சீமானின் -புலிப்பார்வை ?

seemanஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னாள் ஆதரவாளர் சீமான் அவர்களுக்கு.‏

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னாள் ஆதரவாளர் சீமான் அவர்களுக்கு வணக்கம். சகித்துக்கொள்ள முடியாத சில மனப்புழுக்கங்களை வெளிக்கொண்டுவர இந்த பதிவை எழுதி வெளியிடவேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்ப்பட்டதற்கு ஊர்க்குருவி ஆகிய நான் மனம் வருந்துகின்றேன்.

உங்களை ஈழ ஆதரவாளனாக நான் முதலில் அறிந்தது 2005 ம் ஆண்டு என்று நினைவு

ஐரோப்பாவில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகை ஒன்று ஈழத்து அனர்த்தங்களை கருவாகக்கொண்ட உங்கள் கவிதை ஒன்றை அப்போ பிரசுரித்திருந்தது, உங்களை திரைப்பட இயக்குனராக முன்பே நான் அறிந்திருந்தாலும் ஒரு உணர்வுள்ள தமிழனாக எங்கள் போராட்டத்துக்கு ஆதரவளிப்பவராக அறிந்தபோது உள் மனது “ஏதோ புலம்பினாலும்” அந்த கவிதையை படித்து ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பரவசப்பட்டது உண்மை.

அதன்பிற்பாடு நீங்கள் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் இணைந்து நிற்பதாக காட்டிக்கொண்ட புகைப்படங்களை மானாவாரியாக வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களைப்போல ஈழத் தமிழர்களிடையே பரவலாக அறியப்பட்டீர்கள்,

எவர் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சீமான் என்றால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மாற்றாக காட்டிக்கொண்டீர்கள். சூழ்நிலை கருதி எவரும் பெரிதுபடுத்தவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால் மாற்றத்தை எதிர்பார்த்திருந்த உணர்வுள்ள தமிழகத்து அப்பாவி இளைஞர்கள் உங்களை நம்பி தம்மை உங்களுடன் இணைத்துக்கொண்டனர்.

தமிழகத்து ஈழ ஆதரவாளர்கள் அரசியல் என்ற சாக்கடைக்குள் விழாதவரைக்கும் அவர்களின் ஆதரவு அப்பழுக்கில்லாததாக இருக்கும் என்பது எனது அனுமானமும் அனுபவமும் ஆக இருந்து வந்தது.

உங்கள் அரசியற் பிரவேசத்தின் பின்னும் கூட உங்களைப்பற்றி பல பதிவுகளில் நான் உங்களை சிலாகித்து எழுதியதுண்டு. அதற்காக நான் என்றைக்கும் மனம் வருந்தப்போவதில்லை.

ஏனெனில் “ஊரோடு ஒத்தோடு தனியோடுவதானால் கேட்டோடு” என்று ஒரு பழமொழி இருக்கிறது, அந்த பழமொழிக்கேற்ப ஊரோடு ஒத்தோடவேண்டிய கட்டாயம் அப்போது எனக்கும் இருந்தது, தனிப்பட்ட ரீதியில் நீங்கள் அரசியல் வாதியாகிவிட்டபின் உங்களை நம்ப எனது மனம் இடம் தரவில்லை என்பதை நான் பகிரங்கமாக வெளிப்படுத்த விரும்பவில்லை அப்போ சூழ்நிலை அப்படி அமைந்திருந்தது.

அந்த நம்பிக்கயீனத்துக்கான காரணிகள் தமிழகத்து அரசியல் கட்சிகளின் வரலாற்று துரோகங்களாக எம்மை இன்றும் பின் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்ற பயமே.

எங்கள் வீழ்ச்சியின் மூலமே தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளிடமிருந்துதான் ஆரம்பமானது என்ற உண்மையை பல மேடைகளில் நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு கூற நானும் புல்லரிப்புடன் கேட்டிருக்கிறேன்.

எங்கள் சந்ததிகள், குழந்தைகள், பெற்றோர்கள், எனது சகோதரிகளின் கருவறைகள், உணர்வு மயமான மதிப்பு மிக்க எங்கள் போராட்டம் அனைத்தின் அழிவின்போது சதிசெய்து அனைத்து காட்சிகளையும் வெளியே தெரியவிடாமல் திரைபோட்டு மூடிய கைகள் தமிழ்நாட்டின் அரசியல் அரங்கிலிருந்துதான் நீண்டு வந்ததை நாங்கள் உயிருள்ள காலம்வரை மறக்க முடியாது.

