முதிர்ச்சியற்ற ஆய்வுகளும், அவை பிறப்பிக்கும் கற்பிதங்களும்

உலகளாவிய ரீதியில் அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புரட்சி யுத்தங்களில் பெறுமதி வாய்ந்த இலக்குகளைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்து அமெரிக்க வெளியகப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ நிறுவனம் தயாரித்த உள்ளக அறிக்கையொன்று கடந்த 18ஆம் நாளன்று விக்கிலீக்ஸ் இணையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. பதினெட்டுப் பக்கங்களைக் கொண்ட இவ் உள்ளக அறிக்கையைப் போன்ற பல்வேறு அறிக்கைகளைக் கடந்த காலங்களிலும் விக்கிலீக்ஸ் இணையம் வெளியிட்டிருக்கின்றது. இவையெல்லாம் பொதுவாகத் தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுக் கொள்வதில்லை.

ஆனால் இம்முறை விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கை தமிழ் ஊடகப் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குக் காரணம் அவ் அறிக்கையின் காணப்பட்ட ஒரேயொரு வசனம் தான்:

‘‘நாம் சமீபத்தில் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இரகசிய தொடர்பாளர் ஒருவர் வழங்கியிருக்கும் தகவலின் படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய தலைவர்களும் 2 நவம்பர் 2007 அன்று சிறீலங்கா படைகள் நிகழ்த்திய அச்சொட்டான குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தது பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய பூகோளநிலைத் தகவல்களாகும்.’’Tamilselvan destroyed communication tower Kilinochchi

சி.ஐ.ஏ நிறுவனத்தின் அறிக்கையைக் கடந்த வாரம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தாலும்கூட அது ஏறத்தாள ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2009 யூலை மாதம், அந்நிறுவனத்தால் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் – படைத்துறை அதிகாரிகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருந்தது. ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்த அறிக்கைதான் இப்பொழுது விக்கிலீக்ஸ் இணையத்தால் வெளியிடப்பட்டு தமிழ் ஊடகப் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது ஒருபுறமிருக்க, இவ் அறிக்கையை நாம் நுணுகி ஆராய்ந்தால் அதில் காணப்படும் ஆய்வியல் குறைபாடுகளை கண்டு கொள்ளலாம்.

முதலாவதாக இவ் அறிக்கையை ஆழமான புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒன்றாக நாம் கருதிவிட முடியாது. ஏனெனில் ஏற்கனவே பொது அரங்கில் காணப்படும் தகவல்கள், அரசறிவியல்-போரியல் விற்பன்னர்களால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், அவர்களின் கருத்துக்கள் போன்றவற்றையும், பெயர் குறிப்பிடப்படாத மூலங்களையும் அடிப்படையாகக் கொண்டே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது இதனை ஒரு ‘சீரியசான’ முறையில் தயாரிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கையாக நாம் கருத முடியாது.

இதற்கு உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் பொறுப்புப் பற்றி இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்பதத்தை நாம் கொள்ளலாம். ஆரம்பத்தில் நாம் மேற்கோள் காட்டியபடி இவ் அறிக்கையில் தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளராக விளிக்கப்பட்டுள்ளார். இது ஒரு தவறான கூற்று என்பது ஒவ்வொரு தமிழர்களும் அறிந்ததொன்று. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொள்ளும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவரே தவிர, பேச்சாளராக அவர் விளங்கியதில்லை. தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் உடல்நலம் குன்றி இரண்டாம் கட்ட ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்ட பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான தூதுக் குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக தற்காலிகமாக 2006 ஒக்ரோபர் மாதம் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பொறுப்பேற்றோர். பின்னர் புற்றுநோய்க்கு ஆளாகி இரண்டு மாதங்களில் பாலா அண்ணை சாவைத் தழுவியதை அடுத்து, தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பொறுப்பை சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வகித்தார்.

