கட்சி தாவுவாரா கே.பி?

mahinda_kpஅதிபர் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க, சிங்கள தேசத்தில் வெகு சர்வசாதாரணமாகக் கட்சி தாவல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. ஆளும் கூட்டணியில் இருந்து பொது எதிரணிக்கும், பொது எதிரணியில் இருந்து ஆளும் கூட்டணிக்கும் என நிகழும் இக் கட்சி தாவல்கள் தேர்தலுக்குப் பின்னரும் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம். அப்படித்தான் சிங்கள தேசத்தின் ‘சனநாயக’ அரசியல் இருக்கின்றது.

இக் கட்சி தாவல்களின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு அம்சம் யாதெனில் இதில் தமிழ் ஒட்டுக்குழுக்களும் இணையத் தொடங்கியிருப்பதுதான். ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறிப் பொது எதிரணியில் இணைவதற்கு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பலர் தயாராக இருக்கின்ற பொழுதும், அச்சம் காரணமாக அவர்கள் பின்னிற்பதாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்த நிலையில் இவ்வாரம் பிள்ளையானின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், அவரது சகாக்களும் பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளனர். இதே பாணியில் வரும் நாட்களில் கருணா குழு, ஈ.பி.டி.பி கும்பல் ஆகியவற்றில் இருந்தும் கட்சி தாவல்கள் நிகழ்ந்தாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வாறான கட்சித் தாவல்கள் இடம்பெறும் பொழுது இவ் ஒட்டுக்குழுக்களுக்குத் தலைமை தாங்குவோர் என்ன செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வியும் மக்களிடையே எழுவது இயல்பானதே. அதுவும் ஒரு கதைக்கு வரும் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறீசேன வெற்றி பெற்றால் கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, கே.பி போன்றவர்கள் என்ன செய்வார்கள்? என்பதே பலரது கேள்வியாகவுள்ளது. அதிலும் குறிப்பாக கே.பி என்ன செய்வார்? என்பதே முக்கியமானதாகும்.

எனினும் இதற்கான பதிலை அனுமானிப்பது அவ்வளவு கடினமானதன்று. ஏனெனில் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் கே.பியின் கையாட்களின் நடவடிக்கைகளை நாம் உற்று நோக்கினால் கே.பி என்ன செய்யப் போகின்றார் என்பது பற்றிய சில புரிதல்களைப் பெற முடியும்.

1996ஆம் ஆண்டின் கடைக்கூறில் பிரான்சில் இருந்து வன்னிக்கு லோறன்ஸ் திலகர் அவர்கள் அழைக்கப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த கே.பி, 2003ஆம் ஆண்டின் முதற்கூறில் அனைத்துலக செயலகம் கலைக்கப்பட்டு, அதன் பணிகள் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களின் தலைமையிலான அனைத்துலக தொடர்பகத்தால் பொறுப்பேற்கப்படும் வரை புலம்பெயர் தேசங்களில் ஒரு தனிக்காட்டு இராச்சியத்தையே நடத்தினார். இக் காலப் பகுதியில் கே.பியின் தனிக்காட்டு இராச்சியத்தின் மந்திரிகளாக இருவர் திகழ்ந்தனர். ஒருவர் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக கே.பியால் நியமிக்கப்பட்ட மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரன். மற்றையவர் அனைத்துலக செயலகத்தின் நிதிப் பொறுப்பாளராக விளங்கிய சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேந்திரா. இவர்களில் மனோ என்பவர் பெயரளவில் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக விளங்கினாலும் நடைமுறையில் அப்பொறுப்பை வகித்தவர் சர்வே.

2003ஆம் ஆண்டு அனைத்துலக செயலகத்தின் பணிகளை வீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையிலான அனைத்துலக தொடர்பகம் பொறுப்பேற்ற பொழுது அதற்கு கே.பியால் கையளிக்கப்பட்ட முதிசம் பல மில்லியன் டொலர் கடன் சுமை. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழீழ தேசியத் தலைவர், இது பற்றி கே.பியிடம் விளக்கம் கேட்ட பொழுது சர்வேயின் பக்கம் கையைக் காட்டி விட்டு கே.பி நழுவிக் கொண்டார்.

