யாழில் நிலத்தடி நீரில் கலக்கும் கழிவுகள்: அபாயமாகும் அடுத்த சந்ததியினர்

யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீரில் மலம், ஈயம், நச்சு உலோகம், கழிவு எண்ணை ஆகியன கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதனால் குடாநாட்டில் வாழும் 4லட்சம் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக, யாழ்.மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அதிகாரி சிவகணேஸ் தெரிவித்துள்ளார்.bad-water

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஆய்வு சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

நிகழ்வில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தின் நீர்ப்படுக்கைகள் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது வலிகாமம் நீர்ப்படுகையில் மலம், கழிவு எண்ணை, ஈயம், நச்சு உலோகங்கள், என்பன கலந்திருக்கின்றது. இதனை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்த நீரைப் பருகும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத் தன்மை, மூளை வளர்ச்சி குறைதல், சிறுநீரகப் பாதிப்பு, குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல் போன்ற பல சிக்கல்கள்
உருவாகும். இதனால் வலிகாமம் பகுதியில் 4லட்சம் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனினும் நோய்த் தாக்க அறிகுறிகளை இன்னமும் 5 தொடக்கம் 10 வருடங்களிலேயே உணர்ந்து கொள்ள முடியும். எனவே இந்த மிகப்பெரிய பாதிப்புக்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அவசியமாகின்றது என்றார்.

கழிவொயில் கிணறு 700 இனை தாண்டியது!சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அனர்த்தப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பங்களுடன் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் இன்று திங்கள் கிழமை முற்பகல் வலி. வடக்கு, தெல்லிப்பழை மற்றும் வலி. தெற்கு, உடுவில் பிரதேச செயலாளர்களிடம் கையளித்தார். இதன்போது சூழல் பாதுகாப்பு அமையத்தின் பொருளாளர் சட்டதரணி ஜெ.ஜெயரூபனும் கலந்துகொண்டார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

யாழ்ப்பாணக் குடாநாடானது குடிதண்ணீருக்கு நிலத்தடி நீரையே முழுமையாக நம்பியுள்ளது. இத்தகைய நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய்யைக் கலப்பதால் அந்த நீரை மனிதரோ மிருகங்களோ பறவைகளோ பயன்படுத்த முடியாது போகும். பயிர்ச் செய்கையிலும் முழுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும் பெருந்தாவரங்களின் அழிவுக்கும் அது காரணமாகிவிடுகின்றது.

இந்த நிலைமை காலப் போக்கில் குடாநாட்டு மக்களை நிரந்தரமாக இடப்பெயரச் செய்து பிற இடங்களில் குடியேற வைக்கும். அத்துடன் மாசடைந்த நீரைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், சிறுநீரக நோய், தோல் நோய்கள், மலட்டுத் தன்மை, அங்கவீனம், கருக்கலைவு போன்ற பேராபத்துக்களை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்களும், சர்வதேச ஆய்வு அமைப்புக்களைச் சேர்ந்தோரும் எச்சரித்துள்ளனர். குடாநாட்டில் நிலத்தடி நீரில் இரசாயனப் பொருட்களும் கனதியான உலோகப் பொருட்களும் கலந்து வருவது மக்களை பேராபத்தினுள் தள்ளிவிடும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

சுன்னாகம் மின்சார சபை வளாகத்தை அண்டிய பகுதிகளின் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது 2011, 2012 ஆம் ஆண்டுகளிலேயே தேசிய நீர் வழங்கல், வடிகால் அமைப்புச் சபையினால் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இன்று வரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி சுன்னாகம், சூராவத்தை, கட்சணாவடலி, மயிலங்காடு, கல்லாக்கட்டுவன், ஏழாலை மல்லாகம் காட்டுத்துறை, மல்லாகம் மேற்கு நீதிமன்ற பகுதி, கட்டுவன் என பரந்துபட்ட கிராமங்களில் 700 வரையான கிணறுகளில் கழிவு எண்ணெய்கள் கலந்துள்ளமை தெரியவந்துள்ளது. எனவே,

01. கழிவு எண்ணெய்கள் கிணற்று நீரில் கலந்துள்ள அனைத்துப் பகுதிகளும், சம்பந்தப்பட்ட தரப்பினரால் அனர்த்தப் பகுதிகளாக காலதாமதமின்றி உடனடியாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.

02. நீர் மாசடையக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழில்சார் நிலையங்களை இயங்காது தடுக்க வலிகாமம் தெற்கு பிரதேச சபையும் வடக்கு மாகாண சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இதுவரை காலம் தாழ்த்தியமைக்கான பொறுப்பையும் கூறவேண்டும்.

03. இலங்கை மின்சார சபை வளாகத்தில் இயங்கி வரும் அனல்மின் பிறப்பாக்கிகள் மற்றும் ஏனைய இயந்திரங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய்களை உரிய சுற்றுக்சூழல் நியமங்களுக்கு அமைவாக வெளியேற்றப்படாமை குறித்து, சம்பந்தப்பட்ட மின்சார சபை தரப்பினர் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படுவதுடன், சட்ட விரோத நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படவேண்டும்.

04. நிலத்தடி நீரில் கனத்த உலோகங்கள் அடங்கிய கழிவு எண்ணெய்கள் கலந்திருப்பது தொடர்பாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனைகளின் பெறுபேறுகள் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்படவேண்டும்.

05.பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அனைத்துக் கிணறுகளும் துரிதமாக ஆய்வுக்குட்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

06. கழிவு எண்ணெய் குடிதண்ணீரில் கலந்திருப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு அறிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீரைப் பயன்படுத்தாது தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements