புலிப்பார்வை – சீமான்: விஷமும், விஷச்செடியும்!

Seeman double gameஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு சக்திகளோடு போராடி வந்திருக்கிறார்கள். இன்னமும் ஓய்ந்துவிடாத போராட்டத்தில் புதிது புதிதாக முளைக்கும் சக்திகளுக்கும், பிரச்சினைகளுக்கும் எதிராக போராட வேண்டியிருக்கிறது. சிலவேளை அந்த சக்திகளையும், பிரச்சினைகளையும் அதன் தன்மை தெரியாமல் வளர்த்து விட்டவர்களாகவும் ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள். (குறிப்பாக, புலம்பெயர் ஈழத் தமிழர்கள்.)

ஆரம்பத்திலேயே பலமான குற்றச்சாட்டொன்றை வைத்து விட்டு ‘எமது பார்வையில்’ பகுதியைத் தொடர வேண்டிய இயலாமை ஆட்கொண்டிருக்கிறது. அது, ‘புலிப்பார்வை – சீமான்’ என்கிற விடயங்களினூடு தொடர்கிறது. இது, நாம் உருவாக்கி வளர்த்து விட்ட வினைகளில் சின்னதொரு உதாரணம்தான். ஆனாலும், அது தொடர்பில் பேச வேண்டியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை சம்பவத்தை அல்லது இறுதிப் போரின் கடைசி நாட்களை பிரதான கதைக் களமாக்கி (அப்படித்தான் முன்னோட்ட காட்சிகளை பார்க்கிற போது உணர முடிந்தது) ‘புலிப்பார்வை’ என்றொரு படத்தை வேந்தர் மூவிஸ் என்கிற தமிழகத்து சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரட்ஷகன், ஜோடி உள்ளிட்ட படங்களின் இயக்குனர் பிரவீன் காந்தி ‘புலிப்பார்வை’யையும் எழுதி இயக்கியிருக்கிறார்.

படைத்தலுக்கான உரிமைக்காக தொடர்ந்தும் ஆதரவாக கருத்து வெளியிட்டு வரும் நாம், ஏன் ‘புலிப்பார்வை’ பற்றி பேச வேண்டி வந்தது? காரணங்கள் நிறைய உண்டு. அதுவும், ஈழத் தமிழர்களைப் பலிகடாவாக்கும் அரசியலுக்கும்- அடிப்படையே இல்லாத வியாபாரத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது எமது கடமை. அதனை தவறவிட்டு வந்த சந்தர்ப்பங்கள் தான் தமிழ்மக்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு வந்தது.

புலிப்பார்வையில், பாலச்சந்திரனை இராணுவ சீருடை அணிவித்து குழந்தைப் போராளியாக சித்தரிப்பது முதல் பிரச்சினை. அடுத்து, இன்னமும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை முன்னிறுத்தி இன்னும் பல தமிழக மற்றும் புலம்பெயர் ஊடகங்களும், அரசியல் பிழைப்பாளிகளும் செய்யும் வேலையை புலிப்பார்வையும் செய்திருக்கிறது. இவை, புலிப்பார்வை படத்தின் முன்னோட்டக்காட்சிகளினூடு தெரிகின்ற விடயங்கள். இன்னும் என்னென்ன வில்லங்கங்கள் அதற்குள் நிறைந்திருக்கின்றன என்று தெரியவில்லை. படம் வந்த பின்தான் அது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

இதனிடையே, புலிப்பார்வை தமிழ் போராட்ட வரலாற்றில் முக்கிய படம் என்று அந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சீமான் பேசியிருக்கிறார். இயக்குனர் சீமான், போராளி சீமானாக இலங்கையின் இறுதிப் போரின் கடைசி நாட்களில் தமிழகத்தில் வெளிப்பட்டார். அவரின் போராளி வாழ்க்கை என்பது புலம்பெயர் தமிழர்களினாலும், தமிழக உணர்வாளர்களினாலும்(?) ஊதிப்பெருப்பிக்கப்பட்டது. அந்த பிம்பம், வேலுப்பிள்ளை பிரபாகரின் வாரிசு, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் புதிய நம்பிக்கை என்கிற அளவுக்கெல்லாம் வடிவமைக்கப்பட்டது.

