கடந்த கால தேர்தல்கள் கற்று தந்த படிப்பினைகள்

தேர்தல் ஆரவாரத்துக்குள் தெற்கு மூழ்க தொடங்கி இருக்கிறது, எங்கும் எதிலும் தேர்தல் தொடர்பான செய்திகளையே அதிகம் பார்க்க முடிகிறது,சிங்கள மேல் தட்டு அரசியலில் மாற்றங்கள் சிலது நடந்திருக்கிறது. தெற்காசிய தேர்தல் பண்பாடுகளான வன்முறை , பணம் புரண்டு விளையாடுதல் என்பன தொடங்கி விட்டதாக அறிய முடிகிறது. இவாறான ஒரு சூழலில் கடந்த கால அனுபவங்களையும் , நிகழ்கால நிகழ்வுகளையும் வைத்து தமிழர்கள் எதிர்கால இலட்சிய அரசியலை செய்வதற்காக தம்மை செதுக்கி கொள்வது அவசியமாகிறது.srilanka election tamils

1977 இல் ஜே ஆர் ஜேவர்த்தனா தலைமையிலான ஜ . தே. க ஜந்தில் நான்கு அறுதிப்பெரும்பான்மை பெற்று பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுகிறது. தனது பலத்தை வைத்து 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை உள்ளடக்கிய புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்து , தனக்குதானே ஜனாதிபதியாக முடிசூடிக்கொள்கிறார். முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி கூட முறையாக தனியான தேர்தலால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. தன்னிடம் இருந்த அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அந்த பதவிக்கு வந்தவராவர். இந்த ஜனாதிபதி பதவியினை ”கட்டறுத்த குழு மாடு ” என்று அரசரிவியலாளர்கள் கூறி இருக்கின்றனர்.

இதுவரையில் ஆறு சனாதிபதி தேர்தல் நடந்திருக்கிறது , 1982 அப்போதைய நடப்பு சனாதிபதியாக ஜே . ஆர் . இருந்ததால் தன்னிடம் இருந்த அரச பலத்தை பயன்படுத்தி பிரதான எதிர் வேட்பாளரான சிறிமாவோவின் சிவில் உரிமையை பறித்ததன் மூலம் தன் வெற்றியை தக்க வைத்துகொண்டார்.

1988 ஜ தே .க ஆட்சியில் இருந்த காலம் பிரேமதாச – சிரிமவோவை எதிர்த்து வெற்றி பெற்றார், 1994 சந்திரிக்கா- சிரிமதி திசாநாயக்கவை எதிர்த்து வெற்றி பெற்றார், 1999 சந்திரிக்கா – ரணிலை எதிர்த்து வெற்றி பெற்றார், 2005 மஹிந்த – ரணிலை எதிர்த்து வெற்றி பெற்றார் , 2010 மஹிந்த – பொன்சேகாவை எதிர்த்து மீண்டும் சனாதிபதியானார்.

1- இதுவரை நடந்த தேர்தலில் 1994ம் ஆண்டு மட்டுமே , தேர்தல் நடக்கும் போது நடப்பு ஜனாதிபதியை கொண்டிராத கட்சி அதாவது எதிரணி வெற்றி பெற்றிருக்கிறது. 1982, 1988 ஆகிய காலத்தில் ஜ தே க வை சேர்ந்தோரே ஜனாதிபதியாக வெற்றி பெற்றனர், 1994 க்கு பின்னர் இற்றைவரை ஜனாதிபதி தேர்தலில் ஒரே கட்சியை சார்ந்தவர்களே வென்றுள்ளனர் , அதாவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சார்ந்தவர்கள்.ஆக தேர்தல் நடக்கும் நடப்பாண்டில் சனாதிபதியாக யார் இருக்கிறாரோ அவரே அல்லது அவரது கட்சி சார்ந்தோரே சனாதிபதியாக வந்துள்ளனர் .

