போர்க்குற்ற விசாரணை தமிழர் முகத்தில் கரி பூசிவிட்டு காலத்தைக் கடத்தும் நடவடிக்கையா?

இலங்கைத் தீவிலிருந்து நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் உலகத்தின் முகங்களை ஏக்கத்தோடும், எத்தனையோ எதிர்பார்ப்புக்களோடும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழினம்.m3

நவீனமயமான இந்த உலகின் நீதி நியாயம் எல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதா? என்ற சந்தேகம் தோன்றுகின்றது. அதற்க்கு காரணம் இலங்கையில் சிறுபான்மை இனம் என்று குறிப்பிடப்பட்ட தமிழினம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட போது உலகின் அத்தனை நீதிபதிகளும் கண்ணை மூடிக் கொண்டனர்.

அதிகாரத்திலிருந்த உலகத் தலைவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஒரு மாபெரும் இனவழிப்பு இந்தியா உட்பட சில சுயநல நாடுகளின் உதவியோடு சிங்கள அரசினால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இன்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் எமக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர் என்ற வகையிலும் இந்த சிங்கள பேரினவாத அரசின் அடுத்த வேட்டைக்கு எமது இன்றைய சந்ததியும், இனி வரப்போகும் சந்ததியும் பலியாகி விடக் கூடாதென்ற நோக்கத்தோடும், உலகத்தில் எமக்கு நடந்த கொடுமைகள் இனி எந்த ஒரு இனத்திற்கும் நடந்துவிடக் கூடாதென்ற நோக்கத்தோடும் போர் முடிவுற்ற இந்த ஐந்து ஆண்டுகளாக உலகத்தின் அத்தனை நீதிபதிகளிடமும் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எங்கெல்லாம் எமக்கு நீதி கிடைக்கும், யாரெல்லாம் எமக்காக குரல் கொடுப்பர் என்று ஏங்கித் தவிக்கின்றோம், ஆனால் வரலாறு முழுவதுமே கலங்கித் துடிக்கும் அளவு வேதனையும், தவிப்புக்களும் தந்த சிங்கள அரசும் அதன் இராணுவமும் தம்மை புனிதர்களாகவும், மாவீரர்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்டும் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் தமிழர் மிது திணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனை இந்த உலகம் இன்னமும் வேடிக்கை பார்ப்பது வேதனையான விடயம். நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் ஐநா சபையின் வாசல் கதவுகளை நோக்கி காத்திருக்கும் தமிழர்களுக்கு ஐநா சபை என்ன பதிலை பெற்றுத்தரப் போகிறது.

நீதியும் நியாயமும் சில வேளைகளில் மறைக்கப்படலாம், ஆனால் அது என்றுமே மரணித்துப் போனதில்லை. கொடிய போர் முடிவுற்ற நாள் முதலாக உலகெங்கும் வாழும் தழிழர்கள் கடின உழைப்பின் பயனாக இன்று போர்க்குற்ற விசாரனையினை ஐநா சபை வலியுறுத்துகிறது.

சனல் – 4 , சர்வதேச மன்னிப்புச் சபை, மனிதவுரிமைக் கண்காணிப்பகம் போன்றன பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இன்று வரைக்கும் குரல் கொடுத்து போர்க்குற்ற விசாரணையினை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்தனர் என்ற வகையில் தமிழர்கள் அனைவருமே இந்த அமைப்பிற்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆனாலும் இந்த போர்க் குற்ற விசாரணை என்பதுதான் தமிழர்களின் இறுதியான கோரிக்கையாக இருக்கும் என்ற முடிவினை ஐநா சபைய, அல்லது சர்வதேச மன்னிப்புச் சபையோ, இதர அமைப்புக்களோ எடுத்துவிடக் கூடாது. காரணம் போர்க்குற்ற விசாரணை என்பது முதல் கட்டமே அன்றி அதுவே பாதிக்கப்பட்ட தமிழரின் முடிவு இல்லை.

காரணம் இலங்கைத் தீவில் நடைபெற்றது போர் இல்லை அது திட்டமிட்ட இனவழிப்பு, இதனை எப்போது உலகம் புரிந்துகொள்ளப் பொகிறது. இனவழிப்பு விசாரணைகள் சிங்கள அரசு மீது மேற்கொள்ளப்பட்டு தமிழின அழிப்பினைச் செய்த சிறிலங்கா அரசிற்கும் இராணுவத்தினருக்கும் தண்டனை வழங்கிக் கொடுக்க வேண்டும்.