இது உலகறிந்த உண்மை. ஆனால் சி.ஐ.ஏ நிறுவனத்தின் அறிக்கையைத் தயாரித்தவர்களோ, சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளாராக மட்டுமே விளித்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட அறிக்கையைத் தயாரித்தவர்களின் கவனயீனத்தையும், உலக அரசியல் விவகாரங்களில் அவர்களுக்குள்ள முதிர்ச்சியின்மையையுமே பட்டவர்த்தனமாக்குகின்றது.

அடுத்தது இவ் அறிக்கையில் குறிப்பிடப்படும் சி.ஐ.ஏ நிறுவனத்தின் தொடர்பாளர் பற்றியது. சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவரே காரணமாக இருந்தார் என்று சி.ஐ.ஏ நிறுவனத்திற்குத் தகவல் வழங்கிய நபர் யார் என்பதையோ, அன்றி சிறீலங்கா அரசாங்க உயர்மட்டங்களில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் பற்றியோ எந்தத் தகவல்களும் சம்பந்தப்பட்ட அறிக்கையில் இல்லை. உளவாளிகளின் இரகசியம் காப்பதற்காக இதனை சி.ஐ.ஏ மறைத்திருக்கலாம் என்று நாம் கருதினாலும், இது சி.ஐ.ஏ நிறுவனத்தின் தகவல் மூலங்களின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.

இவ்வாறு ‘சீரியசான’ புலனாய்வுத் தகவல்கள் எவற்றையும் உள்ளடக்காத இந்த அறிக்கை தமிழ் ஊடகப் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியப்படகூடிய ஒன்றன்று. ஏனெனில் பரபரப்புச் செய்திகள் ஏதுமின்றி பரபரப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ஊடக உலகிற்கு இவ்வாறான அறிக்கைகள் அடிக்கடி தீனி போடுவதுண்டு.

ஆனால் இவ் அறிக்கை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள் அலட்சியம் செய்யப்படக்கூடியவையன்று. தமிழ் ஊடகப் பரப்பில் இவ் அறிக்கை வெளிவந்ததும் இதுபற்றி கருத்துக் கூறிய ஒருவர்: ‘என்ன இது? தன்ர பொடிகார்ட் ஒரு துரோகி என்று தெரியாமல் எப்படி தலைவர் இயக்கத்தை நடத்தினார்? இதாலைதான் போராட்டமே அழிஞ்சது’ என்றார். இன்னொருவரோ கருத்துக் கூறுகையில்: ‘இந்த அளவிற்கு சிங்களவன் ஊடுருவியது தெரியாமல் இருந்த இயக்கம் எப்படி உருப்பட்டிருக்கும்?’ என்று குறிப்பிட்டார். இந்த இரு கூற்றுக்களிலும் ஒரு கருத்து இழையோடி நிற்பதை நாம் அவதானிக்கலாம்: தமது இரகசியங்களைப் பாதுகாக்க முடியாத கையறுநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்ததால்தான் நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ நடைமுறை அரசு துடைத்தழிக்கப்பட்டது என்பதுதான் அந்தக் கருத்து.

அரசுகள் முன்னெடுக்கும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாகத் திகழ்வது ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குள் மேற்கொள்ளப்படும் ஊடுருவல்களாகும். இவ் ஊடுருவல்கள் பல வழிகளில் நிகழ்வதுண்டு. ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தலைமையுடன் முரண்படும் போராளிகளை விலைக்கு வாங்குதல், வெளியில் இருந்து தமது ஆட்களை இயக்கத்திற்குள் நுழையவிட்டு தலைமைப்பீடத்தை நெருங்குதல் என இரண்டு வழிகளில் இவ் ஊடுருவல்களை அரசுகள் மேற்கொள்வதுண்டு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள்ளும் இவ்வாறான ஊடுருவல்கள் பல தடவைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு உதாரணமாக உமா மகேஸ்வரன், மாத்தையா, கருணா போன்றவர்களின் துரோகங்களை நாம் கொள்ளலாம். இதேபோன்று வெளியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் ஊடுவல்களை மேற்கொண்டு கையும் மெய்யுமாக சிங்கள – இந்திய உளவாளிகள் பிடிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

