விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ltte flag

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார்.

இந்த வழக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையின் போது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை, தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது.

மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது, இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார்.

இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்ட ரீதியாக கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்து ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் பல கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தனிநபர்கள் மீதும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யக் கோரி விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் சில தனிநபர்கள் மீதான கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ள நீதிமன்றம், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை என்று தீர்ப்பளித்துள்ளது.

கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அது பற்றி 2 மாதங்களுக்குள் யோசனைகளை வழங்கலாம் என்றும், கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டது 3 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், விடுதலைப்புலிகளின் வழக்கு செலவை ஐரோப்பிய யூனியன் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பின் முழு விபரத்தினையும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ltte ban lift eu

LTTE-Ban-lift full

**

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று

வைகோ அறிக்கை

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப் வாதாடினார். இலக்சம்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகவும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும், விக்கிப் பீடியா தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பது என்பது நியாயமற்றது என்றும் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தியா உள்ளிட்ட உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகள், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணைபோனதும், நிதி மற்றும் இராணுவ உதவிகளை வாரி வழங்கியது சர்வதேச சட்ட நியதிகளுக்கும், உலக நீதிக்கும் எதிரானது ஆகும்.

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றம் 2011 அக்டோபர் 21 இல் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்ரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு 2011 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது.

சர்வதேச சட்டங்களின்படி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் 2009 இல் தெளிவுபடுத்தியது.

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிதான், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் ரிட் மனு தாக்கல் செய்தேன். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.

இந்தச் சூழ்நிலையில், இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி உலக நாடுகளும் இதனைப் பின்பற்றி தடையை நீக்கும் என்பது உறுதி.

இந்தியாவும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

**********

உத்வேகமளிக்கும் தீர்ப்பு – உமர்

இன்று வந்திருக்கும் தீர்ப்பால் தமிழர்களுக்கு என்ன பயன் என்றொரு கேள்வி முன்வைக்கப்படுகின்றது. சுதந்திர தமிழீழத்தை நோக்கிய பயணத்தில், இந்தத் தீர்ப்பு இரண்டு முக்கிய பயன்களை அளிக்கின்றது. முதலாவதாக, இத்தீர்ப்பின் மூலம் இனப்படுகொலைப் பங்காளிகளின் பங்கு சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது எப்படி என்பதை அறிந்துகொள்வதற்கு முன் இத்தடை ஏன் விதிக்கப்பட்டது என்று பார்க்கவேண்டும்.

இந்தியா தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில், வாஜ்பாய் ஆட்சியின்போது, 2000 ம் ஆண்டில் மாற்றங்கள் மேற்கொள்கின்றது. அப்பொழுதிலிருந்து இலங்கைக்கு போர்க்கப்பல்களும், ஹெலிகாப்டர்களும், தாக்குதல் ஆயுதங்கள் என்று பலவற்றையும் வழங்கத் தொடங்குகின்றது. ராணுவ ஆலோசனைகள், ராஜதந்திர உதவிகள் என்று நீளும் அந்த வேலைகள் 2005 ம் ஆண்டில் கூர்மையடைகின்றன. அப்பொழுது மன்மோகன் சிங் பிரதமராக இருக்கின்றார். எம்.கே. நாராயணன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கின்றார். இனப்படுகொலையின் முதல் பகுதியாக புலிகளுக்கான ஆதரவுத் தளத்தையும், புலிகளின் கடற்படையையும் அழிக்க திட்டமிடப்படுகின்றது.

இதன் அடிப்படையில் இனப்படுகொலை நடக்கும்போது, அதனை எதிர்த்து பெருமளவில் மக்கள் போராடக்கூடிய பகுதிகளில் அவற்றை முடக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட இரண்டு பகுதிகள் தமிழகமும், ஐரோப்பிய ஒன்றியமும். ஐரோப்பாவில் மக்கள் போராட்டம் என்பதைத் தாண்டி, விடுதலைக்கான நிதியையும் முடக்க வேண்டிய தேவை இனப்படுகொலையின் பங்காளிகளுக்கு இருக்கின்றது. அதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நெருக்கடி கொடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதிகள் அமைப்பு என்று தடை விதிப்பதோடு, வங்கிகளில் இருக்கும் நிதிகளையும் முடக்குகின்றனர். இந்தியா அளித்த நெருக்கடி குறித்து இன்று வெளியாகியிருக்கும் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே, இருதரப்பில் ஒருதரப்பின் மீது தடை விதிப்பதென்பது, இன்னொரு தரப்புக்கு ஆதரவான செயலாகும். தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும், தடை விதிக்க அழுத்தங்கள் கொடுத்தது மூலம் இந்தியாவும் இனப்படுகொலையின் பங்காளிகளாக உருவெடுக்கின்றனர். இதே நேரத்தில் புலிகளின் கடற்படையை அழிப்பதற்கான வேலைகளும் தொடங்குகின்றன. அதனை முழுமூச்சில் இந்தியப் படைகளும், இந்தியா வழங்கிய போர்க்கப்பல்களின் உதவியோடு இலங்கையும் மேற்கொள்கின்றன.