தமிழர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ, எதை ஏற்றுக் கொள்கிறார்களோ அதனை ஐநா சபை பெற்றுத் தர வேண்டும். ஆனால் இன்னும் எத்தனை உயிர்களை விலையாக கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை. காரணம் இன்று போர்க்குற்ற விசாரணைக்காக மூன்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள் இந்தப் போர்க்குற்ற நிபுணர்கள் சாதாரணமானவர்கள் அல்லர், அனுபவமும், அறிவும் மிக்கவர்கள், இவர்கள் பின்லாந்தின் முன்னாள் ஐனாதிபதி “மார்டி அதிசாரி” நியூஸிலாந்தின் முன்னாள் நீதிபதி “டேம் சிவ்வியா கார்ட்ரைட்” பாகிஸ்தான் சட்ட நிபுணர் “அஸ்மா ஜகாங்கீர்” ஆகியோர்களாவார்.

போர்க்குற்ற விசாரணைக்காக யாரையும் நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்திருந்தும் அவர்கள் விசாரணைக் குழுவிற்கு முன்வந்தது பாராட்டப்பட வேண்டும். ஆனால் இந்த போர்க்குற்ற விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனேயே இலங்கை ஆட்சியாளர்கள் மத்தியில் சலசலப்பும் பதட்டமும் ஏற்பட்டதை இவர்களின் செயற்பாடுகளூடாக உணர முடிகிறது.

ஒரு மாபெரும் இனவழிப்பினை வெற்றிகரமாகச் செய்தவர்கள் என்ற வகையிலே தம்மையும் தமது இனவெறி இராணுவத்தையும் காப்பாற்றிக் கொள்ள சிங்கள ஆட்சிப்பீடமும் அதன் அதிகார வர்க்கமும் இன்னொரு முள்ளிவாய்க்காலை தருவதற்குக் கூட தயங்காது. எனவே தான் போர்க்குற்ற சாட்சியம் அளிப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் யாரும் நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்று வெளிப்படையாகவே சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் மூலமாக எச்சரிக்கை விடுக்கிறது.

ஆனால் ஐநாசபை இதற்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை குறைந்த பட்சம் தனது கண்டனத்தைக் கூட வெளிப்படுத்தவில்லை, ஆனால் நிபுணர் குழுவில் சாட்சியம் அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று வெறுமனே ஒரு அறிவிப்பினை மட்டும் விடுத்தது. ஆனால் இது எந்த வகையில் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பது கேள்விக் குறியான ஒன்றே.

காரணம் உலகத்தின் நீதிமன்றம் என கருதக் கூடிய ஐநா சபையினால் போர்க் குற்ற விசாரணை இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட உடனேயே இலங்கை அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்று போர்க் குற்ற விசாரணைக்காக எவரையும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று முரண்டு பிடித்துக் கொண்டு நிற்பது இவர்கள் குற்றவாளிகளே என்பதை வெளிப்படுத்தும்.

உலகத் தலைவர்கள் பலரும் அறிவாளிகளும், அனுபவ சாலிகளும் நிறைந்திருக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஐநா சபையின் தீர்மானத்தையே ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிங்கள தேசம் அப்பாவிகளான இலங்கைத் தழிழர்களின் நியாயமான கோரிக்கைகளை எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரை நூற்றாண்டுகளாக துடித்துக் கொண்டிருக்கும் ஓர் இனத்தின் எதிர்காலமே இந்தப் போர்க்குற்ற விசாரணையில் தங்கியுள்ளதை அதன் விசாரணைக்கான நிபுணர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மாற்றம் ஒன்றுதான் உலகத்தில் மாற்றம் இல்லாத ஒன்று தமிழர்களுக்கான நீதி நெருங்கி நெருங்கி வருகிறது என்று ஒரு சிறிய மகிழ்ச்சியோடு இந்தப் போர்க்குற்ற விசாரணையினை எதிர்பார்த்துத் தமிழர்கள் காத்திருந்தாலும், அதன் முடிவுகள் சில வேளைகளில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாதகமாகி விடுமோ என்ற பயமும் அதிகமான தமிழர்களை வாட்டிக் கொண்டிருக்கின்றதன் காரணம் போர்க்குற்ற விசாரணை என்றால் இரண்டு தரப்பினருக்கு மத்தியில் போர் நடைபெறும் போது நடைபெற்ற குற்றங்களை இரண்டு தரப்பினரிடமும் விசாரணை செய்து அதில் அதிகமான தவறுகளை மேற்கொண்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதாகும்.

