ஈழத்தமிழ் அகதிகளை மறந்தே போயினோம்

tamilnadu-eelam-refugee“அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளுடன் சென்ற படகு கடலில் மூழ்கி 78பேர் மரணம். அதில் 45பேர் தமிழர்கள்.”,

“திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் ஈழத்தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி”,

“அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழ் இளைஞன் தீக்குளித்து தற்கொலை”

“தமிழ்நாடு சிறப்பு தடுப்பு முகாமில் தொடர்ந்து 8வது நாளாக ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்.”,

“திருச்சி தடுப்பு முகாமில் ஈழத்தமிழ் இளைஞன் கைகளை அறுத்து தற்கொலைக்கு முயற்சி”,

“மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகளை கைது செய்து சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு”

இது தினமும் எம் கண்களின் பார்வைக்கு வந்து அடுத்த கணமே எம்மால் மறக்கப்பட்ட செய்திகள். எம் காதுகளுக்கு எட்டியும் அடுத்த நிமிடமே மறு காதால் வெளியேறி காற்றில் கரைந்த சேதிகள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இவைகள் செய்திகளாக இருக்கட்டும். எமக்கு இதுதானே எம் இனத்தின் உயிர் வாழ்தலுக்கான ஓட்டம்- ஓலம். அதனை நாம் எப்படி தூரநின்று பார்க்க முடியும். எப்படி இவைகளை உடனேயே மறந்து போகின்றோம். கூடு கலைந்து திக்குக்கு ஒன்றாக சிதறுவது எத்தனை வேதனை என்பதை நாம் அனைவரும் உணர்ந்தவர்கள்தான்.

உயிரிழப்பதிலும் வலியது-வேதனைமிகுந்தது பிறந்து வளர்ந்து ஓடித்திரிந்த மண் இழந்து வெளியேறுவது. இதனையும் நெஞ்சம் கனக்க வலிமிகு உணர்ந்தவர்கள்தான் நாமனைவரும். ஆயினும் அது எல்லாம், ஒரு கொஞ்ச காலம்தான். பிறகு, ஒரிடத்தில் ஒதுங்கி அகதி தஞ்சம் கேட்டு, அந்தஸ்தும் கிடைக்கப்பெற்று, நாட்டுரிமையும் பெற்றுவிட்ட பின் ஊரிழந்த நினைவுகளும், கூடு சிதறிய வேதனையும் மறந்தது போல, ஏதோ இங்கே புதிதாக பிறந்தோம் என்ற நினைப்பில் அலைகிறோம். பின்னங் காலில் படர்ந்திருந்த புழுதியை தட்டிவிட்டு நடப்பதுபோல நாமும் ஒரு கணத்தில் ஏதும் அற்று அகதியாக இருந்தவர்கள்தான் என்ற நினைப்பை அறுத்து இப்போது கிடக்கின்றோம்…

எங்கள் நாளாந்த வாழ்வின் அசைவுகளை இந்த மனிதர்களின் – எமது உறவுகளின் இந்த நிலை கொஞ்சம்தன்னும் கல்லெறிந்து அலை எழுப்பி இருக்கிறது மாதிரி தெரியவில்லை..

தமிழ்நாட்டில் சிறப்பு தடுப்பு முகாம்கள் என்ற பெயரில் ஆண்டுக்கணக்காக வாடிடும் உறவுகள் எத்தனை..

குற்றச்சாட்டு எதுவும் இல்லை.. குற்றப்பத்திரிகை இல்லை… ஆனாலும் ஒரு மனிதனை தடுத்துவைத்து அவனை நம்பி வாழும் குடும்பம் முழுதையுமே வறுமைக்குள்ளும் தினமும் அச்சத்துள்ளும் வாழ வைக்கும் இந்த கொடுமையை நீக்க சொல்லி ஏன் எழவில்லை…

எந்தவொரு சட்டரீதியான தடுப்பும் இல்லாமல் வெறுமனே மாவட்டகலெக்டருக்கே உரித்தான அதிகாரத்துள் காவல்துரையின் கடும்காவலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் இவர்களில் எத்தனைபேர் மனரீதியான சிதைவுகளுக்கும், நோய்க்கும் உள்ளாகி அங்கே அல்லல் படுகிறார்கள்.

