இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், தமிழ் மக்களும்

எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி (08.01.2015) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக இரு அதி தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத் தலைவர்கள் பிரதானமாகப் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவருமே கடந்த காலங்களில் தமிழர்களையும், தமிழீழ தேசிய விடுதலையையும் அழிப்பதற்கு கைகோர்த்து நின்றவர்கள். மேலும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முதுகில் குத்தி விட்டு ஜனாதிபதி கதிரையைப் பிடித்தவர் மகிந்த ராஜபக்ச. இப்பொழுது மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்திவிட்டு ஜனாதிபதி கதிரையைப் பிடிப்பதற்கு கிளம்பியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. இவர்கள் அனைவருமே தந்தையைக் கொன்றுவிட்டு அரச கட்டில் ஏறிய சிகிரி காசியப்ப பரம்பரையில் வந்தவர்கள்.mahinda hitler

இந்தச் சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி தீவிரமாக, ஜதார்த்தமாக சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தல் அறிவித்து ஒரு மாத காலத்துக்குப் பின்னர் தமது முடிவை அறிவித்திருக்கிறார்கள். அதாவது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது என அறிவித்திருக்கிறார்கள். இச் சந்தர்ப்பத்தில் ஒரு விடயம் மிகவும் முக்கியமானது. மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலம் இன்னும் இரு வருடம் நிலுவையில் உள்ள நிலையில் அவர் தேர்தலை அறிவித்திருக்கிறார். பொதுவாக மக்களின் ஆதரவு பெரிதாக தமக்கு இல்லையென்று தெரிந்த போதும் கூட தேர்தலை நடத்தியே ஆகுவேன் என்று முடிவு செய்துள்ளார். இச் சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ச தான் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்ன விலை கொடுத்தாவது தேர்தலில் வெற்றி பெற தன்னால் ஆன எல்லாவற்றையும் செய்வார் என எதிர்பார்க்கலாம். அல்லது வேறு மாற்று வழிகளையும் கையாளலாம். அவர் தொடர்ந்து தனது பதவியை நீடிக்க நேரிட்டால் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நிலை என்னவாக அமையும்?. மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அவரால் அதி தீவிர சிங்கள பௌத்த தேசிய வாதத்தை எதிர்த்து தமிழர்களின் அரசியல் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியுமா? என்ற கேள்வியும் ஒருவருக்கு இயல்பாக எழும்.

இது வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலோ இல்லை. அவ்வாறான தேர்தல்களில் தமிழ் மக்கள் பங்கெடுப்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் பெரும்பான்மை மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மேலும் அதிகாரவெறி, அந்தஸ்துவெறி, பணவெறி ஆகிய காரணங்களுக்காக பங்கெடுத்துக்கொள்ளும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? மேலும் இரு தலைவர்களுமே தமிழர்களின் அரசியல் தீர்வு பற்றியோ, அவர்களது எதிர்காலம் பற்றியோ, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றியோ எந்த கோட்பாட்டையோ, எந்த கருத்துக்களையோ தெரிவிக்கவில்லை. எனவே தமிழர்கள் இவ்விரு தலைவர்களுக்கும் வாக்களிப்பதால் எதுவித நன்மையும் தமிழர்களுக்கு ஏற்படுமா?

இவ்விரு தலைவர்களுக்கும் வாக்களிப்பதன் மூலம் புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான முயற்சியில் சில பின்னடைவுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் நிறைய உண்டு. ஈழத்திலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களும் தமிழ் தேசிய விடுதலையை நோக்கி ஜனநாயக வழியில் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டிய காலகட்டம் இதுவாகும்.

இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு தமது ஜனநாயக வழிகளில் சிந்தித்து ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இத் தேர்தலில் வாக்களிப்பது பற்றி அவர்கள் நிலைப்பாட்டை அறிவதற்கு ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் நிச்சயமாக ஆவலாகக் காத்திருப்பார்கள். இதுவரையும் அவர்கள் தமது நிலைப்பாட்டை தமிழீழ மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. எனவே, தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கின்ற நிலையில் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஜனநாயக அமைப்பு தங்களது இத் தேர்தல் பற்றிய நிலைப்பாட்டை ஈழத்தமிழ் மக்களுக்கு அவசரமாக அறிவிக்க வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு உண்டு.

என்னைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களையும், தமிழீழத்தையும் நேசிப்பவன் என்ற வகையில் எமது தமிழீழ மக்களுக்கு இரண்டு விடயங்களைக் கூற முடியும். ஓன்று அவர்கள் முற்றாக இத்தேர்தலைப் புறக்கணித்து தமது ஒட்டுமொத்த எதிர்ப்பை சிங்கள தேசத்திற்கும், உலகிற்கும் உரத்துச் சொல்ல வேண்டும்.

இரண்டு மகிந்த ராஜபக்சவினால் ஈழத்தமிழர்கள் இழக்கக் கூடாததை எல்லாம் இழந்திருக்கிறார்கள். சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும், வேதனைகளையும், சோதனைகளையும், அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஆத்திரத்தைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதாவது இச் சந்தர்ப்பத்தில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி தங்கள் ஆத்திரம் தீர ஓங்கி ஒரு அறை மகிந்த ராஜபக்சவின் கன்னத்தில் கொடுக்கலாம்.

அந்த உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஜனநாயகம் செத்துப் போன ஒரு நாட்டில் நீதித்துறை காலாவதியாகிப்போன நாட்டில், மனித நேயமும், சத்தியமும், தர்மமும், அறமும், நீதியும், நியாயமும், விலைபேசி ஏலத்தில் விற்கப்படும் ஒரு நாட்டில் ஈழத்தமிழர்கள் பெரிதாக ஒன்றையுமே அந்த நாட்டிலிருந்து எதிர்பார்க்க முடியாதுதான்.

எனவே அவர்களுக்குள்ள ஒரேயொரு வழி தமது அரசியல் விடியலுக்காக தொடர்ந்து ஜனநாயக ரீதியில் சர்வதேச மட்டத்தில் போராடுவதுதான் ஒரே வழியாகும். சில வேளைகளில் சிங்கள மக்கள் மத்தியில் அந்த அராயக ஆட்சிக்கு எதிராக ஒரு கிளர்ச்சி வெடிக்கும் சந்தர்ப்பத்தில் தமிழர்களின் அரசியல் தலைவிதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புக்களும் இல்லாமல் இல்லை.

பேராசிரியர் முருகர் குணசிங்கம்

Advertisements