இதன் விளைவாக வன்னிக்கு அழைக்கப்பட்ட சர்வேயிடம் அனைத்துலக தொடர்பகப் போராளிகள் விளக்கம் கேட்ட பொழுது கணக்குகள் எதுவுமின்றி அவர் நழுவிக் கொள்ள முற்பட்டார். இதனையடுத்து அவரை வன்னியில் தங்குமாறு கேட்கப்பட்ட பொழுது, தான் அவசரமாகத் தனது குடும்ப விடயமாக நோர்வே செல்ல வேண்டும் எனக்கூறி அங்கிருந்து ஒஸ்லோ சென்ற சர்வே அதன் பின்னர் வன்னி திரும்பவேயில்லை. தனது செய்கையை நியாயப்படுத்தி பதினான்கு பக்கத்தில் வன்னிக்கு சர்வே எழுதிய கடிதத்தை நாம் இங்கு வெளியிட விரும்பவில்லை. அதில் ஒருவரது தனிப்பட்ட குடும்ப விடயங்களும் இருப்பதால் நாகரீகம் கருதி அதனை நாம் தவிர்த்துக் கொள்கின்றோம்.

உண்மையில் சர்வே அவர்களை வன்னியில் தங்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டது அவரைத் தண்டிப்பதற்காக அல்ல. மாறாக மக்களுக்காகப் புலம்பெயர் தேசங்களில் பணிபுரியும் ஒருவர் எவ்வளவு எளிமையுடனும், நிதி விடயங்களில் ஒழுக்கம்-கட்டுப்பாட்டுடனும் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் நோக்கத்துடனேயே அவரை வன்னியில் தங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். தவிர அவருக்கான பணி அனைத்துலக தொடர்பகத்தில் அல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இதனைப் புரிந்து கொள்ளாத சர்வே, தன்னை ஏதோ நிலத்தடி சிறைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடுத்து வைக்கப் போகின்றார்கள் என்று அஞ்சினார். ஏனென்றால் குற்றமுள்ள மனம் குறுகுறுக்கத் தானே செய்யும்?

இவ்வாறு 2003ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் இருந்து விலகி ஓடி ஒளிந்து கொண்ட சர்வே, 2009 மே 18இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை கே.பி தொடங்கிய பொழுது அவருக்குப் பக்கபலமாகக் களமிறங்கியவர். இதற்கு சர்வே முன்வைத்த நியாயம், புலம்பெயர் தேசங்களில் தங்களால் கட்டியெழுப்பப்பட்ட அமைப்புக்களின் மேல் ‘மாபியா’ குந்தியிருக்கின்றது என்பதுதான். இங்கு ‘மாபியா’ என்று சர்வே குறிப்பிட்டது 2003ஆம் ஆண்டு நிகழ்ந்த கே.பியின் பதவியிறக்கத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட – தேசியத் தலைமையின் அங்கீகாரம் பெற்ற – தேசிய செயற்பாட்டாளர்களையே.

அத்தோடு அவர் நின்றிருந்தால் பரவாயில்லை. கனடா தொடக்கம் சுவிற்சர்லாந்து வரை அஞ்ஞாதவாசம் புரிந்த கே.பியின் விசுவாசிகளான தனது ஏனைய சகாக்களையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை உடைக்கும் பிரயத்தனங்களை மேற்கொண்டார். விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் கவர்ச்சி அரசியல் குழுவை 2009ஆம் ஆண்டு யூன் மாதம் கே.பி உருவாக்கிய பொழுது அதனைத் திரைமறைவில் இருந்து இயக்கும் பொறுப்பு சர்வேயிடமே வழங்கப்பட்டது. இதுபற்றி கே.பியின் சரணடைவு நாடகம் நிகழ்ந்தேறிய காலப்பகுதியில் ஸ்கண்டனேவிய நாடொன்றில் வசிக்கும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரிடம் கருத்து வெளியிட்ட சர்வே, ‘‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ரயில் வண்டியின் முன் இயந்திரமாக ருத்ரா இருக்கின்றார். பின் இயந்திரமாக நான் இருக்கின்றேன். முன் இயந்திரமாகிய ருத்ரா ஓய்ந்து போனால் பின் இயந்திரமாகிய நான் ரயில் வண்டியை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்த்துவிடுவேன்’’ என்று தம்பட்டம் அடித்திருந்தார்.