2- இவ்வாறான இந்த வெற்றிக்கு அடிப்படை காரணங்கள் , அதிகார துஸ்பிரயோகம் , அரச பலத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தல் , வாக்கு மோசடிகள் , தேர்தல் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுதல் , போன்றவற்றால் வெற்றியை பறித்தெடுத்தல்

3 – அநகாரிக தர்ம பால விதைத்து விட்ட சிங்கள பௌத்த இனவாதத்தை யார் பாதுகாப்பவரோ அல்லது வளர்த்தேடுப்பவரோ அவரே சனாதிபதியாக வந்திருக்கிறார்

4 – தமிழர் மீதான அடக்குமுறையை அல்லது அவர்களுக்கான அநீதியை யார் அதிகம் செய்தார்களோ அவர்களே வெற்றி பெற்றிருக்கின்றனர்.

5 – கடந்த கால தேர்தலை ஆய்வு செய்பவர்கள் இப்படி ஒரு வாதத்தையும் முன்வைத்திருக்கிறார்கள் , பிரேமதாச , காமினி திசா நாயக்க ஆகியோரின் இரு பெரும் சிங்கள இன வாத ஆளுமைகளின் மரணம் சந்திரிக்கா 1994இல் வெற்றி பெற வழி வகுத்தது என்றும் , 1999இல் சந்திரிக்கா எதிர்கொண்ட தாக்குதல் அவருக்கான அனுதாப வாக்குகளை அதிகமாக்கி அவரை இரண்டாம் தடவையும் வெற்றி பெற வைத்தது என்றும். 2005 இல் தமிழர்கள் வாக்களிப்பில் ஈடுபடாமையால் மஹிந்த வெற்றி பெற்றதாகவும் , 2010 தமிழர்களை வெற்றிகொண்டதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக எடுத்த முடிவும் காரனகலாகின என்று 1994இல் இருந்து சனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் தாகத்தை விபரிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு கடந்த கால பின்னணியில் ஏழாவது தேர்தல் நடைபெற போகிறது,

இவ்வாறான ஒரு கடந்த கால பின்னணியில் ஏழாவது தேர்தல் நடைபெற போகிறது, இது மஹிந்த மைத்திரியின் போட்டிகளம் , இங்கு யார் மிகச்சிறந்த இன வாதியோ , தமிழர் மீதான அடக்குமுரையாலரோ அவரே வெற்றி பெற போகிறார், அதாவது நடப்பு சனாதிபதியாக இருக்கும் மஹிந்த தான் ஸ்ரீலங்கா வரலாற்றில் மிகச்சிறந்த இன வாதி என்பதை நிருபித்திருக்கிறார் தமிழர் மீதான இனப்படுகொலைக்கு தலைமை தாங்கி , ஈட்ட முடியாத வெற்றியினை ஈட்டிகொடுத்ததன் மூலம் அதனை நிரூபித்திருக்கிறார். சிங்கள தேசத்தை பொருத்தவரையில் அவர் ஒரு சரித்திர புருஷன் , வெற்றி நாயகன் அந்த வெற்றியை பங்கு போட மஹிந்த இடமளிக்கவில்லை அதே நேரம் மக்களும் மகிந்தவை வெற்றியின் பங்குதாரராக பார்க்க இடமளிக்கவில்லை இது பொன்சேகாவின் அனுபவம் சொல்லும் பாடம் ஆனாலும் ”எந்த உச்சத்தினதும் அடுத்த கட்டம் வீழ்ச்சிதான் , இது வரலாறு கற்றுத்தருகிற – இயற்க்கை உணர்த்திவருகிற மிகப்பெரிய தத்துவம் ” அக்கட்டம் வந்துவிட்டதா என்பதே இப்போதைய கேள்வி , சர்வாதிகார போக்கு , அதிகார துஸ்பிரயோகம் , குடும்ப ஆட்சி , ஊழல் , இராணுவ ஆட்சியின் வெளிப்பாடுகள் ,மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சுமை போன்றன வீழ்ச்சிக்கான பலமான சமிக்கைகளாக தென்படுகின்றன அதே கணம் மிகவும் புரிந்து கொள்ளகூடிய வார்த்தைகளில் சொல்வதென்றால் தனது வெற்றிக்காக எந்தளவு அடிமட்டம் வர இறங்கி வேலை செய்ய இயலுமோ அந்தளவு அடிமட்டம் வர மஹிந்த போய் என்னவும் செய்வார்.

