இலண்டன் ‘பாலியல் வன்முறைகளைத் தடுக்கும்’ மாநாடும் பாதிக்கப்பட்ட கதாநாயகர்களும்

தனக்கு நடந்த கொடுமையான சம்பவத்தை நாடகத்தின் மூலம் பிறிதொருவர் நடிக்கும் போது அதனை நேரில் பார்த்துக் கொண்டு அந்த சிறிலங்காத் தமிழ் இளைஞர் இருந்தபோது இது ஒரு நம்பமுடியாத துணிச்சல் மிக்க நிகழ்வாக இருந்தது.m3

இவ்வாறு ASIAN CORRESPONDENT இணையத்தளத்தில் Frances Harrison எழதியுள்ள Victims the real heroes at London sexual violence summit கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ‘பாலியல் வன்முறைகளைத் தடுக்கும்’ உச்சிமாநாடு லண்டனில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட நான் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். இந்த உச்சி மாநாட்டில் சிறிலங்காவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு அதிலிருந்து மீள்வதற்காக லண்டனில் புகலிடம் கோரியுள்ள ஒருவர் வந்திருந்தார். அவரை எனக்கு ஏற்கனவே தெரியும்.

Unlocked என்கின்ற நாடகம் இடம்பெற்ற போது நான் அவரைப் பார்த்தேன். இந்த நாடகமானது கொங்கோவைச் சேர்ந்த ஒருவர், பொஸ்னியர் ஒருவர் மற்றும் சிறிலங்காத் தமிழர் ஒருவர் ஆகிய மூன்று ஆண்களும் தத்தம் சொந்த நாடுகளில் பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தனக்கு நடந்த கொடுமையான சம்பவத்தை நாடகத்தின் மூலம் பிறிதொருவர் நடிக்கும் போது அதனை நேரில் பார்த்துக் கொண்டு அந்த சிறிலங்காத் தமிழ் இளைஞர் இருந்தபோது இது ஒரு நம்பமுடியாத துணிச்சல் மிக்க நிகழ்வாக இருந்தது. இங்கு குறிப்பிடப்படும் சிறிலங்காத் தமிழ் இளைஞரின் பெயர் விபரங்கள் குறிப்பிட முடியவில்லை. இவர் நாடகம் ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள் வரை மாநாட்டு மண்டபத்தில் அமர்ந்திருந்தார். அதன்பின்னர் அவர் எனக்கு கைசை மூலம் தான் வெளியே செல்வதாகத் தெரிவித்தார்.

இந்த நாடாகமானது மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் கசப்பான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சிறிலங்காத் தமிழ் இளைஞருக்காக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கலைஞர் தான் தனது குடும்பத்துன் பிற்பகல் வேளையில் தனது வீட்டில் மகிழ்வாக இருந்தபோது, வீட்டுக்கு வெளியே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதாக விபரித்தார். அவர் அப்போது வீட்டிற்கு வெளியில் சென்ற போது, கள்வர்களாக இருக்கலாம் அதனால் தான் நாய்கள் குரைப்பதாகக் கருதினார். ஆனால் இவர் சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் கடத்தலுக்கு அடையாளமாகக் காணப்பட்ட வெள்ளை வானில் அடையாளந் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டார் என விபரிக்கப்பட்டது.

எனக்கு சிறிலங்காவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்ட குறித்த தமிழ் இளைஞனைத் தெரியும் என்பதால், நான் அவர் மாநாட்டு மண்டபத்தை விட்டு வெளியேறியதும் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர் மனதளவில் பாதிக்கப்படாது உள்ளாரா என்பதைப் பார்ப்பதற்காகவே நான் அவரைத் தொடர்ந்தேன். அவரால் சுவாசிக்க முடியவில்லை. அவர் வியர்வையில் நனைந்திருந்தார். அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ‘தேநீர் அருந்துங்கள். நீங்கள் சரியாகிவிடுவீர்கள்’ என நான் அவரிடம் கூறினேன். இதுவே அந்த இளைஞனை அமைதியாக்குவதற்கான எனது முதலாவது முயற்சியாக இருந்தது. ஆனால் அவர் அந்த மாநாடு இடம்பெற்ற வளாகத்தை விட்டு முதலில் வெளியேற வேண்டும் என்பதை நான் விரைவில் உணர்ந்து கொண்டேன்.

மாநாட்டு மண்டபத்தில் ஏற்படுத்தப்பட்ட இரைச்சல், போரின் விளைவை சாட்சியப்படுத்திய ஒளிப்படங்கள், பாலியல் வன்முறைகள் தொடர்பான சுலோகங்கள் போன்றன அந்த இளைஞனுக்கு மேலும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. தனது இதயம் பட படவென அடிப்பதாகக் கூறினார். இவர் நன்றாக மூச்செடுத்து விடவேண்டியிருந்தது. இவர் மயங்கி விழுந்துவிடுவாரோ என நான் கவலையடைந்தேன். அதனால் அவரை விரைவாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றினேன். நான் அவரது கவனத்தைக் கலைக்க முயற்சித்தேன். நாங்கள் தேம்ஸ் நதியின் கரையில் நின்றிருந்தோம். நான் போரைப் பற்றியோ அல்லது பாலியல் வன்புணர்வுகள் தொடர்பாகவோ கதைக்கக் கூடாது என நினைத்தேன். நான் தேமஸ் நதிக்கரையில் வாழ்ந்தவர்கள் தொடர்பாக தமிழ் இளைஞனிடம் எடுத்துக் கூறினேன். நான் அவரிடம் வேறு விடயங்களைக் கதைத்தேன்.