அது விடுதலைப் புலிகளாக இருந்தாலும் சரிஇ இலங்கை இரரணுவமாக இருந்தாலும் சரி போர்க் குற்றம் என்பது இரண்டு தரப்பினருக்கும் பொதவான ஒன்று எனவே போர்க்குற்ற விசாரணை என்று போர்க்குற்ற விசாரணையென்று ஆரம்பிக்கப்படும் போது சிறிலங்கா அரசு அதனை மறுத்தாலம் திரை மறைவில் அதனை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டும் தான் செய்து முடித்த இனவழிப்பினை பயங்கரவாத ஒழிப்புப் போர் என்று பெயர் மாற்றஞ் செய்து தாம் தப்பித்துக் கொள்ள சில போலி மனிதர்களின் ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனவே போர்க்களத்தில் செய்யப்படுவது கொலை அல்ல என்று ஒரு வாதத்தினை இவர்கள் முன்வைக்கக் கூடும், அது மட்டுமல்லாது போர்க்குற்ற விசாரணைகள் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர் மீதும் மேற்கொள்ளப்படும் போது அது விடுதலைப் புலிகளையும் சிலவேளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கூடும்.

அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழினத்தின் சாபக்கேடான சில மனிதர்கள் சிங்களத்திற்குச் செய்து கொடுப்பார்கள். எனவே போர்க்குற்ற விசாரணை என்பதை குடிநீர் தேடி அலைந்தவனுக்கு கிடைத்த சமுத்திரத்தை போலத்தான் கருதவேண்டும்.

சமுத்திரத்துக்குள்ளும் நன்னீர் தேடும் வல்லவர்களாக நிபுணர்கள் இருந்தால் நிச்சயம் இந்த விசாரணையின் இறுதி நீதியானதாகவும் தமிழர்கள் எதிர்பார்த்த முடிவினை பெற்றுத் தருவதாகவும் இருக்கும்.

எனவேதான் நாங்கள் நீதிக்காக போராடினாலும் இதை விட ஒரு படி மேலேறி சிங்கள ஆட்சிப்பீடம் அநீதிக்காகப் போராடுகிறது. ஆனால் இது எத்தனை நாட்களுக்கு என்பதை இவ் உலகம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாத ஒழிப்புப் போர் என்ற மாயைக்குள் உலகத்தைத் தள்ளி பயங்கரவாதிகள் என்று போர்வையினால் தழிழினத்தை மூடி பூவும், காயும், பிஞ்சுமாக தமிழின அழிப்பினை சிங்கள தேசம் செய்வதற்கு பாதிக்கப்பட்டதற்கு ஒவ்வொரு தமிழனும் சாட்சியாளர்கள்.

மஞ்சள் இழந்த பெண்கள், தாயை இழந்த பிள்ளைகள், கை, கால் இழந்த அங்கவீனர்கள், கண் இழந்த தமிழர்கள் என்று ஒவ்வொருமே சாட்சியாளர்கள்.

அதைவிட மரணித்துப் போன எத்தனையோ தமிழர்கள், தமிழிச்சிகள் என்று தமிழ் பேசும் அனைவருமே இந்த இன அழிப்பின் ஏதோ ஒரு வகையில் என்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சாட்சியாளர்கள்.

ஆனால் இந்த ஐநா சபையினால் மேற் கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியம் அளிப்பதற்காக எத்தனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் முன்வருவார்கள்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்றும் இலங்கையின் ஆட்சியாளர்கள் பலர் மறைமுகமாகவும், நேரடியாகவும் மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருக்கும் போது ஐநா சபையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணையின் நிபுணர் குழுவின் முன் சாட்சியம் அளிப்பது “குளவிக் கூட்டுக்குக் கீழ் நின்று கொண்டு கல் எறிவதைப் போல” நிச்சயமாக நிபுணர் குழுவின் முன் சாட்சியம் அளிப்பது சாட்சியம் அளிப்பவர்கள் எவரையும் இலங்கை அரசு விட்டு வைகக்கப் போவதில்லை.

அது மறைமுகமாக இருந்தாலும் சரி தனக்கு எதிரான எவரையும் விட்டு வைக்காது. அதற்காகவே சிங்கள ஆட்சிப்பீடம் சில சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்களை தன் ஏவல் நாய்களாக வளர்த்து வருகிறது.

