சிங்கள திரைப்படமும் அதன் பின்னிருக்கும் NGO அரசியலும்….

தமிழ் ஸ்டுடியோ என்னும் நிறுவனத்தால் with you,with out you (பிறகு) என்கிற இந்த சிங்கள படம் பிரத்யேக காட்சியாக தமிழ்ப் பார்வையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.with you,with out you1

இந்த படம் திரையிடும் முன்பே இணையங்களிலும் பொது ஊடக தளங்களிலும் தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கிறார்கள் என்கிற திட்டமிட்ட பரப்புரையும் அதற்கு எதிரான கருத்துக்களுமாக முளைத்து அதன் ஒரு பகுதியாக திரையரங்கு நிரம்பி வழிந்தது..பொதுவாக உலக வரிசைத் திரைப்படங்கள் என்கிற இந்த வகைப்படங்கள் திரைப்பட விழாக்கள் மற்றும்,திரைப்பட இயக்கங்கள் மொத்தமாக திரையிடல் என்னும் பாணியை தவிர்த்து பொது அரங்கில் இப்படி திட்டமிட்டு பெரும் பொருட்செலவுடன் திரையிடப்படுவதில்லை..ஆனால் திரையிடப்பட்டது..அதுவும் தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் 22 மணி நேரங்களில் திட்டமிட்டது என்றார்..இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

படம் பார்க்க பெரும்பாலான அமைப்புகளும் வந்திருந்தன.. படத்தின் சாராம்சம் இதுதான். அகதியாக ஒரு யாழ்ப்பாண பெண் ,மலையக மக்கள் வாழும் பகுதியில் வசிக்கிறாள் ..ஒரு சிங்கள இராணுவ வீரன் நகை அடகுக் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான்.அந்த அடகுக் கடைக்கு அடிக்கடி நகை வைக்க வரும் பெண்ணின் சோகம் நிரம்பிய வலிகளைத் தாண்டி ,அவளது கண்களும்,உதடுகளும் அந்த இராணுவ வீரனை கவர்கிறது.அவளது துயர்மிக்க வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளை பயன்படுத்தியும் அவள் மீது படரும் மெலிய காதல் உணர்வாலும் தூண்டப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்கிறான்.

திருமணத்திற்கு பிறகுதான் அந்த பெண்ணிற்கு தான் திருமணம் செய்திருப்பது தனது இனத்தையே அழித்த சிங்கள இராணுவ வீரர்களில் அவனும் ஒருவன் என்கிற உண்மை தெரிகிறது.இராணுவம் தன் குடும்பம் மற்றும் மக்களை கொன்ற,பாலியல் வன்புணர்வுகள் அனைத்தும் அவள் மனபிம்பங்களில் இருந்து அழியாத ஓவியமாக அவள் நினைவுகளை கொன்று கொண்டிருக்க,அவனை வெறுக்கத் துவங்குகிறாள்.ஆனால் அந்த இராணுவ வீரன் அவளின் நிலையை புரிந்து கொள்கிறான்.இராணுவ வீரனாக தானும் தனது சக படையினரும் செய்த அட்டுழியங்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கோருகிறான் ..ஒரு கட்டத்தில் அவளை இந்தியாவிற்கு அனுப்புவதன் மூலம் தன் தவறுகளுக்கான விடுதலையாகவும் நினைக்கிறான்..அவனின் மனநிலையை புரிந்து கொள்கிறாள் ..ஆனாலும் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

மேலோட்டமாக காணும் பொழுது ஆகசிறந்த மாந்த நேயமிக்க கலைப்படைப்பாகத் தோற்றம் பெரும் இச் சினிமா கோரும் உள்ளடக்கமானது ..போரும் போருக்கு பிந்தைய நீதியற்ற வாழ்வில் சிதைக்கப்பட்ட தமிழர்களிடம் ஒரு சமரசத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி முடிகிறது. இப்படத்தின் இயக்குனர் பிரசன்னா விதானகே பொதுவில் ஒரு இடது சாரி சிந்தனையாளர் …அவரின் திரைப்படங்கள் சிங்களர்களின் ஆதிக்கத்தையும் சேர்ந்து வாழ்தலையும் வலியுறுத்தியபடியே இருக்கின்றன.இப்படத்திலும் பல நுட்பமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அதி உன்னத கலைப்படைப்பாக தோற்றம் பெரும் வகையில் ,அடகு நகைகள்,புத்தர் சிலை,கதை நாயகி பயன்படுத்தும் செப மாலை,மற்றும் பெட்டிக்குள் வைக்கப்பட்ட துப்பாக்கி ..இவைகளின் வழியே பல கதைகள் சொல்லப்படுகின்றன..ஆனால் சிங்கள பகுதியில் காட்டப்படும் மலையக மக்கள் குறித்த பெரும் பிம்பங்கள் ஏதுமில்லை.சாளரம் வழியே ஊடுரும் வனப்பு மிக்க மலைகளும்,விஜய் பட பாடல்களால் சமூகம் சுதந்திரத் தன்மையுடனும் இயல்பாகவும் இருப்பது போன்றான காட்சியமைப்புகளின் மூலம் படம் எதை உறுதி செய்கிறது என்பதை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

