எங்களுக்காக அவர்கள், அவர்களுக்காக நாமே!

கத்தி திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் – 10 தோழர்கள் சிறையில்

கத்தி திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் எதிரொலியாக சென்னை சத்தியம் மற்றும் வுட்லண்ட் திரையரங்குகள் தாக்கப்பட்ட வழக்கில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 தோழர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்பு மாணவர்கள் மூவரையும் கைது செய்து காவல் துறையினரால் உறவினர்கள் அலைகழிக்க வைத்ததுடன் உலகத்திலேயே மிகப் பெரிய குற்றவாளிகள் போல அவர்களை ரகசியமாக வைத்திருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு வராமல் நீதிபதி வீட்டுக்கு சென்று சிறையில் அடைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவைப் பெற்று வெவ்வேறு வண்டிகளில் மாற்றி மாற்றி அழைத்துச் சென்று சிறையில் அடைத்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கழகத் தோழர்கள்:

1. செயபிரகாசு – த/பெ. மோகன்.

2. செயகுமார் – த/பெ. மோகன்.

3. வாசுதேவன் – த/பெ. கிருஷ்ணன்.

4. அப்பு – த/பெ. நடேசன்.

5. கிருஷ்ணா – த/பெ. ராஜன்.

6. சசிகுமார் – த/பெ. மதுரை.

7. விநாயகம் – த/பெ. நடேசன்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாணவர்கள்:

8. சென்பியன் (எ) சண்முகப்பிரியன் – த/பெ. சிவகுமார்.

9. பிரதீப்குமார் – த/பெ. நரசிம்மன்.

10. பிரபாகரன் – த/பெ. வீரஅரசு.

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தோழர்கள் 10 பேரையும் வெளியில் எடுக்க, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்களும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சட்டத்துறை செயலாளர் வை. இளங்கோவன் அவர்களும் தேவையான் பணிகளை தொடங்கியுள்ளனர்.

கழக தோழர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால் கீழ்க்கண்ட எண்ணை தொடர்புகொள்ளவும்.

இப்படிக்கு,
கரு. அண்ணாமலை,
வடக்குமண்டல அமைப்பாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
94440 11124

**************

இப்போது பந்து எங்கள் பக்கம் வீசப்பட்டுள்ளது..என்ன செய்ய போகின்றோம். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த தமிழகமாணவர் தலைவர்கள் மூவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
tamilnadu students
தமிழ் இளைஞர்கள்- மாணவர்கள் கூட்டமைப்பினதும், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினதும் ஒருங்கிணைப்பாளர்களான பிரபாகரன், செம்பியன் உட்பட மாணவர் அமைப்பின் பிரதீப் ஆகியோரே 23ம் திகதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு மூன்று பேருக்காக நாம் ஏன் இவ்வளவு பதைப்புக்கு ஆளாகவேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். நூறுவீதம்.

ஆனால் இவர்கள் வெறும் மூன்றுபேர் அல்ல. பெரும் அடர்த்தியான முழு இருளுக்குள் கிடைத்த ஒரு சிறு ஒளி வெள்ளத்திற்கு காரணமான தமிழக மாணவர்களின் பிரதிநிதிகள்- அவர்களின் குறியீடு இவர்கள்.

நாற்பது வருடங்களுக்கு பின்னர் தமிழகத்தில் 2013ல் தோன்றிய தமிழ் உணர்வு எழுச்சியின் முக்கிய இயங்கு சக்திகளான மாணவர்களின் பிரதிநிதிகள் இவர்கள். நாம் இப்போது புலம்பெயர் தேசங்களில் சர்வதேச மனச்சாட்சியை உலுப்பியபடி நடாத்தும் அல்லது நடாத்துவதாக நினைக்கும் போராட்டங்கள் எல்லாம் எமக்கு சிங்கள பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு- கொடுமைக்கு- இனப்படுகொலைக்கு நீதி கேட்பதான முறையிலேயே அமைந்துள்ளன.

அதன்மூலம் ஒன்று சிங்கள பேரினவாத தேசத்தை இல்லாது விட்டாலும்கூட சிங்கள பேரினவாத ஆட்சியை (தற்போதைய) கண்டனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக்குவதன் மூலம் தமிழர்களுக்கு அங்கு தொடர்ச்சியான அநீதியும், பாரபட்சமும் நிகழ்த்தப்பட்டுவந்தே உள்ளது என்பதை நிறுவமுடியும்.

இதன் மிக உச்சமான பெறுபேறு அதுவாகவே இருக்க முடியும். சர்வதேச அரங்கில் இத்தகைய போராட்டங்களும் தேவைதான். சிங்கள பேரினவாதத்தை சர்வதேச அரங்கில் தோலுரித்து காட்ட வேண்டியது அவசியத்திலும் அவசியம்தான். ஆனால் அதுமட்டுமே தனித்து போதுமானது அல்ல. நாமும் போராட வேண்டும்.

தமிழர்கள் சுதந்திரமாக- நிம்மதியாக தமது தாயக மண்ணில் வாழ வேண்டுமானால் அதற்கான போராட்டங்கள் தமிழர்களாலேயே நடாத்தப்படவும் வழிநடாத்தபடவும் வேண்டும்.

அத்தகைய போராட்டங்களுக்கான, மக்கள் எழுச்சிக்கான புறநிலை அம்சங்கள் தாயகத்தில் மிக அரிதாக உள்ள இந்த தருணத்தில் எமது தமிழ் உறவுகளாக தமிழக தமிழர்களால் நடாத்தப்படும் எழுச்சிகளும் தொடர்ச்சியாக சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும் போராட்டங்கள்தான் இத்தகைய விடுதலை தீயை அணையாமல் வைத்திருக்க உதவும்.

சிங்கள பேரினவாதம் உண்மையிலேயே அச்சமும் கலக்கமும் கொள்வது அயலிலுள்ள இந்த ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்களின் எண்ணிக்கைக்குதான்.

உண்மையான தமிழ் உணர்வுடன், தேர்தல் வெற்றி அபிலாசைகள் இன்றி, மகன்மருமகனுக்கு அமைச்சர் பதவி கனவுகள் பேரம்பேசல்கள் இன்றி, நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக மத்தியுடன் சமரமாகும் அடிபணிவு இன்றி ஒரு தலைமையால் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதன் வெப்பமும் அதன் சுழல் வீச்சும் சிங்கள பேரினவாத அதிகாரமையத்தை சுட்டே தீரும் என்ற நிதர்சன உண்மையை சிங்களமும் புரிந்தே வைத்துள்ளது.

ஏனெனில் சிங்கள பேரினவாத சிந்தனையின் ஒவ்வொரு மூளை மடிப்புகளுக்குள்ளும் எப்போதுமே அயலில் கடல்கடந்து வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் பற்றிய ஒரு பெரும்பயம் காலகாலமாகவே படிந்துள்ளது.

5ம் மகிந்தவை சிறை எடுத்து சென்ற சோழர்கள் பற்றியும், சுற்றிவர கடல் இன்னொரு பக்கம் தமிழர்கள் என்று குறுகி படுத்திருந்த துட்டகமுனுவின் கதை பற்றியும் சிங்கள இனத்தின் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்திருக்கும்.

ஆனாலும் திரைப்படமாயையும், மதமாச்சர்யமும், சாதீய பிளவுகளும், வாக்கு அரசியல் நடாத்தும் கட்சிகளும் இருக்கும்வரைக்கும் ஒரு முழுமையான எழுச்சி, தமிழ்நாட்டையே புரட்சிபோடும் எழுச்சி சாத்தியமே இல்லை என்றுதான் சிங்களம் தன்னை ஆசுவாசப்படுத்தி வந்துள்ளது.

ஆனால் 2013 மார்ச்சில் தமிழ் நாட்டில் எழுந்த பேரெழுச்சி சிங்களத்தின் அத்தனை எண்ணக்கோட்டையையும் தவிடு பொடியாக்கி சென்றது. யாருமே எதிர்பாராத பேரெழுச்சி.