இத்தகவல்களை எல்லாம் இப்பத்தியில், அதுவும் இக்கால கட்டத்தில், ஏன் பதிவு செய்கிறோம் என்று நீங்கள் எண்ணக்கூடும்.

சிங்கள தேசத்தில் அதிபர் தேர்தலுக்கான முன் நடவடிக்கைகள் சூடுபிடித்திருக்கும் நிலையில் இவ்வாரம் தனியார் இணையம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கும் சர்வே, அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறீசேனவிற்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், அதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றார். கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் கே.பியின் வலது கையாக விளங்கிய ஒருவர், 2009 மே 18 இற்குப் பின்னர் கே.பியின் காட்டு இராச்சியத்தை உயிர்த்தெழ வைக்க முற்பட்ட ஒருவர், கே.பியால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் பின் இயந்திரம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒருவர், மைத்திரிபால சிறீசேனவிற்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதை சாதாரண பிதற்றலாக நாம் கருதிப் புறந்தள்ளி விட முடியாது. இவரது நிலைப்பாட்டை நாம் நுணுகி ஆராய்ந்தால் அதன் நதிமூலம் கே.பி அவர்களிடம் இருந்து தொடங்குகின்றது என்றே கூற முடியும்.

கே.பியின் சரணடைவு நாடகம் என்பது மிகவும் நுட்பமாக அரங்கேற்றப்பட்ட ஒன்று. தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராகத் தனக்குத் தானே முடிசூடி, தனது தர்பாருக்குத் தலைமைச் செயலகம் என்று பெயர்சூட்டி, புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களின் வீரியத்தைக் குறைப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கவர்ச்சி அரசியல் குழுவை உருவாக்கிய பின்னரே தனது சரணடைவு நாடகத்தை கே.பி அரங்கேற்றினார். இதுபற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்ட பொழுது மலேசியாவில் கே.பியுடன் உடனிருந்து, பின்னர் அவரது திருகுதாளங்களை மக்கள் மத்தியில் போட்டுடைத்த கலாநிதி முருகர் குணசிங்கம் தனது நூல் ஒன்றில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கே.பியின் சரணடைவு நாடகத்தின் பின்னணியில் வெறுமனவே சிங்கள அரசும், மலேசிய அரசும் மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. இதில் சில வல்லரசு நாடுகளும் தொடர்புபட்டிருந்தமைக்கான தடயங்களும் உள்ளன. தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உயிருடன் பத்திரமாக இருக்கின்றார் என்று 18.05.2009 அன்று அறிவித்த கே.பி, ஐந்து நாட்களுக்குள் அந்தர்பல்டி அடித்து தலைவர் அவர்களின் இருப்பை மறுதலித்ததும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் சித்தாந்த தூண்களாக விளங்கும் தமிழீழ தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை வெறுமனவே தமிழ் மக்களின் சுயகௌரவத்திற்கான போராட்டமாக வர்ணித்து அறிக்கை வெளியிட்டதும் ஏதேச்சையாகவோ, அன்றி தவறுதலாகவோ நிகழ்ந்த விடயங்கள் அல்ல.