மைத்திரி மகிந்தவின் அதிருப்தியோடு , மேற்கு மற்றும் இந்திய கூட்டால் முன் கொண்டுவரப்பட்ட ஒருவர்தான், இவர் வெற்றி பெறுவதற்கு அடிப்பையான முதலாவது விடயம் தேர்தல் நியாயமானதாக நடைபெற வேண்டும் . 1994 ம் ஆண்டு எதிரணியை சேர்ந்த சந்திரிக்கா வெற்றி பெற அடிப்படையாக இருந்த காரணனம் பிரேமதாசா இறந்ததும், அதனை தொடர்ந்து டி . பி விஜேதுங்க இடைக்கால ஜனாதிபதியாக இருக்கதக்கன காமினி திசநாயக்கவை ஜ தே க வேட்பாளராக முன்மொளிந்ததில் அதிருப்தி அடைந்த டி பி விஜேதுங்க ஓரளவு நியாயமாக தேர்தலை நடத்தியமையும் , பின் காமினியும் இறந்தமையுமே காரணம் என சொல்லப்படுகிறது.

ஆக அப்படியான ஒரு சூழல் இப்போது இல்லை ஆனாலும் இப்போது நடப்பது நீலத்துக்கும் பச்சைக்கும் எதிரான போட்டிகிடையாது , இது நீலத்துக்கும் நீலத்துக்குமான போட்டி இங்கே பச்சையின் நிரந்தர வாக்கு வங்கியோடு நீலத்தின் வாக்குகளும் சேரும்போது மிகக்கடும் போட்டி நிலவத்தான் போகிறது. வெளிப்படையான தேர்தல் நடக்குமா ? அப்படி நடந்தால் மைத்திரி வெல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிறிலங்காவை பொருத்தவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த அளவுக்கு தமிழர் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து சிங்கள பௌத்த பாதுகாவலராக காட்ட முடியுமோ அந்தளவு பிரயோகித்திருக்கின்றனர் . இதனால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனையில் எந்த மாற்றமும் யார் ஜனாதிபதியாக வந்தாலும் நடக்கபோவதில்லை , ஒரு வேலை மைத்திரி வென்றால் அவர் நிச்சயம் மேற்கத்தைய நிகழ்ச்சி நிரலை உருவாக்குவார் அப்போது ஜெனீவாவில் அமெரிக்காவால் நிச்சயம் சிறிலங்காவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்படும், ஓர் அரசு திட்டமிட்டு செய்த இனப்படுகொலை சிறு குற்றங்களாக தனி நபர்களுக்குள் சுருக்கப்படும் இல்லையேல் அதுவும் இல்லாமல் போய் விடும் , மஹிந்த வந்தால் தற்போதைய நிலை தொடரும் இல்லையேல் சர்வதேசத்தின் பிடி கொஞ்சம் இறுகும். அடிப்படையில் தமிழர்களின் தாயகம் , தேசியம் சுயநிர்ணய உரிமையுடனான எந்த தீர்வுக்கும் யாரும் வரப்போறது கிடையாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஆலோசிக்கிறோம், முடிவுகளை சொல்லப்போவதில்லை என்று வாய் மூல அறிக்கைகளை விடுவதை விடுத்து தூர நோக்கிலான, தமிழ் மக்களை அணிதிரட்டி ,ஓரணிப்படுத்தி , முக்கோட்பாடுகளின் அடிப்படையிலான தேசிய இலட்சிய அரசியலை செய்வதே எம் இனத்தின் மீட்சிக்கு சிறந்த வழியாக அமைய முடியும்.

-இளையவன்னியன்-
பதிவு

Advertisements