1960களில் நடந்த கிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பின்னர் முழுமையான எழுச்சி என்பது இதுதான். அந்த 2013 மார்ச் நாட்களில் தமிழகதெருக்களில் நடந்த பல விடயங்களை சிங்களமும் அறிந்தே இருக்கும். (அவர்களுக்கும் சேர்த்துதானே இந்திய- தமிழக உளவுகள் இருக்கின்றன)

மாணவர்களின் எழுச்சியை- அவர்களின் துவண்டுவிடாத ஓர்மத்தை- எதற்கும் விலைபோகாத தன்மையை பார்த்து சாதாரணமக்கள் அவர்கள் பின்னால் அணி திரண்டார்கள்.

தெருவில் தினமும் ஆட்டோ ஓடி தனது குடும்பத்தை நடாத்தும் ஒரு தமிழ் தொழிலாளி தனது ஆட்டோவின் முன்பாக ஒலிபெருக்கியை வைத்து இந்த போராட்டத்துக்கு ஆதரவுகோரி தன்னெழுச்சியாக செயற்பட்டது முதல், பாடசாலை சிறுவர்கள்- இளையோர் அனைவரும்,

தமது உணவுகளை துறந்து தெருக்களில் முழுமையான உணர்வுடன் நின்றதும், தினக்கூலிகளாக கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் தெருக்களில் அணிதிரண்ட மாணவர்களுடன் தாமாகவே இணைந்து தமது ஆதரவை காட்டியதும், அரசு ஊழியர்கள், சிறுவியாபாரிகள் என்று அனைவரும் ஒரு குரலில் நின்றதும் ஏறத்தாள அரை நூற்றாண்டுகளாக தமிழகம் காணாத காட்சி அவை.ஒரு பெரீய விடயம் ஒன்றை மிக ஆணித்தரமாக புரியவைத்தது சிங்களத்துக்கு.

அது என்னவென்றால், தமிழக மக்கள் மத்தியில் எப்போதும் அவர்களின் இதய ஆழத்துள்- அடித்தளத்துள், நெஞ்சுக்கூண்டுக்குள் தமிழீழத்துக்கான பேராதவரவு இருந்தே வந்துகொண்’டிருக்கிறது.

வெளிக்காட்ட முடியாமல் அது இருக்கின்றதே தவிர அது பொசுங்கி அமிழ்ந்துபோகவே இல்லை. 2013 மாணவர் எழுச்சி அதனை என்னவிதமாக தெருவுக்கு கொண்டுவந்தது என்பதை பார்த்த சிங்களம் மீண்டும் அப்படி ஒரு எழுச்சி தோன்றுவதை ஒருபோதும் விரும்பாது.

அந்த 2013 போராட்ட காலங்களில் சிங்கள பேரினவாத ஆட்சியும், அதன் கட்சிகளும்,பௌத்த அமைப்புகளும் எவ்வளவு பதட்டத்துடன் இருந்தார்கள் என்பதை அந்நேரத்தைய அவர்களின் அறிக்கைகளை பார்த்தால் புரியும். இன்னொரு வகையில் அந்த 2013 எழுச்சிதான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து கருணாநிதியை விலகவும் வைத்தது.

அதன் பின்னான தமிழக சட்டமன்ற தீர்மானங்களுக்கு ஊக்கமாயும் திகழ்ந்தது. சிங்கள பேரினவாதத்துடன் இணைந்து இனக்கொலையுள் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி முழுமையாக தமிழகத்தில் இருந்து துடைத்தெறிய அதுவும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

1. மக்களின் மனங்களுள் பலகாலமாக தூங்கி கிடந்த தமிழர் என்ற உணர்வை,தமிழீழத்துக்கான குரலை வெளிக்கொண்டுவந்து ஒருங்கிணைத்தது.

