ராஜபக்சவின் காலம் கடந்த ஆணைக்குழுவும், சர்வதேச விசாரணையும்

isaipriya-1“…..இவற்றை உலகிற்கு சொல்வதற்கு எமக்கு உரிமை உண்டு. கவலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள தாய்மார்களுடைய சோகக் கதைகளை, அவர்கள் சார்பாக நாம் உலகிற்கு சொல்ல வேண்டும். நாம் இவற்றை இன்றும் செய்வோம், நாளையும் செய்வோம், எதிர்காலத்திலும் செய்வோம் என்பதை மறந்து விடாதீர்கள்”.

(மகிந்த ராஜபக்சவினால், 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்ற உரையில் கூறப்பட்டவை. பாராளுமன்ற பதிவு 25-01-1991)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அன்று சிறிலங்காவில் ஆட்கள் காணாமல் போவது பற்றி முறையிடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் நடாத்தப்பட்ட, ஆட்கள் காணாமல் போவது பற்றி பரீசிலிக்கும் குழுவின் 31வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ள ஜெனிவா சென்றிருந்தார்.

இதே ராஜபக்சவினால், கடந்த வருடம் ஆகஸ்ட் 14ம் திகதி, தனது ஆட்சியின் கீழ் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை செய்வதற்கான ஓர் குழுவை நியமித்துள்ளார். இக்குழு, விசாரணைகளை, 1990ம் ஆண்டு யூன் 10ம் திகதி முதல் 2009ம் ஆண்டு மே 19ம் திகதி வரை, காணாமல் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்கு சம்மதிக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில், 1980 ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜே. வி. பி. கிளர்ச்சியின் பொழுது, “சிறிலங்காவின் படையினர் இரு கைகளிலும், துப்பாக்கியும் கிரனைட்டை மட்டுமே எடுத்துச் சென்றனர். அவ்வேளையில் தம்முடன் மனித உரிமை பிரகடனத்தை எடுத்துச் செல்ல மறந்து விட்டனர். அத்துடன், பெரும் தொகையான அப்பாவி மக்களே அவ்வேளையில் காணாமல் போயும் கொல்லப்பட்டார்கள்” என்பது இவரது தனிப்பட்ட கருத்து.

உண்மை என்னவெனில், ஜே. வி. பி.யின் கிளர்ச்சி வேளையில், சிறிலங்கா படையினரினால், எந்த கனரக ஆயுதங்களான ஏவுகணைகளோ, விமானத் தாக்குதலோ நடைபெற்றது கிடையாது.

மகிந்த ராஜபக்ச அன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆட்கள் காணாமல் போவது பற்றி பரீசிலிக்கும் குழுவின் 31வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டதை அடுத்து, இக்குழு, சிறிலங்காவிற்கு 1991ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விஜயம் செய்திருந்தது. இவர்களது சிறிலங்காவின் விஜயம் பற்றிய அறிக்கையின், 149வது பந்தியில் கீழ் வருமாறு குறிபிடப்பட்டிருந்தது.

பந்தி 149 – “1988ம் ஆண்டு யூலை மாதமும், அதன் பின்னர் 1991ம் ஆண்டு முற்பகுதியிலும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த ராஜபக்சவின் வதிவிடம் இனம் தெரியாதோரினால் தாக்கப்பட்டிருந்தது. இவற்றிற்கு இவரது மனித உரிமை செயற்பாடுகளே காரணமாகவிருந்தது.”

முன்பு தெற்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கு சரியான இடம் ஐ. நா. மனித உரிமை பிரிவே என நம்பி, வேலைகளை முற்கொண்ட இதே ராஜபக்ச, இன்று அதே காரியலயத்தினால் முன்வைக்கபடும் சகல வேண்டுகோள்களை ஏற்க மறுப்பதுடன், இவர்கள் யார் எமக்கு கட்டளையிடவும் கேள்வி கேட்கவும் என கூறுகிறார்.

இச்சம்பவங்கள் யாவும் நடைபெற்று சரியாக 24 வருடங்களின் பின்னர் இக்குழுவினர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்வதற்கான அனுமதியை தொடர்ந்து பல வருடங்களாக கேட்டு வருகிறார்கள். இவ்வேண்டுகோள்களுக்கு இன்று வரை எந்தவித அனுமதியையும் கொடுக்காத, ராஜபக்சவின் அரசு, பலவிதப்பட்ட சாட்டு போக்குகளை கூறி காலத்தை கழித்து வருகின்றனர்.

உண்மையில் இக்குழு மட்டுமல்லாது வேறு பல ஐ. நா. மனித உரிமை குழுக்களும் சிறிலங்காவிற்கு விஜயம் செய்வதற்கான அனுமதியை மிக நீண்ட காலமாக எதிர்பார்த்து நிற்கின்றனர்.

இதேவேளை இன்று யாரும் ஐ. நா. குழுக்களுக்கு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை கொடுப்பதை, ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும், நாட்டிற்கு எதிரான ஓர் தூரோகமாக எடுத்து கொள்கின்றனர்.

ராஜபக்ச ஆட்சி காலத்தில் படுகொலைகள்

மேல் கூறப்பட்ட 145வது பந்தியின் பிரகாரம், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த ராஜபக்சவின் வதிவிடம் இனம் தெரியதோரினால் இரு தடவை தாக்கப்பட்டிருந்தது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவர் ஜனாதிபதியாக பதவியேற்ற காலம் தொட்டு, எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள், எத்தனை ஊடகவியலாளர், சமயத் தலைவர்கள், சிவில் சமூகத் தொண்டர்கள் காணாமல் போயும், படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்?

இப்படுகொலைகளில் சில பட்டபகலில், விசேடமாக தலைநகரான கொழும்பில் நடைபெற்றுள்ளன. இவற்றில் எதற்கு நீதி விசாரணை நடைபெற்றுள்ளது? யார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளர்கள்? இவை தான் இன்றைய மகிந்தவின் நவீன சிந்தனையா?

மகிந்த ராஜபக்ச, 1990 ஆண்டிலிருந்து செய்ததாக கூறப்பட்ட மனித உரிமை வேலைகள் பற்றி மிக சுருக்கமாக ஆராய்வோமானால்,

1980ம் ஆண்டின் பிற்பகுதியில், தெற்கை சார்ந்த ஆயுதம் தாக்கிய ஜே. வி. பி. யின் சிங்கள இளைஞர்கள் சிறிலங்காவின் அரசை கவிழ்க்கும் நோக்குடன் ஓர் கிளர்ச்சியை நடத்தினார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் இளைஞர்களினால், தமது இனம் மிக நீண்ட காலமாக அரசியல் உரிமையற்று வாழ்வதை உணர்ந்த தமிழ் இளைஞர், அவர்களது உரிமையை பெற்று கொடுப்பதற்காக போராடினார்கள்.

முடிக்குரிய ஜனாதிபதியும், சிறிலங்காவின் படைகளின் முக்கிய தளபதியான ராஜபக்சவின் அணுகுமுறையானது, தெற்கின் மனித உரிமை மீறல்களுக்கும், வடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களுக்கும் இடையில் மிக வேறுபாடுகளை கொண்டது.

முதலாவதாக, இவரது ஆரம்ப மனித உரிமை செயற்பாடுகள் என்பது தெற்கில் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள பௌத்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கானது. வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், தமிழர்கள் மட்டுமல்லாது, இவர்கள் பௌத்த மதத்தை சாராதவர்கள்.

இரண்டாவதாக, சகல உரிமை அதிகாரங்களை கொண்ட ராஜபக்ச விரும்பியிருந்தால், சர்வதேசத்தின் உதவியுடன் தமிழ் விடுதலை இயக்கத்தை அழிப்பதற்கு பதிலாக, திருப்தியான அரசியல் அணுகுமுறையை கையாண்டு, 6 தசாப்தங்குளுக்கு மேலாக எந்த அரசியல் உரிமைகளும் இன்றி இரத்தக்களரிகளை மட்டும் அனுபவித்த மக்களுக்கு, ஓர் நேர்மையான அரசியல் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருப்பார்.

மூன்றாவதாக, தெற்கின் இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியில், மகிந்த ராஜபக்சவும், இவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவும் இரு வேறுபட்ட முனைகளில் காணப்பட்டார்கள். அதாவது, மகிந்த மனித உரிமை என்ற முனையிலும், கோத்தபாய இராணுவ நடவடிக்கை என்ற முனையில் தமது பங்குகளை மேற்கொண்டார்கள்.

நான்காவதாக, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்களின் உரிமை போராட்டத்தில், இரு சகோதரர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். காரணம் தமிழ் உரிமை போராட்டம் என்பது, தமிழ் தேசியத்தை அடிப்படையாக கொண்டு – வேறுபட்ட மொழி, கலை கலாச்சாரம், சமயம் ஆகியவற்றுடன் நன்றாக வரையறுக்கப்பட்ட எல்லைகளை கொண்ட தாயகத்தை தமிழர் கொண்டிருந்தார்கள்.