படம் திரையிடப்பட்டு கேள்வி எழுப்பப்படும் பொழுது பிரசன்னா விதானகே பதில் கொடுக்க தயாராக இருந்தார்.அது அமைதியான ஒரு சூழலாகவே முடிந்திருக்க வேண்டிய வாய்ப்பு இருந்தது. படம் எங்கு நடக்கிறது என்கிற கேள்வியும்,தமிழ்ப் பாடல்கள் மட்டுமே இடம் பெரும் காரணம் என்கிற கேள்விக்கும் கவிஞர் ஜெயபாலன் முன்வந்து பதில் கொடுக்க துவங்கியதிலிருந்து அவ்விடத்தின் தன்மை மாறுபட்டது.. ஏன் தமிழ்ப் பாடல்கள் இடம் பெறுகின்றன என்கிற கேள்விக்கு..அது சிங்கள பகுதியில் வசிக்கும் மலையக மக்களின் பகுதி என்கிறார்.மலையாக மக்கள் சிங்கள பகுதியில் அவ்வளவு சுதந்திரமாகவா இருக்கிறார்கள்..சிங்கள பாடல்கள் கட்டுப்படுத்தப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழ்ப் பாடல்கள் தான் ஒலிக்க வேண்டும் என்கிற சிங்கள சட்டம் ஏதேனும் இருக்கிறதா எனத் தெரிய வில்லை…?

மே 17 இயக்கத் அருள் எழுந்து “தெற்காசிய முழுக்க ஒரு இன்டலக்சுவல் கூட கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு நீதி கோரி நிற்க வில்லை,படைப்புகளை உருவாக்கியதில்லை,காத்திரமாக போராட முன்வந்ததில்லை,கள்ள மௌனத்தோடு பெரும் அமைதி காட்டினார்கள் …ஆனால் போருக்கு பிந்தைய இந்த காலத்தில் சிங்களரின் தவறை(கொடும்பாதக செயல்களை ) மன்னித்து இணைந்து வாழும் படியான படைப்புகளையும் செயல்படுத்துவதும் எழுதுவதும் எமது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றார்..அமெரிக்கா போன்ற நாடுகள் விரிவாதிக்கம் செய்ய படுகொலைகளை நிகழ்த்தி விட்டு கடைசியாக படைப்புகளின் வழியே சிறு தவறுகள் செய்தது போல காட்டும் உத்தியே தாங்களும் செய்வது,படுகொலைகளை குறித்து படம் செய்தது உண்டா ” என கேள்வி எழுப்ப, தமிழ் ஸ்டுடியோ அருண் இது பொலிடிகல் மீட்டிங் அல்ல என்றார்… கலகம் சார்பில் பேசிய கீரா “சினிமா என்பது அரசியல் இல்லாமல் வேறன்ன ..? பொலிடிகல் மீட்டிங் இல்லையென்றால் எல்லோரையும் அழைத்து படம் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்றார்…?” அதன் பிறகு சுழல் இன்னும் கடுந்தன்மைக்கு மாறியது..பலர் எழுந்து கேள்வி எழுப்பத் துவங்கினர்..பத்திரிக்கையாளர் செந்தில்குமார் மற்றும் வ.கௌதமனின் கேள்விகளுக்கு பிரசாந்த விதானகே அளித்த பதில் போதுமானதாக இல்லை…அதற்குள் ஜெயபாலன் கடுமையாக எழுந்து பேச துவங்க…நாம் வெளியேறினோம்..

