வந்தவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு பதவி கனவுடனேயே இருப்பார்கள். அதிலும் கனமான அதிகாரம் நிறைந்த பதவிகளையே.

எல்லோருக்கும் கிள்ளி போட்டாலும்கூட பலர் ஒன்றுமே இல்லாமல் விடப்பட போகிறார்கள். பெரிய ஒரு எதிர்ப்பு கூட்டணியை கொள்கை ஏதுமற்று உருவாக்குவது பெரிய விடயமே அல்ல.

ஆனால் அதிகாரம் வந்தவுடன் அந்த கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் தரப்புகளையும் திருப்திப்படுத்துவது லேசுப்பட்ட விடயமே அல்ல. பல குழப்பங்கள்,அறிக்கை போர்கள், உள்வெட்டுகள், பிளவுகள் வரப் பார்க்கும்.

அதுவும் இந்த தேன்நிலவு கால பிரச்சனைகளில் ஒன்றே.

முரண்பாடான பல தரப்புகள், மிக மிக வேறுபட்ட அபிலாசைகளுக்காக பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் தெரிவு செய்யப்பட்ட அதிபர் இவை எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே வரப்போகின்ற தேன்நிலவு காலத்தின் முக்கிய விடயம்.

எல்லோர்க்கும் நடுநிலையாளனாக, சர்வதேசத்துக்கு, இந்தியாவுக்கு, சீனாவுக்கு என்று எல்லோருக்கும் நண்பனாக காட்டுவதற்கு வெகுவாக முயற்சித்து பார்ப்பார் மைத்திரி சிறீசேன. ஆனால் அது முடியவே முடியாது..

ஒருகட்டத்தில் இப்போது அணிந்திருக்கும் வெள்ளந்தியான முகமூடியை கழற்றி எறிந்துவிட்டு வழமையான தனது இனவாத முகத்துடனே தொடரவும் செய்வார்.

ஏனென்றால் எந்தவொரு இனவாதியும் மிக நீண்டநாட்கள் கௌதம புத்தராக வேடம் தரித்து நின்ற வரலாறே கிடையாது.

தேன்நிலவு காலத்தினுள்ளேயே இது நடந்தாலும் நடந்துவிடும். பார்ப்போம்.

ச ச முத்து

Advertisements