சிறிலங்காவின் மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றவாளி ஓர் அமெரிக்க குடிமகன் ஆதலால்..?

சிறிலங்காவின் கொலை வலயத்திற்கான முக்கிய சூத்திரதாரியாக மாறுவதற்கு முன்னர், கோத்தா அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் லோயலா சட்டக்கல்லூரியில் கணிணி இயக்குனராகப் பணியாற்றிய போது இவர் அமெரிக்கக் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டார்.gota ordered to kill ltte

இவ்வாறு Just Security என்னம் அமெரிக்க இணைய ஆய்விதழின் இணை ஆசிரியரான Ryan Goodman எழுதியுள்ள மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரையில் Sri Lanka’s Greatest War Criminal (Gotabaya) is a US Citizen: It’s Time to Hold Him Accountable  தெரிவித்துள்ளார்.

மே 19 அன்று சிறிலங்காவில் அதன் உள்நாட்டுப் போர் வெற்றி கொள்ளப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 தொடக்கம் 70,000 வரையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சிறிலங்காவில் 2009ல் யுத்தம் முடிவடைந்த போது, அமெரிக்க அரசாங்கத்தால் சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் அறிக்கையிடப்பட்டன. இந்த வாரம் அமெரிக்க அரசாங்கம் சிறிலங்கா தன்னால் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

இதேபோன்று கடந்த நான்கு ஆண்டுகாலப் போர் வெற்றி நிகழ்வின் போதும் அமெரிக்க அரசாங்க உறுப்பினர்கள் சிறிலங்கா தொடர்பில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதற்கப்பால் சிறிலங்கா விடயத்தில் மேலும் பயனுள்ள நகர்வை அமெரிக்காவால் செய்ய முடியும். அதாவது அமெரிக்காவின் நீதித் திணைக்களத்தின் போர்க் குற்றப் பிரிவால் சிறிலங்காவுக்கு எதிராக ஏதாவது நகர்வை மேற்கொள்ள முடியும்.

போரின் இறுதிக்கட்டத்தின் போது சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தவர், சிறிலங்கா அதிபரின் சகோதரரும் தற்போதைய பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச ஆவார். கோத்தபாய இராணுவப் படைகளால் முன்னெடுக்கப்பட்ட யுத்த முனைப்புக்களை மேற்பார்வை செய்ததோடு மட்டுமல்ல, கட்டளைகளுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய அனைத்துலக சட்டத்தையும் மீறியிருந்தார். தமிழ் அரசியற் தலைவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் இராணுவத்தில் சரணடைந்த போது இவர்களைக் கொலை செய்யுமாறு கோத்தா உத்தரவிட்டிருந்தார். இதற்கான சாட்சியங்களும் காணப்படுகின்றன. போர் தீவிரம் பெற்றிருந்த போது, போர் வலயங்களில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக அப்பாவிப் பொதுமக்கள் இலக்கு வைத்துப் படுகொலை செய்யப்படுவதற்கும் கோத்தா பொறுப்பாளியாவார்.

இவ்வாறான ஒரு குற்றவாளியைப் பற்றி அமெரிக்கர்கள் கவனத்திற் கொள்ளவேண்டும் என்பதற்கான காரணம் என்ன? இங்கு ஒரு அசிங்கமான இரகசியம் மறைந்துள்ளது. அதாவது கோத்தா எங்களில் [அமெரிக்கர்களில்] ஒருவர். சிறிலங்காவின் கொலை வலயத்திற்கான முக்கிய சூத்திரதாரியாக மாறுவதற்கு முன்னர், கோத்தா அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் லோயலா சட்டக்கல்லூரியில் கணிணி இயக்குனராகப் பணியாற்றிய போது இவர் அமெரிக்கக் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள கோத்தபாயவுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அமெரிக்காவின் போர்க் குற்றச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட முடியும். கோத்தாவுக்கு எதிராக மிகவிரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக்கூடாது. இவ்வாறான ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கான தகைமையைக் கொண்டிருந்தும் அதனை நாங்கள் செய்யாவிட்டால் அமெரிக்கா தனது நிலையைக் குழிதோண்டிப் புதைப்பதாகவே கருதப்படும். சிறிலங்கா தன்னால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டிய காலப்பகுதி இதுவாகும். குறிப்பாக ராஜபக்ச அரசாங்கமானது நம்பகமான போர்க் குற்ற விசாரணைகளை மறுத்துவரும் இக்காலப்பகுதியில் அமெரிக்கா கோத்தாவுக்கு எதிராக பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.