எனவே ஒரு பேச்சுக்கு சி.ஐ.ஏ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் உண்மையானது என்று நாம் ஏற்றுக் கொண்டாலும்கூட, அதனையிட்டு அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. ஆனால் இங்கு பிரச்சினை அதுவல்ல. சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் படுகொலை எவ்வாறு நிகழ்ந்தது என்பதுதான் எமது மையக்கருவாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் – பொறுப்பாளர்கள் தமது நடமாட்டங்கள் பற்றிய இரகசியக் காப்பைப் பேணுவதை நடைமுறையாகக் கொண்டவர்கள். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று சிங்கள தரைப்படையின் ஆழ ஊடுருவும் அணியினரின் நாசகார கண்ணிவெடித் தாக்குதல்கள். இரண்டாவது சிங்கள வான்படையின் வான்வழிக் குண்டுவீச்சுக்கள்.

வெளிநாட்டு இராசதந்திரிகள், ஐக்கிய நாடுகள் துணை நிறுவனங்களின் அதிகாரிகள் போன்றோரால் நன்கு அறியப்பட்ட ஒருவராக சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் திகழ்ந்தாலும்கூட, வன்னியில் சிங்கள ஆழ ஊடுருவும் அணியிரால் அவருக்கும் அச்சுறுத்தல் இருந்தது. உதாரணமாக 16.05.2001 அன்று அப்போதைய நோர்வீஜிய சிறப்புப் பிரதிநிதியாக விளங்கிய எரிக் சுல்கைம் அவர்களையும், நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ற்பேர்க் அவர்களையும் சந்திப்பதற்காக மல்லாவி நோக்கி சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சென்ற பொழுது, கொக்காவில் பகுதியில் வைத்து அவரது வாகன அணி மீது சிங்கள ஆழ ஊடுருவும் அணியினரால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத பொழுதும், அவருக்கு பாதுகாப்பு வழங்கிய வாகன அணியில் பயணித்த போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இதனால் எரிக் சுல்கைம் அவர்களுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு மறுநாள் (17.05.2001) அன்று நடைபெற்றது.

இதேபோன்ற சம்பவம் 20.02.2001 அன்றும் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த முப்பத்தாறு பௌத்த பிக்குகள் உட்பட 60 சர்வமதத் தலைவர்களை சந்திப்பதற்காக மன்னார் மடு நோக்கி அன்றைய தினம் பயணித்த தமிழ்ச்செல்வன் அவர்களின் வாகனம் மீது சிங்கள ஆழ ஊடுருவும் அணியினரால் கண்ணிவெடித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதன்பொழுதும் தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாது பொழுது அவரது வாகனம் சேதமடைந்ததாலும், அவரது பாதுகாப்பிற்கு மேலும் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் எனக் கருதப்பட்டதாலும் அவரது பயணம் இடைநிறுத்தப்பட்டு, அவரது இடத்திற்கு ஏனைய அரசியல் போராளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் வான்வழித் தாக்குதல்களைப் பொறுத்தவரை நிலைமை இவ்விதம் இருந்ததாக நாம் கூற முடியாது. இதற்குக் காரணம் தமிழ்ச்செல்வன் அவர்களின் பிரசன்னம் அதிக அளவில் இருந்த தமிழீழ அரசியல்துறையின் நடுவப் பணியகம், சமாதான செயலகம் மற்றும் கிளிநொச்சியில் இருந்த அவரது வதிவிடப் பாசறை ஆகியவற்றின் அமைவிடம் சிங்கள வான்படையினருக்கு நன்கு பரீட்சியமானவையே. இவ்விடங்களில் இருந்துதான் வெளித் தொடர்பாடல்களை தொலைபேசி வாயிலாகத் தமிழ்ச்செல்வன் அவர்களும் மேற்கொண்டு வந்தார்.

