ஈழமுரசு மீதான தாக்குதல் என்பது தமிழ் இனம் சந்திக்கப்போகும் பேரழிவின் ஆரம்பம்

ஊடகத்துறை மீதான வன்முறைகளிற்கு முகம்கொடுப்பது என்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தொடர் அச்சுறுத்தலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசிய ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்களும் வன்முறைகளுமே அதிகமானது. தாய்நாட்டில் வைத்து எம்மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள்; தற்போது அகதிகளாக வந்து தஞ்சமடைந்துள்ள புலம்பெயர் நாடுகளிலும் பரவியுள்ளது.journalist attack

2009 ஆண்டில் எமது இனம் முள்ளிவாய்காலில் சந்தித்த இழப்பின் பின்னர், தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுத்திறன் புலம்பெயர் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழ் மக்களிடமுமே செறிந்துள்ளது. அதனை நன்கு புரிந்துகொண்ட எதிரியானவன் தற்போது தமிழ் தேசியத்தின் குரலை முற்றாக நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளான். அதன் வெளிப்பாடு தான் பாரம்பரிய தமிழ்த் தேசிய அச்சு ஊடகமான ஈழமுரசு மீதான ஆயுத வன்முறை.

1987 ஆம் ஆண்டு இந்திய படையினர் தமிழ் மக்கள் மீது போரை ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஈழநாதம் மற்றும் முரசொலி ஆகிய ஊடகங்களை குண்டு வைத்து தகர்த்தபின்னரே தமது தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர்.

தமிழ் மக்கள் மீதான மிகப்பெரும் வன்முறைகளை மேற்கொள்வதற்கு முன்னர் எப்போதும் எதிரியானவன் எமது ஊடகங்களையே முதலில் குறிவைப்பதுண்டு. ஒரு கருத்தை கருத்தால் வெல்லமுடியாத கோழைத்தனமான இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதொன்று. தமிழீழத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கான ஆதரவுகளை தமிழத் தேசிய ஊடகங்களே வழங்கி வருகின்றன.

சாட்சியங்களை திரட்டுதல், மக்களுக்கு உதவுதல், அவர்களை வழிநடத்துதல் போன்ற நடைவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எமக்கு பலமான தேசியம் சார்ந்த ஊடகங்கள் அவசியம். ஆனால் இந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் உத்தியோகபூர்வ ஊடகமாக விளங்கிய ஈழமுரசு முடக்கப்பட்டுள்ளது.

ஒரு அச்சு ஊடகத்தின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி ஊடகம் கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களோ (தமிழர் ஒருங்கிணைப்பு குழுவைத்தவிர) அல்லது ஊடக அமைப்புக்களோ தொடர் மௌனம் காப்பது தேசியம் தொடர்பான அவர்களின் இரட்டை வேடங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

எமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதனை கருத்துக்களால் நாம் எதிர்கொள்ளவேண்டுமே தவிர ஆயுதமுனை மிரட்டல்களை வரவேற்று கைகட்டி மௌனம் காப்பது என்பது கண்டனத்திற்குரியது.

இன்று ஈழமுரசு மீது காட்டப்பட்ட துப்பாக்கி நாளை ஏனைய ஊடகங்கள் மீது பாய்வதற்கு அதிக காலம் எடுக்கப்போவதில்லை அல்லது அவர்களின் வலைக்குகள் நீங்கள் வீழ்வதற்கு அதிக நேரம் செல்லப்போவதில்லை.

ஈழமுரசு மீதான தாக்குதல், அச்சுறுத்தல் என்பது இன்று மட்டும் நிகழவில்லை, 1990 களில் கூட ஈழமுரசின் ஆசிரியர் பிரான்ஸ் இல் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் தேசியச் செயற்பாட்டாளர் பரிதி அவர்களும் சுடப்பட்டார். அதற்கான காரணம் தமிழீழ விடுதலை தொடர்பில் செயற்பட்டதே தவிர வேறு எதுவும் இல்லை.

ஈழமுரசின் முடக்கம் என்பது முள்ளிவாய்க்காலின் பின்னர் எமது விடுதலைப்போர் சந்தித்த மற்றுமொரு பலத்த பின்னடைவாகும். இதன் மூலம் தமிழ் மக்களின் உளவுறுதி சிதறடிக்கப்பட்டுள்ளது. அதனைக் கண்டும் காணாததுபோல் இயங்கும் தமிழ் அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் ஆகியவற்றின் செயற்பாடுகள் என்பது தமிழ்த்தேசியத்தின் அழிவுக்கு துணைபோவதாகவே கருதப்படவேண்டும்.