உலகம் முழுதும் சர்வசேத அகதிகள் தினமாக அறிவிக்கப்பட்டிருக்கும் யூன்-20ம் திகதி எமது ஈழத்தமிழ் இளைஞன் ஒருவன் தன் கைகளை தானே அறுத்து தற்கொலைக்கு முயன்று அகதிகள் தினத்துக்கு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றானே திருச்சி சிறப்புமுகாமில்..

அது சர்வதேசத்தை உசுப்புகின்றதோ இல்லையோ எம்மை ஏன் உலுப்பவில்லை…

மண்ணில் வானத்தை வெறித்து பார்த்தபடியே கை மணிக்கட்டில் இருந்து ரத்தம்வடிய கிடப்பவன் அனாதையா…

போராடிய ஒரு தேசம் ஒன்றின் மகன் அல்லவா…?

சிறப்பு முகாம்களில் இருந்து எம்மை வெளியே அனுப்பு என்றால் “இங்கிருந்து வெளியே போவது என்றால் சிறீலங்காதான். போக போகிறீர்களா” என்று மரணப் பள்ளத்தாக்கை காண்பிக்கும் கொடுமையை என்னவென்பது…

மீளவே முடியாத நரகம் போன்ற இந்த சிறப்பு முகாம்களை மூடச்சொல்லி தமிழக முதல்வரிடம் கோரி போராட்டங்களை நடாத்தவேண்டிய தேவையை எல்லோரும் மறந்துபோயினோம் இல்லையா..?

வெளியே இருக்கும் அகதி முகாம்கள் என்றால் அவையும் ஒரு விதத்தில் குறைவான வசதிகளும் பாரபாட்சங்களும் நிறைந்தவைகளாகவே இருப்பதையும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். பலபத்து வருடங்களாக அகதி முகாமிலேயே வாழும் தாய் தந்தையருக்கு அந்த அகதி முகாமியிலேயே பிறந்த ஈழத்து தமிழ் சிறுவனோ சிறுமியோ படித்து மேலே வந்ததும் பல்கலைகழக அனுமதியில் இந்தியர் அல்லாதவர் என்பதாலும் அகதி என்பதாலும் அனுமதி மறுக்கப்படும் அவலம் என்பது எவ்வளவு அநீதி என்பதை நாம் எப்போது புரிந்துகொண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்க போகிறோம்.

ஏதாவது ஒரு வாரத்தை எல்லோரும் சேர்ந்து முடிவு செய்து தமிழகம், புலம்பெயர் தேசங்கள் என்று எங்கும் போராட்டங்களை, கவனயீர்ப்புகளை செய்தே ஆகவேண்டும். இது ஒரு வரலாற்றுக் கடமையாக நாம் எல்லோரும் வரித்துக் கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு பரிந்துரை செய்துள்ள பாதுகாப்புகளும், உரிமைகளும், வசதிகளும் தமிழகம், மலேசியா, அவுஸ்திரேலியா உட்பட உலகமெங்கும் உள்ள எம் உறவுகளுக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும் என்ற கோரிக்கைகள் மின்னஞ்சல்களாகவும், முகப்புத்தக கவனயீர்ப்புகளாகவும், கவனயீர்ப்பு போராட்டங்களாகவும், உரிமைகோரும் போராட்டங்களாக நாமனைவரும் செய்தே ஆகவேண்டும்.

நினைவில் கொள்ளுவோம். நாம் புதிதாக எதையும் கேட்கவில்லை..

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான அமைப்பு வரையறை செய்துள்ள உரிமைகளையும், பாதுகாப்பையுமே கோருகின்றோம்.

எனவே இன்றே அதற்கான முயற்சிகளில் இறங்குவோம்.

முயலுவோம்-வெல்லுவோம்.

ச ச முத்து

Advertisements