விடுதலைக்கான குரலை முடக்க முயலும் முகம் தெரியாத சக்திகள்

ஊடகங்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வீரியமிக்க குரல்கள். அடக்குமுறையாளனின் கொடூரங்கள், விடுதலைக்கு போராடும் அமைப்பின் செய்திகள், அறைகூவல்கள் என்பனவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பிக்கும் தளங்கள்தான் ஊடகங்கள். மக்களைச் சோர்வடையவும், சலிப்படைந்து பின்வாங்கவும் வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் சிங்கள பேரினவாதத்துக்கு ஆதரவான ஊடகங்கள் மும்மரமாக முன்னெடுக்கும்போது அதற்கு எதிரான மாற்று கருத்துகளை மக்கள் முன்வைத்து மக்களுக்கு உண்மை நிலையை உணரும்படி வைக்க வேண்டியது விடுதலைக்கான ஊடகங்களின் கடமையாகும்.lanka war memory

இந்த நோக்கத்துக்காகவே தமிழீழத் தேசியத் தலைமையால் மிகவும் தீர்க்கதரிசனத்துடன் ஊடகங்கள் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உருவாக்கப்பட்டிருந்தன. அதிலும் 2009 மே மாதத்துக்கு பின்னர் ஊடகங்களின் பொறுப்பும், தேவையும் என்றுமில்லாதாவாறு உச்சம் சென்றுள்ளது.

வரலாற்றில் என்றுமேயில்லாத அர்ப்பணங்களும், தியாகங்களும் நிறைந்த ஆயுதப் போராட்டம் பெரும் பின்னடைவை, மௌனித்தலை சந்தித்த 2009 மே மாதத்துக்கு பின்னர் திசைமாறியும், அடிபணிவுக்குள் அள்ளுண்டுபோனது பல ஊடகங்கள். ஆனால் சங்கதி24 தனது வரலாற்று வகிபாத்திரத்தை ஆழமாக உணர்ந்து கொண்டு தனது தடத்தில் எந்தவொரு மாற்றமும் இன்றி முன்னர் இருந்த வேகத்திலும் அதி வேகத்துடன், அதனைவிட விரிந்த தொடர்புவட்டத்தைக் கொண்டதாக செயலாற்றி வருகின்றது.

தமிழீழத் தேசியம் சம்பந்தமான ஏதாவது முக்கியமான அறிவித்தல் என்றாலும் சரி, சர்வதேச நகர்வு சம்பந்தமாக தமிழீழத் தேசியத்தின் நிலைப்பாடு என்னவென்று அறிவது என்றாலும் சரி, தேசிய விடுதலைக்காக தம்மையே ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் நினைவுகளை அறிவிப்பது என்றாலும் சரி, தமிழீழ தாயகத்தின் அன்றாட நிகழ்வுகளை அறியவேண்டியது என்றாலும் சரி, தமிழகத்தின் தமிழ்தேசிய நிகழ்வுகள், அரசியல் நகர்வுகள் பற்றிய விபரங்களை பூரணமாக அறியவேண்டியது என்றாலும் சரி, புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், கலைநிகழ்வுகள், தாயக உணர்வு கலந்த போட்டி நிகழ்வுகள் சம்பந்தமான விபரங்கள் அறியவேண்டியது என்றாலும் சரி சங்கதி24 இணையத்துக்குச் சென்றால் அறியலாம் என்ற ஒர் உணர்வு, ஒரு கணிப்பு ஏற்பட்டு உறுதியாகி விட்டது.

எம் மீது இனக்கொலையை ஏவிவிட்டு எமது மக்களை திறந்தவெளி இராணுவச் சிறைக்குள் அச்சுறுத்தி ஆளும் சிங்களப் பேரினவாதத்துக்கும் அதனை தொழுதுவாழும் சக்திகளுக்கும் எதிரான மிகப்பெரிய சவாலாகவே சங்கதி24 போன்ற தேசிய இணையங்கள் திகழ்கின்றன.

