அகலாத பிளவுகள்

2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இரவு முள்ளிவாய்க்காலின் குறுகிய நிலப்பகுதிக்குள் முடங்கிப் போயிருந்த விடுதலைப் புலிகளின் தலைமை மற்றும் தளபதிகள் தப்பிச்செல்லும் முயற்சிகள் தோல்வி கண்டதுடன், மூன்று தசாப்தகாலப் போருக்கு முடிவு கட்டப்பட்டது. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான அந்தப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் போர் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அந்த இயக்கத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் கூட அழித்து விட்டது.

போர் முடிவுக்கு வந்தவுடன், நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்டி விட்டதாக அரசாங்கம் பிரகடனம் செய்திருந்தது. மூன்று தசாப்தங்களாக பல ஆட்சியாளர்களாலும் செய்ய முடியாமல் போன காரியத்தை தாம் செய்துவிட்டதாகவும் அரசாங்கம் பெருமிதத்துடன் கூறியது. ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வந்தாலும், நிலையான அமைதியைக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்பது காலப்போக்கில் தான் வெளியே தெரியவந்தது. ஒரு போரின் முடிவு என்பது ஒரு அமைதியின் தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், போர் இல்லாத நிலையை முழுமையான அமைதி என்று கருதமுடியாது.isaipriya-1

தனது இவ்வார கொழும்பு நிலவர ஆய்வில்,

இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, அமைதி வந்து விடும் என்று பலரும் கருதினாலும், அதுவே அமைதியை உருவாக்குவதற்காக தொடக்கப் புள்ளியாக கருதப்பட்டாலும், அந்த நிரந்தர அமைதியை உருவாக்குவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என்றே பொதுவாக மதிப்பிடப்படுகிறது. தமிழரின் ஆயுதமேந்திய போர் முடிவுக்கு வந்து விட்டாலும், அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கத்தினால் முடியவில்லை. ஏனென்றால், தமிழரின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்றி, அதற்கான போராட்டத்தை முடித்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் வசமே உள்ளது. இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்விலும் சுமூகமான வாழ்க்கையிலும் தான் நிலையான அமைதி தங்கியுள்ளது. ஆனால், போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகியும் அரசாங்கத்தினால் நிலையான அமைதியை உருவாக்க முடியாமல் போய்விட்டது.

போர் முடிவுக்கு வந்த ஆரம்ப காலங்களில் இராணுவ வழிமுறையின் கீழ், ஆயுதப் போராட்டத்துக்கு தீர்வு கண்ட நாடு என்று சர்வதேச ஊடகங்கள் இலங்கையை பெருமைப்படுத்தியதுண்டு. ஆனால், இப்போது அதே ஊடகங்கள் இராணுவ வழிமுறை மூலம் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவு கட்டிய இலங்கை அரசினால் நிலையான அமைதியைக் கொண்டு வர முடியவில்லை என்று விமர்சிக்கின்ற போக்கை காண முடிகிறது. போர் மூலம் இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்படவில்லை என இன்று உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி, இந்த ஐந்து ஆண்டுகளில் இனங்களுக்கு இடையிலான பிளவுகளில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இனப்பிணக்குகள் என்பது புதிய புதிய வடிவங்களில் இன்னும் ஆழப்படுத்தப்படுகின்றதே தவிர, நிரவப்படவில்லை.

போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம் பிளவுபட்டிருந்த நாட்டை ஒன்றுபடுத்தி விட்டதாகவும் வவுனியாவுக்கு அப்பால் பாஸ் எடுத்துக்கொண்டு செல்லும் யுகத்தை மாற்றி விட்டதாகவும் எல்லைக் கிராமங்கள் என்ற சொல்லையே வழக்கிழந்து போகச் செய்து விட்டதாகவும் அரசாங்கம் பெருமையாக கூறி வருகிறது. போரின் முடிவு அரசாங்கத்துக்கு இத்தகைய பெருமைகளை அளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி என்று நெடுங்காலமாகவே கூறப்பட்டு வந்த இலங்கைத் தீவு இன்று ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே இருந்து வந்த இந்த எல்லையை அரசாங்கம் போர் மூலம் அகற்றியுள்ளது. வடக்கிலுள்ள மக்கள் தெற்கிற்கும் தெற்கிலுள்ள மக்கள் வடக்கிற்கும் கட்டுப்பாடுகளின்றிப் பயணம் செய்ய முடிகிறது. ஆனால், தெற்கினதும் வடக்கினதும் மக்களின் மனோநிலைகளில் எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை.