அமெரிக்கா அரசாங்கம் சிறிலங்கா தொடர்பில் பயனுள்ள நகர்வை எட்டாவிட்டால், ஏனைய உலக நாட்டு இராணுவங்களுடன் இணைந்து பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன என்கின்ற ஒரு எதிர்மறையான சமிக்கையை இது உருவாக்கும். கோத்தாவின் போர் முன்னெடுப்புக்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும் என்பதை அமெரிக்காவானது தற்போது இந்த உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையுள்ளது. கோத்தா மீதான போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

கோத்தா மீது பல்வேறு குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்டளைப் பொறுப்பாளி, ‘வெள்ளைக் கொடி’ விவகாரத்திற்கு கட்டளைகளை நேரடியாக வழங்கியமை, வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களுக்கு நேரடியாகக் கட்டளைகளை வழங்கியமை, பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடாத்துவதற்கான கட்டளைகளை வழங்கியமை போன்றன கோத்தா மீது முன்வைக்கபட்டுள்ள பிரதான போர்க் குற்றங்களாகும்.

போரில் பங்குகொண்ட இரண்டு தரப்பினர்களும் பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளனர் எனவும் ஆனால் சிறிலங்கா அரசாங்கப் படைகள் திட்டமிடப்பட்ட மீறல்களைப் புரிந்ததாகவும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் வல்லுனர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிலங்காப் படைகளுக்கு பாதுகாப்புச் செயலர் என்ற ரீதியில் கோத்தபாய கட்டளைகளை வழங்கியிருந்தார். ஆகவே கோத்தா கட்டளைகளை வழங்கியவர் என்கின்ற குற்றச்சாட்டில் பொறுப்பளிக்க வேண்டிய தேவையுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையானது திட்டமிடப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான போர்க் குற்றங்கள் என வரையறுக்கப்படுவதுடன், இவற்றுக்கான ஆதாரங்களும் உள்ளதாக ஐ.நா வல்லுனர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்த சிறிலங்காப் படைகளை கோத்தா தனது கட்டளையின் கீழ் செயற்படுத்தினார் என்பது பின்வரும் நான்கு சாட்சியங்கள் மூலம் ஆதாரப்படுத்தப்படுகிறது.

01. “ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு நாளும் சிறிலங்கா இராணுவ உயர் மட்டங்களுடன் கலந்துரையாடுவதுடன் போர் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்கிறேன். முன்னுரிமைகளை புரிந்துகொள்ளுதல், போர் வெற்றிக்கு உண்மையில் என்ன தேவை என்பதை ஆராய்ந்து இந்த முன்னுரிமைகளை ஒருங்கிணைத்தல் போன்றன பாதுகாப்புச் செயலர் என்ற வகையில் எனது கடப்பாடாகும்” என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியடப்பட்ட நேர்காணல் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச, தான் போர் வெற்றி தொடர்பில் மிகவும் நெருக்கமான முகாமைத்துவத்தை மேற்கொள்வதாக தம்பட்டம் அடித்த போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

02. “சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட நாட்டின் மூத்த நிர்வாகத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைமைகள் இழைக்கப்பட்ட போர் மீறல்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டும்” என அமெரிக்கத் தூதர் பற்றீசியா புற்றேனிஸ் குறிப்பிட்டதாக விக்கிலீக்சில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தூதர் புற்றேனிசின் கருத்தானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செனற்றர் எட் மார்க்கே குறிப்பிட்டிருந்தார்.

03.”வெற்றியின் எட்டு அடிப்படைவாதங்கள் அல்லது பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற ராஜபக்சவின் போர் முறைமை” என இந்திய பாதுகாப்பு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்த விடயத்தை சிறிலங்கா அரசாங்கம் தனது இணையத்தளத்தில் மிகப் பெருமையுடன் வெளியிட்டிருந்தது. இதில் ஆறாவது அடிப்படைவாதத்தில் நிறைவான நடவடிக்கைச் சுதந்திரம் என்பதன் மூலம் கோத்தா எவ்வாறான மிகவும் மோசமான வன்முறைகளைத் தனது படையினர் மூலம் கட்டவிழ்த்து விட்டிருந்தார் என்பதைக் காண்பிக்கிறது.

“பொன்சேகா தனக்குக் கிடைத்த அரசியல் ஆதரவுடன் எந்தவொரு மோசமான விளைவுகளும் ஏற்படாது போரை நடாத்திச் செல்வதற்கான உந்துசக்தியைப் படையினருக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கியிருக்க முடியும். நான்காவது ஈழப்போர் என்பது ஏன் மிகவும் குருதி தோய்ந்த கொடூரமான யுத்தமாக மாறியது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. பொதுமக்கள் கொல்லப்பட்ட போது அதற்கான பொறுப்பை கோத்தா எடுக்கத் தயாராக இருந்தார். இது சிறிலங்கா இராணுவத்திற்கு நம்பிக்கையை வழங்கியது. படையினர் பெற்றிருந்த மிகச் சிறந்த புத்துணர்வு மருந்தாகக் காணப்பட்டது” சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

