புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்..

கேடு கெட்ட படத்தின் மூலமாக மக்களுக்கு தமிழீழ விடுதலை போராட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டிய தேவை தமிழக அரசியல் களத்தில் இல்லை!

ஒரு படம் எப்படி எடுக்க கூடாது என்பதற்கான சகலவிதமான கூறுகளுடன் எடுக்கப்பட்ட படமே புலிப்பார்வை. படத்தில் ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட வகையில் கேமரா, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களையும் மிகவும் நேர்த்தியாக கையாண்ட காட்சிகள் என்றால் இரண்டே காட்சிகள் தான்.
ஒன்று படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சியும் அடுத்து இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் காட்சியும் தான். இரண்டிலுமே நடித்த நடிகர்களுக்கு வசனங்கள் இல்லை என்றாலும் காட்சியில் வந்த அத்தனை நடிகர்களும் தங்களின் பங்களிப்பை காட்சியில் நடித்து வெளிபடுத்தியிருந்தார்கள். ஆனால் இந்த இரண்டு காட்சிகளையும் அனைத்து திரைப்படங்களிலும், தேவையென்றால் இணையத்தில் கூட பார்க்கலாம் இந்த இரண்டு காட்சிகளும் புகைபிடிக்க கூடாது புகைப்பிடித்தல் உடல் நடலத்திற்கு கேடு என்று கூறும் அரச்சாங்க சுகாதர துறையின் விளம்பர படங்கள். இதை புலிப்பார்வை படத்துடன் இணைத்து இருப்பதால் இந்த இரண்டு விளம்பர காட்சிகள் மட்டுமே படத்தில் திரைப்படத்திற்கான அம்சத்துடன் இருக்கிறது. இது நமது கவலையல்ல, தமிழ் திரையுலகம் கவனிக்க வேண்டிய கவலை.ban kaththi movie

புலிப்பார்வை திரைப்படம் குறித்தான சர்ச்சை ஏற்படக் காரணம், சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் தெற்காசிய பிராந்தியத்தின் மிகவும் முக்கியமான அரசியல் தளமும் அதன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகளை குறித்து பேசும் படம் அதுவும் ஒரு தேசிய இனம் அதுவும் இரு வேறு நாடுகளில் வாழும் ஒரு தேசிய இனமக்களின் அரசியலை பேசுகின்ற திரைப்படம்.

மிக முக்கியமான அரசியலை பேசும் இத் திரைக்கதையை ப்ரவீன் காந்தி போன்ற அரைவேக்காடுகள் திரைப்படம் ஆக்கும் வசதி வாய்ப்புகள் அளிக்கப்படுவதன் பின்னால் இருக்கும் அரசியலை பார்த்தாலே புரியும் இத் திரைப்படம் தமிழர்களின் அரசியலை சரியான வகையில் பேசியிருக்கிறதா என்பது. இந்த திரைப்படத்தில் வைக்கப்படும் அரசியல் என்பது இலங்கைக்கும் புலிகள் இயக்கத்திற்கும் சண்டை நடந்து, புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது, அங்கிருக்கும் தமிழர்களுக்கும் இலங்கைக்குமான பிரச்சனை இல்லை என்பதை மிகவும் அருமையாக கட்டமைத்துவிட்டு, இந்தியா தான் அங்கிருக்கும் தமிழர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடிய சர்வரோக நிவாரணி, இலங்கையில் நடந்த் போருக்கு உதவி புரிந்த இந்தியாவை புனித பிம்பமாக இலங்கைக்கு எதிரான நிலையில் தான் இந்தியா இருக்கிறது என்ற அரசியலை கட்டமைக்கும் படம்.