26.07.2006 அன்று மாவிலாற்றில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி நான்காம் கட்ட ஈழப்போரை சிங்கள அரசு தொடங்கியதில் இருந்து வன்னியில் பல தடவைகள் வான்வழித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களின் வாழ்விடங்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்டிருந்தாலும், சில வான்வழித் தாக்குதல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்கோள் தொலைபேசி இணைப்புக்களை கொண்டிருந்த பாசறைகளை இலக்கு வைத்தும் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு உளவாளிகளின் உதவி சிங்கள வான்படையினருக்கு தேவைப்படவில்லை. மாறாக செய்கோள் தொலைபேசிகளில் இருந்து மேல்நோக்கி எழும் அலைவரிசைகளே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. இவ்வாறு சிங்கள வான்படையினர் நிகழ்த்திய தாக்குதல்களில் பெரும்பாலானவை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பாசறைகளை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான தாக்குதல் ஒன்றிலேயே அனைத்துலக தொடர்பகத்தின் துணைப் பொறுப்பாளராக விளங்கிய லெப்.கேணல் கலையழகன் வீரச்சாவடைந்தார்.

ஆனால் தமிழீழ அரசியல்துறை நடுவப் பணியகம், சமாதான செயலகம், தமிழ்ச்செல்வன் அவர்களின் வதிவிடப் பாசறை ஆகியவற்றின் நிலை இவ்வாறிருக்கவில்லை. இங்கு சாதாரண தொலைபேசிகளும், செய்கோள் தொலைபேசிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இவ் இடங்களை இலக்கு வைத்து 02.11.2007இற்கு முன்னர் எவ்விதமான தாக்குதல்களையும் சிங்கள வான்படையினர் மேற்கொண்டதில்லை.

அதற்காக இவ்விடங்கள் மீது சிங்கள வான்படையினர் தாக்குதல்களை நிகழ்த்த மாட்டார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பியிருக்கவில்லை. இவ்விடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டால் அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து போராளிகளைப் பாதுகாப்பதற்காக அங்கு பதுங்கு குழிகளும் இருந்தன.

இவ்வாறான பின்புலத்திலேயே 02.11.2007 அன்று பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வதிவிடப் பாசறை மீதான வான்வழித் தாக்குதலை சிங்கள வான்படை நிகழ்த்தியது. இத்தாக்குதல் நிகழ்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் எல்லாளன் நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட வேவுப் புலிகளுக்கும், வான்புலிகளுக்கும் மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு விட்டுத் தனது வதிவிடப் பாசறைக்கு தமிழ்ச்செல்வன் அவர்கள் திரும்பியிருந்தார்.

பொதுவாக அதிகாலை வேளைகளில் வன்னி வான்பரப்பை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இஸ்ரேலிய தயாரிப்பான ஆளில்லா வேவு விமானங்களும், பீச் கிராப்ட் ரக ஆளியக்கி வேவு விமானங்களும் வட்டமிடுவதுண்டு. இவ்வாறானதொரு வேவு நடவடிக்கையை அன்று அதிகாலையும் சிங்கள வான்படையின் வேவு விமானங்கள் மேற்கொண்டன.

வேவு விமானங்களின் வான்வழி வேவு நடவடிக்கை நிறைவடைந்ததும் காலை 6:00 மணிக்கு வன்னி வான்பரப்பில் நுழைந்த சிங்கள வான்படையின் இரண்டு மிகையொலி யுத்த விமானங்கள், கிளிநொச்சியின் இரண்டு இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தின. இவ்விரு வான்வழித் தாக்குதல்களில் ஒன்றிலேயே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தாக்குதல் நிகழ்ந்த பொழுது தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது பதுங்கு குழிக்குள் இருந்தார். சிங்கள வான்படையின் மிகையொலி யுத்த விமானம் ஒன்றிலிருந்து வீசப்பட்ட குண்டொன்று வீழ்ந்து வெடித்ததில் அப் பதுங்கு குழி தூர்ந்து போக, தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவடைந்தார்.