எனவே தமிழ் மக்கள் ஒன்றை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும் அதாவது எதிரியை மட்டும் இனங்காண்பது எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கப்போவதில்லை, எதிரியின் நடைவடிக்கையை வரவேற்பவர்களையும் இனங்காணுங்கள் அதன் மூலம் தான் எமது போராட்டத்தை காத்திரமான வழியில் உறுதியாக நகர்த்த முடியும்.

தமிழ் மக்களின் பாரம்பரிய அச்சு ஊடகம் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் தாக்குதலை ஈழம்ஈநியூஸ் மிக வன்மையாக கண்டிப்பதுடன், அதனை மேற்கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும் உறுதியாக நிற்கின்றது.

ஈழம்ஈநியூஸ்.

**************

ஊடகத்தின் மேலான மிரட்டலும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிலைப்பாடும்

அன்பான தமிழீழமக்களே !

புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் வாழ்வியலில், ஊடகங்கள் ஒரு வளர்ச்சிப்பாதையில் இருக்கின்றன. இன்றைய கணனி உலகில் ஒரு தனிமனிதன்; தனது கருத்துகளை இலகுவாக மற்றவருக்கு எடுத்துச்செல்கின்ற நிலையில், ஒரு பத்திரிகையின் கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாது மிரட்டல் வன்முறை மூலம் எதிர்ப்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது முற்றும் முழுதாக நிராகரிக்கின்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது பிரான்சு நாட்டில் பதிவு செய்ததோர் அமைப்பாக பிரெஞ்சு நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து அதற்குட்பட்ட அரசியல், சனநாயக மனிதநேய தொண்டர் அமைப்பாக அனைத்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பதை பிரெஞ்சு அரசும், எமது மக்களும் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் ரீதியான செயற்பாடுகள் சிங்கள அரசுக்கு சர்வதேச ரீதியில் பல அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு, சனநாயக உரிமை மறுக்கப்பட்டு, ஊடகங்கள், ஊடகவியாளர்கள் மிரட்டப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் போலவே புலம்பெயர் நாடுகளிலும் ஆயுதக்கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் 2012 இல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களை சிங்களம் பலி எடுத்திருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகவே இதனையும் நாம் பார்க்கின்றோம்.

சிறீலங்கா அரசானது எல்லாளன் படை என்கின்ற பெயரில் மக்களைக் கொலை செய்து பல துன்பங்களையும் தந்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் அவப்பெயரினை பெற்றுத்தந்தது வரலாறு. அதே போன்ற முறையில் புலம் பெயர் மண்ணில் இந்த அணுகுமுறை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பயங்கரவாதப்பட்டியலிட்டு விட்டு அதனை உறுதி செய்ய எல்லாளன் படை ஊடாக ஆயுதமிரட்டல் செய்து ஊடக இல்லத்தின் ஆவணங்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடம் கையளிக்கச் சொல்வது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பயங்கரவாத அமைப்பாக சர்வதேசரீதியில் காட்ட முற்படுவதாகவே பார்க்கின்றோம்.

நீண்ட காலமாக (1995 ம் ஆண்டு முதல்) ஈழமுரசுப்பத்திரிகையானது உலகத் தமிழர்கள் மத்தியிலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சிங்களத்தின் கொலைக்கரங்களால் அதன் ஆசிரியர் மாவீரர் கப்டன் கஐன் அவர்களின் உயிர் பறிக்கப்பட்டும் இன்று வரை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரெஞ்சு வாழ் தமிழ்மக்களுக்கு தனது சேவையை செய்துவருகின்றது. என்பதை அனைவரும் அறிவார்கள். ஒரு பத்திரிகை ஸ்தாபனமானது தனது முடிவை தீர்மானிப்பது பத்திரிகையின் குழுமத்திற்குரிய உரிமையாகும். ஆனால் அப்பத்திரிகை ஆயுத மிரட்டல் மூலம் நிறுத்தப்படுவதானது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.