04. ‘கோத்தாவின் போர்’ என்கின்ற தலைப்பில் வெளியிடப்பட்ட சிறிலங்கா அரசாங்க ஆதரவு நூலில், போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பண்பான இராணுவப் பிரசங்கம் தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளது. “கோத்தாவின் போர் என்கின்ற நூலானது கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைப் பொறுப்பளித்தல் தொடர்பான சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது” என போரின் இறுதிக்கட்டத்தின் போது சிறிலங்காவுக்கான ஐ.நா பேச்சாளராகப் பணிபுரிந்த கோர்டன் வெய்ஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

மே 16, 2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவத்தால் வெற்றிகொள்ளப்பட்ட செய்தியை சிறிலங்கா அதிபர் அறிவித்தார். இதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் காலை 630 மணியளவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்ட அரசியற் தலைவர்கள் உட்பட அவர்களது குடும்பத்தவர் மற்றும் ஏனைய புலி உறுப்பினர்கள் வெள்ளைக் கொடியைக் காண்பித்த வண்ணம் அனைத்துலக இடைத்தரகர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைவதற்காக சென்றுகொண்டிருந்தனர். இவ்வாறு சென்றுகொண்டிருந்த நிராயுதபாணிகளான பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட அனைவர் மீதும் சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அவர்களைப் படுகொலை செய்ததாக ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் படுகொலை செய்யவேண்டும் என கோத்தா உத்தரவிட்டிருந்ததாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்திருந்ததாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அமெரிக்க அரசாங்கத்திடம் தெரிவித்திருந்தது. சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக அமெரிக்கத் தூதருடன் இரகசியப் பேச்சுக்களை மேற்கொண்டதுடன், இது தொடர்பாக ஊடகங்களிலும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சரத் பொன்சேகா, சுயாதீன போர்க் குற்ற விசாரணைக் குழுவின் முன்னாள் இந்தச் சம்பவம் தொடர்பாக சாட்சியம் அளிக்க வேண்டும் என கோத்தா, பிபிசி ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். “சரத்பொன்சேகாவால் இதனைச் செய்ய முடியாது. இவர் போரின் போது கட்டளைத் தளபதியாக இருந்தார். இதுவே இதற்கான காரணமாகும். நாங்கள் அவரைத் தூக்கிலிடுவோம்” என கோத்தா பிபிசி நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். இதன் பின்னர் சரத் பொன்சேகா தேசத்துரோகி எனக் குற்றம்சுமத்தப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.

2011ல், பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையானது, பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் 58வது டிவிசனில் பணியாற்றிய இராணுவ அதிகாரி ஒருவருடன் நேர்காணல் மேற்கொண்டது. “வெள்ளைக் கொடியுடன் வருபவர்களை கைது செய்யாது அவர்களைக் கொல்லுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவிடம், பாதுகாப்புச் செயலர் தொலைபேசி மூலம் கட்டளை வழங்கியிருந்தார். வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு வந்தவர்களை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரிகேடியர் சவீந்திர சில்வா ஆகிய இருவருமே கொலை செய்யுமாறு கட்டளையிட்டனர் என நான் உறுதியாகக் கூறுகிறேன்” என குறித்த இராணுவ அதிகாரி சனல் 04 தொலைக்காட்சி சேவையிடம் குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளைக் கொடி விவகாரத்தின் பின்னர், பிரிகேடியர் சவீந்திர வில்வா மேஜர் ஜெனராலாகப் பதவியேற்றப்பட்டு அமெரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
திட்டமிட்ட ரீதியில் வைத்தியசாலைகள் மீது சிறிலங்கா அரசாங்கம் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் வன்னியிலிருந்த அனைத்து வைத்தியசாலைகளும் மோட்டர் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் சேதமுற்றதாகவும் இவற்றுள் சில மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டதாகவும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்பு வல்லுனர் குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2012 அறிக்கையில் கோரப்பட்டது.