அந்த வரலாற்று துரோகங்களை தோலுரித்து கழுத்து நரம்பு புடைக்க நீங்கள் சில மேடைகளில் பேசியபோது, சீமான் வித்தியாசமானவன் என்று எனது நபர்கள் உணர்ச்சி வசப்பட்டபோது நான் மனதுள் சிரித்துக்கொண்டதும் உண்டு.

தமிழ்நாட்டு அரசியல் ஒரே குட்டைக்குள் ஊறிய நாற்றமெடுத்த மட்டைகள் என்று யாரோ ஒருவர் கூறிய உண்மை தீர்க்கதரிசனம் என்றே எனக்குப் பட்டது.

நீங்கள் உங்களை பிரபலப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் எங்கள் அழிவை விளம்பரமாக்கி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளீர்கள். குறுகிய காலத்துக்குள் உங்கள் வேஷம் கலையும் என்று நான் கனவில்க்கூட கருதியிருக்கவில்லை.

லைக்கா நிறுவனம் ராஜபக்‌ஷவின் உறவினர்களை பங்காளர்களாக கொண்டு ஈழத்தமிழர்களின் விரோதியாக ஶ்ரீலங்கா அரசுக்கு நிதி உதவிசெய்து செயற்பட்டு வரும் ஒரு நிறுவனம் என்பது இன்று நேற்று அறியப்பட்டதல்ல, பல இடங்களில் லைக்கா நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்கள், மற்றும் புரிந்துணரக்கூடிய செய்தி அறிவிப்புக்கள் ஈழ ஆதரவு அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டே வந்திருக்கின்றன,

நீங்கள் தனி மனிதனாக லைக்காவுக்கு நட்பு கரம் கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. ஆனால் நீங்கள் எங்கள் போராட்டத்தை மூலப்பொருளாக வைத்து அரசியல் செய்வதால் பிழை நடக்கும் இடத்தில் சுட்டிக்காட்டவேண்டிய கடமை எங்கள் அனைவருக்கும் உண்டு.

உங்களால் நியாயப்படுத்தப்படும் இன்றைய தவறான ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டவில்லையென்றால், வரலாற்றுப்பிழையின் பங்காளர்களாக நாங்களும் செயற்பட்டதாக நாளைய வரலாறு அனைவரையும் குற்றஞ்சுமத்தும்.

விஜயையும் முருகதாசையும் தமிழ்ப்பிள்ளைகள் என்று குறிப்பிடுகிறீர்கள் தமிழ்ப்பிள்ளைகள் என்பதால் தப்புச் செய்தால் பரவாயில்லை என்பதுதான் உங்கள் கொள்கையா?

லைக்கா இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும்தான் வணிகம் செய்கிறது அங்குதான் போராடவேண்டும் என்பது குழந்தைத்தனமாக தெரியவில்லையா? ஐம்பது கோடி ரூபா செலவில் தமிழ்நாட்டு மண்ணில் விஜயை வைத்து படம் தயாரிக்கிறார்கள் என்றால் அதை வணிகம் என்று சொல்லாமல் விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறீர்களா?

விஜய் ரிவியில் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஏர்டெல் நடத்துகிறது என்று தெரிந்தால் அதை எதிர்க்கவேண்டிய களம் உங்களிடம்தான் இப்போதைக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்கள், அவர்கள் சுப்பர் சிங்கர் நடத்துகிறார்கள் நாங்கள் லைக்காவின் ஆதரவில் படம் எடுக்கிறோம் அதற்கு இது சரி என்பது உங்கள் அரசியலுக்கு சரியாக இருக்கலாம் யதார்த்தத்திற்கும் தர்மத்திற்கும் சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

நீங்கள் மூன்றுவருட அரசியல்வியாதி உங்களைவிட மூத்தவர் கருணாநிதி அபாயமானவரல்ல என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் காரணம் கருணாநிதி உங்களைபோல ஈழப்பிரச்சினையை மூலதனமாக கொண்டு அரசியற் கட்சி தொடங்கியவரல்ல, உங்களைபோன்றவர்களுடன் போட்டி போடுவதற்காக கருணாநிதியும் எமது தோலில் மேளம் கட்டி பறையடித்து முழங்கி வருகிறார் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் தொடர்ந்து எங்களை துன்புறுத்தி இழிவுப்படுத்தாதீர்கள் என்பதே இப்போதைக்கு எங்கள் வேண்டுகோள்.

