ராஜிவ் கொலையில் சிவராசனின் இரட்டை வேடம்!

தணு யார், பிரபாகரனுக்குத் தெரியுமா… இதனால் லாபம் அடைந்தவர்கள் யார்… சிவராசனை வேறு யார் பயன்படுத்திக் கொண்டது?

பத்திரிகையாளரின் பகீர் பேட்டி தொடர்கிறதுrajiv -thanu -sivarasan

”ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது பேட்டி கடந்த இதழில் வெளியாகி இருந்தது. இந்த இதழிலும் தொடர்கிறது.

இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்…

சிவராசன் ஏன் டெல்லி போனார்?

”என்னுடைய வாதம், சிவராசன் சுயேட்சையாக செயல்பட்டு இருக்கலாம் என்பதுதான். இதனால்தான் அவர் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பவில்லை. உயிருக்கு பயந்துதான் அவர் போகவில்லை. டெல்லிக்கு போகக் காரணம் வேறு யாரோ அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்திருந்துள்ளனர். யார் அது? இந்த கொலையில் இருவர் ஆதாயமடைந்தனர். ஒருவர் இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா. மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று இதனால்தான் சொல்கிறேன்.

ராஜீவை கொன்ற பின்னர் யார் பயனடைவார்கள்? ஒன்று அவரது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அப்போது ஆட்சியில் இருப்பவர்கள். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டு தணு ராஜீவ் காந்தி அருகில் செல்ல அனுமதிக்கக் காரணமாக இருந்தவர்கள் யார்? அவர் பல்வேறு தடைகளைத்தாண்டி ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்ல காரணமாக இருந்தது மறைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர். மரகதம் சந்திரசேகரும் அவருடைய மகள் லதா பிரியகுமாரும் இதில் முக்கியமானவர்கள். இவர்களோடு லதா கண்ணன் கோகிலா போன்றோர்களும் வந்துள்ளனர். ராஜீவ் பொதுக்கூட்ட மேடையில் ஏறுவதற்கு சற்றுமுன்புதான் கொல்லப்பட்டார். ஆனால், அவரோடு வந்த மரகதம் சந்திரசேகர், லதா பிரியகுமார், லலித் சந்திரசேகர் போன்றோர் ராஜீவ் காந்தியோடு உடன் வரவில்லை. அன்றைய தினம் இந்தப் பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் தரம் சந்த் ஜெயின் என்பவரது இடத்தில் ராஜீவ் காந்தியை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அந்த இடத்தை ஆய்வு செய்த புலனாய்வுத் துறை அதை நிராகரித்தது. இப்படிப்பட்ட மோசமான ஏற்பாடுகளை யார் செய்தது?

மரகதம் சந்திரசேகர் குடும்பம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு வேண்டியவர்கள். மரகதம் சந்திரசேகர் மகன் லலித் சந்திரசேகரின் மனைவி சிங்களர். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு சிவராசன் சுமார் ஐந்து லட்ச ரூபாயை லலித் சந்திரசேகருக்கு கொடுத்துள்ளார். நீதிபதி வர்மா கமிஷனும் சுப்பிரமணியன் சுவாமியும் இதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினரை குற்றம்சாட்ட முயற்சிக்கவில்லை. ‘அவர்கள் அப்பாவித்தனமாக உதவியிருக்கலாம்’ என்கின்றனர். சி.பி.ஐ-யின் முதன்மை புலன் விசாரணை அதிகாரியான கே.ரகோத்தமன் ஐந்து லட்ச ரூபாய் பொதுக்கூட்டத்துக்கு லலித் சந்திரசேகர் வாங்கியிருக்கலாம் என்கிறார். இவை அனைத்தும் சந்தேகத்தை அதிகமாகக் கிளப்பக் கூடியவை!”

இந்தக் கொலையாளிகள் யார்?