“வன்னியிலுள்ள பெரும்பாலான அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக வைத்தியசாலைகள் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களால் சேதமடைந்தன என ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29 தொடக்கம் பெப்ரவரி 04 வரை ஒவ்வொரு நாளும் சிறிலங்கா இராணுவத்தின் 55வது டிவிசனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை இலக்கு வைக்கப்பட்டு எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதுகாப்பு வலயங்களுக்குள் சிறிலங்கா இராணுவத்தினர் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என கோத்தா ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார். பாதுகாப்பு வலயங்களுக்கு அப்பாலிருந்த அனைத்தும் இராணுவத்தின் இலக்குகளாக இருந்ததாகவும், இந்தவகையில், பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் காணப்பட்ட வைத்தியசாலை சிறிலங்கா இராணுவத்தின் இலக்காகக் காணப்பட்டதாகவும், ஆனால் அந்த நேரத்தில் இந்த வைத்தியசாலை செயற்படவில்லை எனவும் கோத்தா ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். போர் வலயத்திற்கு அப்பாலிருந்த ஒரு வைத்தியசாலை இலக்கு வைக்கப்பட்டதை கோத்தா உறுதிப்படுத்தினாலும் கூட, போர் வலயத்திற்கு வெளியேயும் உள்ளேயும் காணப்பட்ட வைத்தியசாலைகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பது தெளிவாகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் என இனங்காணப்பட்டவர்கள் மீதே இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச 2009 பெப்ரவரி 03 அன்று ஊடகத்திடம் வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்ததார். இதன் பிரகாரம், போரின் போது கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகளே என கோத்தபாய ராஜபக்ச உறுதிப்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.

“அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறுவோர் இனங்காணப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறித்த நாட்டால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அல்லது விரும்பாவிட்டால் அனைத்துலகப் பொறிமுறையின் அடிப்படையில் இதற்கான தீர்வு எட்டப்பட முடியும்” என அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோத்தா சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய முக்கிய நபராகக் காணப்படுகிறார். இந்த நாட்டில் பயனுள்ள பொறுப்பளிப்பு இடம்பெறுவதற்கு கோத்தா தடையாக உள்ளார். இவர் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட வேண்டிய தேவையுள்ளது. கோத்தா பதவியிலிருக்கும் வரை சிறிலங்காவில் நம்பகமான போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்படாது.

“இந்த நாட்டில் எவ்வித விசாரணைகளும் இடம்பெறமாட்டாது. நாட்டில் விசாரணைகளை மேற்கொள்வற்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாட்டில் பிழையான எந்தச் சம்பவமும் இடம்பெறாது. இதுவே எனது கடைசி வார்த்தை” என பிபிசி ஊடகத்திடம் கோத்தா குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான அழைப்பை ஐ.நா மேற்கொள்வதற்கான முயற்சியில் வெள்ளை மாளிகை வெற்றிபெற்றுள்ளது. அமெரிக்க அரசாங்கம் சிறிலங்கா மீதான தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இந்த முயற்சிகளை மேலும் வெற்றியாக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் எத்தகைய நகர்வுகளை எடுக்கவுள்ளது? அதாவது வெளிப்படையாக சிறிலங்கா மீது குற்றவியல் விசாரணையை மேற்கொள்ளுதல் மற்றும் அமெரிக்கா வைத்திருக்கும் முக்கிய தகவல்களை வெளியிடுதல் மூலம் அமெரிக்காவால் தனது முயற்சிகளை வெற்றியடையச் செய்யலாம்.

அமெரிக்க சிறைச்சாலை எப்படியிருக்கும் என்பதை கோத்தா பார்க்க வேண்டுமானால், வெள்ளை மாளிகை, கோத்தா மீதான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதன்மூலம் கோத்தா தனது பதவியிலிருந்து ஓரங்கட்டப்பட முடியும். கோத்தா அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால், கோத்தா மீது அமெரிக்கா தனது சொந்த விசாரணைகளை மேற்கொள்ள முடியும். அமெரிக்க நீதித் திணைக்களத்தால் கோத்தா மீது மேற்கொள்ளப்படும் ஒரு முழுமையான குற்றவியல் விசாரணைக்கு அமெரிக்க அரசாங்க உறுப்பினர்கள் வெளிப்படையாகத் தமது ஆதரவை வழங்கமுடியும். போரின் போது கோத்தாவால் வழங்கப்பட்ட கட்டளைகளை உறுதிப்படுத்தும் தொலைபேசி ஆதாரங்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை அமெரிக்கா வெளியிட வேண்டும்.

கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதல்களை நிறுத்துமாறும், சில வைத்தியசாலைகள் உட்பட பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மே 2009ல் வெள்ளை மாளிகையின் முன்னால் நின்றவாறு அமெரிக்க அதிபர் ஒபாமா கோரியிருந்தார். ஆனால் கோத்தா இந்த எச்சரிக்கையை முற்றிலும் மறுத்திருந்தார். இவ்வாறான ஒரு செய்தியை அசட்டை செய்ததால் சிறிலங்காவில் எத்தகைய பெரிய மிகவும் மோசமான விளைவுகள் இடம்பெற்றுள்ளன என்பதை அமெரிக்க அதிபர் எடுத்துரைப்பதற்கு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள் துணைபோகும் என்பது உறுதியானதாகும்.

Ryan Goodman is co-editor-in-chief of Just Security. Ryan is the Anne and Joel Ehrenkranz Professor of Law at New York University School of Law.

புதினப்பலகை- நித்தியபாரதி.