படத்தின் முதல் காட்சியாக புலிகள் இயக்கத்தின் ஒரு தாக்குதல் குறித்தான ஆலோசனை கூட்டத்தை காட்டுகிறார்கள் அதில் பேசும் ஒரு கதா பாத்திரம் அந்த கதாபாத்திரத்தை ப்ரவீன் காந்தியே ஏற்று நடித்திருக்கிறார் சிங்களவனின் எலும்புகளை நம் மண்ணிற்கு உரமாக போட வேண்டும் என்கிறார். அதாவது இயக்கத்தினர் மிகவும் தீவிரமாக தங்களின் நோக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை கூறுவதற்காக ஆனால் இதே படத்தில் மிக அதிகமாக சிங்கள் இராணுவ அதிகாரிகளுக்கு வசனங்கள் பேசும் வாய்ப்பு இருக்கிறது ஆனால் அவர்களின் இனவெறியை குறிப்பிடும் வகையில் அவர்களுடைய வசனங்கள் என்றால், பாலாவை பிடித்த பிறகு புலிகளின் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற ஒரு வசனம் மட்டுமே.

ஒட்டுமொத்தமாக இலங்கை இராணுவத்தினர் தங்களின் நாட்டை தக்க வைத்துக் கொள்ள போராடுவதாகவும் புலிகள் இயக்கத்தினர் தங்களின் தலைவரை காப்பாற்ற மட்டுமே போராடுவதாகவும் கதைக் களம் இருக்கிறது. தமிழீழத்தின் அத்தியாவசியத்தை உணர்த்தும் வகையில் எந்த காட்சி அமைப்பும் இல்லை போராளியின் காதலியாக வரும் பெண் போரினால் அங்கு மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டும் வகையிலேயே சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் சர்வதேச போர் குற்ற விசாரணை என்ற பெயரில் புலிகள் இயக்கமும் போர் குற்றம் புரிந்தார்கள் அதை குறித்த விசாரணை செய்ய வேண்டும் என்ற இடத்தில் இந்த படத்தின் கட்டமைப்பு மிக அருமையாக அவர்களுக்கு வேறு ஒரு கோணத்தை எடுத்து கொடுக்கிறது. சர்வதேச அறிக்கைகளில் இது வரை வந்தவற்றில் புலிகள் பொது மக்களை போர் நடவடிக்கைகளின் பயன்படுத்தினார்கள் என்று பதுங்கு குழிகள் வெட்ட பொது மக்களை உபயோகித்தனர் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து வரும் வேளையில் அடுத்த கட்டமாக கண்ணிவெடிகளை அகற்ற பொது மக்களை உபயோகித்தனர் புலிகள் என்று அடுத்த ஒரு கோணத்தில் சர்வதேச அரங்கிற்கு புலிகள் இயக்கம் மீது குற்றச்சாட்டு வைக்க ஒரு புது விசயத்தை எடுத்துக் கொடுக்கிறார்கள்.

எப்படி நமது மீனவர்கள் பிரச்சனையில் இரட்டைமடி வலை, ட்ராய்லர் படகுகள் என்பது பெரும் பிரச்சனையாக இரண்டு நாட்டுக்கு இடையில் இல்லாத பொழுது தமிழக அறிவுசீவி கூட்டம் கட்டுரைகள் எழுதி இரட்டைமடி வலையும், ட்ராய்லர் படகுகளை தமிழக மீனவர்கள் உபயோகிக்கிறார்கள் அதனால் மீன்வளம் குறைகிறது எனவே தான் நாங்கள் மீனவர்களை தாக்குகிறோம் என்று சிங்கள அரசாங்கம் பேச வழிவகை செய்து கொடுத்தார்களோ அதே வகையில் சர்வதேச நட்ட நடு செண்டர் நாடுகள் புலிகள் இயக்கத்தினர் மீது புதிதாக அடுத்து ஒரு குற்றச்சாட்டை வைக்க வழிவகை செய்யும் வகையில் அமைந்துள்ளது படத்தின் கதாநாயகியாக வருபவர் தனது வயிற்று பிழைப்பிற்காக கண்ணிவெடி அகற்றும் பணியை செய்தார் என்று சித்தரிக்கப்பட்டிருக்கும் கதையமைப்பு. இது சில காட்சிகளை மாற்றுவதால் மாற்றப்படக்கூடிய விசயம் இல்லை ஒட்டுமொத்த கதையின் அடித்தளம் ஆன கதாநாயகி செய்து வரும் வேலையை குறித்தான விசயம். மேலும் கதாநாயகி தன் காதலனுக்கு காதல் பரிசாக கண்ணிவெடியை தோண்டி எடுத்து வந்து கொடுக்கிறார்.