”இந்தக் கொலையாளிகள் யார்? கொலையாளிகள் குறித்த சந்தேகங்களைத் தெளிவு படுத்தவேண்டும். இவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்களை அனுப்பியது எல்.டி.டி.இ-யை சேர்ந்தவர்கள்தானா என்பது முக்கியம். சிவராசன் எல்.டி.டி.இ இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், இதற்கு முன்பு அவர் இருந்தது டெலோ. அந்த இயக்கம் அழிந்த பின்னர் இங்கு வந்துள்ளார். மிக முக்கிய சந்தேகம், சிவராசனின் இரட்டை வேடம். எல்.டி.டி.இ-யிலும் இருந்து கொண்டு மற்றவர்களுக்காகவும் செயல்பட்டு இருக்கலாம் என்கிற கோணம்தான் உறுதியாகத் தெரிகிறது. சிறப்புப் புலனாய்வு பிரிவு தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன் குறிப்பிட்டபடி, இந்த ஆபரேஷனுக்கு மொத்தம் ஒன்பது பேர் படகில் வந்து கோடியக்கரையில் இறங்கினார்கள். சண்முகத்தின் வீட்டில் தங்கிவிட்டு வந்துள்ளனர். கடைசி வரை ஒன்றாக இருந்தவர்கள் சிவராசன், சுபா, தணு, நேரு போன்றவர்கள். இதில் தணு இறந்தவுடன் மற்ற மூன்று பேர்கள் ஒன்றாக இருந்தனர். ஆனால் ஆதிரை, விஜயானந்த், சிவரூபன், கனகசபாபதி ஆகியோரை இந்த ஆபரேஷனில் சிவராசன் நேரடியாகச் சேர்க்கவில்லை. ஒருவரை ஜெய்ப்பூருக்கும் மற்றொருவரை போபாலுக்கும் வேறு சிலர் டெல்லிக்கும் சென்றனர். இவர்களுக்கு இந்தக் கொலையில் என்ன தொடர்பு? பொத்தம் பொதுவாக இவர்கள் எல்லாம் சதி திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்கிறது சி.பி.ஐ. ஆனால், சிவராசன் உபயோகித்தது இந்தியர்களை மட்டுமே. அவர்களில் நளினிக்கோ இறந்துபோன போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கோ சதித்திட்டம் பற்றி எதுவுமே முன்னமே தெரியவில்லை.”

தணு யார்?

ராஜீவைக் கொன்ற மனித வெடிகுண்டு தணு யார்? இதிலும் தெளிவு இல்லை. கார்த்திகேயன் சொல்கிறார், ‘தணு எல்.டி.டி.இ என்பதற்கு ஒரு வீடியோ இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் கொடியைப் பிடித்துச் செல்ல… அவர்தான் தணு’ என்கிறார். தணு இலங்கைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவரது மகள் என்று சொல்லப்பட்டது. இது குறித்து டி.ஆர். கார்த்திகேயன், ‘தணு, ராஜரத்தினத்தின் மகளாக இருப்பார் என்று கருதுகிறோம்’ என்கிறார்.

இந்து ஃப்ரெண்ட்லைனில் ஒரு செய்தி வந்தது. இலங்கையிலிருந்து அதே ராஜரத்தினத்தின் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு கருத்தைச் சொல்லியுள்ளார். ‘எனக்கு ராஜரத்தினம் நெருங்கிய நண்பர். அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன். அவர் ஜெர்மனியில் செட்டில் ஆகியுள்ளார். இரண்டாவது மனைவியையும் நான் இருக்கும் இடத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளனர். நான் சென்று பார்த்தேன். இரண்டாவது மனைவியும் அவரது மத்திய தர வயதுடைய மகளும் இருந்தனர். இவருடைய இளைய மகள் இலங்கை ராணுவத்தினர் சண்டையில் இறந்து போயுள்ளார்’ என்கிறார். இப்படிப்பட்ட தகவல்களுக்கிடையே தணு யார் என்பதை நிரூபிக்கப்படவில்லை. சிவராசன் ஒருவரைப் பற்றிதான் தெரிகிறது. இந்தப் பெண்கள் தணு, சுபா யார் என்பதில் குழப்பம். சரியான ஆதாரங்கள் இல்லை.”

‘பிரபாகரனுக்குத் தெரியுமா?”