உங்களைப்பற்றிய தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிறைய இருந்தாலும் நாகரீகம் கருதி நான் இந்த பதிவில் அவைகளை இணைத்துக்கொள்ளவில்லை.

நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்களிடமும் இந்தப்பதிவின்மூலம் ஒருவேண்டுகோளை வைத்துக்கொள்ளப்படுகிறது இனம் மெற்றாஸ்கபே, போன்ற படங்களை எதிர்த்த நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் உணர்வுடன் குரல்கொடுத்து வந்திருக்கிறீர்கள் இப்போது சீமானின் நண்பர் விஜய் நடித்த படம் என்பதால் ராஜபக்‌ஷவின் பங்கு நிறுவனம் “லைக்கா” தயாரித்த கத்தி திரைப்படம் பரிசுத்தமானது என்று தோழர் சீமான் கூறுவது நியாயமானது தானா என்பதை சுய பரிசோதனை செய்து மனச்சாட்சியின்படி நடந்துகொள்ளுவீர்கள் என்று பணிவுடன் இந்த பதிவு கேட்டுக்கொள்ளுகின்றது.

தீதும் நன்றும் பிறர்தர வாரா”

என்று சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்.

அன்புடன்.

ஊர்க்குருவி.

**

**

புலிப்பார்வை இசை வெளியீடு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்!

சென்னை சத்தியம் திரையரங்கில் “புலிப்பார்வை” திரைப்படத்திற்கான இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது திரையரங்கில் இருந்து மாணவர்கள் அப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது கோசங்களை எழுப்பியதுடன், சந்தேசகத்திற்கிடமான கேள்விகளையும் கேட்ட முற்பட்ட போது அங்கு கட்சிகளின் அடியாட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பச்சைமுத்துவின் அடியாட்களே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்வுகள் ஆரம்பமாகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “புலிப்பார்வை” திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல என நற்சான்றிதழ் வழங்கினார்.

அதனைத் தொடர்து புலிப்பார்வை தாயாரிப்பாளர் பச்சைமுத்து உரையாற்ற தயாரான போது மாணவர்கள் அரங்கத்திலிருந்தவாறே புலிப்பார்வைக்கு எதிரான கோசங்களை எழுப்பியதோடு, திரைப்படம் குறித்த சந்தேகக் கேள்விகளை எழுப்பி தங்களது ஜனநாயகவழியில எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அப்போது அரசியல் கட்சியின் பிரமுகர்களின் அடியாட்கள் மாணவர்கள் மீது கம்பிகள், பொல்லுகள் கொண்டு கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஒரு திரையரங்கிற்குள் எவ்வாறு இப்பொருட்கள் உள்ளே எடுத்து வரப்பட்டன என்ற சந்தேகத்துடன், தாக்குதல் நடத்துவற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே கட்சிகளினால் தயார் செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை மீட்டுக்கொண்டு அடியாட்களைக் கைது செய்யாது காயங்களுக்க உள்ளான மாணவர்களைக் கைது செய்து சிறையில் தடுத்து வைத்திருப்பது நீதிக்குப் புறம்பான செயற்பாடு என பலரும் விமர்சிக்கின்றனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.

**
மாணவர்கள் விடுதலை! மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்! காவலரும் தாக்கப்பட்டார் – திருமுருகன் காந்தி

மாணவர்களை நேரில் சந்தித்தோம். மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்கள். திரையரங்கில் இருந்த இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கி இருக்கிறார்கள். காவல்துறையினர் தடுத்திருக்காவிட்டால் காயங்கள் மோசமான விளைவினை ஏற்படுத்தி இருக்கும் என்றனர் தோழர்கள்.

