மீண்டும் அரசியல் களத்தில் ரஜனியும் விக்கியும்

karunanithi-jeyalalithaகடந்த வாரப் பத்தியில் ஜெயலலிதாவின் கைது பின்னணியில் காரசாரமான அரசியல் நெடி வீசுவது குறித்து எழுதியிருந்தேன். ஜாமீன் மறுப்போடு, அது உண்மைதான் என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். நவராத்திரியில் அம்மா சிறையில் இருக்க, ரஜனிகாந்த் வீட்டு ‘கொலு’ பார்க்க பா.ஜா.க.வின் புதிய தமிழ்நாட்டுத் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் சென்றுள்ளார்.

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையல்ல இது. முடிச்சுப் போட்டு ஊகிக்கக்கூடிய விடயந்தான்.

சூப்பர்மேன் ரஜனி இமயமலைப் பார்வையைத் துறந்து பா.ஜ.க.வில் இணைந்தால், அம்மாவால் நொந்துபோன ‘இளசுகளின் தளபதி’ விஜய்யும் பின்னால் வருவாரெனப் போடும் வியூகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நகர்வு இது.

பிரதமர் மோடி துடைப்பத்தைக் கையில் எடுத்தவுடன், தமிழ்நாட்டில் சூரியா என்கிற சரவணனும் ( நடிகர்) அதனைக் கையிலெடுத்துள்ளார். உலகமகா ‘நடிகர்’ கமலகாசனும் தனது நற்பணிமன்றம் ஊடாக துடைப்பத்தைத் தூக்கியுள்ளார். இதுவும் தமிழக பா.ஜ.க.விற்கு இனிப்பான செய்திதான். மோடிக்கு ஆதரவானதொரு அலையை “(?) இது உருவாக்க உதவுமென்கிற நினைப்பு.
ஒரு பெரும் மாணவர் போராட்டம் ஏற்படுத்திய ஈழ ஆதரவு தமிழ்தேசிய உணர்வலைகளுக்கு எதிராக, சினிமாவில் செல்வாக்குச் செலுத்தும் உச்ச நடிகர்களை எவ்வாறு முன்னிறுத்தலாம் என்று முயன்று பார்க்கிறது தமிழிசைக்கூட்டம்.

தமிழ்நாட்டிலும் கட்சி இயங்குகிறதெனக் காட்டாவிட்டால், இந்த தமிழக பா.ஜ.க.வினரை அத்வானி கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டார். இப்போது அவரை யாரும் கட்சிக்குள் பொருட்படுத்துவதில்லை என்பது வேறு கதை

சீனியர் பலர் காத்திருக்க மிகப்பெரிய (?)தலைவர் பொறுப்பினை தலையில் சுமந்துள்ளார் தமிழிசை சௌந்திர ராஜன். ஆதலால் பதவியைக் காப்பாற்ற தீயாய் வேலை செய்கிறார் அம்மணி.

ரஜனியைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வில் அவருடைய நெருங்கிய நண்பர் நடிகர் சத்துருக்கன் சின்ஹா. தமிழ்நாட்டில் ரஜனியின் அரசியல் மதியுரைஞர் நடிகர் சோ ராமசாமி.

சோ என்பவர் ஜெ. ஜெ இக்கு ஆதரவாக இருக்கின்றார். சுப்பிரமணிய சுவாமியோ அல்லது தமிழிசையோ, ரஜனிக்கு நெருக்கமானவர்கள் அல்ல.

கருணாநிதி உயிரோடு உள்ளவரை, தான் அவருக்கு எதிராக அரசியலில் குதிக்க மாட்டேன் என்கிற சத்தியப்பிரமாணத்தையும் ‘சூப்பர்’ எடுத்துள்ளார். ‘எதிராகத்தான் உங்களால் இறங்க முடியாதென்றால் எங்களுடன் வந்து சங்கமமாகுங்கள்’ என்றும் கருணாநிதி அழைப்பு விடுத்தார்.
ஆனாலும் கழுவுற மீனில் நழுவுற மீன் போல், எந்த வலைக்குள்ளும் சிக்காமல் ‘லிங்கா’ வரை நடித்துச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ரஜனி காந்த்.

திடீர்ப் பணக்காரன் ஆவது போல், திடீரென தமிழக அரசியல் தலைமையைப் பிடிக்க வேண்டுமாயின் எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் ஆளுமை கொண்ட ஒரு சினிமா நடிகர்தான் தேவையென்று, வாக்குப்பலமற்ற தமிழக பா.ஜ.க நினைத்துள்ளது போல் தெரிகிறது.

சிலவேளைகளில் ‘ நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு போலாகிவிடும் வாய்ப்பும் ரஜனிக்கு உண்டு. இவ்வளவு காலமும் சேர்த்து வைத்த மக்கள் அபிமானத்தை ஒரே தேர்தலில் முற்றாக இழக்கவும் ரஜனி விரும்பமாட்டார். இந்த சூதாட்டத்தில், அரசியலா? சினிமாவா?..இதில் எதைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் நீண்டகாலமாகவே ரஜினியிடம் இருக்கிறது. இரண்டிற்கும் நடிப்பு தேவை என்பது மக்கள் அறிந்தும் அறியாத உண்மை.