”ஆரம்பக் கட்டத்தில் உள்ளவற்றைப் பார்க்கும்போது இவர்கள் பிரபாகரனுக்கு தெரிந்தே வந்தவர்களாக தெரிகிறது. சில தகவல் தொடர்புகள் ரகசிய சாம்பாஷணைகளில் தெரிகிறது. பின்னர் ஒருவேளை பிரபாகரனுக்கு தெரிந்து அவரே நினைத்திருந்தால்கூட அவரால் தடுக்க முடியாமல் போயிருக்கலாம் என்பதைதான் நான் உணர்கிறேன். 1991 மார்ச் ஏப்ரலில் வந்த சிவராசன் டீம் பின்னர் எல்.டி.டி.இ சம்பந்தப்படாத நபர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தி வந்தது. சிவராசன் உபயோகித்து வந்த வயர்லெஸ் சாதனங்கள் எல்லாம் புலிகள் இயக்கத்துக்கு சம்பந்தப்பட்டவை அல்ல. எல்.டி.டி.இ உளவுத்துறை தலைவரான பொட்டு அம்மனின் டிரான்ஸ்மிட்டர் ஆப்ரேட்டர் சிவரூபன் சிவராசனோடு இருந்தார்.

ஆனால், அவரை சிவராசன் உபயோகிக்கவிலை. அவர் கண்ணிவெடியில் காலை இழந்ததால் செயற்கைகால் பொருத்த ஜெய்பூருக்கு சென்றுவிட்டார். இப்படி சிவராசன் யாரையும் உபயோகிக்கவில்லை. தனியாக அவர் வைத்திருந்த வயர்லெஸ் சாதனங்களைத்தான் உபயோகிக்கிறார். இதைவைத்து யாரோடு இவர்களுக்குத் தொடர்பு? இது குறித்து சி.பி.ஐ முழுமையாக விசாரிக்கவில்லை.”

”எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?”

”இந்த ஒப்பந்த கொலைக்கு பிரேமதாசா காரணமாக இருந்திருக்கலாம். இலங்கை சிங்கள அரசின் இந்த சதித்திட்டத்தில் பிரபாகரனையே நாடியிருக்கலாமா அல்லது டெலோவிலிருந்து வந்த சிவராசனை மட்டும் பயன்படுத்தியிருக்கலாமா என்கிற சந்தேகம் வருகிறது. சிவராசன் இலங்கை மின்சார வாரியத்தின் ஊழியர். இதற்கான அடையாள அட்டையும் உண்டு. ஆனால், சிவராசன் குரூப்க்கு பின்னணியில் பிரேமதாசா இருந்திருந்தால் அவர் இலங்கைக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ சென்றிருக்க முடியும். இந்தியாவில் சுற்றிக்கொண்டுதான் வந்தார். தப்பி செல்லாததை வைத்தும் முடிவுக்கு வரமுடியாது. காரணம், பிரேமதாசா சாதாரணப்பட்டவர் அல்ல… தன்னுடைய அரசியல் எதிரியான இலங்கை அமைச்சர் லலித் அதுலத்முதலி கொலை போன்ற விவகாரங்கள் இதற்கு உதாரணம். ஆனால், சி.பி.ஐ இந்தக் கோணத்தில் விசாரணையை நடத்தவில்லை.”

வெளிநாட்டு பங்களிப்புகள்!

”நான் என்னுடைய புத்தகத்துக்கு ‘கி பிuரீமீ சிஷீஸ்மீக்ஷீuஜீ’ என்றுதான் பெயர் வைக்க நினைத்தேன். ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் இந்தியாவில் எல்லா அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு ‘கவர்-அப்’ செய்தனர். புலன் விசாரணையிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை இது நடந்தது. அனைத்து உண்மைகளையும் குழப்பி, எல்லா சாட்சியங்களையும் அழித்து, இறுதியாக புலிகள்தான் இதற்குக் காரணம் என்கிற பிடிவாதமான முடிவை சி.பி.ஐ-யினர் கொடுத்தனர். ஆனால், எனக்கு எல்.டி.டி.இ-தான் காரணம் என்பது தெரியவில்லை. ஒருவேளை எல்.டிடி.இ இதில் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அது பெரிய அளவில் இருந்திருக்காது என்று சொல்ல முடியும். எனக்குப் பல்வேறு ரகசியங்களை உடைத்தது தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த மோகன்தாஸ் எழுதிய நாவல்தான்!”

ராஜிவ் கொலையில் புலிகளுக்கு தொடர்பு என்பது சந்தேகமே: புதிய புத்தகம்

-அது அடுத்த இதழில்!

ஜூனியர் விகடன்