ஒரு மக்களை உயிர்க்கொலை செய்வதும், அவர்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவுவதும்தான் இனக்கொலை என்பது அல்ல. அந்த மக்களுக்கான தகவல் அறியும் உரிமையில் கைவைப்பதும், அவர்களின் தகவல் தொகுப்புகளை, ஆவணங்களை அழிப்பதும் ஒருவகையான இனஅழிப்புதான். இதனையே யாழ்நூலக எரிப்பின் ஊடாக சிங்களம் செய்து நின்றது.

இப்போது சிங்களத்தினது கையாட்கள் சங்கதி24 இணையத்தை சைபர் தாக்குதல் மூலம் தற்காலிகமாக முடக்கியது ஊடாக அதனையே செய்து நிற்கின்றார்கள். இந்த செயற்பாடு சிங்களம் எந்தவொரு தடையுமின்றி தனது இனச்சுத்திகரிப்பை, இனஅழிப்பை தொடருவதற்கான அனுமதியையே அவர்களுக்கு அழிக்கின்றது.

ஒர் இணையத்தை முடக்கி அதன் செய்தி பார்வையை, தகவல்களை அழிப்பதன் மூலம் ஒரு தேசிய இனத்தின் குரலை முழுமையாக இல்லாது செய்துவிடாலம் என்று இவர்கள் நினைத்தால் அங்கேதான் வரலாற்றின் மிகப் பெரும் தவறை செய்கிறார்கள். வரலாற்றின் மிகப்பிழையான கணிப்பை செய்கிறார்கள் என்று அர்த்தம்.

விடுதலைக்கான குரலை எந்தவொரு கருமேகங்களாலும் தடுத்துவிட முடியாது. முகில்கிழித்து அது வெளிவந்தே தீரும். அதிலும் இந்த விடுதலைப் போராட்டத்தின் ஊடக வளர்ச்சி என்பதை பார்த்தால் அது சுவர்களில் தனது செய்திகளை, அறைகூவலை எழுதுவதற்கு வேப்பங்குச்சிகளை முறித்து பற்களால் கடித்து தூரிகை ஆக்கி எழுதி அதனூடாகவே இன்றைய இலத்திரனியல் ஊடகம் வரைக்கும் வந்துள்ளது.

ஒவ்வொரு போராளியும் தெருத்தெருவாக பத்திரிகை காவித் திரிந்து மக்களுக்கு வழங்கியே ஆரம்பகால அமைப்பு விளக்கங்களை மக்களுக்கு அளித்த வரலாறு இந்த தேசியத்துக்கு உண்டு. ஆரம்பகால போராட்ட விளக்கங்கள், எதிரி மீதான தாக்குதல் உரிமைகோரல் என்பனவற்றை துண்டுபிரசுரங்களாக மக்களுக்கு விநியோகித்தே இந்த அமைப்பு வளர்ந்தது. அதிலும், இந்தத் தேசிய இனத்தின் தலைவர்கூட இத்தகைய துண்டுபிரசுரங்களை வழங்குவதில் தானும் ஒரு செயற்பாட்டாளனாக தெருதெருவாக பயணித்ததும் இந்தத் தேசிய இனத்தின் ஊடகங்கள் பெருமை கொள்ளும் நிகழ்வாகும்.

இத்தகைய படிநிலை பரிணாமத்தை கொண்ட தமிழீழத் தேசிய விடுதலை ஊடகங்களை, அதிலும் சங்கதி24ஐ வெறுமனே ஒரு சைபர் தாக்குதல் முடக்கத்துடன் நிறுத்திவிட நினைத்தால் வரலாறு அவர்களை பார்த்து நிச்சயம் கைகொட்டும். ஒவ்வொரு வீழ்ச்சியையும், ஒவ்வொரு பின்னடைவையும், ஒவ்வொரு முடக்குதலையும் எதிர்கொண்டு முன்னரைவிட வீரியமாக, எழுவதுதான் எமது வரலாறு.

இதனையே சங்கதி24 நாளை உணர்த்தும்.

– ச.ச.முத்து

நன்றி: ஈழமுரசு

Advertisements