இதை நாம் மிக ஆளமாக பார்ப்போமனால், இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என்ற வழமையான ஒரு பட்சமான கருத்தை நோக்கி செல்கிறது. இக்கருத்தை மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் எவ்வித தயக்கமுமின்றி ஏற்று கொண்டுள்ளார்கள்.

உண்மையை கூறுவதானால், முன்னைய மகிந்த ராஜபக்சவின் மனித உரிமை செயற்பாடு என்பது, இனம் தேசியம் சமயம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தனவே தவிர, உண்மையான மனித உரிமை கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை.

மாத்தளை, முள்ளிவாய்க்கால்

காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில், மாத்தளை மாவட்டத்தின் தலைநகரான மாத்தளை, வன்னி மாவட்டத்தில் உள்ள, முள்ளிவாய்க்காலுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஆனால் இவை இரண்டு அனர்த்தங்களின் முக்கிய சூத்திரதாரி, இன்றைய பாதுகாப்பு செயலாளரும், முன்னைய இராணுவ ஒருங்கிணைப்பாளருமான கோத்தபாய ராஜபக்ச அவர்களே.

ஜே. வி. பி. கிளர்ச்சியாளர் மீது பல வெற்றிகரமான செயற்பாடுகளை மேற்கொண்ட கோத்தபாய, 1989ம் ஆண்டு மே மாதம் வேலை உயர் பெற்று, மாத்தளையில் ஜே. வி. பி. கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அங்கு அனுப்பப்பட்டார்.

முன்னைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை பொறுத்தவரையில், மாத்தளையில் 450க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஜே. வி. பி. கிளர்ச்சி முடிவுக்கு வந்த வேளையில், ஜே. வி. பி.யின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவர் மட்டுமே தப்பியுள்ளார்.

இதன் காரணமாக, என்றோ ஒரு நாளைக்கு ஜே. வி. பி. மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை கொண்ட கோத்தபாய ராஜபக்ச, நாட்டை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் பல காலம் வாழ்ந்து வந்தார்.

2005ம் ஆண்டு இவரது சகோதரரான மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்த பொழுதே, பல வருடங்களின் பின்னர், கோத்தபாய சிறிலங்காவிற்கு திரும்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ. நா. மனித உரிமை சபையில் தொடர்ச்சியாக சிறிலங்கா மீது இரு கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, சிறிலங்காவின் ஜனாதிபதி 2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஓர் இராணுவ விசாரணை குழுவை நியமித்தார். இவ் இராணுவ விசாரணை, அப்பாவி மக்கள் காணாமல் போவதற்கு, தமிழீழ விடுதலை புலிகளே காரணமென அறிவித்தது.

இவற்றை சர்வதேச சமுதாயம் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால், 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி, அரச வர்த்தமானி மூலம், காணாமல் போனோர் பற்றி விசாரிப்பதற்காக ஓர் ஜனாதிபதி விசாரணை குழுவை ராஜபக்ச நியமித்தார்.

இதனால் ராஜபக்சவின் பொய் வாக்குறுதிகளை நம்பி பல தடவை ஏமாற்றம் அடைந்த நாடுகள், ஜனாதிபதி விசாரணை குழுவால் எந்த நியாயமும் பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்குமென நம்பாத காரணத்தினால், மூன்றவாது தடவையாக சர்வதேச விசாரணைகளை வேண்டி நிற்கும் கண்டனப் பிரேரணை ஒன்றை, 2014ம் ஆண்டு மார்ச் மாதம், ஐ. நா. மனித உரிமை சபையில் நிறைவேற்றினார்கள்.

ஆலோசனை குழு

மிகச்சுருக்கமாக சகலதையும் கூறுவதனால், 2009ம் ஆண்டு மே மாதம், ஜனாதிபதி ராஜபக்ச கூறியதாவது, “ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில், மனித உரிமை பிரகடனத்தை கையில் ஏந்திய வண்ணமே இராணுவம் யுத்தத்தில் ஈடுபட்டார்கள்”. அத்துடன், “யுத்தத்தில் எந்த பொதுமக்களும் கொல்லப்படவில்லை”.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. ஏல். பீரிஸ் ஓர் செவ்வியில் கூறியதாவது, “யுத்தத்தின் முடிவில் இடம்பெற்றதாக கூறப்படும் பொதுமக்கள் கொலைக்கு, சிறிலங்கா அரசு பதில் கூற வேண்டியதில்லை.”