சமநேரத்தில் தேவாலயம் ஒன்றுக்கு அருகில் உள்ள வீடுகள் மீது சிங்கள வான்படையின் யுத்த விமானங்கள் வீசிய பிறிதொரு குண்டு வீழ்ந்து வெடித்ததில் இரண்டு பொதுமக்கள் பலியானதோடு, மேலும் மூவர் காயமுற்றனர். அத்தோடு சிங்கள வான்படையின் யுத்த விமானங்கள் நிற்கவில்லை. ஏறத்தாள அரைமணிநேரத்திற்கு கிளிநொச்சி வான்பரப்பை வட்டமிட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திய பின்னரே அகன்றன.

இதுதான் அன்று நடந்தது. ஆனால் வான்வழித் தாக்குதல்கள் நிகழ்ந்து ஐந்து மணிநேரத்திற்குப் பின்னர் முற்பகல் 11:20 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்ட சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, கிளிநொச்சி திருவையாற்றில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரின் மறைவிடம் மீதும், இரணைமடுவிற்கு வடகிழக்காக அமைந்திருந்த கரும்புலிகளின் பாசறை மீதும் தமது மிகையொலி யுத்த விமானங்கள் தாக்குதல்களை நிகழ்த்தியதாக அறிவித்தது. எனினும் அப்பொழுது தமது வான்வழித் தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி சிங்கள வான்படை மூச்சுவிடவில்லை: சு.ப.தமிழ்ச்செல்வன் பற்றியும் குறிப்பிடவில்லை.

ஆனால் சிங்கள வான்படையின் வான்வழித் தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்று பிற்பகல் 1:00 மணியளவில் அதிகாரபூர்வ அறிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட மறுகணம் தனது அறிக்கையைத் திருத்திக் கொண்ட சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, தமது வான்படையினர் நிகழ்த்திய ‘அச்சொட்டான’ தாக்குதலில் தமிழ்ச்செல்வன் பலியானார் என அறிவித்தது. இதன் பின்னர் அன்று மாலை ரொய்டேர்ஸ் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய கோத்தபாய ராஜபக்ச, தமக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துத் தலைவர்களின் மறைவிடங்களும் தெரியும் என்றும், தேவைப்படும் பொழுது அவர்களை ஒவ்வொருவராக தமது படையினர் கொல்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கோத்தபாயவின் இக்கூற்றையும், அவரது தலைமையிலான சிறீலங்கா பாதுகாப்புத்துறை வெளியிட்ட இரண்டு அறிக்கைகளையும் நாம் நுணுகி ஆராய்ந்தால் இவற்றில் வேடிக்கையான அம்சம் புதைந்திருப்பது புலனாகும். அது யாதெனில் தாம் கிளிநொச்சியில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்திய இரண்டு இடங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவரின் தங்குமிடம் என்பதை சிங்கள அரசு தெரிந்து வைத்திருந்ததே தவிர, தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை தமது தாக்குதலில் தமிழ்ச்செல்வன் அவர்கள் பலியானார் என்பதை அது அறிந்திருக்கவில்லை என்பதாகும்.

இதுதான் யதார்த்தம். இதனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் நிகழ்ந்த இரு வௌ;வேறு சந்திப்புக்களில் அப்பொழுது சிங்களப் படைகளின் பேச்சாளராக விளங்கிய பிரிகேடியர் உதய நாணயக்கார, அமைச்சரவைப் பேச்சாளராக விளங்கிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் ஒப்புக்கொண்டிருந்தனர்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளன்று அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரத் தலைமையதிகாரியான ஜேம்ஸ் மூர் அவர்களுடன் உரையாடிய உதய நாணயக்கார, தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரைக் கொல்வதற்காகவே தமது வான்படையினர் வான்வழித் தாக்குதலை நிகழ்த்தியதாகவும், ஆனால் தாக்குதல் நிகழ்த்தப்படும் பொழுது அங்கு தமிழ்ச்செல்வன் இருந்தார் என்பது தமக்குத் தெரியாது என்றும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப் பின்னர் 07.11.2007 அன்று அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் அவர்களுடன் உரையாடிய கெஹெலிய ரம்புக்வெல, கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களைக் கொல்லும் நோக்கத்துடனேயே தாம் வான்வழித் தாக்குதலை நிகழ்த்தியதாகவும், எனினும் தாக்குதல் நிகழ்ந்த இடங்களில் ஒன்றில் தமிழ்ச்செல்வன் இருந்தது தமக்குத் தெரியாது என்றும் தெரிவித்திருந்தார். தவிர தளபதி சூசை அவர்களை இலக்கு வைத்துத் தாம் தாக்குதல்களை நிகழ்த்தியது அம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பாதீட்டிற்கு (வரவு-செலவுத் திட்டத்திற்கு) ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமிய ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டுவதற்காகவும், எவ்வாறாயினும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் விளைவாக இவ் ஆதரவு தமக்கு கிடைத்திருப்பதாகவும் ரொபேர்ட் ஓ பிளேக் அவர்களிடம் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டிருந்தார்.