கிட்டத்தட்ட இந்த படம் திட்டமிட்டு போடப்பட்ட சூழலும் ,அதிக பார்வையாளர்களை உருவாக்க கையாண்ட முன்பின் உத்திகளும்,ஒரு ngo ஏற்படுத்தும் பின்னனியறி வேறன்ன…? பெரும் சலசலப்புக்கு மத்தியிலும் சிங்கள இயக்குனருக்கான ஆதரவுப் போக்கை உருவாக்கும் ஒரு முனைப்பும் இதில் அடங்கி கிடக்கிறது.

படத்தின் இயக்குனர் தான் நினைத்ததை சொல்லி இருக்கிறார்..அவரின் மீதான நம்பகத் தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டியதை விட,படத்தை தமிழர்களுக்கு திரையிட்டுக் காட்டி ,ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைபவர்களின் பின் புலம் குறித்து சிந்திப்பது தமிழர்களுக்கு அவசியமான ஒன்று….இப்படம் திரையிடுவதன் மூலம் தமிழர்களின் மத்தியில் சிங்களர்களின் பேரன்பை..? புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார்கள்…

நாமும் அப்பேரன்பை நம்புவோமாக…ஆமென்.

கலகம்-கலை இலக்கிய தமிழ்த் தேசிய தடம்.

*
சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு!

தமிழகத்தில் சர்ச்சையை ஏற்றபடுத்தியுள்ள பிரசன்னா விதானகேவின் சிங்கள With you without you திரைப்படம் நேற்று தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பிரத்தியோக் காட்சி மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது.

இதில் இரண்டு இடங்களில் பயங்கரவாதிகள் என்று சொல்லபட்டதிற்கு கடும் எதிர்ப்பினை தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் அங்கு சில நபர்களுடனும் குடும்பத்தினருடனும் வந்திருந்த கவிஞர் ஜெயபாலன் சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகேவையும் அவருடைய படத்தையும் பாராட்டியும் ஆதரித்தும் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள் கவிஞர் ஜெயபாலனைத் தாக்க முயன்றனர். ஆனால் ஜெயபாலனுடன் வந்த நபர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகேவிடம் குறித்த திரைப்படம் தொடர்பில் கடும் எதிர்ப்பினையும், பல்வேறு கேள்விகளையும் இயக்குனர் கவுதமன் , மே 17 இயக்க தோழர்கள் , மாற்றம் மாணவர் இயக்க பிரதீப் குமார் , தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் ஊடகவியலாளர்கள் கேட்டனர்.

குறிப்பாக இயக்குனர் கவுதமன் அங்கு நடந்தது இனபடுகொலை என்பதை நீங்கள் ஒரு படைபளியகவோ அல்லது சிங்களவராகவோ அல்லாமல் ஒரு மனித நேயமிகவர் என்ற நிலையில் உங்கள் பதிலை சொலுங்கள் என்றார். ஆனால் அதற்கு முழுமையான பதிலை அவர் அளிக்கவில்லை.

மேலும் தமிழ் உணர்வாளர்கள் சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகேவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டது , சில கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது திக்குமுக்காடியபோது அந்த சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக தன்னை திரைப்பட கலைஞர் என்று கூறிக்கொண்டு ஈழத்தமிழர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசுடன் இன்றுவரை தொடர்பில் இருக்கும் வா.சே.ஜெயபாலன் உணர்வார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து ஜெயபாலனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கபட்டது.

தொடந்து சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது தமிழ் உணர்வாளர்கள் அரங்கம் நிறைய இருந்ததால் ஜெயபாலனால் சமாளிக்க முடியவில்லை . அதேவேளை ஜெயபாலனுக்கு ஆதரவாக அவரது மனைவி தமிழ் உணர்வாளர்களை தகாத வார்த்தையில் திட்டினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள் அவருடனும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

கடைசியில் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைபட்டார். ஜெயபாலனுடன் லீனா மணிமேகலை, சோமிதரன் ஜெயபாலன் மனைவி பிள்ளை மற்றும் சில நபர்களும் வந்திருந்தனர் .

இறுதியில் தமிழ் உணர்வாளர்களால் மீது காவல்துறையிடம் முறைப்பாடு செய்தார் ஜெயபாலன்.

**

“With You, Without You ” : இன அழிப்புக்கு “வெள்ளை”யடிக்கிறது..