போரில் தோற்றுப்போன சமூகம் என்ற எண்ணம் வடக்கில் உள்ள தமிழ் மக்களிடம் உள்ளது. போரில் வெற்றி பெற்றவர்கள் என்ற மிதப்பான எண்ணம் தெற்கிலுள்ள மக்களிடம் உள்ளது. இந்த அடிப்படை எண்ணப்பாட்டிலிருந்து விடுபட்டு, இருதரப்பினராலுமே போரின் முடிவு பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதாவது, போர் முடிவுக்கு வந்த மே மாதம் 18ஆம் திகதியை போர் வெற்றி விழாவாக தெற்கிலுள்ள மக்கள் கொண்டாடிக் களிக்கிறார்கள். ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் அவ்வாறே கொண்டாட வேண்டும் என்று அரசாங்கம் நிர்ப்பந்திக்கிறது. ஆனால், வடக்கிலுள்ள மக்களாலோ அவ்வாறு கொண்டாட முடியவில்லை. ஏனென்றால், போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட தமது உறவுகளான மக்களை மறந்து விட்டு, அவர்களால் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட முடியவில்லை. அது மட்டுமன்றி, இந்தப் போரில் கொல்லப்பட்ட உறவுகளைக் கூட நினைவுகூர முடியாதளவுக்கு தடைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். பல்கலைக்கழகம் பூட்டப்பட்டு, பொது இடங்களில் யாரேனும் நினைவுகூரல்களை நடத்தினால் தண்டிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டு, ஒருவித இயல்பற்ற சூழலுக்குள் வடக்கிலுள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்போதெல்லாம், வடக்கிலுள்ள மக்களுக்கு மே – 18, நவம்பர் – 27 போன்ற நினைவு நாட்கள் வரப் போகின்றன என்று முந்திக்கொண்டு நினைவூட்டுவதே அரசாங்கமும் படைத்தரப்பும் தான். இந்த நாட்களில் எந்த நினைவு நிகழ்வு நடத்தப்படக்கூடாது என்று அச்சுறுத்தி அடக்கத் தொடங்க, பழையவை எல்லாமே தமிழ் மக்களுக்கு இயல்பாகவே நினைவுக்கு வந்து விடுகிறது. இம்முறையும் கூட அதுவே தான் நடந்திருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலை இப்போதைக்கு மாறப் போவதுமில்லை. மாறப் போவதற்கான அறிகுறிகளையும் காண முடியவில்லை. என்னதான் எல்லைகளை ஒன்றிணைத்தாலும், வடக்கிலுள்ள மக்களாலும் தெற்கிலுள்ள மக்களாலும் மகிழ்ச்சியிலோ துக்கத்திலோ ஒன்றிணைய முடியவில்லை. மனித வாழ்வில் துக்கமும் மகிழ்ச்சியும் தான் ஒன்றாக இணைந்து பகிர்ந்துகொள்ளவும் கொண்டாடவும் வேண்டிய முக்கியமான இரண்டு நிகழ்வுகள். ஆனால், இந்த அடிப்படை விடயத்தில் கூட தெற்கிலுள்ள மக்களும் வடக்கிலுள்ள மக்களும் ஒன்றிணைய முடியாத வெற்றியைத் தான், அரசாங்கத்தினால், நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. இப்படியான நிலையில் இந்தப் போர் எந்தளவுக்கு அர்த்தபூர்வமான விளைவைத் தேடித்தந்துள்ளது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. வரலாற்றில் எத்தனையோ போர்கள் நிகழ்ந்துள்ளன. போர்களில் ஏதேனும் ஒரு தரப்பு அழிவுகளையும் தோல்விகளையும் சந்திப்பது இயல்பே. அவ்வாறான அழிவுகள், இழப்புகளையெல்லாம் கடந்து அவற்றையெல்லாம் மறந்து இன்று பல நாடுகள், இனங்கள் நட்புறவு கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. ஆனால், இலங்கையில் அத்தகையதொரு நிலை தோன்றுவதற்கான அடிப்படைகளைக் காணமுடியவில்லை.

