எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மறைவு ஈழத்தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்

mss-pandianடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்த மூத்த திராவிடர் இயக்க ஆய்வாளரும் சமூக ஆய்வறிஞருமான பேராசிரியர் எம். எஸ் எஸ் பாண்டியன் நேற்று சுகவீனம் காரணமாகக் காலமானார்.

இந்தியாவின் பிரசித்தி பெற்ற இதழான “எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி” இதழில் 1980களிலிருந்தே ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்த பாண்டியன் பொருளாதாரத்துறை மட்டுமின்றி பண்பாட்டு ஆய்வுத்துறையிலும் தனது அக்கறையைச் செலுத்தினார்.

பேராசிரியர் எம். எஸ் எஸ் பாண்டியனின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு – குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

ஏனென்றால் தமிழின அழிப்பை ஒரு சிந்தனையாளராக எந்தவிதமான அரசியல் அடையாளமுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்களுக்கு கொண்டு சேர்த்ததுடன் அவர்களை எமது நீதிக்கான பயணத்தில் இணைந்து கொள்ள பெரும் அக்கறை எடுத்திருந்தார்.

இந்த வகையில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் நிகழ்வதனூடாகவே எமது நீதிக்கான கதவு திறக்கும் என்ற சமகால பிராந்திய அரசியல் சூழலில், தனது சிந்தனைத்தளத்தில் நின்று அதில் ஓரளவேனும் தாக்கத்தை செலுத்தும் வல்லமை கொண்டிருந்த எம் எஸ் எஸ் பாண்டியனின் மறைவு எமக்கு பேரதிர்ச்சியை தருகிறது.

புனைவிலக்கியவாதிகளும், அவர்களது படைப்புக்களை கொண்டாடுபபவர்கள் ஒரு புறமும் தமது பல்கலைக்கழக பதவி நிலைகளைக் கொண்டு எதையாவது உளறிக் கொட்டுபவர்கள் மறுபுறமும் தமிழின் சிந்தனையாளர்களாகவும் கோட்பாட்டாளர்களாகவும் வலம் வரும் அபத்தமான சூழ்நிலையில் எம். எஸ் எஸ் பாண்டியன் தமிழ் சிந்தனைப்பரப்பில் குறிப்பான அசைவியக்கத்தை உருவாக்கினார் என்றால் அது மிகையல்ல.

பேராசிரியர் எம் எஸ் எஸ் பாண்டியனுக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக ஈழம்ஈநியூஸ். தனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.

ஈழம்ஈநியூஸ்.

****

வரலாற்றை மாற்றியெழுதுவதற்கான ஒரு காரணி – எம்.எஸ்.எஸ். பாண்டியன்

ஈழம் முடிந்துவிட்ட கனவா, மீண்டும் உயிர்தெழும் கருத்தாக்கமா என்பதை காலம்தான் முடிவு செய்யும். ஆனால், கம்பி வேலிகளுக்கு பின்னே இரண்டரை லட்சம் தமிழ் மக்களை சிறை வைத்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மறுத்தும் தான், மஹிந்த ராஜ பக்சேவின் சிங்கள பேரினவாத அரசு விடுதலைப் புலிகளின் மீதான தனது ராணுவ வெற்றியை இன்று கொண்டாட முடிகிறது.

சிங்கள அரசின் அதன் ராணுவத்தின் போர்குற்றங்கள் பற்றிய விசாரணை வேண்டும் எனும் குரல் சர்வதேச அரங்கில் வலுப் பெற்று, ஓங்கி ஒலிக்கும் இவ்வேளையில், வேறு நாடுகளில் வாழும் இளந்தமிழர்களும், தமிழ் சிறார்களும் தங்களின் தமிழ் அடையாளத்தைப் பற்றிய புதிய புரிதலையும், உணர்வையும் இன்று பெற்றுள்ளனர். சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள தங்கள் இன மக்கள் மீதான் அவர்களின் கவனமும், பரிதவிப்பும் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையின் இன்றைய வரலாற்றைக் கூட தமிழ் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியே எழுத முடியும் என்பதுதான் யதார்த்தம். கடந்த 40 ஆண்டுகால இலங்கையின் வரலாற்றை பிரபாகரனுக்கு பிந்திய இலங்கை ((Post-Prabhakaran Sri Lanka), பிரபாகரன் காலத்து இலங்கை என்று காலப்படுத்தப்படுவது இதைத் தான் காட்டுகிறது.