nomines கண்ணிவெடி என்பது சர்வதேச அளவில் மிகவும் பயங்கரமான ஆயுதமாக பார்க்கப்படும் ஒரு விசயம். இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே, எனவே சர்வதேச அளவில் கண்ணிவெடிக்கு எதிரான இயக்கங்கள் உண்டு 1997ம் ஆண்டு இவ்வாறான ஒரு இயக்கத்திற்கு நோபல் பரிசு கூட கொடுக்கப்பட்டது(ICBL). ஆனால் இத் திரைப்படத்தில் கண்ணிவெடி என்பதை பொதுமக்கள் கையாளவதாகவும் அதற்கு புலிகள் இயக்கத்தினர் காசு கொடுப்பது போலவும் படமாக்கியிருக்கிறார்கள். ஏன் இன்று வரை ஈழத்தில் பொது மக்களை மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்க முடியாது என்று கூறும் காரணங்களில் ஒன்று அங்கு கண்ணிவெடிகள் இருக்கின்றன அவைகளை அகற்றும் வேலை நடந்து வருகிறது எனவே மக்களை குடியமர்த்த முடியாது என்ற தகவல்களை போர் முடிந்து 5 வருடம் கழித்தும் இலங்கை அரசு கூறி வருகிறது. இவைகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல் ப்ரவீன் காந்தி தெற்காசிய பிராந்தியத்தின் ஒரு அரசியல் நிகழ்வை படமாக்க முயற்சி எடுத்திருப்பது அவரின் கத்துக்குட்டி தனத்தை வெளிக் கொணர்வது இல்லை.

நமக்கு எதிரான அரசியலை முன்னிறுத்த இத்தகையை கத்துக் குட்டிகளையும் நமது அரசியல் எதிரிகள் உபயோகிப்பார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த படம். அனைத்து திரைப்பட அம்சங்களுடன் கூடிய இனம் படத்தில் ஒரு கதாபாத்திரம் கண்ணிவெடியின் மீது உட்கார்ந்து இருப்பார் நகர்ந்தால் உயிர் போய்விடும் என்பதால் அவருக்கு உணவை நீண்ட குச்சியில் கொடுப்பார்கள் படம் முழுவதும் அவர் அங்கு தான் அமர்ந்து இருப்பது போல் காட்டியிருப்பார்கள், அந்த கதாபாத்திரம் என்பது கண்ணிவெடியின் ஆபத்தை நம் கண்முண் விவரிக்கும் ஒரு கதாபாத்திரம். அதே நிலையில் தான் இங்கும் கதாநாயகின் கதாபாத்திரம் கண்ணிவெடி குறித்த சர்ச்சையை மேலுவும் விரிவடைய வைக்கிறது.

படத்தின் இறுதிக் கருத்தாக ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு விடிவாக இந்தியாவே இருக்க முடியும் அதை தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்றும், போர் கால கட்டத்தில் இந்தியா பலமுறை இலங்கை அரசை எச்சரித்தது போலவும் காட்சிகள் சித்தரிக்கபப்பட்டுள்ளது. இலங்கை அமைச்சர்களும் இராணுவத்தினரும் இந்தியாவுடன் இணைந்தே நாங்கள் போரை நடத்தினோம் என்று உலக அரங்கில் பகிரங்கமாக ஒத்துக் கொண்ட பிறகும் அதை மறைத்து எதோ இந்தியா இந்த போருக்கு எதிராக நின்றது போலவும் பாலாவை கொலை செய்தது இந்தியா முற்றும் முழுதிலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பகையை உருவாக்கும் என்பது போலவும் சித்தரித்துள்ளார்கள். இது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் கூற்றாக இருக்கலாம், ஆனால் சமகால அரசியலைப் பற்றி பேசுகின்ற ஒரு திரைப்படம் என்பது உள்ளதை உள்ளபடி கூற வேண்டும். எனென்றால் அரசியல் நிகழ்வுகளை சித்தரிப்பது என்பது தவறான வரலாற்றை மக்கள் முன்பாக கொண்டு சேர்க்கும்.

ஆகமொத்தம் திரைப்படத்தின் இயக்குனர் படத்தின் ஆரம்பத்தில் இது உங்களுக்கான படம் என்றார், ஆனால் சில கதாபாத்திரங்களை தமிழ் திரைஉலகின் கதாநாயகர்கள் வழிபாட்டின் கீழாக அமைத்துவிட்டால் அது மக்களுக்கான படம் இல்லை. மக்களின் அரசியலை தெளிவாக விளக்க கூடியதாக இருக்க வேண்டும். படத்தில் இந்திய ஆதரவு நிலை எனபதற்கு ஒரு மாவீரர் நாள் உரையில் பிராபகரன் அவர்களின் பேச்சை சுட்டிக் காட்டி அந்த அரசியல் நிலைப்பாட்டின் கீழே நான் இந்த படத்தில் இந்திய ஆதரவை சுட்டிக் காட்டுகிறார். இறுதி போர் கால கட்டத்தில் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தங்களுக்கு ஆதரவு அளித்துவரும் தமிழக தலைவர்கள், இந்திய அளவிலான தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தாரே தவிர இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கவில்லை, மேலும் சர்வதேச நாடுகள் தங்களுக்கு எதிராக நிற்பதை கூறினார் அதில் இந்தியா புலிகளுக்கு எதிராக இல்லை என்று எங்குமே கூறவில்லை. இதன் பின்னாலான அரசியலை புரிந்து கொள்ளாமல் குருட்டாம் போக்கில் தமிழர்களின் அரசியலை பேசுகிறார்.

பிரவீன் காந்தியின் கத்துக்குட்டி தனம் மிக நாசுக்காக பார்ப்பனியத்தின் வேலையை செய்கிறது ஒட்டுமொத்த திரைப்படத்தில் படத்தின் பெரும்பாலன காட்சிகளில் வரும் சிங்கள் இராணுவ வீரர்களின் அமைதியான போக்கும், கதையின் அடிநாதமாக கதாநாயகியின் வாழ்வாதரத்திற்கான கண்ணிவெடி அகற்றுவதும், பாலாவை சுட்டுக் கொலை செய்தது அவனின் தைரியமான மனநிலையினால் மட்டுமே சிங்கள இனவெறியின் கீழாக இல்லை என்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தில் மிக அதிகமாக காட்சிகளில் விசத்தை தடவிவிட்டு ஒரு சில இடங்கள் வழக்கமான தமிழக சினிமாவின் மசாலா காட்சியமைப்புகளின் கீழாக ஒருவரை மிகப்பெரிய போராளியாக சித்தரித்தால் இங்கிருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளும் ரசிகமனப்பான்மையை முன்னிறுத்தியிருக்கிறார். இந்த படம் இப்படியே வெளியிட எந்த தகுதியும் இல்லை.

ஆனால் கருத்துரிமை என்று பேசுபவர்களுக்காக ஒன்று செய்யலாம் கதாநாயகி கண்ணி வெடி அகற்றுதலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். அடுத்து மிக முக்கியமாக சிங்கள கொடியை கிராபிக்ஸில் மறைத்தது போல் புலிக்கொடியையும் புலிச்சின்னத்தையும் மறைத்துவிடலாம், சிங்களக் கொடியை மறைத்து எப்படி இந்தியாவின் அரசியலை முன்னிருத்துகிறீர்களோ அதே போல் புலிகள் இயக்கத்தின் அடையாளங்களையும் பயன்படுத்த வேண்டியது இல்லை, அப்படி அதை பயன்படுத்துவது உங்களின் வியாபார நோக்கமே அன்றி தமிழினத்தின் மீதான பாசமாகவோ உணர்வாகவோ தெரியவில்லை. மேலும் இப்படி ஒரு கேடு கெட்ட படத்தின் மூலமாக மக்களுக்கு தமிழீழ விடுதலை போராட்டத்தையும் போராளிகளையும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை தமிழக அரசியல் களத்தில் இல்லை.

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்..

– ஹரிஹரன்

****
இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் படம் புலிப்பர்வை!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரனை ‘சிறார் போராளி’யாக தவறாக சித்தரித்தும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் எடுக்கப்பட்ட ‘புலிப்பார்வை’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் – இளைஞர் அமைப்புகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் அங்கம் வகிக்கும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய மாணவர் – இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

நிகழவிருக்கும் விபரீதத்தை உணர்ந்த படத் தயாரிப்பாளர், அவசர அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து, ‘புலிப்பார்வை’ வெளியீட்டை ஒத்திவைப்பதாகவும், வேல்முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் ஆட்சேபிக்கும் அம்சங்களை படத்திலிருந்து அகற்றிவிட்டு, அவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி, அவர்கள் சம்மதித்தால் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்றும், அவர்கள் சம்மதம் தராத பட்சத்தில், எத்தனை கோடி நஷ்டம் வந்தாலும் சரி… படத்தை வெளியிடாமல் விட்டுவிடுவோம் என்றும் அறிவித்தார்.

ஆனால், அவர் சொன்னதுபோல் செய்யாமல், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினருக்கு படத்தை போட்டுக் காட்டாமலே, அவர்களது சம்மதத்தைப் பெறாமலே, தீபாவளிக்கு படத்தை வெளியிடப் போவதாக விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டார்.

இதனால் கொந்தளித்த மாணவர் – இளைஞர் அமைப்பினர், திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து, இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று மனு கொடுத்தனர். மேலும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் திங்களன்று சென்னையில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இந்நிலையில், கூட்டமைப்பினருக்கு நேற்று திங்கள் மாலை படத்தை போட்டுக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை பிரசாத் திரையரங்கில் நடைபெற்ற இந்த திரையிடலுக்கு, கூட்டமைப்பைச் சேர்ந்த கோவை ராமகிருஷ்ணன், தியாகு, வீரலட்சுமி, கவுதம், பிரபாகரன், பிரதீப், செம்பியன் மனோஜ்குமார் மற்றும் பலர் வந்திருந்தனர்.

மாற்றியமைக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட ‘புலிப்பார்வை’ படத்தைப் பார்த்த தமிழினப் பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம், பாலச்சந்திரன் கதாபாத்திரம் அணிந்திருந்த புலிகளின் சீருடையை நீக்கி, சாதாரண உடையை அணிவித்ததைத் தவிர, படத்தில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவே இல்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்துள்ளார்கள்.

படத்தில், சீருடையைத் தவிர வேறு எதையும் மாற்றவில்லை. ‘புதைந்த கண்ணிவெடிகளை எடுத்து வந்து புலிகளிடம் கொடுத்து பணம் வாங்கும் அளவிற்கு ஈழத்தமிழ் மக்கள் வறுமையில் வாடினார்கள்’ என்பது உட்பட, இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அத்தனை அம்சங்களும் அப்படியே இருக்கின்றன. தமிழ் இனத்துக்காகவும், ஈழத்துக்காகவும் போராடுகிற எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத படம் ‘புலிப்பார்வை’. இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது. அனுமதிக்க மாட்டோம்” என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements