கொழும்பின் அரசியல் சகதிக்குள் புதையுண்டு போகும் ஈழத்தமிழினம்?

தமிழர்களின் தாயகம் அவர்களின் அடையாளம் தேசிய அளவில் ஒரு இனமாக அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் பின்தள்ளப்படும் நிலையை உருவாக்குவதும் அரச அதிகாரத்தையும் அதன் கட்டமைப்பையும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஏற்று கொள்கின்றார்கள் என்பதை அனைத்துலகுக்கும் எடுத்து காட்டவும் இந்த தேர்தல் உதவ உள்ளது.genocide lanka

சிறி லங்கா அதிபர் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் விருப்புகளை ஒரு பொருட்டாக கொள்ளாத நிலை இருப்பதை தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிகாட்டி உள்ளனர். இந்த நிலையை பல கொழும்பு ஊடகங்களும் எடுத்து காட்டுகின்ற போதிலும் அதனை விபரித்து காரணம் காட்டுவதில் பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனை தமிழர்களையே மீண்டும் குற்றவாளிகளாக காட்ட முனைவது தெரிகிறது. முன்னணியில் போட்டி இடும் இருதரப்பும் தமிழர்களை இணைத்து கொண்டால் பேரினவாதம் பேசி சிங்கள மக்களின் வாக்குகளை வெல்ல முடியாது என்பதே உண்மை.

அதேவேளை தமிழர்களை எதிரிகளாக காட்டாது விட்டாலும் அவர்களை கைவிட்டு விடுவதே சிங்கள வாக்காளர்களை கவர்வதற்கு ஒரே வழியாகும். நாட்டின் பிரச்சனைகளாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அரச பணியகங்களில் ஊழல், அதிபர் அதிகார முறைமை ஆகியவற்றை தமது முதன்மை அம்சங்களாக இத்தேர்தல் கொண்டிருக்கிறது.

தமிழர்களின் தாயகம் அவர்களின் அடையாளம் தேசிய அளவில் ஒரு இனமாக அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் பின்தள்ளப்படும் நிலையை உருவாக்குவதும் அரச அதிகாரத்தையும் அதன் கட்டமைப்பையும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஏற்று கொள்கின்றார்கள் என்பதை அனைத்துலகுக்கும் எடுத்து காட்டவும் இந்த தேர்தல் உதவ உள்ளது.

அரசு ஒன்றின் அடிப்படை பண்புகளில் அதிகாரமும் கட்டமைப்பும் அதனை ஏற்று வழிநடாத்தும் மத்திய அரசாங்கமும் புறநிலப்பகுதிகளும், அந்த அரசை நடாத்தும் அரசாங்கத்துடன் இனைந்து செயற்படுவோரும் அதன் கொள்கைகளை மறுத்து நிற்போரும் மிக முக்கியமான அங்கங்களாக உள்ளனர். அதே வேளை இதே வரிசையில் வரக்கூடிய அடுத்த அங்கமான சமூகங்கள் மத்தியிலே சமநிலையும், வேற்றுமையும் எனும் பங்கு இத்தேர்தலில் கைவிடப்பட்டுள்ளது.

சமூகங்கள் மத்தியிலே சமநிலையும், வேற்றுமையும் என்ற அங்கம் பௌத்த சிங்கள பேரினவாத நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு பொருளாதார நோக்கில் கையாளப்படுவதன் மூலம் இனங்களிடையே உள்ள வேற்றுமை அரசியல் நோக்கத்திற்காக மேலும் வளர்கப்படுகிறது.

இதனால் சிறிலங்கா சனநாயக அடிப்படைகளை பின்பற்றும் ஒரு நாடு இல்லை என்பதை எடுத்து காட்டும் ஒரு தேர்தலாக இத்தேர்தல் அமையும். ஏனெனில் இனவாத வேற்றுமையின் வளர்ச்சியில் நாட்டிற்கு தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க உள்ள நிலையில் எந்த தலைவர் பதவிக்கு வந்தாலும் இன வாதமே இறுதி வெற்றி பெற்றதாக அமையும். அத்துடன் இதர தேசிய இனங்கள் தேர்தலில் முக்கியத்துவம் வழங்காத நிலை உள்ளது.

மகிந்த தனது தேவைக்கும், பதவி ஆசைக்கும் ஏற்ற வகையில் அரசியல் சட்டத்தை மாற்றி அமைத்தது ஏற்கனவே ஏதேட்சாதிகார அரசு என்ற பெயர்பெற வைத்துள்ளது. இனவாத போற்றுகையின் உச்சத்தில் இவர் மீண்டும் பதவி ஏற்பது சனநாயக படுகொலையாக அமையும் இதனை வைத்து கொண்டு தான் மேலை நாடுகள் ஏற்கனவே எச்சரிக்கை சமிக்ஞைகளை காண்பிக்க ஆரம்பித்துள்ளன.

ஒருவேளை எதிர்தரப்பு வெற்றி காணும் நிலை ஏற்பட்டால், அதிபரின் அதிகாரத்தை இல்லாது ஒழிப்பது என்பது நாடாளுமன்றத்தில் பலம் கொண்ட பகுதிக்கும், அதிஉட்ச அதிகாரம் கொண்ட அதிபருக்கும் இடையிலான நாடாளுமன்ற தொடர் நாடக காட்சிகளாக அமையுமே தவிர இதில் இனவாதம் அழிந்து விடப்போவதில்லை.