இந்தப் போருக்கான அடிப்படையே இனப்பிரச்சினை தான். அந்த இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டிருந்தால், போர் ஒன்று இலங்கையில் ஏற்பட்டிருக்காது. அதுபோலவே போருக்குப் பின்னரேனும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டிருந்தால் கூட, இந்த விரிசல் ஆழப்படுத்தப்பட்டிருக்காது. போர் முடிவுக்கு வந்தவுடன், பொறுப்புக்கூறுவதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் முக்கியமானது என்று முதலில் கூறிய நாடு அமெரிக்கா தான். இவையிரண்டும் தவறவிடப்பட்டால், அதுவே இன்னொரு போரை பத்தோ, இருபதோ ஆண்டுகளில் தோற்றுவிக்க காரணமாகி விடும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று உலகில் பொறுப்புக்கூறல் என்பது முக்கியமான வார்த்தையாக மாறியுள்ளது. அதாவது மனித உரிமைகள் என்ற சொல்லுக்கு இணையான மகத்துவம் இதற்கும் உருவாகத் தொடங்கியுள்ளது. இம்மாதம் முதலாம் திகதி நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் பொறுப்புக்கூறலை முன்னிறுத்துவது குறித்த சிறப்புக் கூட்டம் ஒன்றை ஐ.நா. நடத்தியிருந்தது. ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட ஐ.நா.வின் பிரமுகர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். பொறுப்புக்கூறல் என்பது தனி மனித வாழ்விலிருந்து ஐ.நா. வரை அவசியமானது என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது. இலங்கையிலும் போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறப்படுவது முக்கியமானதாக இருந்தாலும், இந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் அதற்கு இடமளிக்கத் தவறிவிட்டது. இதனால், சர்வதேச அளவில் தலையீடுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மட்டுமன்றி, சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படும் நிலைக்கும் இதுவே காரணமாயிற்று. பொறுப்புக்கூறலில் மட்டுமன்றி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் கூட அரசாங்கம் இந்த மூன்று ஆண்டுகளிலும் பெரிதாக எதையும் சாதிக்கத் தவறிவிட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து ஒரு அறிக்கையைப் பெற்றுக்கொண்டுள்ளபோதிலும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் இன்னமும் தயாராக இல்லை. நல்லிணக்கம் என்பது விட்டுக்கொடுப்பில் தான் உருவாக வேண்டும். ஆனால், இரண்டு தரப்புகளுக்கும் இடையில் உள்ள மிகப் பெரிய இடைவெளியை நிரப்ப முடியாமல் உள்ளது. காரணம், தமிழர் தரப்புக்கு அதிகாரமளிக்க சிங்கள மக்களும் அரசாங்கமும் தயாராக இல்லை. அதேவேளை அரசாங்கத்தையோ, சிங்கள மக்களையோ நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. இந்த அவநம்பிக்கை தோற்றம் பெறக் காரணம் கடந்த காலங்களில் ஏமாற்றப்பட்டது தான். இனிமேலும் ஏமாந்துவிடக் கூடாது என்ற எண்ணம் இருதரப்பிடமும் உள்ளது. இரண்டு தரப்புமே விட்டுக்கொடுக்கத் தயாராகிவிட்டால், தான் இடைவெளி குறையும். நல்லிணக்கத்துக்கான கதவுகள் திறக்கும். ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை.

இன்னமும் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளாத போக்கும் படைப் பலத்தை வைத்து அவர்களை அடக்கியாள நினைக்கும் போக்கும் தமிழ் மக்களால் அரச தரப்பு மீது நம்பிக்கை கொள்ளக்கூடிய நிலையை உருவாக்கவில்லை. இத்தகைய இடைவெளிகளைக் குறைக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கே அதிகம் உள்ளது. அதாவது போரில் வெற்றி பெற்ற அரசாங்கமே, தானாக முன்வந்து வடக்கிலுள்ள மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களை அரவணைத்திருக்க வேண்டும். அதனைச் செய்யத் தவறியதால் தான், மே மாதம் 18ஆம் திகதியை புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவு நாளாக வடக்கிலுள்ள மக்கள் கொண்டாடி விடுவார்களோ என்று அஞ்சவேண்டியுள்ளது. அந்த நாளை அரசாங்கம் முப்பதாண்டு காலப் போரில் கொல்லப்பட்ட அனைவருக்குமான நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தியிருந்தால், வடக்கிலுள்ள மக்களும் தெற்கிலுள்ள மக்களுடன் இணைந்திருப்பார்கள். ஆனால், தமிழரின் ஆயுதப் போராட்டம் தோற்றுப்போன அந்த நாளை, வெற்றி விழாவாக கொண்டாடியதால் தான் அவர்களால் தெற்குடன் இணைய முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பெறப்பட்ட வெற்றி என்றே அரசாங்கம் கூறினாலும், அதனை எத்தனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்?

ஏனென்றால், பயங்கரவாதத்துக்கு எதிரான போராக அது இருந்திருந்தால், மே மாதம் 18ஆம் திகதி அரசாங்கம் பெற்ற வெற்றி பயங்கரவாதத்துக்கு எதிராக பெறப்பட்ட வெற்றியாக இருந்திருந்தால், அந்த விழாவில் தமிழர்களும் ஒன்றிணைந்திருப்பார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளாகியும் அரசாங்கத்தின் வெற்றி விழாக்களுக்கு தமிழர்கள் இழுத்துச் செல்லப்படும் நிலையில் இருப்பதும், அந்த நாளில் துக்கம் அனுஷ்டிக்கக் கூட முடியாதளவுக்கு தமிழர்கள் மீது தடைகள் போடப்படுவதும் போரின் வெற்றி ஒட்டுமொத்த இலங்கைக்குமானது அல்ல என்பதையே உறுதிப்படுத்துகிறது. போரில் பெறும் வெற்றியை நிரந்தரப்படுத்துவது தான், முக்கியமானது. ஆனால், அரசாங்கமோ இன்னொரு போராட்டம் தோன்றாமல் தடுப்பதே நிரந்தர வெற்றி என்று கருதுகிறது. ஆனால், நிரந்தர வெற்றி என்பது நிலையான அமைதியை உருவாக்குவதில் தான் தங்கியுள்ளது. அந்த நிலையான அமைதி உருவாக்கப்படாத வரையில் இலங்கைத் தீவு எரிமலையின் மீது தான் குந்தியிருக்க வேண்டியிருக்கும்.

-சஞ்சயன்