2. சிங்களபேரினவாதத்துக்கு ஆதரவான கட்சியான காங்கிரசை முழுமையாக தூக்கி எறிய வைத்தது.சிங்களபேரினவாதத்துக்கு எதிரான தீர்மானங்களை தமிழகசட்டமன்றத்தில் நிறைவேற்ற ஊக்கம் கொடுத்தது.

3. சிங்களபேரினவாதத்துக்கு ஆதரவாக எவருமே பகிரங்கமாக கதைக்க முடியாது என்ற நிலையை தமிழகத்தில் தோற்றியது (சு.சுவாமியை விடுவோம். தனி ஆவர்த்தனம் அவர்-ராசகோமாளி)

இப்படியான நிலைமைகளை தோற்றுவித்த இந்த 2013 எழுச்சியானது இந்த மாணவர்களாலே ஆரம்பிக்கப்பட்டது. இவர்களாலேயே தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் பட்டது.

தமிழக சட்டநெறிகளுக்கு உட்படட முறையில் சனநாயக முறையிலேயே இந்த போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.

சிங்களத்துக்கும் அதற்கு ஆதரவான இந்தியஅமைப்புகள்-அரசநிறுவனங்களுக்கும் யார்மீது இல்லாது விட்டாலும்கூட இந்த மாணவர்சக்திமீது எண்ணற்ற கவனம் இருந்தேவந்துள்ளது.

நாளை தோன்றும் எந்தவொரு தமிழகஎழுச்சியும் 2013 போல இருந்துவிடாது அது அதனைவிட பன்மடங்கு வீரியமாகவே இருக்கும் என்பதை அவர்கள் கணித்திருந்தார்கள்.

அந்த நிலையில் இப்போது மாணவர்சக்தியின் குரலாக செயற்பட்டு வந்து கொண்டிருந்த இந்த மூன்று மாணவர்களும் திடீரென கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

எங்களுக்காக தமது படிப்புகளை இடைநிறுத்தி தெருக்களில் இறங்கி மக்களை அணிதிரட்டிய இந்த மாணவர்களின் கைதுகளுக்கு பின்பாக என்ன விதமான அரசியல் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே-

வெறும் கண்டன அறிக்கைகளை விடுத்து கொண்டிருப்பதுடன் நின்றுவிடாமல் இவர்களின் விடுதலைக்காக இவர்களுக்கு தோழமை நிறைந்த ஆதரவை தெரிவித்து குரல் கொடுக்கப்பட வேண்டும்.

இந்தியஆட்சி மையம் இவற்றை காதில் கோடுகிறதோ இல்லையோ நாம் குரல் கொடுத்தேஆக வேண்டும்.

அது நமது பெருங்கடமை.

எல்லாம் இழந்து சர்வதேச பரப்பில் வேண்டுகோள்களையும்,மகஜர்களையும் அளிக்கும் ஒரு அநாதரவான – அநீதிக்கு உள்ளான இனமாக நாம் இருந்த ஒரு பொழுதில் எமக்காக ஒரு பெரும் மக்கள் திரள் உள்ளது என்பதை காட்டிய மாணவர்களுக்கு நாம் இப்போது காட்ட வேண்டியது நாம் அவர்களுடன் நிற்கின்றோம் என்பதை.

இப்படித்தான் முல்லைபெரியாறு, கூடாங்குளம், என்று தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக குரல்கொடுக்க தவறிய பொழுதுகளில் நாம் விட்ட வரலாற்று பிழையை இந்த விடயத்திலும் விடாமல் இப்போது இவர்களின் விடுதலைக்கான குரலை உயர்த்த வேண்டும்.

தோழமை என்பது தனித்து ஒரு வழிப்பாதை அல்ல.எங்களுக்காக ஒருவர் குரல் கொடுக்க வேண்டும் என்று எண்ணும்-எதிர்பார்க்கும் நாம் மற்றவர்களுக்கு அநீதி நிகழும்போது நாம் என்ன செய்தோம் என்பதே கேள்வியாக முன் எழும்.

எங்களுக்காக அவர்கள்,அவர்களுக்காக நாமே- நம்மைவிட்டால் வேறு யார்.

ச.ச.முத்து

Advertisements