மைத்திரிபால சிறீசேன: ஒரு பச்சை இனவாதியின் வருகை

அதிபர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவை வீழ்த்தும் நோக்கத்துடன் மைத்திரிபால சிறீசேனவை சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சிகள் களமிறக்கியிருப்பது அதிபர் தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.genocide lanka

கடந்த தடவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சரத் பொன்சேகா களமிறக்கப்பட்ட பொழுது இருந்ததைவிட இம்முறை மைத்திரிபால சிறீசேனவின் தேர்தல் பிரவேசம் சிங்கள தேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும். சென்ற தடவை தேர்தல் களத்தில் சரத் பொன்சேகா களமிறங்கிய பொழுது அவருக்கு பக்கபலமாக சிங்கள தேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், இரண்டாவது எதிர்க்கட்சியாக விளங்கிய ஜே.வி.பியும், தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் இருந்தன.

சிங்கள-பௌத்தர்கள் மட்டுமே ஈழத்தீவின் பூர்வீகக் குடிகள் என்றும், தமிழர்களும், ஏனையோரும் வந்தேறு குடிகள் என்றும் நான்காம் கட்ட ஈழப்போரின் உச்சகட்டத்தில் பகிரங்க அறிவித்தலை விடுத்த பொன்சேகா அதிபர் தேர்தலில் களமிறங்கிய பொழுது தனது இனவாத சிங்க முகத்தை மறைத்துப் பசுத்தோல் போர்த்த நரியாக வலம் வந்தார். அது அவரை ஒரு மிதவாதியாகவும், தமிழர்களுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடியவர் போன்ற தோற்றப்பாட்டையும் சிங்கள தேசத்தில் தோற்றுவித்தது. இதுவே சிங்கள வாக்காளர்களின் ஆதரவு மகிந்தருக்குக் கிடைப்பதற்கும், தேர்தலில் பொன்சேகா தோல்வியைத் தழுவுவதற்கும் வழிகோலியது.

ஆனால் இன்று நிலைமை அவ்விதம் இல்லை. பொன்சேகாவின் முதிசத்தைச் சுமந்து தேர்தல் களத்தில் மகிந்தருக்கு எதிராகக் குதித்திருக்கும் மைத்திரிபால சிறீசேன, ஆரம்ப நாள் தொட்டே தன்னையொரு பச்சை இனவாதியாகவே காண்பித்து வருகின்றார்.

சிங்கள வாக்காளர்கள் மத்தியில் பச்சை இனவாதியாகத் தன்னை மைத்திரிபால காண்பிப்பதற்கு ஏதுவாகப் பொதுவேட்பாளராக அவரை அறிமுகம் செய்வதற்கு முன்னரே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரணில் விக்கிரமசிங்க மனுச்செய்தார். பொதுவேட்பாளராக மைத்திரிபால அறிவிக்கப்பட்டதை அடுத்து கருத்துரைத்த சஜித் பிரேமதாசா, யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது போன்று மைத்திரிபாலவின் ஆட்சியில் வெளிநாடுகளில் வசிக்கும் ‘புலம்பெயர்ந்த புலிகள்’ பூண்டோடு அழித்தொழிக்கப்படுவார்கள் என்று சூளுரைத்தார்.

தனது போசகர்கள் எழுப்பும் இனவாத முழக்கங்கள் போதாது என்று அப்பட்டமாகத் தனது இனவாத முகத்தை சிங்கள வாக்காளர்கள் மத்தியில் காண்பிக்கும் நோக்கத்துடன் தனது ஆட்சியில் பௌத்த மதம் பேணிப் பாதுகாக்கப்படுவதோடு, இனப்பிரச்சினைக்கு சம~;டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கு இடமளிக்கப்படாது என்று மைத்திரிபால முழங்கி வருகின்றார். தவிர தான் ஆட்சிக்கு வந்தால் மகிந்தராக இருந்தாலும் சரி, சாதாரண மட்டத்தைச் சேர்ந்த ஆயுதப் படையினராக இருந்தாலும் சரி, இவர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையால் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இவர்கள் முன்னிறுத்தப்படும் சூழல் எழுவதற்கும் தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் மைத்திரிபால சூளுரைத்திருக்கின்றார்.