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதற்கு அங்கீகாரம் கோரி பழ.நெடுமாறன், வைகோ, காசியானந்தன், ம.க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தொலைபேசியில் கே.பி உரையாடிய பொழுது, ஒரு கேள்வியை பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் எழுப்பியிருந்தார். இறுதிப் போரில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் பின்புலத்தில் திடீரென தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து அவசர அவசரமாக அறிக்கை விட வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் அது. ஆனால் அதற்கு கே.பி கூறி நியாயம்: ‘எல்லாம் முடிந்து விட்டது. இனி எதுவும் சரி வராது’ என்பதுதான். இதனைத் தொடர்ந்து தலைவர் அவர்களின் இருப்பை மறுதலித்து கே.பி அறிக்கை வெளியிட்ட பொழுது, அதற்கான பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பழ.நெடுமாறன் ஐயா, ஐந்து நாட்களுக்கு முன்னர் தலைவர் அவர்கள் உயிருடனும், பத்திரமாகவும் இருப்பதாக அறிவித்த கே.பி, திடீரென எவரின் நிர்ப்பந்தத்தின் பெயரில் தலைவர் அவர்களின் இருப்பை மறுதலிக்க முற்படுகின்றார் என்று வினவினார்.

இவையெல்லாம் ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தேறியவை. இதன் பின்னர் மிகவும் கச்சிதமாகச் சரணடைவு நாடகத்தை அரங்கேற்றிய கே.பி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள் உட்பட பல மில்லியன் டொலர் பெறுமதியான தமிழ்த் தேசிய சொத்துக்களை மகிந்த சகோதரர்களிடம் பவ்வியமாகக் கையளித்து இன்று அவர்களின் நன்மதிப்பிற்கு உரியவராகத் திகழ்கின்றார். கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற பொழுது கிளிநொச்சியில் செய்தியாளர் மாநாடொன்றைக் கூட்டிய கே.பி, கடந்த காலத்தில் தான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், புலம்பெயர்வாழ் தமிழர்களையும் திட்டித் தீர்த்து ஏதேதோ பிதற்றினார்.

இப்பொழுது கே.பி மௌனமாகவே இருக்கின்றார். ஒரு வேளை மகிந்த சகோதரர்கள் உத்தரவு பிறப்பித்தால் கிளிநொச்சியில் இன்னுமொரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அவர்கள் மீதான தனது விசுவாசத்தை மீண்டும் கே.பி காண்பிக்கக்கூடும். எது எப்படி நடந்தாலும் தனது எதிர்காலம் பற்றிய கேள்வி கே.பி அவர்களிடம் எழாமல் இல்லை.

மைத்திரிபால சிறீசேன ஆட்சிக்கு வந்தால் கே.பியிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என்று இவ்வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் கொழும்பில் தெரிவித்துள்ளனர். இது கே.பியை திரிசங்கு நிலைக்குத் தள்ளியுள்ளது என்றுதான் கூறவேண்டும். எது நடந்தாலும், நடக்காது போனாலும் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மகிந்த சகோதரர்களுக்கு விசுவாசமாக இருப்பதே கே.பியிற்கு இப்பொழுதுள்ள தெரிவாகும்.

ஏனென்றால் இப்பொழுது கட்சி தாவலை கே.பி மேற்கொண்டு, அதிபர் தேர்தலில் மகிந்தர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கே.பியின் கதை அதே கதையாகிவிடும். எனவே பல்லைக் கடித்துக் கொண்டு இப்போதைக்கு மகிந்த சகோதரர்களுக்குத் தலையாட்டுவதைத் தவிர கே.பியிற்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை. அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது அதிபர் தேர்தலில் மகிந்தர் தோல்விடையும் பட்சத்தில் கே.பியின் கதை அதே கதையாகிப் போனாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