தடுத்த காவலர் ஒருவரும் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதை பார்த்தோம். தந்தை பெரியார் திராவிடர் கழ்க தோழர்கள் , இயக்குனர் கீரா, இயக்குனர் வ.கெளதமன், செல்வராஜ் முருகையன் உள்ளிட்ட பலரும் தோழர்களை சந்தித்து பேசினோம். கைது செய்து சிறையில் அடைப்பதாக இருந்த முடிவை மாற்றி இறுதியில் , மாலை 6 மணியளவில் விடுவித்தனர். பெரும்பாலான தோழர்களுக்கு கழுத்தில், தலையில் பலத்த அடிவிழுந்திருக்கிறது. சிலர் உடல்முழுவதும் தாக்கப்பட்டிருக்கின்றனர். மிக மோசமான வசவு சொற்களால் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். காவல்துறையினரையும் தள்ளிவிட்டு தாக்கி இருக்கின்றனர்.

ஒரு மூன்றாம்தர திரைப்படத்தின் மீதான விமர்சனத்தினை, ஜனநாயக எதிர்ப்பினை பதிவு செய்ததற்காக இவர்கள் தமிழகத்திலேயே தாக்கப்படுகிறார்கள் என்றால், தமிழக தமிழர்களின் மீது தாக்குதல் நடத்துமளவு எதிரிகள் பலமடைந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். புலிப்பார்வை என்கிற திரைப்படத்தின் அரசியலை அதன் திரையிடல் மூலமாகத்தான் தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அவசியத்தினை இந்த தாக்குதல் ஏற்படுத்தவில்லை.

இத்திரைப்படம் தமிழர்களின் வலியை பேசுகிறது, வீரத்தினை பேசுகிறது என்றால் எதற்காக தமிழினத் தோழர்கள் தாக்கப்பட வேண்டும். இப்படத்தினை எதிர்த்தவர்கள் இன எதிரிகள் அல்லவே…

ஜனநாயகமாக விவாதத்தினை முன்வைக்காமல் ரவுடி கலாச்சாரத்தினை முன்வைப்பவர்கள் எவ்வாறு விடுதலை அரசியலுக்கு ஆதரவானவர்களாக இருப்பார்கள்? .. இந்து ராமும், சோவும், சு.சாமியும் செய்யும் அரசியலை செய்பவர்கள் எவ்வாறு தமிழர்களின் ஆதரவு ஆற்றலாக இருக்க முடியும்?…

இதனாலேயே ”புலிப்பார்வை” கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய திரைப்படமாக பார்க்கிறேன்…

**

தமிழக மாணவ தம்பிகள் தாக்கப்பட்டது உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது – வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்

சமரசங்களை மறுத்து தன்னலன்களை வெறுத்து பிறர் இன்புற்றிருக்க போராடுகிற தமிழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் இடம்பெற்ற “புலிப்பார்வை” இசை வெளியீட்டு நிகழ்வில், ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்புக்களை காட்டச் சென்ற தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியைத் தருகின்றது.

மிக நெடிய காலமாக ஈழத் தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட இன அழிப்பானது 2009 இல் உச்சத்தைத் தொட்டது. இறுதிப்போரின் இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்கள் காணொளி மற்றும் புகைப்பட பதிவுகளாக வெளி வந்து உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறன. அன்று வேடிக்கை பார்த்த உலகின் மனச் சாட்சியை இன்று தட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக எழுந்த தமிழக மாணவர் எழுச்சி தமிழின வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இதன் விளைவாக, தமிழக மக்களின் உணர்வின் வெளிப்பாடாக தமிழக சட்டசபையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எண்ணிலடங்காத ஒப்பற்ற தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்ட தமிழரின் உரிமைப்போராட்டத்தின் நோக்கங்களை சிறுமைப்படுத்தும் வகையிலும், உலகின் மனச்சாட்சியைக் கேள்வி கேட்ட பல உண்மைப் பதிவுகளை செயலிழக்கச் செய்யும் வகையிலான காட்சிகள் “புலிப்பார்வை ” திரைப்பட முன்னோட்டக் காட்சியில் இருந்தமை உலகத்தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடர்ந்து திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்வையிட்ட தமிழக மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களின் கருத்துக்கள் மூலம் அப்படைப்பு முற்றிலும் தவறான கருத்தியலால் புனையப்பட்டது என நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தவறான கருத்தியலைக் காவும் படைப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்திய தமிழக மாணவ தம்பிகள் தாக்கப்பட்டது உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழர் விடிவு தொடர்பில் சமரசங்களை மறுத்து தன்னலன்களை வெறுத்து பிறர், இன்புற்றிருக்க போராடுகிற தமிழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்தார்.