அமைச்சரவையிலும் ஒரு சில பௌத்த சிங்கள சிந்தனை உடையவர்களையும் வைத்து சலசலப்புக்களையும் சில மிரட்டல்களையும் விடுப்பதோடு தன்னால் நேரடியாக செய்ய முடியாத சில இழிவான செயல்களை இவர்கள் மூலமே செய்து முடிப்பதில் வல்லமை பெற்றுவிட்ட சிங்கள ஆட்சிபீடம், இந்த போர்க்குற்ற விசாரணைக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் ஐநா சபையின் அழுத்தம் காரணமாக செய்து முடிக்க முடியாது போனாலும் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளின் மூலம் செய்து முடித்து விடும் சிங்கள அரசு.

இதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் அப்பாவித் தமிழர்கள் தான் இதற்கு காரணமாக இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற போது சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தாம் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவதற்குத் தயாராக இருப்பதாக சர்வதேசத்தின் சில அதிகாரிகளிடம் தெரிவித்து சிங்கள இனவெறி இராணுவத்தின் முற்றுகைக்குள் நிராயுத பாணிகளாக வெள்ளைக் கொடியோடு சரணடைந்த போது அங்கே சிங்கள இனவெறி இராணுவம் அவர்களை கொன்று குவித்து உயிருடன் புதைகுழிக்குள் வைத்து மூடியது.

ஐநா சபையின் அதிகாரிகள் தம்மைப் பொறுப்பேற்பார்கள், தம்மைப் பாதுகாப்பார்கள் என்று நம்பி வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள், போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் ஐநா சபை அன்று ஏமாற்றாது பொறுப்பேற்றிருந்தால் அந்த அப்பாவித் தமிழர்கள் கைகள் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வதைபட்டு செத்திருக்க மாட்டார்கள்.

அன்று ஐநா சபையினை நம்பி ஏமாந்த தமிழர்கள் மீண்டும் ஒருமுறை ஐநா சபையினை நம்பி எவ்வாறு சாட்சியம் அளிக்க முன்வருவார்கள் அப்படி சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பை எவ்வாறு ஐநா சபை உறுதி செய்யும்.

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை என்பதை ஆரம்பிக்க முன்னர் அங்கு வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஐநா சபையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற
விசாரணைக்காக நிபுணர் குழுவை தாம் தமது நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறியமையானது ஐநா சபையினை அவமதிக்கும் ஒரு செயல்.

தனது முக்கியமான தேவைகளுக்கெல்லாம் வெளிநாடுகளிடம் கையேந்தும் இலங்கை ஐநா சபையின்அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவது ஆராயும் போது ஐநா சபையினை எதிர்க்கும் அளவு பலம்மிக்க நாடாக இலங்கை இலங்கை மாறிவிட்டதா?

ஒரு கோழி முட்டை அளவு இலங்கையே எதிர்க்கும் அளவு ஐநா சபை வலுவற்றதா இதனை ஐநா சபைதான் வெளிப்படுத்த வேண்டும். அப்படி ஐநா சபைக்கு உண்மையிலே அதிகாரம் இருந்தால் அதற்குப் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால் ஈழத் தமிழருக்கு அது நீதி வழங்க வேண்டும்.

எனவே இந்த போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்க முன் ஐநா சபையின் அதிகாரங்கள் வடக்கு, கிழக்குக்கு வரவேண்டும் அங்கே நிலை கொண்டுள்ள இராணுவம் குறித்த விசாரணை முடியும் வரையேனும் வெளியேற வேண்டும், அல்லது அவர்கள் இராணுவ முகாமை விட்டு வெளியேற முடியாதவாறு ஐநா சபையின் இராணுவம் அவர்களை முற்றுகை இட வேண்டும்.

மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடும் அனைவரையும் ஐநா சபையின் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மாத்திரமே ஐநா சபையினால் மேற்கொள்ளப்படும் இந்தப் போர்க்குற்ற விசாரணை நீதியாகவும, நியாயமாகவும் நடைபெறும்.

அதை விடுத்து முற்றிலும் சிங்கள இராணுவம் சூழ்ந்துள்ள நிலையில் அவர்களின் கைக்குள் நின்று அவர்களுக்கு எதிராக எந்த ஒரு சாட்சியங்களையும் எந்த நிபுணர் குழுவாலும் திரட்ட முடியாது இந்தப் போர்க்குற்ற விசாரணையும் வழமை போன்றே தமிழர் முகத்தில் கரி பூசிவிட்டு காலத்தைக் கடத்தும். மேலும் இனவழிப்புத் தொடரும்