இவ்வாறான அறிவித்தல்கள் மூலம் ஒரு விடயத்தை சிங்கள வாக்காளர்களுக்கு மைத்திரிபால பட்டவர்த்தனமாக்கியுள்ளார். தமிழர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்குத் துளியவும் கிடையாது என்பதுதான் அது. இது தமிழர்களைப் பொறுத்தவரை ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்லவே. ஏனென்றால் மைத்திரிபால ஒரு பச்சை இனவாதி என்பது ஏற்கனவே தமிழர்கள் அறிந்த விடயம்தான்.

சிங்கள தேசத்தின் அதிபராக சந்திரிகா குமாரதுங்க விளங்கிய காலத்தில் அவரது நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கியவர் மைத்திரிபால. சந்திரிகா அம்மையாரின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மகாவலி அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பாக விளங்கியவர். அன்று மைத்திரிபாலவின் பொறுப்பின் கீழேயே மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின் பெயரில் தென்தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நீர்பாசன மற்றும் மகாவலி-ராஜரட்டை அபிவிருத்தி விவகார அமைச்சராகப் பதவி வகித்த மைத்திரிபால, கருணா குழுவை திரைமறைவில் இருந்து இயக்கினார்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சதிமுறியடிப்பு நடவடிக்கையை அடுத்து கொழும்பிற்குத் தப்பியோடிய கருணா, இந்திய உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி நிறுவனத்தின் நெறியாட்சியில் இயங்கிய ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் தலைவர் பரந்தன் ராஜனின் அனுசரணையுடன் 2004ஆம், 2005ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தென்னிந்தியாவின் பெங்க@ர் நகரில் மறைந்திருந்தார். அக்காலப்பகுதிகளில் மட்டக்களப்பு-பொலனறுவை எல்லையில் உள்ள தீவுச்சேனைப் பகுதியிலும், மட்டக்களப்பு-திருமலை எல்லையில் உள்ள திருக்கோணமடு பகுதியிலும் கருணா குழுவின் முகாம்கள் இயங்கி வந்தன. இம்முகாம்களில் இயங்கிய ஆயுததாரிகளை பிள்ளையான், இனியபாரதி, மங்களன் மாஸ்ரர் ஆகியோர் வழிநடத்தினர்.

இவர்களுக்கு தேவையான ஆயுத-போக்குவரத்து உதவிகள் சிங்களப் படையப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்டன. இவ் வழங்கல் நடவடிக்கைளுக்குப் பொறுப்பாக சிங்களப் படையப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு உயர்நிலை அதிகாரிகள் விளங்கினர். இவர்களில் கப்டன் சுரேஸ்குமார என்பவர் இனியபாரதியின் தொடர்பாளராகவும், கப்டன் அபயரட்ண என்பவர் பிள்ளையானின் தொடர்பாளராகவும் திகழ்ந்தனர்.

இதேநேரத்தில் கருணா குழு ஆயுததாரிகளுக்கான நிதி வழங்கல்கள் சந்திரிகா அம்மையாரின் மூன்று அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்டன. கருணாவின் இன்னுமொரு விசுவாசியான உருத்திரா என்ற ஆயுததாரியின் ஊடாகவே நிதி வழங்கல்களை இவ் அமைச்சர்களும் மேற்கொண்டனர்.

இதேநேரத்தில் கருணா குழுவின் நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டல்களும் இவ் அமைச்சர்களால் வழங்கப்பட்டன.

இவர்களில் ஒருவர் அத்தாவுல்லா. மற்றையவர் டக்ளஸ் தேவானந்தா. பௌசர் என்ற தனது செயலாளர் ஊடாகவும், சில சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் இனியபாரதியுடன் அத்தாவுல்லா தொடர்பைப் பேணி வந்தார். அதேநேரத்தில் அக்காலப்பகுதியில் இனியபாரதியுடன் நேரடித் தொடர்பாடல்களை ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் பேணி வந்தார்.

இவ் இரண்டு அமைச்சர்களுக்கு மேலதிகமாகக் கருணா குழுவிற்கான வழிகாட்டல்களை மைத்திரிபால சிறீசேனவும் வழங்கி வந்தார். தீவுச்சேனையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த மங்களன் மாஸ்ரரின் ஊடாகவே இவ் வழிகாட்டல்களை மைத்திரிபால வழங்கினார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்ற பொழுது பொலனறுவையில் வைத்து மங்களன் மாஸ்ரரை நேரில் சந்தித்த மைத்திரிபால, மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு திரட்டும் பரப்புரைகளைத் தென்தமிழீழத்தில் மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதுபற்றிய தகவல்கள் 12.12.2005 அன்று மட்டக்களப்பு கரடியனாறு தேனகம் விருந்தினர் விடுதியில் வைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட செய்தியாளர் மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த ஞானதீபன், புகழ்வேந்தன் ஆகிய இரண்டு கருணா குழு ஆயுததாரிகளால் போட்டுடைக்கப்பட்டன. இதன்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான அரசியல்துறைப் பொறுப்பாளர்களாக விளங்கிய இளந்திரையன் (மார்சல்), தயாமோகன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தர் (இவர்களில் தயாமோகன் தற்பொழுது சுவிற்சர்லாந்தில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.)