அப்படி ரஜனி அரசியலிற்குள் வருவதாயின் சில நிபந்தனைகள் விதிப்பாரென ஊகிக்கலாம்.

வடமாகாண சபை தேர்தல் களத்தில் போட்டியிடுமாறு அழைத்தபோது, எல்லோரும் ஒன்றாக வந்தால் ( ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் உட்பட) மட்டுமே தன்னால் வரமுடியுமென்று விக்கினேஸ்வரன் அவர்கள் கூறியது போல, தி.மு.க.வும் ,ஏற்கனவே கூட்டுச் சேர்ந்த ம.தி.மு.க, பா.ம.க, மற்றும் தே.மு.தி.க, போன்ற கட்சிகள் பாரதீய ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்தால், போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கலாமென்று ‘சுப்பர்’ பதிலளிக்கும் வாய்ப்புண்டு.

தான் தோல்வியடையக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் வியூகத்தை ரஜனி முன்வைப்பாரெனப் புரிந்து கொள்ளவது சுலபம்.
இப்பார்வை அன்று விக்கினேஸ்வரன் அவர்கள் எடுத்திருந்த நிலைப்பாட்டிற்கும் சாலப் பொருந்தும். இங்கு முதல் விருப்பு வாக்கினை ‘அவருக்கே அளியுங்கள்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோள் ,ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை அவர் பெற்றுக்கொள்ள உதவியது என்பது கவனிக்கத்தக்கது.

பலமுள்ள நடுவண் அரசு நினைத்தால், ரஜனியென்ன, விஜய் கூட அரசியல் களத்தினுள் இழுத்துவரப்படலாம். எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் தனிக்கட்சி தொடங்கிய கால அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்தவர்களுக்கு இந்த இழுப்பின் சூத்திரம் புரியும். எழுத்தாளர் பாமரனும் இது குறித்து எழுதியிருந்தார்.

தவிர்க்க முடியாமல் ரஜனி காந்த் கட்சி அரசியலில் இறங்கினால், அவர் முன் வைக்கும் காலப்பொருத்தமிக்க கோசமாக ‘ஊழல் அற்ற ஆட்சி’ என்பதுதான் முன்னிலைப்படுத்தப்படும். எம்.ஜி.ஆரும் இதையே முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி அரசியல் நகர்வுகளின், அடிப்படை மூலோபாயம் என்னவாக இருக்குமென்பது குறித்த பரந்துபட்ட விவாதம் இப்போது தேவைப்படுகிறது.
இதனால் ஈழ மக்களுக்கான ஆதரவு நிலை மாறலாம் என்பதற்கு அப்பால், தேசிய இனங்களின் இருப்புநிலையை தேசிய மட்டத்தில் கரைத்துவிடும் போக்கொன்று உருவாகுகிறதா என்கிற கேள்வியையும் முன்வைக்கலாம்.
ஒரு கட்சி ஆட்சியே நாட்டிற்குப் பலம் சேர்க்கும் என்பதான நடுவண் அரசின் சிந்தனை, தமிழ்நாட்டில் செயலுருப்பெற ஆரம்பித்துவிட்டதோவென எண்ணத் தோன்றுகிறது.

இடைவெளிகளை உருவாக்குவதும், அதை உருவாக்கியவர்களே அவ்வெற்றிடத்தை நிரப்ப முயல்வதும் பொதுவான அரசியல் நிகழ்வுகள்தான்.
இங்கு ஜெயலலிதாவால் உருவாகும் அரசியல் வெளியை விரைவாக நிரப்பிவிட வேண்டுமென விரைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர் தமிழக பா.ஜ.க வினர். கட்சிக்கு நடிகர்கள் தேவையில்லையென்று சுப்பிரமணிய சுவாமி குழப்பினாலும், ‘ரஜனி உள்ளே வந்துவிட்டார்’ என்கிற செய்தியை தலைமைக்குச் சொல்லிவிட்டால் போதும், ஜெயலலிதாவின் விடுதலை தள்ளிப்போகும் என்று மனக்கணக்குப் போடுகிறது தமிழிசை கூட்டம்.

ஊழல், கைது, சிறை, ஜாமீன் என்பவற்றிக்கு சமாந்தரமாக, தமிழகத்தில் நடக்கும் திடீர் சந்திப்புக்கள், துடைப்ப அரசியல், மக்கள் மீதான விஜயகாந்தின் திடீர் கரிசனை, ஆளுநர் ஆட்சிக்காக அலையும் சுப்பிரமணிய சுவாமியின் அலப்பறைகள், விஜய் ரசிகர்களின் சுவரொட்டிக் கொண்டாட்டங்கள், இவற்றிடையே ‘ஈழம்- ஐ.நா விசாரணையும் சர்வதேச சதிகளும்’ என்ற தலைப்பில் மே 17 இயக்கம் நிகழ்த்தும் ஆய்வரங்கினையும் கவனிக்க வேண்டும்.

ஆகவே திராவிடக் கட்சிகளுக்கு பதிலாக, மாற்று அரசியலை அதாவது தேசிய அரசியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு தளத்தினை தமிழகத்தில் உருவாக்கிட வேண்டும் என்பதற்கான சரியான தருணம் வந்துவிட்டது என்பது சரியா? என்பதனை ரஜனியை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது.

இதே போன்றதொரு மாற்று அரசியல் சிந்தனை ஈழத்தமிழர் அரசியலிலும் வந்துவிட்டது போல் தெரிகிறது. ஆனால் இதனை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் செய்யவில்லை. தமிழ்தேசிய கூட்டு அரசியல் தலைமைக்குள்தான் இப்பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.

அதாவது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள தமிழரசுக் கட்சியின் தனிப்போக்கு இவ்வாறு சிந்திக்க வைக்கிறது.
இது மாற்றா இல்லையேல் ஏகபோக சிந்தனையின் வெளிப்பாடா என்று பார்க்கவேண்டும்.

கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்கிற உரையாடல்கள் நீண்டகாலமாக நடைபெறுகின்றது. தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவங்களும் உண்டு. நாங்கள் ஒன்றுபட்டு உள்ளோமென தேர்தல் திருவிழாக்காலத்தில் மக்களுக்கும் ,சர்வதேசத்திற்கும் சொன்னால் போதும் என்பதுதான் கட்சிப் பதிவினை எதிர்ப்பவர்களின் நிலைப்பாடு.

நீறுபூத்த நெருப்பாகவிருந்த இப்பிரச்சினை, யாழ் மாவட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைக்கப்பட்டவுடன் பிரகாசமாக வெளியே தெரியத்தொடங்கியுள்ளது.

இரணைமடுவிலிருந்து யாழ்.குடாவிற்கு நீர் வழங்கக்கூடாதென்ற பிரச்சினைக்குப் பின்னர் , பாரியளவில் உருவாகும் பிரச்சினையாக, வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களின் தமிழரசுக் கட்சியினை முதன்மைப் படுத்தும் விவகாரத்தைப் பார்க்கலாம்.

வன்முறைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் தன்னால் இணைந்து போகமுடியாதென , சிவசக்தி ஆனந்தனிடம் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் கூறிய கருத்து, பலத்த விமர்சனங்களை பல்வேறு தரப்பினரிடையே உருவாக்கியுள்ளது. தேர்தல் காலத்தில் வல்வெட்டித்துறையிலும், கிளிநொச்சியிலும் நிகழ்த்தப்பட்ட மாவீரர் புகழ் பாடி மண்ணதிர்ந்த பேச்சுக்கள் எல்லாம் பொய்யா? என்கிற நியாயமான கேள்வியை நிராகரிக்க முடியாதுள்ளது. இதேகருத்தினை இனிவரும் தேர்தல்களில் மக்களிடம் சொல்வாரா விக்கினேஸ்வரன்?.

இப்படியே உள்முரண்பாடு முற்றிச் சென்றால், இனிமேல் தேர்தலில்கூட ‘கூட்டு’ இல்லையென்கிற நிலைமை உருவாகும்போலுள்ளது.

நில ஆக்கிரமிப்பு மிக வேகமாக முன்னெடுக்கப்படும் இவ்வேளையில், நாடாளுமன்ற ஆசனங்களைப் பங்கு போடுவதற்காக, மக்கள் விரும்பும் ஒற்றுமையைச் சிதறடிக்கும் வகையில் தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் செயற்படுவது சரியாகப்படவில்லை.

பாரிய இராணுவ வன்முறையூடாக இன அழிப்பினை நிகழ்த்திய, அதே அதிகார மையத்தின் முன்னால் நின்று பதவிப்பிரமாணம் செய்தது மட்டும் எந்தவிதத்தில் நியாயம் என்று கேட்கப்படுகிறது.

அதேவேளை இனிவரும் காலங்களில், வன்முறைப்போராட்டங்களின் ஊடாக விடுதலைப்பெற்ற நாடுகளின் பிரதிநிதிகளையும் வடமாகாண முதல்வர் சந்திக்காமல் தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இப்போதும் , இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பேரழிவுகளை ஏற்படுத்திய நாடுகளின் பிரதிநிதிகளும் வடமாகாண சபை முதல்வரை சந்தித்து அபிவிருத்தி பற்றி பேசிக்கொண்டுதானிருக்கிறார்கள்.

பலவீனமான தருணத்தில், மேலும் பலவீனப்படக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது, மக்கள் விரோத பாதையில் பயணிப்பதாகவே கருதப்படும். விடுதலை அரசியலுக்கும், தேர்தல் அரசியலுக்குமிடையே உள்ள வேறுபாட்டினை பலர் புரிந்து கொள்ளவில்லைபோல் தெரிகிறது. இழப்பின் வலியினைச் சுமந்து நிற்கும் மக்களின் உணர்வுகளோடு, சுயநலமிக்க வாக்குவங்கி அரசியலை கலவாதிருத்தல் நன்று.
-இதயச்சந்திரன்
-வீரகேசரி
12/10/2014

Advertisements