இந்திய வேட்டை-2: குழைக்காட்டுப் படுகொலைகள்

விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் லிபரேசன்’
நடவடிக்கையால் யாழ். குடாநாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை எழுந்தது.ipkf7

இந்தநிலையில்தான் இலங்கை வான் இறைமையை முற்றாக மீறிக்கொண்டு இந்திய ‘மிராஜ்’ ரக விமானங்கள் பேரிரைச்சலுடன் பறந்து வந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வீசிவிட்டுச் சென்றன.

1971 ஆம் ஆண்டு இந்தியபாகிஸ்தானியப் போருக்குப் பின் முதற் தடவையாக இந்திய விமானப்படை 1987 ஆம் ஆண்டு தமது நாட்டின் ஆளுமைக்குட்பட்ட வான்பரப்பை அத்து மீறி உள்நுழந்தமை இலங்கைக்கு கிலியை ஏற்படுத்தியது. இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடப்போவதை கோடி காட்டிய இந்த நடவடிக்கைக்கு ‘ஒப்பரேசன் பூமாலை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது.

1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம், யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருந்தது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட தாயக பூமியில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரிக்க செய்திருந்தது.

பெருமெடுப்பில் வெகுஜனப்போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தன. அதனால் வெறுமனமே பார்த்துக் கொண்டிராமல் களத்தில் நேரடியாக இறங்கும் முடிவை இந்திய அரசு எடுத்தது.

1987 ஆம் ஆண்டு ஜூலை 2. ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும். இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தியும் கைச்சாத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய இராணுவம் இலங்கைக்குள் ‘அமைதிப்படை’ என்ற பெயரோடு வந்திறங்கியது.

அமைதிப்ப்டையை தங்களின் புதிய மீடபர்களாக நம்பிய தமிழ் மக்கள் ஆராத்தியெடுத்து, பொட்டிட்டி வரவேற்றனர். ஆரம்பத்தில் வாலைச் சுருட்டி வைத்திருந்த இந்திய இராணுவம், புலிகள் தங்களுடைய ஆயுங்களை சுதுமலையில் வைத்து ஒப்படைத்த பின்னர் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. இந்திய இராணுவத்தின் அடாவடியை எதிர்த்து அகிம்சை வழியில் புலிகள் போரடினர்.

தியாகி திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த பின்னரும் இந்தியா அடங்கவில்லை. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளைச் சிறைப்பிடித்து அவர்களின் சாவுக்கும் வழிகோலியது இந்தியா. எனவே வேறுவழியின்றி மீண்டும் துப்பாக்கிகளைத் தூக்கவேண்டிய கட்டாயத்துக்குள் புலிகள் தள்ளப்பட்டனர். பெரும் போர் வெடித்தது. புலிகளின் கெரில்லாபோர்த்தாக்குதல்களால் இந்தியப்படைகள் பெரும் உயிரிழப்பைச் சந்தித்தன. எனவே தங்களின் இழப்புக்கு பழிவாங்க மக்களை நோக்கி இந்திய ஜவான்களின் சுடுகலன்கள் திரும்பின.

அப்பாவி மக்களை வேட்டையாடும் படலத்தை ஈவிரக்கமின்றித் தொடர்ந்த இந்தியப்ப்டைகளைக் கண்டு மக்கள் உயிர்பிழைக்க ஓடி ஒளிந்தனர். இந்திய இராணுவத்தினரின் மனிதவேட்டையில் யாழ்.போதனா வைத்தியசாலைப்படுகொலைகளும், சாவகச்சேரிப் படுகொலைகளும் குறிப்பிடத்தக்கவை.

1987 ஒக்ரோபர் 21 திகதி தீபாவளி தினத்தன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவம் அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளர்கள் என 68 பேரைச் சுட்டுக்கொன்று அவ்விடத்திலேயே அவர்களின் உடல்களை எரித்தது.

இந்த வெறியாட்டத்தின் தொடர்ச்சியாக 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி கந்தசஸ்டி தினத்தன்று நாவற்குழி அரச உணவுக் களஞ்சியத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் கோப்பாய் தரவை வெளியினுடாக முன்னேற முயன்றனர். ஆயினும் புலிகள் கொடுத்த பதிலடியில் ஏராளமான ஜவான்களை அவர்கள் இழந்தனர். இந்த ஆத்திரத்தை தீர்க்க கொலைவெறியோடு சங்கத்தானைக்கு விரைந்தன இந்திய இராணுவ முதலைக் ஹெலிகள். அன்று மதியம் 12 மணியளவில் சங்கத்தானையில் இருந்து சாவகச்சேரி நகரத்தை நோக்கி பத்மாசூரன் பக்தர்களின் தோள்களில் ஏறி முருகனோடு போரிடச் சென்றுகொண்டிருந்தான்.

சங்கத்தானை புளியடிப்பகுதியை சூரன் நெருங்கிய போது இந்திய அமைதிப்படைக்கு சொந்தமான இரண்டு எம்.ஐ24 ரக உலங்குவானுர்திகள்(முதலைக்ஹெலி) வட்டமிட்டன. அப்போதும் பெருந்தொகையில் கூடி நின்ற மக்கள் பதறாமல் பயப்படாமல் தொடர்ந்தும் சூரனோடு வீதியுலா சென்றனர். அந்தளவுக்கு இந்திய இராணுவத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை.

ஆனால் அந்த நம்பிக்கையைத் தகர்ப்பது போன்று திடீரெனத் துப்பாக்கி வேட்டுக்கள் மக்களை நோக்கித் தீர்க்கப்பட்டன. அவ்வளவுதான்.சூரனையும் போட்டு விட்டு சிதறி ஓடினர் அப்பாவி மக்கள். அவர்கள் மீதும் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் நின்ற மக்கள் மீதும் முதலைக் ஹெலிகள் கண்முடித்தனமாக றொக்கற் மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தின. இந்தத் தாக்குதலில் 60 க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.ஒரேநாளில் பிணக்குவியலின் நகரமானது சாவகச்சேரி. இப்படியான மனிதவேட்டையை இதற்கு முன்னர் பார்த்தறியாத தென்மராட்சி மக்கள் நகரெங்கும் சிதறிக் கிடந்த பிணங்களைக் கண்டு செய்வதறியாது திகைத்துப் போயினர். எங்கும் மரண ஓலம். அந்த ஓலம் 27 வருடங்களைக் கடந்து இன்னமும் குழைக்காடு என்று வர்ணிக்கப்படும் தென்மராட்சி எங்கும் கேட்டுக் கொண்டேதானிருக்கிறது.

சாவகன்

உதயன்

Advertisements