மகனே! மாவை சேனாதி வார்த்தை பக்குவம் ராசா!

யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்பது வள்ளுவர் உரைக்கும் அறம்.இந்த உலகில் எந்த அறத்தைக் காப்பாற்றா விட்டாலும் நாவென்னும் அறத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது குறள் தரும் பொருள்.

நா காத்தல் என்ற வள்ளுவ அறம் எங்கும் எதிலும் பொருந்தக் கூடியது. எனவே அறத்தைக் காப்பாற்றுவதில் பின்னிற்றல் ஆகாது.

இந்த வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பது பற்றி விரைவில் தெரிவிக்கப்படும் என நீங்கள் கூறியதாக ஒரு தகவல்.

தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்தோம். தேர்தல் என்றால் யாரையாவது ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்பது நியதியன்று. எங்களுக்குப் பொருத்தமுடையதெனக் கருதும் சந்தர்ப்பத்தில் யாரை ஆதரித்தல் என்பதைப் பகிரங்கப்படுத்த முடியும். seenaathirasaஆகையால் சில இடங்களில் நடுவு நிலைமை என்ற முடிவை எடுப்பது மகா புத்திசாலித்தனமாக இருக்கும். அதிலும் தமிழர்களாகிய நாங்கள் தேர்தலில் யாரை யாவது ஆதரிக்கப் போனால் அது இரண்டு விளைவு களை ஏற்படுத்தும்.

அதில் ஒன்று, தமிழர்களின் ஆதரவை வைத்துக் கொண்டு மறுதரப்பால் எதிரான பிரசாரம் மேற்கொள் ளப்படும். இதனால் தமிழர்கள் ஆதரித்தால் தோல்வி என்ற நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

இரண்டாவது விடயம் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் போது அவர் ஒரு நியாயமானவர் என்பது போல பொருள் கொள்ளப்படும்.

எனவே, இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு சொல்ல வேண்டியதெல்லாம் சிங்கள மக்கள் யாரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்கிறார்களோ அவரோடு நாங்கள் எங்கள் பிரச்சினை குறித்துப் பேசு வோம் என்பதாகும்.

அதேநேரம், தமிழ் மக்கள் எங்களை விடப் புத்திசாலிகள். ஆகையால் அவர்கள் நிலைமைக்கேற்றவாறு யாருக்கு வாக்களிப்பதென்ற தீர்மானத்தை மேற்கொள்வர்.

அவர்கள் எடுக்கக்கூடிய சரியான தீர்மானத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலையிடாது என்று கூறி விட்டு அமைதியாக இருப்பதை விட கூட்டமைப்பு செய்யக்கூடிய புத்திசாலித்தனம் வேறு எதுவுமாக இருக் காது.

ஆக, நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு தெரிவிப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

இந்த நாட்டின் சிறுபான்மை இனமாக இருக்கக் கூடிய முஸ்லிம் மக்களின் நிலைமையும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் ஒன்றல்ல.

முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆளும் கட்சியோடு நிற்பார்கள். எதிர்கட்சியோடும் சேர்வார்கள். அவ்வாறு அவர் கள் சேர்வதும் விலகுவதும் இந்த நாட்டில் பழக்கப்பட்ட விடயம்.

இவ்வாறு முஸ்லிம் மக்களின் அரசியல் கட்சிகள் அடிக்கடி கட்சி தாவுவதையிட்டு சிங்களக்கட்சிகள் எதிர்ப்பிரசாரம் செய்யமுடியாது. அவ்வாறான பிரசாரத்தை நியாயப்படுத்தவும் முடியாது.

ஆனால் தமிழர்களாகிய எமது நிலை அதுவன்று. நாங்கள் ஒரு வேட்பாளரை ஆதரித்தால், மறுதரப்பு நாக் கூசாமல் புலிகள் மீண்டும் வருவர் என்று சொல்லும்.

இந்தப் பிரசாரம் தென்பகுதியில் வாக்காளர்களின் தீர்மானங்களில் கனதியான மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.

ஆகையால் மகனே! மாவை சேனாதி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்று வாய் திறக்காமல் இருப்பதே மகா புத்திசாலித்தனம். இதை விடுத்து வாய் திறந்து வார்த்தையைக் கொட்டி விட்டால் எல்லாம் போச்சு.

-வலம்புரி-

Advertisements