சின்ன உதாரணம், தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டத்தின் வரலாறு, அதன் தீரம் பற்றியெல்லாம் பேசுவதற்கு ஈழத் தமிழர்களுக்கு குறிப்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு சீமான் தேவைப்பாட்டார். புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் பிரதம அழைப்பாளராக சீமான் வர வேண்டியிருந்தது. வந்து, அவர் என்ன பேசினார் என்பதெல்லாம், எமது புத்திக்கு தெரிவதில்லை. பல நேரங்களில் நாம் மந்த புத்திக்காரர்களாக இருந்திருக்கிறோம். அதைத்தான், தமிழகத்தின் சாயம் பூசிய போராளிகள் வியாபாரமாகவும், அரசியலாகவும் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களின் வியாபாரத்துக்கு நாம் இன்னமும் எம்மை இழந்து கொண்டிருக்கிறோம்.

இலங்கையின் இறுதிப் போரின் போது மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளினால் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், அதன் தன்மை- போக்கு விளங்காமல், போர்க்குற்ற ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் பாலச்சந்திரனின் படுகொலையை, தமக்கு தேவையான மாதிரி, புரிதலற்று படமாக்கி வியாபாரம் ஆக்குகிறார்கள். அதை, ஈழத் தமிழர்களுக்கான போராளி என்கிற சீமானும் சேர்ந்து விற்பனை செய்கிறார். அதுவும், படத்துக்கும், சீமானுக்கும் எதிரான கேள்வியெழுப்பிய மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி, நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையை வளர்த்து விட்டவர்களும், கொண்டாடியவர்களும் ஓடி ஒழிந்து விட்டார்கள். ஆனால், அந்த விஷமச் செடி வளர்ந்து இன்று எமக்கு விஷத்தை ஊட்டுவதற்கு தயாராகிவிட்டது.

ஈழத் தமிழர்களாகிய நாம் அடிப்படையில் செய்ய வேண்டிய ஒன்று, யதார்த்தத்தை உணர்ந்து கொள்வது. அதன் வழி எமது போராட்ட களம் எது, அதன் போக்கு என்ன, எமது இலக்கு எப்படிப்பட்டது, எமது பலம் உள்ளிட்டவற்றை தெளிவாக புரிந்து கொண்டு போராட வேண்டும். இல்லாமல் விஷச் செடிகளை வளர்ப்பதும், விரலுக்கேற்ற வீக்கமற்ற தன்மைகளின் நம்பிக்கை கொண்டு அதனை வழிபாடு செய்வதும் மீண்டும் மீண்டும் தோற்றுப்போக வைக்கும். அதன் வலி எமது தலைமுறைகள் தாண்டியும் நீளும். ஆக, நாம் சுதாகரித்துக் கொண்டு எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கு, அரசியல் பிழைப்பு வாதிகளையும், வியாபாரிகளையும் ஆரம்பத்திலேயே நாம் அடையாளம் காண வேண்டியது அவசியம். அது, இப்போதைக்கு அவசரமும் கூட!

***
அன்புள்ள அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு சில கேள்விகள்…

வணக்கம். “லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு.” என்று சினத்தோடு நீங்கள் சீறிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் தவிர்க்க இயலாத சூழலில் சில கேள்விகளை “கோடானுகோடி தம்பி”களில் ஒருவரனாய் எழுப்ப வேண்டியது இருக்கிறது.. ”

நீ யார் என்னை கேள்வி கேட்கிற.. நான் மட்டும்தான் கிடைத்தேனா?” என்று இதற்கும் நீங்கள் சீறிவிட வேண்டாம்…ஏனெனில் நிகழ்வுகள் உங்களைச் சுற்றியதானது.. உங்களுடன் தொடர்புடையது மட்டுமே என்பதால் இக்கேள்விகள்..

*தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை புலிச் சீருடையிலும் கையில் துப்பாக்கியுமாக புலிப்பார்வை திரைப்படம் சித்தரிப்பதை நீங்கள் அப்படியே முற்று முழுதாக ஏற்கிறீர்களா?

புலிப்பார்வை படமானது பாலச்சந்திரன் உள்ளிட்ட சிறுவர்களுக்கும் ஆயுத பயிற்சி கொடுத்து பிரபாகரன் ‘சிறார் போராளி’களை உருவாக்கினார் என்கிறது.. இதைத்தான் சிங்கள பேரினவாதமும் காலம் காலமாக சொல்கிறது..

