வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டத்தில் இருந்து ஒரு குரல்

இன்று உலக உணவு தினம்! இந்த நேரத்தில் கூட உலகில் உள்ள எத்தனையோ கோடிக்கணக்கான உயிர்கள் உணவு இன்றி உயிர் பிரிந்திருக்க கூடும்.rebuilding infrastructure in the north

ஒரு புறம் உலகின் வளர்ச்சி செவ்வாய் கிரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் பசியால் பட்டினிச்சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களும் உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கிழக்கு மாகாணத்திலும் இந்த நிலைமை உள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்களோ தெரியவில்லை. ஒரு மனிதனின் உணவு உண்ணும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டியது எங்கள் அனைவரதும் கடமையாகும். அந்தவகையில் நாம் அனைவரும் அதற்காக இன்றைய நாளில் உறுதியெடுத்துக்கொள்வோம்.

வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் என்ற வகையில் இன்றைய நாள் எமது மாவட்டத்திற்கும் மக்களுக்கும் முக்கியமானதும் முன்நோக்கி செல்ல வேண்டியதுமாகும்.

அந்தவகையில் உலக உணவு தினமான இன்றைய நாளில் இந்தக்கட்டுரையின் ஊடாக சில கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அரிசியின் விலை தலைக்குமேல் வெள்ளம் போவது போல் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

வெளிநாட்டு அரிசிகள் எமது மக்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. வருமானத்திற்குள் வாழமுடியாத அளவுக்கு ஏனைய உணவுப் பொருட்களின் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களும், இரசாயன நஞ்சுப் பதார்த்தங்களை கொண்ட உணவு வகைகளையுமே இன்று மக்கள் அதிகமாக உண்ண வேண்டியுள்ளது. எதிலும் கலப்படம் எல்லாம் கலப்படம் என்ற நிலை உருவாகிவிட்டது.

கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது நாளாந்த உணவுத் தேவைகளையும் உணவுக்கான வருமானத்தினையும் விவசாயம், மீன்பிடி, கால்நடைவளர்ப்பு போன்ற மூன்று பிரதான தொழில்களின் ஊடாக பூர்த்திசெய்து வருகின்றனர்.

இதைவிட கைத்தொழில்கள், வீட்டுத்தோட்டம் போன்றவற்றின் ஊடாகவும் தங்களது உணவுத் தேவைகளை பூர்த்திசெய்து கொள்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட மூன்று பிரதான தொழில்களும், அந்த தொழிலை செய்கின்றவர்களுமே இன்று நாட்டில் மிகுந்த சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்களின் மேற்குறித்த மூன்று தொழில்களுமே சட்டம், நவீனம், அபிவிருத்தி, பாரபட்சம் போன்றவற்றின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேற்குறித்த தொழில்களில் ஈடுபடுகின்ற மக்கள் அந்ததொழில்களை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கும், நகர்புரங்களுக்கும் வேறுதொழில்களை தேடி செல்லக்கூடிய அளவுக்கு கெடுபிடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

நவீனம், தொழிநுட்பம் என்ற பெயரில் நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மறந்து இயந்திர வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்டு மிகவேகமாக எமது சமூகம் மேலைத்தேய நாடுகளின் உணவு, மற்றும் கலாச்சாரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவதனாலேயே நாம் இன்று எங்களையும் எங்களுடைய எதிர்காலத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றோம்.

உலகிற்கே உணவை வழங்குகின்ற விவசாயிகள் இன்று தங்களது சொந்த மண்ணிலேயே கூலிகளாக வேலை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் எமது மக்களுக்குத் தேவையான அரிசியை வாரி வழங்கியதுடன் மேலதிக அரிசியை நகர்ப்புறங்களுக்கு ஏற்றுமதி செய்து மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள் விவசாயிகள். கிழக்கு மாகாணத்தில் விவசாயிகளே மிகுந்த செல்வந்தர்களாக கருதப்பட்டனர்.

போடியார் என்றால் கிழக்கு மாகாணத்தில் மிகவும் மதிப்புக்குரிய சொல்லாக இருந்தது. அந்த அளவுக்கு விவசாயம் எமது சமூகத்தை வாழ வைத்தது என்றே கூறவேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் உயர் பதவிகளில் இருக்கின்ற அனைவருமே விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்களேயாகும்.

ஆனால் இன்று தன்னை விவசாயி என்று சொல்வதற்கே வெட்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலையில் விவசாயம் மாறிவிட்டது.

தற்போது விவசாயி என்றால் ஏழைக் குடும்பமாகவும், வறுமையில் வாழுகின்ற மக்கள் என்று ஏளனமாக நினைத்துக்கொள்ளும் அளவுக்கு விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வருடம் ஏற்பட்ட வரற்சியினால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களில் விவசாயம் செய்தவர்கள் நீர் இல்லாமையினால் சில நூறு ஏக்கர் காணிகளிலேயே விவசாயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு கடனாளிகளாக மாறியதுடன் தற்கொலைகளும் செய்து கொண்டனர். இதனால் நாட்டில் அரிசிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

விவசாயத்;திற்காக நீர் வழங்க வேண்டிய அதிகாரிகள் தற்போதுதான் நீர் இல்லாமல் போனதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பில் கடந்த யுத்தகாலத்தில் 100ற்கும் மேற்பட்ட குளங்கள் காணாமல் போயுள்ளதாக அண்மையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

அவை அபிவிருத்தி தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

யுத்தம் மனிதர்களை மட்டுமல்ல, எங்களுடைய குளங்களையும், விவசாயத்தையும் காணாமல்போக செய்துள்ளது என்பதையே மேற்படி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி கருத்து எமக்கு எடுத்துக்கூறியுள்ளது.

மறுபுறம் காடுகளை மையப்படுத்தி அமைக்கப்படுகின்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி காரணமாக காடுகளில் வாழ்ந்த யானைகள் விவசாய கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதுடன் விவசாயிகளை தொடர்ந்தும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.

விவசாயக் காணிகளே யானைகளின் இருப்பிடமாக மாறியுள்ளது இதனால் நிம்மதியாக விவசாயம் செய்யமுடிவதில்லை.

இன்னுமொரு புறம் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் தரைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்றங்கள் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளினால் விவசாய நிலங்களுக்குள் கால்நடைகள் புகுந்து பயிர்களை மேய்ந்து விடுகின்றன. இதனாலும் விவசாயம் மிகுந்த சவாலை எதிர்நோக்கியுள்ளதுடன் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தொழிலிலும் இதேபோன்ற நிலைதான் உள்ளது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரசாங்க சட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்காக எடுக்கப்பட்டுள்ள கடற்கரைகாணிகள், தடை செய்யப்பட்ட இயந்திரப்படகுகள், மீன்பிடி வலைகளை பாவித்தல் போன்ற பல காரணிகளினால் மீன்வளமும், மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மீன்பிடித் தொழிலையும் மீனவர்கள் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கால்நடைகளை வளர்க்கின்ற பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல்தரை மற்றும் உணவு, வறட்சி காரணமாக கால்நடைகள் இறத்தல், நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகுதல் போன்ற பிரச்சினைகள் காரணமாக பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பை பகுதிநேர தொழிலாக செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு உணவைப் பெற்றுத்தரும் மூன்று பிரதான தொழில்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதனாலேயே மட்டக்களப்பு மாவட்டம் இன்று வறுமையில் முதலிடத்தில் உள்ளது.

இதனைய அனைத்து துறையினரும் உணர்ந்து குறித்த தொழில் துறைகளை பாதுகாத்து அபிவிருத்தி செய்து இங்குள்ள மக்களுக்கு உணவு கிடைப்பதற்கும், அதனூடாக வருமானம் கிடைப்பதற்கும் குறித்த துறைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் சேவையாற்ற வேண்டும் என்பதையே இன்றைய உலக உணவு தினத்தின் வேண்டுகோளாக முன்வைக்கின்றோம்.

வர்த்தக நிலையங்களில் வியாபாரம் செய்யப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம், ஊட்டச்சத்து, மற்றும் விலை ஏற்றம் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும்.

இன்று எத்தனையோ குடும்பங்கள் விலை ஏற்றம் காரணமாக தரமான உணவுகளையும் ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் வாங்கி உண்ண முடியாமல் மலிவு விலையில் கிடைக்கும் தரமற்ற, சுகாதாரம் இல்லாத நோய்க்காவிகளை கொண்ட உணவுகளை வாங்கி உண்ணுகின்ற துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது.

குறிப்பாக விலை ஏற்றம் காரணமாக குறைந்த வருமானம் பெரும் எத்தனையோ குடும்பங்கள் ஒருநேர உணவை மட்டும் உண்டு வாழ்கின்றனர்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் வருகையினால் கூலி தொழில்களை செய்தவர்கள் அந்ததொழில் கூட இல்லாமல் தவிப்பதனால் பசியை தீர்ப்பதற்கு எத்தனையோ குடும்பங்களை சேர்ந்தவர்கள் களவு, கொள்ளை, விபச்சாரம் போன்ற தவறான பாதைகளை தேர்ந்தெடுப்பதற்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே வியாபார ரீதியாக ஏற்படுகின்ற மேற்குறித்த விடயங்களை அவற்றுக்கு பொறுப்பான அதிகாரிகள் தடுத்து அனைத்து மக்களுக்கும் சுகாதாரமானதும் ஊட்டச்சத்து நிறைந்ததுமான தரமான உணவு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதும் கட்டாயமானதாகும்.

நிலா