ஆனால், ஐ. நா. விசாரணையின் தாக்கத்தை அவதானித்த ராஜபக்ச அரசு, 2014ம் ஆண்டு யூலை மாதம் 15ம் திகதி, சட்ட வல்லுனர் மூவர் அடங்கிய ஓர் ஆலோசனை குழுவை, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டுள்ள, காணாமல் போனோர் பற்றிய விசாரணை குழுவிற்கு நியமித்துள்ளார்.

இவ் மூவரும் பின்வருமாறு: தலைவரும் ஆலோசகருமாக – சேர் டெஸ்மன் டி சில்வா கியூ சி, பிரித்தானியாவை சார்ந்த சேர் ஜேப்றி நீஸ் – கியூ சி, அமெரிக்காவை சார்ந்த பேராசிரியர் டேவிட் கிறேன்.

சேர் டெஸ்மன் டி சில்வா, கியூ சி

இவ் ஆலோசனை குழுவின் நியமனத்தை தொடர்ந்து, மிக அண்மையில் கொழும்பில் வெளியாகும் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில், இவ் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, சேர் டெஸ்மன் டி சில்வா அவர்கள், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் 2011ம் ஆண்டு நடாத்தப்பட்ட “பயங்கரவாதத்தின் வெற்றியில் சிறிலங்காவின் அனுபவம்” என்ற மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், அம்மாநாட்டில், “இறுதி நேர யுத்தத்தின் பொழுது ஏற்பட்ட பொதுமக்கள் இழப்பிற்கு தமிழீழ விடுதலை புலிகளே காரணமென” கூறியதுடன், ஐ. நா. செயலாளர் பான்-கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையையும் குறை கூறியதாக வெளியிட்டிருந்தார்கள்.

ஆகையால் இப்பத்திரிகையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையானதாக இருக்குமிடத்தில், சேர் டெஸ்மன் டி சில்வா, இன்று நியமிக்கப்பட்டுள்ள வேலைதிட்டத்திற்கு ஏற்கனவே 2011ம் ஆண்டு தனது முடிவுரைகளை கூறியுள்ள காரணத்தினால், இவர் இவ் ஆலோசனை குழுவிற்கு தலைமை வகிக்கவோ, அல்லது ஆலோசனை வழங்கவோ, தகுதியற்றவர் என கணிப்பிடப்படுவார்.

அடுத்து, கொழும்பு ஆங்கில பத்திரிகையில் வெளியான தகவல்கள் உண்மையானால், சேர் டெஸ்மன் டி சில்வா சிறிலங்கா பிறப்பிடமாக கொண்டதுடன், இவரது பாட்டனர் சிறிலங்கா (இலங்கை) சுதந்திரம் பெற்ற காலத்தில், இங்கு அமைச்சர் பதவியை வகித்துள்ள காரணத்தினால், இக் குழுவை, ஓர் சர்வதேச குழு என யாரும் அழைக்க முடியாது.

சேர் டெஸ்மன் டி சில்வாவின் சர்வதேச வேலைகளையோ, இவரது சர்வதேச சட்டத்தின் திறமைகளையோ இங்கு யாரும் குறைத்து கணிப்பிடவில்லை. ஆனால் சிறிலங்கா விடயத்தில் யாவும் விளங்காத புதிராகவுள்ளது.

அத்துடன், கடந்த 5 வருடங்களாக ராஜபக்ச அரசு, ஐ.நா. உட்பட சர்வதேச சமுதாயத்துடைய ஆலோசனைகளையோ, வேண்டுகோள்களையோ செவி மடுக்காது இருப்பதற்கு, சேர் டெஸ்மன் டி சில்வா முன்பே ராஜபக்ச அரசிற்கு ஆலோசனை வழங்கி வந்தாரா என்ற கேள்வி இங்கு உருவாகிறது.

யார் உண்மை கூறுபவர்கள்?

கொழும்பு பத்திரிகையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையற்றவையென சேர் டெஸ்மன் டி சில்வாவினால் கடிதம் மூலமாக மறுக்கப்பட்ட பொழுதும், உண்மையில் கொழும்பில் வெளியாகும் வேறு ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலே, இச் செய்தி 2011ம் ஆண்டு யூன் 2ம் திகதி வெளியாகியிருந்தது.

அப்படியானால், சேர் டெஸ்மன் டி சில்வா இச்செய்தியை கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை என்பது தெளிவாகிறது.