**
புலிப்பார்வை மீதான மாணவர்களின் போராட்டமும்.. சண்டையும் :

இந்தப் பிரச்சனைக்கு மாணவர்களிடமும் புலிப்பார்வை குழுவினரிடமும் உள்ள விரிசல் தான் காரணம் எனலாம்.

சீமானின் நிலைப்பாடு இதில் தெளிவானது. புலிப்பார்வை படமும் அண்மையில் வெளியாகிய பல ஈழத்தமிழர் விரோத திரைப்படங்கள் போல வெளியாகாமல்.. அதனை நெறிப்படுத்தி வெளியிடச் செய்வதே சீமானின் நோக்கமாக உள்ளது. இதற்காக அவரைப் பாராட்டலாம். எல்லாரும் வெளியில்.. இருந்து.. போராடிக் கொண்டிருந்தால்.. படத்தை வெளியிடுபவர்கள் வேறு மார்க்கங்களை அணுகி முற்றிலும் எமக்கு பாதகமான படமாக இதனை வெளியிட முடியும். அந்த வகையில்.. சீமானின்.. இந்த அணுகுமுறையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. முற்றிலும் எமக்கு பாதகமாக படம் வெளியிடப்படுவதை தடுப்பதே சீமானின் நோக்கமாக இருக்க முடியும்.

முன்னரும்.. ஹிந்தியர்களாலும்.. மலையாளிகளாலும் உருவாக்கப்பட்ட படங்களுக்கு எதிர்ப்பை காட்டிய போதும் அவை தமிழகம் தவிர வேறு இடங்களில் வெளியிடப்பட்டன. ஈழத்தமிழர்கள் எமக்கு விரோதமாக எமது நியாயங்களை பலவீனப்படுத்துவனவாக அவை அமைந்திருந்தன. இந்த நிலையை புலிப்பார்வையிலும் உருவாக்க சீமான் விரும்பி இருக்காமல் இருக்கலாம்.

மாணவர்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால்.. அவர்கள் இதனை சீமானுக்கு எதிராக அன்றி.. புலிப்பார்வைக்கு எதிராக மட்டும் வைத்திருப்பதோடு.. இந்தப் போராட்ட சூழலை மையப்படுத்தி.. காரணம்காட்டி.. புலிப்பார்வை படக்குழுவினர் மீது சீமான் போன்ற தலைவர்களின் உதவியுடன் ஓர் அழுத்தத்தை பிரயோகிக்க பாவித்திருக்கலாம். அடிதடி.. என்று போய் இருக்கத் தேவையில்லை.

தமிழர்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்க காத்திருக்கும் சக்திகளுக்கே இதனால் இலாபமாகும். அத்தோடு மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளும் இப்படியான உணர்ச்சிச் செயற்பாடுகளால் வீணடிக்கப்படுகின்றன.

சீமான் போன்ற தலைவர்கள் படக்குழுவினர் மற்றும் மாணவர்களுக்கிடையே தொடர்பாளர்களாக இருப்பதை விட்டு.. பிரச்சனைகள் பெரிதாக அனுமதிப்பது நல்லதல்ல. அது நாம் தமிழர் கட்சி கொண்ட கொள்கைக்கு உதவுமாப் போலும் இல்லை..!

ஆகவே எதிர்காலத்தில்.. இவ்வாறான உணர்ச்சிமிகு வேளைகளில் தலைவர்களும் மாணவர்களும் சம்பந்தப்பட்ட இதர தரப்புக்களும் பொறுமையோடும்.. தொலைநோக்கோடும்.. ஒற்றுமையோடும் செயற்பட முன்னுரிமை அளிக்க வேண்டும்.. என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. அதுவே பாலச்சந்திரன் போன்ற சிறுவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு செய்யும் மரியாதையாகவும் இருக்க முடியும்.

எமது பார்வை.குண்டுமணி

Advertisements