அது லண்டனின் ஒரு கோடைகால அழகான பொழுதாக இருந்தது. நாங்கள் அடுத்த ஒரு மணித்தியாலத்தை தேம்ஸ் நதியின் கரையில் நடந்தோம். உரையாடினோம். நான் சிறிலங்காவில் எவ்வாறு வாழ்ந்தேன் என அவரிடம் கூறினேன். எனது சிறிய மகன் சிறிலங்காவை எவ்வாறு நேசித்தார் என்பதையும் கூறினேன். சிறிலங்காவில் வாழ்ந்தபோது இலங்கையர்கள் எனது மகனிடம் எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனக் கேள்வி கேட்கும் போது, எனது அம்மா ஒரு ஆங்கிலேயர், எனது அப்பா ஒரு ஈரானியர் நான் இலங்கையன் என எனது மகன் பதிலளிப்பதாகவும் அவரிடம் எடுத்துக் கூறினேன். ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற கொடிய யுத்தமானது அங்கு வாழ்ந்த இளையோர் மத்தியில் வேறுபட்ட நிலைப்பாட்டை உருவாக்கியிருந்தது.

இந்த இளைஞனுக்கு பாரம்பரிய தென்னிந்திய நடனம் ஆடுவது விருப்பம் என்பதை நான் அறிவேன். இவர் நடனம் ஆடும்போது உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்துவார். சிலவேளைகளில் மனமுடைந்து அழுதுவிடுவார். இவர் ஆங்கிலத்தில் மிக அழகாகப் பேசுவார். அத்துடன் தமிழ் இலக்கியத்திலும் அறிவு பெற்றிருந்தார். உள்நாட்டு யுத்தத்திலிருந்து மீண்ட பல தமிழர்கள் தொடர்பாக நாங்கள் பேசினோம். ஏதோவொரு நாள் இந்த இளைஞன் தான் பெற்ற கசப்பான அனுபவங்களை எழுதுவார் என நான் நினைக்கிறேன். அந்த எழுத்துக்கள் அசாதாரண படைப்புக்களாக இருக்கும். ஆனால் இப்பொழுது தான் அனுபவித்த துன்பங்களால் இந்த இளைஞன் வேதனைப்படுகிறார். அதிலிருந்து மீளமுடியாது இவர் தவிக்கிறார்.

நாங்கள் சிறிது நேரம் வெளியில் கழித்த பின்னர், மீண்டும் மாநாட்டு மண்டபத்திற்குள் சென்றோம். இந்த இளைஞனுடன் வந்திருந்த நண்பனைப் பார்ப்பதற்காகவே சென்றோம். அப்போது Perky தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் எம்மிடம் கையேடுகளைத் தந்து தமது நிகழ்வுக்கு வருமாறு அழைத்தார்கள். போரிலிருந்து மீண்டெழுந்தவர்களால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அத்துடன் அந்த வளாகத்தில் இசை விருந்தும் இடம்பெற்றது. தொண்டர்கள் சிவப்பு நிற ரீசேட் அணிந்திருந்தார்கள். அவர்களது ரீசேட்டில் ‘செயற்படுவதற்கான காலம் கனிந்துவிட்டது’ என்கின்ற பொருளில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

நாங்கள் பிரதான மாநாட்டு மண்டபத்தைக் கடந்து சென்ற போது, தமிழ் இளைஞர் மிகவும் அச்சப்பட்டார். ஏனெனில் அங்கு போரின் பாதிப்புக்கள், வறுமை, மனித உரிமை மீறல்கள் போன்றன சாட்சியமாக்கப்பட்டிருந்தன. பாலியல் வன்புணர்வு தொடர்பான உச்சி மாநாடொன்றில் இவ்வாறான சாட்சியங்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாதனவாகும். நான் இந்த நிகழ்வை முற்றாகப் பார்க்க முடியாமல் போனதற்கு தான் காரணமாக இருந்ததாகக் கூறி அந்த இளைஞன் என்னிடம் மன்னிப்புக் கோரினார்.

நாங்கள் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே காத்திருந்த போது, பாதிக்கப்பட்ட சிறிலங்காத் தமிழ் இளைஞனுக்காக நாடகத்தில் நடித்த கலைஞரைச் சந்தித்தோம். இவரைச் சந்திப்பதில் நீங்கள் மகிழ்வடைவதாகக் குறித்த தமிழ் இளைஞரைக் கேட்ட போது, அதற்கு அவர் ஆம் எனப் பதிலளித்தார். நாடகம் இடம்பெறும் போது தான் வெளியேறியதற்காக நாடகத்தை நடித்த கலைஞர்களிடம் தமிழ் இளைஞன் மன்னிப்புக் கோரினார். இந்த இளைஞனை எனது நாடு நன்றாக நடாத்தவில்லை என்பதற்காக நான் இவரிடம் மன்னிப்புக் கோரவேண்டியிருந்தது. இந்த இளைஞன் எனது நாட்டில் புகலிடம் கோருவதில் போராட்டத்தை எதிர்கொள்கிறார். அவர் அண்மையில் தனது பிறந்தநாளன்று குடிவரவுத் தடுப்பு மையம் ஒன்றில் இருந்தபோதும், இவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இவருக்கு கேக் அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

Advertisements