இவ்விடயத்தை எழுத்து வடிவில் வோ~pங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சிற்கு 02.11.2007, 07.11.2007 ஆகிய நாட்களில் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளக அறிக்கைகளில் ஜேம்ஸ் மூர், ரொபேர்ட் ஓ பிளேக் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர். இவை இரண்டையும் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 04.10.2011 அன்று விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

எனினும் ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்விரு உள்ள அறிக்கைகளும் தமிழ் ஊடகங்களின் கண்களில் தட்டுப்படவில்லை. இதனால் இவற்றை உலகத் தமிழர்களும் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் இப்பொழுது விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை மட்டும் தமிழ் ஊடகங்களினதும், உலகத் தமிழர்களினதும் கண்களில் தட்டுப்பட்டிருப்பதுதான் எல்லாக் குழப்பங்களுக்கும் காரணமாகும்.

ஆயினும் இவ் இரு அறிக்கைகளையும் நாம் நுணுகி ஆராய்ந்தால் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளலாம். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வதிவிடப் பாசறையில் இருந்து செய்கோள் அலைவரிசைப் பரிவர்த்தனைகள் நீண்ட காலமாக நிகழ்ந்த பொழுதும் அது அவரது பாசறையா? அல்லது தளபதி சூசையின் பாசறையா? என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் சிங்களத்திடம் இருக்கவில்லை என்பதுதான் அது. அப்படியென்றால் இதன் அர்த்தம் கோத்தபாய கூறியது போன்றோ, அன்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் சி.ஐ.ஏ நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்றோ தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தில், அதுவும் தமிழீழ தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் மட்டத்தில், சிங்கள அரசுக்கு ஆட்கள் இருக்கவில்லை என்பதுதான்.

அவ்வாறு அல்லாத பட்சத்தில், திட்டமிட்டு தமிழ்ச்செல்வன் அவர்களைப் படுகொலை செய்து விட்டு அமெரிக்க இராசதந்திரிகளிடம் சிங்கள அரசு பொய்யுரைத்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழ்ச்செல்வனின் வதிவிடப் பாசறையில் இருந்து நீண்ட காலமாக செய்கோள் பரிவர்த்தனைகள் நிகழ்ந்தன என்ற வகையில், அவரது படுகொலை ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமிய ஆகியவற்றின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் இலகுவான இலக்கு ஒன்றின் மீது மகிந்தரின் அரசாங்கம் நிகழ்த்திய தாக்குதலாகவே கொள்ளப்பட வேண்டும். இப்படிப் பார்த்தால் தமிழ்ச்செல்வன் அவர்களை சிங்களம் படுகொலை செய்ததை எதிர்ப்புரட்சியில் அதற்கிருந்த ஆளுமைக்கான சான்றாக நாம் கொள்ள முடியாது. மாறாக அரசியல் ஆதாயத்திற்காக அது புரிந்த ஒரு கோழைத்தனமான தாக்குதலாகவே கருத முடியும்.
– கலாநிதி சேரமான்

Advertisements