இழந்து நிற்பது ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; சிங்களவர்களும் கூடவே. மக்களாட்சி எனும் போர்வையில், அவர்களுக்கு அனைத்து சிவில் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கையின் அரசியல் இன்று முழுமையாக ராணுவப்பட்டுள்ளது, யாரும் இதை சிங்களவர்களின் வெற்றியாக பார்க்க முடியாது.

போரின் போதும், போர் முடிவின் பின்னும் நிகழும் இந்த அரசியல் போக்குகள் முக்கியமானவை. இவைகள் இலங்கையின் வரலாற்றில் விடுதலைப்புலிகளின் தோல்வி ஒரு புதிய தொடக்கம் எனும் சிங்கள பேரினவாதிகளின் கூற்றை கேள்விக்குள்ளாக்குகின்றன. வெற்றியெனக் கொண்டாடப்படுவது வெற்றியா அல்லது தோல்வியா என்பதை கால நகர்வுதான் தெளிவுபடுத்தும்.

இந்தப் பின்னணியில் ரவிக்குமாரின் ‘தமிழராய் உணரும் தருணம்’ ஈழப் பிரச்சனையைப் பற்றிய தெளிவானதொரு புரிதலை நம்முன் வைக்கும் முக்கியமான நூல். 2006 முதல் 2009 வரை அவர் ஈழப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், ஈழப் போராட்டத்தின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான ஒரு நாட்குறிப்பாக, வரலாற்று ஆவணமாக இயங்குகிறது.

போரின் கொடூரம், சர்வதேச போர் சார்ந்த நெறிமுறைகளுக்கு புறம்பான இலங்கை அரசின் செயல்பாடு, விடுதலைப் புலிகளின் போர் யுக்திகளின் பலமும் பலவீனமும் என்று பல தளங்களில் பயணிக்கும் இந்நூல், இலங்கையின் இனவாத அரசியல் பற்றிய புரிதலை மட்டும் நமக்குத் தரவில்லை. சர்வதேச அரசியலின்

தீவிரவாத எதிர்ப்பு எனும் புதிய முகமும், அதன் நெறியற்ற செயல் பாடுகளும், இந்திய வெளியுறவு கொள்கையின் புதிய போக்குகளும் முரண்பாடுகளும், தெற்காசியாவில் இந்தியாவின் வலுவற்ற நிலை போன்ற சர்வதேச சூழல் எவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு எதிரான, ஒரு அரசியலை வலுப்படுத்துகிறது என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

தமிழக அரசியல் பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட வரலாறு, தீக்குளிப்பின் அரசியல், இடதுசாரிகளின் ஈழத் தமிழர் பற்றிய நெறியற்ற மௌனம், தமிழக அரசியல் கட்சி களின் தேர்தல் சார்ந்த சந்தர்ப்பவாதம், காலந்தோறும் தமிழகத் தமிழர்களின் குரல்களை உதாசீனப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் போக்கு என்று பல பதிவுகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது.

இந்த பல்வேறுபட்ட பதிவுகள், செய்திகள், விமர்சனங்கள் மூலம், இந்நூல் தமிழர்கள் தங்களிடையேயுள்ள வேற்றுமைகளைத் தவிர்த்து, ஈழத்தமிழர்களுக்காக ஒன்றாகக் குரல் எழுப்புவதின் முக்கியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. வரலாற்றை புரிந்து கொள்வது மூலமே வரலாற்றை மாற்றியெழுத முடியும் எனும் கூற்று உண்மையானால், ரவிக்குமாரின் நூல் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கானஒரு காரணி என்பது மிகையல்ல.