உண்மையில் 2011ம் சேர் டெஸ்மன் டி சில்வா, பாதுகாப்பு அமைச்சினால் நடாத்தப்பட்ட “பயங்கரவாதத்தின் வெற்றியில் சிறிலங்காவின் அனுபவம்” என்ற மாநாட்டில் கூறிய விடயங்கள் யாவும் ஓர் வழக்கறிஞரினாலேயே அவ் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது.

அப்படியானால், சேர் டெஸ்மன் டி சில்வாவின் இக் கருத்தை, மற்றைய ஆலோசகர்களான, பிரித்தானியாவை சார்ந்த, சேர் ஜேப்றி நீஸ் – கியூ சி, அமெரிக்காவை சார்ந்த பேராசிரியர் டேவிட் கிறேன் ஆகிய இருவரும் ஏற்றுக் கொள்கிறார்களா? என்ற கேள்வி இங்கு உருவாகிறது.

பேராசிரியர் டேவிட் கிறேனினால் கொழும்பில் உள்ள ஓர் ஊடகத்திற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “தாம் வழக்கறிஞர்கள் என்ற அடிப்படையில், சிறிலங்கா அரசிற்கு தாம் வழங்கும் சட்ட ஆலோசனைக்கு சன்மானம் வழங்கப்படும்” என கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் இங்கு ஒன்றை மிக அவதானத்தில் கொள்ள வேண்டும். 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட “சர்வதேச நிபுணர் குழுவின்” அங்கத்தவர்கள், அத்துடன், ஐ. நா. செயலாளர் பான்-கீ மூனினால் நியமிக்கப்பட்ட “நிபுணர் குழுவின்” அங்கத்தவர்களும், இவ் மூன்று ஆலோசகர் போன்ற தகுதிகள், அனுபவங்கள், சர்வதேச ரீதியான பிரபல்யத்தை கொண்டவர்களே.

இவ் அடிப்படையில் பார்க்கும் பொழுது, இவ் மூன்று சட்ட ஆலோசகர்களின் ஆலோசனையின் அடிப்படையில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் போர்க்குற்றம், இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்ட இராணுவத்தினரும், இதற்கு கட்டளை வழங்கியவர்களும் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட வேண்டுமென அறிவுரை கூறுவார்களா?

ஐ. நா. சர்வதேச விசாரணை

கடந்த மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை சபையினால், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம், சிறிலங்கா விடயத்தில் தனது சர்வதேச விசாரணைகளை, ஓ.ஐ.எஸ்.எல். (OISL) என்ற காரியலாயம், சிறந்த சர்வதேச பிரபல்யம் வாய்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளுடன் தனது வேலைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் பிரகாரம், இவ் விசாரணைக்கு சாட்சி சொல்ல விரும்பவர்கள், தமது சாட்சியங்களை – ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய ஏதோ ஒரு மொழியில், 10 பக்கங்களுக்கு குறைவாக, தமது முழு விபரங்களுடன், தமது சாட்சியம் அந்தரங்கம் பேணப்பட வேண்டுமா, போன்ற விடயங்களுடன், மின் அஞ்சல் மூலமாகவோ, அல்லது கடிதம் மூலமாகவோ, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

நீங்கள் அனுப்பும் சாட்சியங்கள் 21-02-2002 தொடக்கம் 15-11-2011 க்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் நடைபெற்ற, இடம்பெற்ற சம்பவங்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இவ் சாட்சியங்களை அனுப்புவர்கள், மின் அஞ்சல் மூலமாக, எந்தவித புகைப்படத்தையோ அல்லது வீடியோக்களையோ அனுப்ப வேண்டுமென கேட்டு கொள்ளப்பட்ட அதேவேளை, அப்படியான ஆதாரங்களை கொடுக்க விரும்புபவர்கள், இக்காரியத்துடன் தொடர்பு கொண்டால், அவர்கள் வேறு வழிகளில் அவற்றை பெற்றுக் கொள்ள ஒழுங்குகள் செய்யப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் சாட்சியங்கள் கொடுக்க விரும்புவர்கள், தயவு செய்து காலம் தாழ்த்தாது, உடன் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உங்கள் சாட்சியங்களை எழுதி உடன் அனுப்பி வைக்கவும்.

இது எங்களது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்லாது, தமிழ் தேசியத்தின் எதிர்கால சந்ததியினரின் பிரச்சினை என்பதை நாம் யாவரும் மனதில் கொள்ள வேண்டும்.

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
tchrfrance@hotmail.com

Advertisements