பதிலாக தமிழர் பிரச்சனைகள் இந்த நாடக சனநாயக காட்சிகள் மத்தியில் கரைந்து போகலாம். பௌத்த சிங்கள தேசிய பிரச்சனைகளுடன் தமிழர் பிரச்சனை அடிபட்டு போவதற்கு பெரும் வாய்புகள் உண்டு. இதனால் அதிபர் முறைமை மாறுவதன் மூலம் எமது கனவுகள் அரசியல் விருப்புகள் தீர்க்கப்படும் என்று நினைப்பதோ அல்லது வேற்றுமைகள் நீங்கி சிறீலங்கா என்ற தேசத்துடன் வாழலாம் என்று நினைப்பதோ இவை இரண்டுமே இலவம் பஞ்சு கதையாக மாறிவிடும்.

இந்த தேர்தல் மூலம் கொழும்பு ஊடகங்கள் ஒரு விடயத்தை முக்கியமாக நோக்குகின்றன. அதாவது எவ்வாறு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு போக வைப்பது என்பது தான் அவர்களுடைய பிரச்சனை. அதுவே அவர்களுக்கு போதுமானது. யாருக்கு அவர்கள் வாக்களிக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல.

சிறி லங்கா அரச கட்டமைப்பு தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது என்று வலியுறுத்தினால் அதுவே கொழும்பு அரசியலுக்குள் தமிழர்கள் நாட்டம் கொண்டுள்ளனர் என்ற அனைத்துலகத்திற்கான செய்தியாக அமையும். இது புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர் கட்டமைப்புகளிற்கு பெரும் சவாலாக அமையும்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பிற்கும், களநிலை தமிழ் வாக்காளர்கள் மத்தியிலும் அரசியல் மனோநிலையில் பெரிய வித்தியாசம் இல்லை. இனிமேல் புலம் பெயர் தமிழர் என்றும் உள்நாட்டில் வாழும் தமிழர் என்றும் பிரித்து பார்ப்பது தகுதி அற்ற ஒன்றாகும்.

இலங்கைத் தீவில் தமது சுயலாபத்தினை கருத்தில் கொண்டு இயங்கும் சிறு முதலீட்டாளர் தொடக்கம் வங்கி நிறுவனங்கள் வரையில் வடக்கு கிழக்கில் இருந்து தம்மால் எவற்றை எல்லாம் பெற்றுக் கொள்ள முடியுமோ அதற்கு ஏற்றாற்போல விளம்பரங்களும், செய்தி திரிபுகளும் செய்து வருகின்றனர். இதனால் வடக்கு கிழக்கு செழிப்படைந்து விட்டது போல் தெரிகிறது.

அடிப்படையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு புலம் பெயரவும் நாதியற்ற இலட்சக்கணக்கான மக்களே வடக்கு கிழக்கபகுதியில் வாழ்பவர்கள் ஆவார்கள். இவர்கள் வெளிநாட்டில் வாழும் தமது உறவினர்களின் தயவிலேயும் சில சமூக சேவை நிறுவனங்களின் தயவிலேயும் தமது வாழ்வை ஓட்டி வருகின்றனர்.

அரச கட்டமைப்பினால் உருவாக்கப்பட கூடிய social welfare என்று அழைக்கப்பட கூடிய எந்த சமூக நலன்களுக்குள்ளும் உட்பட்டவர்களாக வடக்கு கிழக்கு மக்கள் இல்லை. ஒருசில தேவைக்கு ஒவ்வாத நலன்கள் புள்ளி விபர நோக்கத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் ஆங்காங்கோ பத்திரிகை விளம்பரத்தின் மத்தியில் இடம் பெற்றிருக்கலாம். அடிப்படையில் இவர்கள் கைவிடப்பட்ட மக்களாகவே பார்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

இதனால் புலம்பெயர் தமிழரையும், ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் பிரதி நித்துவப்படுத்துவோர் இணைந்த ஒரே தேசிய நோக்கம் கொண்ட மகாநாடுகள் நடாத்த வேண்டி உள்ளது இது இனவாதத்தை சிந்திக்க வைக்கும்.

இராணுவ ஆக்கிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் நிலப்பகுதியும் அதன் குடித்தொகையும், அரசியல் அதிகாரங்கள் அற்று அற்ப விடயங்களுக்காக தம்மைதாமே அடித்துக்கொள்ளும் மாகாண சபை அரசியல் தலைமையும், கொழும்பு அரசியல் நாடகத்திற்குள் ஏற்கனவே சிக்குண்டு தவிக்கிறது.

இவற்றை கருத்தில் கொண்டு கொழும்பு அதிகாரத்தையும் கட்டமைப்பையும் தமிழர்கள் ஏற்று கொள்ள வில்லை என்பதை உலகறிய செய்யும் வண்ணம் செயற்பட துணியுமிடத்து எந்த நேரத்திலும் நில ஆக்கிரமிப்பும் படை குவிப்பும் திசை திரும்பும். இந்த நிலை பல்வேறு நில ஆக்கிரமிப்பின் கீழ் உட்பட்ட சமுதாயங்களின் அனுபவங்களாகும்.

லோகன் பரமசாமி.

Advertisements