சிங்களத்தின் கூற்றை அப்பட்டமாக வழிமொழிகிறது புலிப்பார்வை.. இதை நீங்களும் சரி வழிமொழிகிறீர்களா? வெற்றுடம்பில் சிங்களத் தோட்டாக்களுடன் பாலகன் பாலச்சந்திரன் வீழ்த்தப்பட்டு கிடப்பதுதான் தமிழர் மனங்களில் ஆழப்பதிந்து கிடக்கும் சித்திரம்..

*இந்த சித்திரத்தை அகற்றிவிட்டு புலிச்சீருடை பாலச்சந்திரனை திணிப்பது தமிழர் மனங்களின் மீதான சிங்கள உளவியல் யுத்தம் என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? புலிப்பார்வை இசைவெளியிட்டு விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நீங்கள் மேடையில் கண்டிக்காமல் மவுனமாக இருந்தது ஏனோ?. புலிப்பார்வை திரை இசை வெளியீட்டு விழாவில் முழக்கங்களை மாணவர்கள் எழுப்பியது தவறு என்கிறீர்களா?

ஆனால் நாம் தமிழர் மாணவர் பாசறையானது, மாணவர்களைத் தாக்கியது ஒரு குறிப்பிட்ட கட்சியினர்தான் அதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்கிறது.. அப்படியானால் உங்கள் நிலைப்பாடு வேறு..

*உங்களது மாணவர் பாசறை அமைப்பின் நிலைப்பாடு வேறா? இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசு தடை விதித்த பின்னரும் இலங்கையில் கல்வி நிறுவனங்களை ஒரு தமிழக குழுமம் நடத்துகிறது…அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.. ஆனால் அந்த குழுமத்தின் தலைவரை நீங்கள் புகழ்கிறீர்களே.. அவரது திரைப்படத் தயாரிப்பான புலிப்பார்வையை ஆதரிக்கிறீர்களே அப்படியானால் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தீர்மானம் தவறு என்கிறீர்களா?

*கத்தி திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் உறவினர்களுடன் தொடர்புடையது என்று ஒட்டுமொத்த தமிழகமே கூறுகிற போது எனக்குத் தெரியவே தெரியாது என்று மழுப்புகிறீர்களே.. உங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு நீங்களே கண்ணிவெடி வைத்துக் கொள்கிறீர்கள் என்பது புரியவே இல்லையா?

*விஜய்யும், முருகதாஸும் தமிழ்ப்பிள்ளைகள்.. அவர்களது திரைப்படத்தில் தவறு இருந்தால்தான் குரல் கொடுப்பேன் என்கிறீர்களே,, அப்படியானால் தமிழ்ப் பிள்ளைகளான டக்ளஸும் கருணாவும் திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்காக ஒரு திரைப்படத்தில் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கினால் அதிலும் “கருத்துப் பிழை”யை மட்டும்தான் பார்த்து அண்ணன் நீங்கள் எதிர்ப்பீர்களோ?

*லட்சம் பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கும் போது கத்தி, சுத்தி என்று வந்துவிட்டதாக பதவிகளுக்கு வந்துவிடாத நீங்களே சலித்துக் கொள்ளும் போது, அரசியல் மற்றும் அரசு பதவிகளில் ஆண்டாண்டு காலமாக இருப்பவர்களுக்கு கோடானுகோடி பிரச்சனைகள் இருக்கும் போது அவர்கள் எப்படி கத்தி சுத்தி அல்லது நீங்கள் சொல்கிற ஈழம் போன்ற பிரச்சனைகளுக்கு போராட முன்வருவார்கள்?

அவர்களை மட்டும் நீங்கள் குறைசொல்லி கொந்தளிப்பது சரி அல்லதானே? இத்தனை கேள்விகளை உங்கள் முன் ஏன் வைக்கிறோம் எனில் தமிழகத்தில் இருக்கிற அத்தனை பேரும் துரோகிகள், சந்தர்ப்பவாதிகள்..அதனால்தான் தமிழ்ப் பிள்ளைகள் நாங்கள் கட்சி துவங்க வேண்டியதாயிற்று என்று பொதுமேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்..

ஒருவேளை உங்களுக்கு முந்தையவர்களுக்கு சற்றும் சளைத்தவரில்லை என்பதைப் போல நீங்களும் இருக்கிறீர்களோ என்ற ஐயத்தின் மீது எழுந்த கேள்விகள்தான் இவை.. வேறு ஒன்றும் இல்லை..

இப்படிக்கு

உங்களில் ஒருவன்..

Advertisements