விளையாட்டை விளையாட்டாக பார், சினிமாவை சினிமாவாக பார் அதில் அரசியல் கலக்காதே என்று அவ்வப்போது குரல்கள் எழும், ஆனால் இந்த குரல்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக எழாது. ஆதிக்கத்தில் உள்ளவனை காப்பாற்ற நடுநிலை எடுக்கும் அறிவுசீவிகள் எடுக்கும் நிலை தான் இது.
With You, Without You என்ற படமும் அப்படித் தான். ஆதிக்கத்தில் உள்ள சிங்களவனுக்கு இந்த படம் புத்தி சொல்லலாம். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சனையை பதிவு செய்ய தவறி இருக்கிறது. இது சிங்களவர்களுக்கான படம். தற்போது நடந்து வரும் போலி “மறுவாழ்வு” திட்டத்திற்காக எடுக்கப்பட்டுள்ள ஒரு படம் என்றே இதை காண வேண்டியுள்ளது. சிங்களவர்களுக்கு வலி உள்ளது என்று படம் சொல்கிறது. இது தான் போருக்கு பின்னர் அரச பயங்கரவாதத்தை நிகழ்த்தும் சிங்களம் செய்து வரும் பிரச்சாரம். அதை திறம் பட செய்திருக்கிறது இந்தப் படம். ஒரு கலை நேர்மையாக இருக்கும் போது மட்டுமே அது சிறந்த படைப்பாக மாறுகிறது. இந்த படத்தில் அந்த நேர்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். திரைப்படம் பல கேள்விகளை எழுப்புகிறது.

1. படத்தின் களம் குறிப்பாக காலம் தெளிவாக இல்லை. 2009 ஈழ போருக்கு முந்தையதா? அதற்கு பின்னானதா? கதை சொல்லவில்லை

2. திரிகோண மலையில் ஒரு ராணுவ முகாமில் தமிழ் பெண் சில சிங்கள ராணுவ வீரர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது, திரிகோணமலையில் கடந்த பத்தாண்டுகளாக தமிழர் படைகளுக்கும் – சிங்கள இராணுவத்திற்கும் மோதல் நடந்ததா என்ற கேள்வி எழுகிறது? பதில் இல்லை

3. படத்தின் நாயகி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறார், எப்படி? யாழ்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு சிங்களம் பேசுவது இலகுவானதா?

4. சிங்களவர்களால் பிரச்சனை என்று நம்பும் ஒரு பெண், சிங்களப் படைகளால் தனது சகோதரர்களை பலிகொடுத்த ஒரு பெண், பெற்றோர்களை தொலைத்து தனியாக இருக்கும் ஒரு தமிழ் பெண், ஒரு சிங்கள ஆணைப் பற்றி எந்த தகவலும் தெரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாரா? போர் காயங்களை தமிழர்கள் மறக்கத்துவங்கி விட்டார்கள் என்று இயக்குனர் நிறுவ முயல்கிறாரா?

5. யாழ்பாணத்தில் உள்ள திரையரங்குகளில் போர் காட்சிகளை மட்டுமே திரையிடுவார்கள் என்று அந்த தமிழ் பெண் கூறுகிறார்.

6. ஓய்வு பெற்ற சிங்கள ராணுவ விரனை திருமணம் செய்த அப்பெண், அவன் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் காப்பாற்றியவன் என்று தெரிந்தவுடம் அதிர்ச்சிக்குள்ளாகுவதாக கதை சொல்கிறது. ஆனால் அவனை மன்னித்து மீண்டும் அவனுடன் வாழ முனைகிறாள். தொடர்ந்து மனச்சிதைவுக்குள்ளாகும் அவள், உன்னைக் காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடு என்றவாறே தற்கொலை செய்து கொள்கிறார். இது தமிழர்கள் சிங்களவர்கள் அன்பு செலுத்தினால், அவன் பல கொலைகளை செய்த ராணுவ வீரனாகவும் இருந்தாலும் மன்னிக்கிறார்கள் என்றவாறு புரிந்து கொள்ளப்படுகிறது. ஈழ இனப்படுகொலை மறந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதைப் போன்றது இது.

ஒரு படத்தின் திரைக்கதை, படத் தொகுப்பு, ஒளிப்பதிவு என்று எல்லாமும் உலகத் தரத்துடன் இருந்தாலும் அது சொல்ல வரும் நியாயம் என்பது மிக முக்கியம், குறிப்பாக அரசியல் சார்ந்த படங்கள். அந்த வகையில் இந்த படம் கண்டிப்பாக அரசியல் நியாயத்தை மழுப்பும் செயலையே செய்திருக்கிறது.

சரவணன் குமரேசன்.

Advertisements