அதிபர் தேர்தலில் தான் தோல்வியடையும் பட்சத்தில் ஆட்சியதிகாரத்தை மைத்திரபால சிறீசேனவிடம் ஒப்படைப்பதற்குத் தயங்கப் போவதில்லை என்று சிங்கள ஆயர் ஒருவரிடம் இவ்வாரம் மகிந்தர் உறுதியளித்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதும், இவ்வாறான வாக்குறுதி மீறல்களுக்கு நியாயம் கற்பிப்பதும் மகிந்தருக்கு கைவந்த கலை. எனவே தனது வாக்குறுதியை மகிந்தர் காப்பாற்றுவார் என்று நாம் திடமாகக் கூற முடியாது. நடைமுறையில் மகிந்தரின் ஆட்சிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் தேர்தலில் தோல்வியுற்றாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிபர் சிம்மாசனத்தை விட்டு மகிந்தர் இறங்கத் தேவையில்லை என்ற கருத்தும் அவரது விசுவாசிகள் மட்டத்தில் உள்ளது. இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமானது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்தது கோத்தபாயவின் அதிகார வெறி. பெயரளவில் சிங்கள படைத்துறை அமைச்சின் செயலாளராக கோத்தபாய விளங்கினாலும்கூட நடைமுறையில் ஆயுதப் படைகளை இயக்கும் மகிந்தரின் சேனாதிபதியாகவே அவர் திகழ்கின்றார். இன்று சிங்கள தேசத்தில் மகிந்தருக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்த ஒருவர் உள்ளார் என்றால் அவர் கோத்தபாயதான். ஒன்பது ஆண்டுகளாக அதிகார ருசி கண்ட கோத்தபாய அதனை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அதிபர் தேர்தலில் மகிந்தர் தோல்வியுறும் பட்சத்தில் ஆயுதப் படைகளைத் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் கோத்தபாயவின் நகர்வு எவ்வாறானதாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். அதிபர் தேர்தலில் மகிந்தர் தோல்வியடைந்தால் மூழ்கும் கப்பலில் இருந்து குதித்தோடும் எலிகளைப் போன்று நாட்டை விட்டு ஓடுவதற்கு பலர் முற்படக்கூடும். இதற்கு வாய்ப்புக் கிடைத்தால் இவர்களின் வரிசையில் கே.பியும் இணைந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை. ஆனால் ‘சூழ்நிலைக் கைதி’ என்று புலம்பெயர் தேசங்களில் உள்ள தனது கையாட்களால் விளிக்கப்படும் கே.பி நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வார் என்பது மில்லியன் டொலர் கேள்விதான்.

இங்குதான் கே.பியின் மதிமந்திரியான சர்வே எழுதிய கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. சர்வேயின் ஆலோசனைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்களில் மைத்திரிபால சிறீசேனவிற்கு ஆதரவான பரப்புரைகளை கனடா தொடக்கம் சுவிற்சர்லாந்து வரையான மேற்குலக நாடுகளில் உள்ள கே.பியின் கையாட்கள் மேற்கொண்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இது தமிழீழத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது வேறுவிடயம். எனினும் மைத்திரிபால சிறீசேன ஆட்சிக்கு வந்தால் கே.பியின் இருப்பைத் தக்க வைப்பதற்கு தமது பரப்புரைகள் உதவும் என்று இவர்கள் நம்புகின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

வாளேந்திய சிங்கக் கொடியை சம்பந்தர் தூக்கிப் பிடித்ததையும், பயங்கரவாதிகள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளை வர்ணித்ததையும் இராசதந்திரம் என நியாயப்படுத்தி ஒட்டுண்ணி அரசியல் புரியும் இவர்கள் இந்தக் கோணத்தில் சிந்திப்பது ஆச்சிரியப்பட வேண்டியதன்று. ஏனெனில் ஓடும் வண்டியில் ஒட்டிக் கொள்வதே ஒட்டுண்ணி அரசியல் எனப்படுகிறது. இவ் அரசியல் புரிபவர்களே ஒட்டுக்குழுக்கள் என அழைக்கபடுகிறார்கள்!

– கலாநிதி சேரமான்

*******

குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்?[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015,Tamilwin ]

மூன்று புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுடன் கே.பி என்ற குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

அவர்கள் எங்கு சென்றனர், எந்த விமானத்தில் சென்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்கள் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் செல்லும் போது ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி மாத்திரமே அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

குமரன் பத்மநாதனை நாட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் போது அடையாளம் காணமுடியாதபடி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குமரன் பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டதுடன் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டார். அவ்வப்போது நடத்தப்பட்ட தேர்தல்களின் போது பத்மநாதன் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வடக்கில் செயற்பட்டார்.

இம்முறையும் இறுதி வரை வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் தேர்தல் பணிகளுக்கு அவர் பங்களிப்பு வழங்கி வந்தார்.

Advertisements