(ரவிக்குமாரின் ‘ தமிழராய் உணரும் தருணம்’ ஆழி பதிப்பகம், 2010 – நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை)

**

கீழ்நிலை மாந்தர் கண்ணோட்டத்திலிருந்து வரலாறு: “உந்து சக்தி எம்.எஸ்.எஸ்.பாண்டியன்” -bbc

திங்களன்று டில்லியில் காலமான சமூக ஆய்வாளர், பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் , பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துக்களையும் ஆங்கிலம் பேசும் உலகுக்கு எடுத்துச் சென்றவர்களில் ஒருவர் என்கிறார் பெரியாரிய-மார்க்ஸிய ஆய்வாளரான எஸ்.வி.ராஜதுரை.

இன்று காலமான எம்.எஸ்.பாண்டியனுக்கு வயது 57.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்த பாண்டியனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) சேர்க்கப்பட்டு இன்று திங்கள் மாலை காலமானார்.

கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன், சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படித்தார். பின்னர், சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் சேர்ந்து தமிழகத்தின் நாஞ்சில் நாட்டின் விவசாய உறவுகளைப் பற்றி சிறப்பான ஆய்வுகளைச் செய்தார் என்கிறார் ராஜதுரை.

பின்னர் கல்கத்தாவில் உள்ள சி.எஸ்.எஸ்.எஸ் நிறுவனத்தில் சேர்ந்து சிலகாலம் பணியாற்றி, மீண்டும் பின்னர் சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் (Madras Institute of Development Studies) சேர்ந்த பாண்டியன் “கீழ் நிலை மாந்தர்களின் பார்வையில் வரலாறு எழுதப்படும் போக்கிற்கான உந்துசக்தியாகவே திகழ்ந்தார்” என்கிறார் ராஜதுரை.

இந்தியாவின் பிரசித்தி பெற்ற இதழான “எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி” என்ற இதழில் 1980களிலிருந்தே ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்த பாண்டியன், பொருளாதாரத்துறை மட்டுமின்றி, பண்பாட்டு ஆய்வுத்துறையிலும் தனது அக்கறையைச் செலுத்தினார்.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் என்ற “நிகழ்வுப்போக்கு” பற்றி அவர் எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லியில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை பின்னர் ” இமேஜ் ட்ராப்” (Image Trap) என்ற பெயரில் புத்தகமாக எழுதி , அப்புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது என்கிறார் ராஜதுரை.

தமிழகத்தில் தலித்துகள் மீது பிற்படுத்தப்பட்ட மக்கள் நடத்தும் தாக்குதல்களை , இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கமாகக் காணாமல், அந்த இடைநிலைச்சாதிகளின் ஆதிக்கம் சரிந்துவருவதற்கான அடையாளமாகவே அதைக் காணவேண்டும் என்ற புதிய பார்வையை அவர் அண்மையில் முன்வைத்திருந்தார் என்கிறார் ராஜதுரை.

ப்ராமின் – நான் -ப்ராமின் (Brahmin-Non Brahmin) என்ற அவரது சமீபத்திய புத்தகம் பல பதிப்புகளைக் கண்டது என்கிறார் ராஜதுரை.

ஈழத்தமிழர் பிரச்சினையை, இந்தியாவின் வட மாநிலங்களின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்களை அக்கறை காட்டும்படி செய்தார் என்கிறார் ராஜதுரை.

காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ , டில்லியில் உள்ள காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மாணவர்களை ஒன்று சேர்த்து, பொருட்களைத் திரட்டி அனுப்பினார் என்கிறார் ராஜதுரை.

ஆக்ஸ்போர்டு, ஹவாய், மின்னிசோட்டா உள்ளிட்ட பல மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்த அவர் சமீபத்தில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார் என்கிறார் அவர்.

பாண்டியனுக்கு, அவரது மனைவி முனைவர் ஆனந்தியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர்.