தவிர இதுபற்றி கபிலம்மான் அவர்களின் மேற்பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரால் மேலதிக ஆதாரங்கள் திரட்டப்பட்டு, 2006ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாளன்று ஜெனீவாவில் நடைபெற்ற போர்நிறுத்த அமுலாக்கப் பேச்சுவார்த்தைகளின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான தூதுக்குழுவினரால் ஆவண வடிவில் நோர்வே அனுசரணையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

எனவே 2004ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் தென்தமிழீழத்தில் கருணா குழுவினருக்கான வழிகாட்டல்களையும், நிதியுதவிகளையும் வழங்கிக் கருணா குழுவினர் மேற்கொண்ட படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சிறுவர் ஆட்பிடிப்புக்கள் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களின் நடுநாயகமாக விளங்கிய மைத்திரிபால சிறீசேன, இன்று இனவெறிக் குரல் எழுப்புவதும், மகிந்தரை விடத் தானொரு சிறந்த இனவாதி என்பதை நிரூபிப்பதற்காகப் பிரயத்தனம் செய்வதும் ஆச்சரியப்பட வேண்டிய விடயங்கள் அல்லவே.

மைத்திரிபாலவின் தேர்தல் பிரவேசம் மகிந்தரின் சிம்மாசனத்தை ஆட்டங்காண வைத்துள்ளது என்னவோ உண்மைதான். சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளும் கட்சியின் கணிசமான அளவிலானோரும் மைத்திரிபாலவிற்கு ஆதரவாக அணிதிரளத் தொடங்கியிருப்பதானது மகிந்தரினதும், அவரது பரிவாரங்களினதும் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஓர் விடயமாகவே அமைந்துள்ளது.

போதாக்குறைக்கு இவ்வாரம் கொழும்பு சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவால், மகிந்தரை மட்டுமன்றி மைத்திரிபாலவையும் சந்தித்ததானது அவரது வெற்றி வாய்ப்புக்கள் பற்றிய இந்தியாவின் கணிப்பீடுகளையும் ஓரளவிற்கு பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

இப்பின்புலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருக்கும் முடிவையும் நாம் பார்க்க வேண்டும். திறந்தவெளித் தாராண்மைப் பொருண்மியக் கொள்கைகளைப் பகிரங்கமாக ஆதரித்து வரும் ரணில், சந்திரிகா ஆகிய இருவரின் ஆசீர்வாதத்துடன் மகிந்தருக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் மைத்திரபாலவிற்கான ஆதரவை சிங்கள வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்து, அதன் ஊடாக மகிந்தரை வீட்டுக்கு அனுப்பித் தாம் விரும்பும் ஆட்சியை ஈழத்தீவில் கொண்டு வரும் நோக்கத்துடனேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கு எதிரான மேன்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்கின்றது என்ற கருத்து புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலரிடையே உண்டு. இவ்வாறான முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கக்கூடும் என்ற கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்க வழக்கை முன்னின்று ஏற்பாடு செய்த டென்மார்க்கைச் சேர்ந்த மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவர் நவம்பர் மாத முற்பகுதியிலேயே இப்பத்தி எழுத்தாளரிடம் தெரிவித்திருந்தார்.

ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்து இருபத்தோராம் நூற்றாண்டில் மிகப்பெரும் இனப்படுகொலையைப் புரிந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழர்களதும் நெடுநாள் கனவாகும். வரும் சனவரி மாதம் 9ஆம் நாளன்று தேர்தல் முடிவுகள் வெளிவரும் பொழுது இது ஒருவேளை உண்மையாகக்கூடும். அப்படி ஒருவேளை நடந்தால் அது ஒவ்வொரு தமிழர்களுக்கும் தித்திப்பான செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதேநேரத்தில் மகிந்தர் வீட்டுக்குச் செல்வதென்பது அவரது தோல்வியாகவும், அவரது சிம்மாசனத்தில் மைத்திரிபால அமர்வதென்பது சிங்கள இனவாதத்தின் வெற்றியாகவும் அமையுமே தவிர அது தமிழர்களுக்கு கிடைக்கும் விமோசமான அமையப் போவதில்லை என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. குருதிக் கறைபடிந்த மைத்திரிபாலவின் கடந்த கால வரலாறும், அவர் இன்று அப்பட்டமாகக் கக்கும் சிங்கள இனவெறியும் இதனையே கட்டியம்கூறி நிற்கின்றன.

சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலில் மைத்திரிபால வெற்றி பெறுவதென்பது இவ்வாண்டு மே மாதம் 16ஆம் நாளன்று பாரத தேசத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் போன்றதொன்றுதான். அன்றைய நாளில் தமிழர்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட – தமிழின அழிப்பிற்குக் காலாக நின்ற சோனியா காந்தியின் பொம்மை அரசாங்கம் ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கியெறியப்பட்டது. முழுத் தமிழினமும் மகிழ்ச்சியில் ஆரவாரித்தது. ஆனால் சோனியாவின் பொம்மை அரசாங்கத்தை வீழ்த்திவிட்டு பாரத தேசத்தின் ஆட்சிக் கட்டிலில் ஏறியமர்ந்த நரேந்திர தாமேதரதாஸ் மோடி தமிழர்களின் விடிவெள்ளியாகப் பிரகாசிக்கவில்லை.

இதுதான் வரும் 9ஆம் நாளன்று மைத்திரிபால சிறீசேன வெற்றிபெற்றாலும் நடக்கும் என்பதை நாம் உறுதியாகக் கூறலாம்.

– கலாநிதி சேரமான்

**
அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்…

பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அந்தப் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்து வரும் அறிக்கைகளால் அதிர்ச்சியடைந்துள்ளது.

தான் பேரினவாதியாம், சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லையாம், ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு காணப்படுமாம். தமிழ்க் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போன்று மாகாண அதிகாரங்களை ஒருபோதும் வழங்க முடியாதாம், இது பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடாம் என மைத்திரி அடுக்கிவரும் அறிக்கைகளால் தமிழ்க் கூட்டமைப்பு செய்வதறியாத நிலையில் உள்ளது.

இதன் காரணமாக அக்கட்சிக்குள் மைத்திரியை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டாம் எனும் கருத்து வலுப்பெற்று வருகிறது. மைத்திரிபாலவின் அறிக்கைகளை வாசித்த தமிழ் மக்களும் அவருக்கு தமிழ்க் கூட்டமைப்பு மட்டுமல்ல எந்தவொரு தமிழ்க் கட்சியும் ஆதரவு வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இப்போது பாரிய நெருக்கடியும், இழுபறிநிலையும் காணப்படுவதாக அக்கட்சி உள்ளக வட்டாரங்களிலிருந்து நம்பகரமாகத் தெரியவந்துள்ளது.
இதேபோன்று பொது வேட்பாளர் தெரிவில் முன்னின்று பாடுபட்ட மற்றுமொரு தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் மைத்திரிபாலவின் எதேச்சையானதும், தமிழ் மக்களை வெறுப்பேற்றும் அறிக்கைகளாலும் மனமுடைந்து விரக்தி நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை எவ்விதமான கருத்துக்களையும் முன்வைக்காததுடன் இனப்பிரச்சினை தொடர்பாக மனோ கணேசனினால் சிங்கள மொழியில் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் காதில் வாங்கிக் கொள்ளாது அலட்சியமாக இருந்து வருவதாகவும் மனோ கணேசன் தனது முக நூலில் பிடிகொடாது மறைமுகமாக கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை காலமும் தமிழ்க் கூட்டமைப்பினாலும், மனோ கணேசனினாலும் இனவாதக் கட்சி என கூறப்பட்ட ஜாதிக ஹெல உருமய கட்சி தமிழ் மக்களுக்குத் தீவு கிடைப்பதை நேரடியாகவே பல தடவைகள் எதிர்த்து வந்தது. இப்போது அக்கட்சி பொது எதிரணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளமையையும் தமிழ்க் கூட்டமைப்பினாலும், மனோ கணேசனினாலும் ஜீரணிக்க முடியாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisements