ஓயாத அலைகள்-02 :நெஞ்சை நிமிர்த்திய வெற்றி

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மாபெரும் வெற்றிகளால் கட்டமைக்கப்பட்டது. இதற்கான முழு உரித்தும் தாயகக் கனவோடு தமது இன்னுயிர்களைக் களமுனைகளில் தியாகம் செய்த வீரர்களுக்கேயுரியது.poonakari attack

“ஒரு போரின் முடிவென்பது ஒரு போராட்டத்தின் முடிவல்ல” என்பது சேகுவாராவின் வார்த்தை. ஒரு வீரன் சாவடைந்தாலோ அல்லது வீரர்கள் சாவடைந்தாலோ அந்தப் போராட்டமே முற்றுப் பெற்று விட்டதாக அர்த்தமில்லை. அந்தக் கனவைச் சுமந்து இன்னொரு போராளி பயணிக்க தயாராக இருக்கும் வரை அந்த இனம் தோற்றுப் போன இனமாக அடையாளப்படுத்த முடியாது .

தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் அத்தகைய வெற்றி இதோல்விகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.பேரினத்துக்கு எதிரான போரில் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றிகளை அடுக்கடுக்காக கூறிச் செல்லலாம். அவற்றில் ஒன்று தான் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற ஓயாத அலைகள்-02 படை நடவடிக்கை. ஏற்கனவே ஓயாத அலைகள்-01 என்று பெயரிட்ட நடவடிக்கையின் மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். இந்த நிலையில் தான் அதன்இரண்டாவது பகுதியாக ஓயாத அலைகள்-02ஐ புலிகள் தொடுத்தார்கள்.இந்த முறை அலை கிளம்பியது கிளிநொச்சியில்.

“ஜெயசிக்குறு’ என்ற பெயரில் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான விநியோகப் பாதையை கைப்பற்ற பேரினப் படைகள் களத்தில் இறங்கின. இந்த தரைப்பாதைத் திறப்பு படையினருக்கு கட்டாயம் தேவையான ஒன்றாக மாறிப்போயிருந்தது. ஏனெனில் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் தற்காப்பு தாக்குதல்களை நடத்தியபடி பின்வாங்கியிருந்தனர். இதன் மூலம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக படையினர் கைப்பற்றி இருந்தாலும் அவர்களது விநியோகம் கடலையும் ஆகாயத்தையும் நம்பியே இருந்தது.

எனவே இந்தச் சிக்கலிலிருந்து விடுபட ஒரே வழி புலிகள் வசம் இருக்கும் வவுனியா தொடக்கம் கிளிநொச்சி வரையிலான ஏ-9 வீதியை கைப்பற்றுவது தான். இந்த நிலையில் முல்லைத்தீவுப் பகுதி பறிபோன கையோடு “சத்ஜெய’ என்ற பெயரில் கிளிநொச்சியை கைப்பற்றி அரச படைகள் ஆக்கிரமிப்புச் செய்திருந்தன. எனவே கிளிநொச்சியிலிருந்து வவுனியா வரையான ஏ-9 வீதியைத் திறக்க இரு முனைகளில் தாக்குதலை தொடுத்த படி அரச படைகள் முன்னேறத் தொடங்கின.ஜெயசிகுறு’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை 1997மே 13 ஆம் திகதி ஆரம்பமானது. சுமார் 70 நாள்களை விழுங்கி பின்னரும் அரச படைகளால் ஏ-9 வீதியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை.

ஆமை வேகத்திலேயேஇ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்ற முடிந்தது. அந்தளவுக்கு அரசு எதிர்பார்த்ததை விடவும் புலிகளின் எதிர்ப்பு மிகப் கடுமையானதாக இருந்தது.ஏ-9 வீதியை பிடிப்பதிலேயே தனது முழுக்கவனத்தையும் படைத்தரப்பு செலுத்தியதால் பின்னரங்க நிலைகளின் பாதுகாப்பு குறித்து பெரிதாக இராணுவம் அக்கறை கொள்ளவில்லை. இது கிளிநொச்சிக்குள் வேவு அணிகளை சுலபமாக ஊடுருவும் வாய்ப்பை புலிகளுக்கு கொடுத்தது. ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட வேவு நடவடிக்கையின் பின்னர் ஓயாத அலைகள்-02 க்கான திட்டம் மிக நேர்த்தியாக தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளால் வடிவமைக்கப்பட்டது.

நீண்ட நாள் காத்திருப்பு மற்றும் திட்டமிடல்களுடன் மிகத் துல்லியமான புலனாய்வு செயற்பாட்டு திட்டமிடல்களுடன் ஓயாத அலைகள் -02 கிளிநொச்சியில் தொடங்க நாள் குறிக்கப்பட்டது.

ஒரு பக்கத்தில் 7 0 நாள்களாக தினமும் விமானத் தாக்குதல்கள்இ செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மெதுவாக நகரும் படைகளின் முதுகெலும்பை முறித்து அவர்களைப் பழைய நிலைகளுக்கு துரத்துவதுடன் மீண்டும் கிளிநொச்சியை பிடிப்பதே புலிகளின் திட்டம். விடுதலைப்புலிகளின் தளபதிகளான பால்ராஜ்இதீபன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இதற்கான திட்டம் வேகமாக செயற்படுத்தப்பட்டது. புலனாய்வு வீரர்களின் துல்லியமான செயற்பாடும் அவர்களின் அர்ப்பணிப்புமே ஓயாத அலைகள்-02 நடவடிக்கை மாபெரும் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.

மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட மாபெரும் மரபு ரீதியான படை நகர்வு ஓயாத அலைகள்-02 என்று போரியல் வல்லுநர்கள் இன்னும் இந்த தாக்குதல் பற்றி ஆச்சரியத்தோடு சொல்கிறார்கள். ஏனெனில் பல மாதங்களைச் செலவழித்து ஆயிரக்கான உயிர்களை காவு கொடுத்து, மிகப் பெரும் நிதி வளத்தையும் ஆளணி வளத்தையும் கொடுத்து இராணுவம் கைப்பற்றி இருந்த மிகப் பெரும் நிலப்பரப்பை புலிகளால் வெறும் மூன்று நாள்களில் கைப்பற்ற முடிந்தது என்பது நம்ப முடியாத விடயம் தான்.உண்ணா நோன்பிருந்து உயிர்க் கொடை புரிந்த திலீபனின் நினைவு நாளில்திறக்கப்பட்டது அலைகளின் வாசல். படையினர் திரும்பிய பக்கமெல்லாம் வரிச் சீருடையோடு புலிகளின் அணிகள் அலைஅலையாக எழுந்த வண்ணமிருந்தன.

முன்னேறிய இராணுவ அணிகளை தடுத்து நிறுத்தி பழைய நிலைகளுக்கு துரத்தும் அணிகள் தளபதி தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. மறுபக்கத்தில் களமுனைகளை ஒரே நேரத்தில் உடைத்துக் கொண்டு கிளிநொச்சிக்குள் நுழையும் பொறுப்பு பிரிகேடியர் பால்ராஜின் அணிக்கு. அந்த அணி எதிர்பார்த்ததை விடவும் வேகமாக முன்னரங்குகளைத் தகர்த்தபடி உள்நுழைந்து எதிரிகளை காவு கொள்ளத் தொடங்கியது. சமயோசிதமான திட்டமும் போராளிகளின் ஓர்மமும் படையினரைப் பின்வாங்க வைத்து புலிகளுக்கு பெரு வெற்றியை ஏற்படுத்தியது. ஏற்கனவே முல்லைத்தீவு, பூநகரி தாக்குதல்களின் புலிகளின் அணிகள் பெற்றிருந்த அனுபவமும் ஓயாத அலைகள்-02 இனை மாபெரும் வெற்றி கொள்ள வைத்தது. சுமார் மூன்று நாள்கள் நித்திரை தூக்கம் உணவு ஓய்வு என எதுவுமின்றி போராளிகள் மனத்திடத்தோடு இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருந்தனர்.

போரில் சிறிது ஓய்வு கொடுத்தாலும் எதிரி உஷாராகி விடுவான் என்பதால் உணவைக் கூட மறந்து போராளிகள் இந்த தாக்குதலைச் செய்து முடிந்திருந்தனர் . கிளிநொச்சியை மூன்று நாள்களில் கைப்பற்றிய வரலாறு தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பக்கங்களில் அதியுச்சப் பெறுமானங்களோடு மிளிர்கிறது. ஏறக்குறைய ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினரை உயிரிழக்கச் செய்ததுடன் ஏராளமான நவீன ரக ஆயுதங்களையும் இந்தச் சமரில் புலிகளின் அணிகள் அள்ளின. காலங்கள் கடந்த போதும் ஓயாத அலைகள்-02 தந்த வெற்றி இன்னமும் தமிழர்களை நெஞ்சை நிமிர்த்த வைக்கிறது.

-உதயன்