இருக்கும் கப்பல்கள் வைத்துக்கொண்டு, புலிகளின் கடைசி இரண்டு கப்பல்களை அழிக்க முடியாமல் திணறுகின்றது இலங்கை கடற்படை. அப்பொழுது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு போர்க்கப்பல்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குகின்றது. அதில் ஒன்று சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த CGS Vigraha என்னும் கப்பல். கோத்தபயாவிடம் அவற்றை கையளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, சென்னையில் வைத்து வழங்கினால், சென்னையில் எதிர்ப்புகள் எழக்கூடும் என்று அந்தக் கப்பல், சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து வழங்கப்பட்டது. இந்தக் கப்பல்களை வைத்து புலிகளின் கடைசி கப்பல்களை, இலங்கையில் இருந்து 1860 கடல் மைல்கள் தொலைவில் அழிக்கின்றது. பிறகு 2009 நவம்பரில், தங்களுக்கு அளிக்கப்பட்ட கப்பல்களுக்கு உரிய வேலை முடிவுற்றது; அதனால் அதனை திரும்பத் தாருங்கள் என்று இந்தியா கோரியது. இந்த இரண்டு வேலைகளிலும் இந்தியாவின் பங்கு பல்வேறு ஆதாரங்கள் வழியாக பதிவாகியுள்ளது.

(இந்தியா ஒரு முக்கியப் பங்காளி; இன்னொரு முக்கியப் பங்காளி அமெரிக்கா. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா 1997 ல் தடை செய்கின்றது. பலரும் எழுதுவது போல் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பிறகு அல்ல. சம்பந்தமே இல்லாமல் 1997 ல் ஏன் தடை செய்கிறது என்றால், ஈழத்தின் கடற்கரைகளில் இருந்து இல்மனைட் உள்ளிட்ட தாது மணலை அமெரிக்கக் கப்பல்கள் திருடிக்கொண்டிருந்தன. தம்முடைய ‘மண்’ணை விட்டுக்கொடுக்க மறுக்கும் புலிகள், அமெரிக்கக் கப்பல்களை தாக்கினார்கள். அதனால், மணல் திருடன் அமெரிக்கா புலிகளை தடை செய்து, அவர்களை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து அவர்களை அழித்தும் விட்டான். வேறொரு பதிவில் சர்வதேச அளவில் அமெரிக்க மேற்கொண்டவற்றை பற்றி விரிவாக எழுதுகின்றேன்)

இனப்படுகொலைக் குற்றம் குறித்த சட்டம் இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை மட்டுமல்லாது, இனப்படுகொலையை திட்டமிட்டவர்கள், அதற்கு துணை புரிந்தவர்கள், என்று அனைவருமே தண்டனைக்கு உரியவர்கள் என்று வரையறுக்கின்றது. இந்தியா இனப்படுகொலையில் நேரடியாகப் பங்கெடுத்தது மட்டுமின்றி, அதற்கான திட்டங்களை தீட்டுவதிலும் சர்வதேச அளவில் அதற்கான சூழலை ஏற்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றது. இந்தத் தீர்ப்பில் புலிகள் மீதான தடையை ஏற்படுத்தியதில் இந்தியாவின் பங்கு குறித்து கூறப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, எம்.கே.நாராயணன் தொடங்கி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இனப்படுகொலைக் குற்றவாளிகள் என நிரூபிக்க முடியும்.

இரண்டாவது முக்கிய பயன் என்பது, De Facto State என்னும் உரிமையை நாம் கோர முடியும் என்பதாகும். அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஒரு தரப்பை, அமைதி உடன்படிக்கை நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில் தடை செய்ததன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை சர்வதேசம் முறையற்ற வழியில் மறுத்திருக்கின்றது. தற்பொழுது இந்தத் தடை சட்டரீதியில் தவறு என்று தீர்ப்பு வந்திருப்பதை முனவைத்து, அப்பொழுது வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி அதிகாரம் என்னும் உரிமையை கோரி நாம் போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.

இந்தத் தீர்ப்பை முன்வைத்து மற்ற பகுதிகளிலும் தடைகளை தகர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க தமிழர்களுக்கு இத்தீர்ப்பு துணை புரியும். தமிழர்களுக்கு மனதளவில் ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கக்கூடியது இத்தீர்ப்பு.

******
இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்!- கி.வெங்கட்ராமன் கோரிக்கை

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, இன்று லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, “பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்” என்ற பெயரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டது.

இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை – இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளையும் “பயங்கரவாத அமைப்பு” என முத்திரைக் குதித்தினர்.

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அயல் நாடுகளிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனக்கொலைப் போர், “பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்” என்று ஞாயப்படுத்தப்பட்டது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.

இந்நிலையில் தான், போர் முடிந்ததாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசே அறிவித்த பிறகும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகளில் பரவி வாழும் தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதன் விளைவாக, 2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் “பயங்கரவாத அமைப்பு“ அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், 2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கக் கூறும் காரணங்கள் இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழ் நாட்டையும் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவதாக, தமிழீழ விடுதலைப்புலிகள் எப்பொழுதும் சொன்னது கிடையாது.

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழக அமைப்புகளும், அவ்வாறு சொன்னது கிடையாது.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பைப் பின்பற்றி, இந்தியாவும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

Advertisements