தமிழினத்தின் மீது வன்மத்தினை கக்குவதை கண்டும் காணாமல் செல்கிறது தமிழ் படைப்புலகம்.

தமிழன் மிக நேர்மையானவன், தனது கோவணத்தினை பிடுங்குகிறவனும் கூட மழையில் நனையக்கூடாது என்று தனது துண்டினை உயர்த்தி பிடிப்பவன்

இனம் – the Mob

Mob – means ‘a large crowd of people, especially one that is disorderly and intent on causing trouble or violence.’

குற்றம் இழைக்கிற, வன்முறையை ஏற்படுத்துகிற ஒழுங்கற்ற பெரிய மக்கள் கூட்டம் என்று வரையறை செய்து, தமிழீழ வரலாற்றினை திரைப்படமாக்குகிறேன் என்று வரலாற்றினை திரிக்கும் சந்தோஷ் சிவன் போன்ற ஒருவர், தமிழகத்தில் மட்டும் தான் தனது வணிகத்தினையும் செய்ய முடியும்.TN-student-16-8-14

படைப்பு சுதந்திரத்தினை யாருக்கும் மறுப்பதற்கில்லை; அதே போல வரலாற்றினை திரிப்பதற்கும் யாருக்கும் உரிமையுமில்லை. வரலாற்றினை திரித்து , உண்மையை மறைத்து பொய்-புனைக்கதைகளை பரப்புகிற கூட்டம் நாஜிக்கள், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ ஆகிய கும்பல்களை பாசிஸ்டுகள் என்கிற அடிப்படையில் தானே நாம் புறக்கணிக்கிறோம்?..

ஆனால் இத்தகைய கேள்விகளோ, எதிர்வினைகளோ இல்லாமல் ’இந்தியர்கள்’, தமிழினத்தின் மீது வன்மத்தினை கக்குவதை கண்டும் காணாமல் கடந்து செல்கிறது பெரும்பான்மை தமிழ் படைப்புலகம்.

சந்தோஷ் சிவன் ’இனம்’ என்கிற தனது கலைப்படைப்பினை செய்துவிட்டு வணிகம் சார்ந்து ஒரு தமிழ் திரைப்படைத்திற்கு ஒளிப்பதிவாளராகிறார். அறம் சார்ந்த எந்த ஒரு கேள்வியையும் அவரை காணும் எந்த ஒரு தமிழ் திரையுலக படைப்பாளிகள் எழுப்பவில்லை. குறைந்தபட்ச விவாதம் கூட இல்லாமல் இவரைக் கடந்து செல்வது அவமானகரமாக இருக்கிறது. அவரது படைப்பினை செய்ய அவருக்கு இருக்கும் உரிமையை மதிக்கும் நாம், அவர் நம் மீது வாரி இறைத்து சென்ற சேற்றினைப் பற்றி கேள்வி எழுப்பும் ஆளுமைகூட இல்லாமல் நிற்கும் தமிழ்திரையுலகின் படைப்பாளிகளைப் பார்க்கும்பொழுது பரிதாபம் மட்டுமே கொள்ளமுடிகிறது.

தமிழ்-எதிர் அரசியலை நுணுக்கமான காட்சிகளாக சந்தோஷ் சிவன் வைத்து செல்வதைக்கூட புரிந்து கொள்ளாத முடியாத பாமரர்களா நம் திரையுலக படைப்பாளிகள்?.. அல்லது எதற்கு வீண்வம்பு என்று புரிந்து கொண்ட பின்னரும் அமைதி காப்பவர்களா?… எப்படி பட்டவர்கள்? ..

இவர்களின் ஆளுமையின் அளவு என்ன?.. அந்த திரைப்படத்தினை பார்த்துவிட்டு அதன் நுண்ணரசியலை புரிந்து விட்டுதான் பாராட்டினீர்களா? ..அல்லது “பாராட்டவில்லையென்றால் முட்டாள் என்று சொல்லிவிடுவார்களோ” என்று பாராட்டினீர்களா?… எது உண்மை என்று தெரியவில்லை. ஒரு கேள்வியை கூட முன்வைக்காமல் அமைதியாக கடந்து சென்றிருக்கிறது தமிழ் திரையுலகம்.

சக படைப்பாளியை கேள்விக்குள்ளாக்க முடியாதென்றால், அந்த அமைப்பு எப்படி ஒரு சனநாயக அமைப்பாக இருக்க முடியும்?

உங்களிடமிருந்து எங்கள் சமூகத்திற்கு எப்படி ஒரு நேர்மையான சமூக பிரஞ்கை உள்ள படைப்புகளை கொடுத்துவிட முடியும் எனத் தெரியவில்லை.

இத்தகைய ஒரு விமர்சனத்தினை, வரலாற்று திரிபை மலையாளிகளின் மீது வைத்து ஒரு திரைப்படத்தினை எடுத்துவிட்டு நீங்கள் கேரளாவிற்கு சென்று வணிகம்செய்ய இயலுமா?.. (அப்படி செய்யும் தைரியம் உங்கள் எவருக்கும் கிடையாது என்பது வேறுவிடயம்… எந்த ஒருமக்களின் போராட்ட வரலாற்றினையும் சந்தோஷ் சிவன் போல கொச்சைப்படுத்துவதை நாங்கள் ஒருபொழுதும் ஏற்கவில்லை.)

மே 17 இயக்கம் சன் செய்தி தொலைக்காட்சி விவாதத்தில் , சந்தோஷ் சிவனுடன் ஒரு நேரடியான விவாதத்தினை மிக ஜனநாயகமான முறையில் பகிரங்கமாக கேட்டிருந்தது. சந்தோஷ் சிவன் எங்கள் எதிரியுமல்ல, நண்பனுமல்ல. சுயலாபத்திற்காக பணியாற்றுபவர் மரியாதைக்குரிய எதிரியாகிவிட முடியாதுதான். ஆனால் அவருடன் அவர் திரித்த விடயங்களைப் பற்றி நேரடியாக உரையாட விரும்புகிறோம். தமிழ்த் திரையுலகம் இதுவரை அதற்கான பதிலை சொன்னதில்லை. சந்தோஷ் சிவனும் சொன்னதில்லை.

சந்தோஷ் சிவனை நேரில் பார்க்கும் பொழுது ஒரு கேள்வி கூட எழுப்பமுடியாத உங்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பது?… முதுகெலும்பற்ற புழுவினை பார்ப்பதைப் போலவே உங்களது ஆளுமையை தமிழ்ச் சமூகம் பார்த்துக்கொண்டிருக்கிறது…. சந்தோஷ் சிவனை வாழவையுங்கள்… தமிழர் போராட்டத்தினை கொச்சைப்படுத்த, வருமானத்தினை எங்கள் பணத்தில் அவருக்கு ஏற்படுத்தி தாருங்கள்.

’அஞ்சான்’ திரைப்படத்தில் வசூலாகும் தமிழர்களின் பணத்தினை எண்ணுவதற்கு நீங்கள் காத்திருக்கிறீர்கள். நேர்மையாக திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பாருங்கள், திருட்டு டி.வி.டியில் பார்த்துவிட்டு எங்கள் லாபத்தினை குறைத்துவிடாதீர்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறீர்கள்.

கவலைப்படாதீர்கள், தமிழன் மிக மிக மிக நேர்மையானவன், தனது கோவணத்தினை பிடுங்குகிறவனும் கூட மழையில் நனையக்கூடாது என்று தனது துண்டினை உயர்த்தி பிடிப்பவன். உங்களை வாழவைக்கும் ஒரு மனித நேயமிக்க- நேர்மையான சமூகத்திற்கு உங்களது கைமாறு தானே அஞ்சான், கத்தி, புலிப்பார்வை.

மற்றபடி, அஞ்சான் திரைப்படத்தினை ”திரையரங்கில்” பார்த்து உங்களுக்கு நன்றி கடன் செலுத்த காத்திருக்கிறோம் என மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன்காந்தி அவர்கள் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

Advertisements