கடந்த 24.09.2014 அன்று பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழர் ஆரதவு பாராளுமன்ற உறுப்பினர் குழுவினருடனான சந்திப்பு பாராளுமன்றத்திற்குள் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட அனைத்து தமிழர் அமைப்புகளும் சில விடயங்களை முன்வைத்திருந்தன. அதில் முக்கியமாக 2012ல் பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் படுகொலைக் குற்றவாளியை கண்டு பிடிக்க தாமதிப்பது பற்றியும் அதனைத்தொடர்ந்து மீண்டும் ஓர் ஆயுதமிரட்டல், ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் பற்றி அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு தமிழர் வாழ்வுக்கான பாதுகாப்பில் உள்ள அச்சத்தை வெளிப்படுத்தியதோடு அதற்கான பாதுகாப்பை எங்களுக்கு உறுதி செய்யும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பிரான்சு தமிழர் ஊடகஇல்லம் மீதான அச்சுறுத்தலையும், தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், கடத்தப்படுவதும், காணாமல் போவதும் சர்வதேசமெங்கும் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலைசெய்யப்படுவதும், கண்டிக்கப்பட வேண்டியவைகளாகும்.

அந்த வகையில் கடந்த 18.09.2014 ஊடகவியலாளர்கள் மீதான மிரட்டல் கண்டனத்துக்குரியது என்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துக்கொள்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

 

*****************

ஊடக சுதந்திர மறுப்பும் இனப்படுகொலையின் ஒரு கூறே – செந்தமிழினி பிரபாகரன்

எல்லாளன் படை என்ற பெயரில் பிரான்ஸ் இலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகைக்குமின்னஞ்சல் மூலமும் நேரடியாகவும் “துப்பாக்கி முனையில் பதில் சொல்ல வேண்டிவரும்” என்ற மிரட்டல் காரணமாக அந்த பத்திரிகை தற்காலிகமாக தமது பணிகளை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உலகமெங்கும் ஊடகச் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டு இருக்க ஒரு வளர்ச்சி பெற்ற நாட்டில் அகதிகளாக வந்து தலையெடுத்து வாழும் தமிழர்களை வந்தேறு குடியோடு கூடி வந்த பதர்கள் தடை போட்டு அச்சுறுத்துவது என்பது உலக பாதுகாப்புக்கே அச்சுறுத்தலான விடயம். இதனை பிரான்ஸ் நாடும் சர்வதேசமும் எப்படி கையாளப் போகின்றது? இதற்கு பதிலை அவர்கள் சொல்ல வேண்டும்..

இனப்படுகொலை சாட்சியங்கள் திரட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த நாட்களில் இந்த சாட்சியம் ஒன்றே போதும் தமிழின அழிப்பை இன்னமும் கையில் எடுத்து உலகப் பரப்பெங்கும் அலைகிறது இலங்கை இனவாத அரசு என நிரூபிக்க.

இனப்படுகொலை என்பதற்குள் ஊடக சுதந்திர மறுப்பும் ஒரு இனப்படுகொலையின் ஒரு கூறே என மாந்த நேய செயற்பாட்டாளரும் பிரேமன் பொது ஆயத்தின் ஆய்வாளரில் ஒருவருமான டென்னிஸ் ஹாலிடே சொன்னது முற்றிலுமான உண்மை.

இன்னமும் எங்கள் மண்ணில் மட்டுமல்ல தமிழர் வாழும் இடமெல்லாம் புற்றெடுத்து பரவி தமிழின அழிப்பை கையில் எடுத்து தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாக வாழ்கின்றார்கள் இலங்கை இனப்படுகொலை அரசும் அதற்கு துணை போகும் ஒட்டுக் குழுக்களும். இவற்றை சர்வதேசத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்வோமாக.

ஏற்கனவே பரிதி அவர்களுக்கு தொடர்ந்த அச்சுறுத்தல்களை கடந்து அவர் மிகக் கொடூரமாக பிரான்ஸ் வீதியில் பகிரங்கமாக கொடூரமாக கொல்லப்பட்டு இருந்தார்.

சர்வதேச அரசுகளுக்கே பூச்சாண்டி காட்டுமளவு அரசபயங்கரவாதம் வளர்ச்சி பெற்று தமிழின அழிப்பை தலையில் கொண்டு ஆடுகிறது என்பதை சர்வதேசம் கருத்தில் கொண்டு ஒழுங்காற்று நடவடிக்கையை கையில் எடுத்து உலகத் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டியது அனைத்துலக அரசுக்களின் கடனாகும். இந்த செய்தியை வலிமையாக பரப்புரை செய்து நீதிக்காக குரல் கொடுப்போம்.
செந்தமிழினி பிரபாகரன்.