செத்த புலியை அடித்து திருப்திப் பட்டுக்கொள்ளும் உலகம்

obama-indiaபுலிகள் மீதான தடையை  நீடித்தது ஏன்?

போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துள்ள நிலையிலும், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை உலகம் முழுவதிலும் நீடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையிலும், இந்தியா, அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை இருந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அண்மையில் வெளியான அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை கூட நீடிப்புச் செய்திருந்தது. புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதன் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்படுவதாகவும், இந்தியாவிலும், இலங்கையிலும் புலிகள் இயக்கம் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆண்டு தோறும் இந்த தடை நீடிப்பை மார்ச் மாதங்களில் வெளியிட்டு வரும், உலக நாடுகளின் தீவிரவாதம் பற்றிய அறிக்கையில் வெளியிட்டு வருகிறது. கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளும், புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், அதன் மீதான தடையை அகற்றத் தயாராக இல்லை. இந்தநிலையில், தான், கடந்த வியாழக்கிழமை (மே 15ம் திகதி) இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகளுக்குத் தடையை நீடிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்கின்றார்

இந்திய மத்திய உள்துறை அமைச்சினால், வெளியிடப்பட்ட அறிக்கையில், 1967ம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 2014ம் ஆண்டு மே 14ம் திகதி தொடக்கம், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை, கடந்த 22 ஆண்டுகளாக நீடிக்கின்ற நிலையில் இந்த தடை நீடிப்பு ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. ஆனால், ஒரேயடியாக 5 ஆண்டுகளுக்கு நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது தான், ஆச்சரியத்தையும், காங்கிரஸ் கட்சியின் பழியுணர்ச்சியையும் வெளிக்காட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவினது இந்தத் தடை பெரிதாக எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. இராணுவ ரீதியாக இலங்கையில் அடியோடு அழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தியாவில் தடை நீக்கப்பட்டு விட்டாலும் கூட, புலிகள் இயக்கத்தினால், வலுப்பெற முடியாது. ஏனென்றால், அதன் தலைமைத்துவக் கட்டமைப்பு அடியோடு பெயர்க்கப்பட்டு விட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர், வே.பிரபாகரன் உள்ளிட்ட அதன் தலைமைத்துவக் கட்டமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதை, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் பின்னர், அதன் தலைமைத்துவத்துக்காக வெளிநாடுகளில் போட்டியிட்டனர் என்பது உண்மை.

 விரிவான ஆய்வில்,

1991ம் ஆண்டு மே மாதம், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, சரியாக ஒரு வருடம் கழித்து, 1992 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிப்புச் செய்யப்பட்டு வந்தது. கடைசியாக, 2012ம் ஆண்டு இந்த தடை நீடிப்பு அறிவிப்பு, இந்திய மத்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தது. அப்போதே, விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த தடை நீடிப்பு அவசியமா என்ற கேள்விகள் எழத் தொடங்கியிருந்தன. குறிப்பாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்து, அதனை விசாரிப்பதற்கான தீர்ப்பாயமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கம், இலங்கையில் அடியோடு அழிக்கப்பட்டு விட்ட போதும், அதன் மீதான தடையை நீடிப்பதற்கு ஒரு காரணத்தைக் கூறவேண்டிய தேவை இந்திய மத்திய உள்துறை அமைச்சுக்கு ஏற்பட்டிருந்தது.

‘இலங்கையில் செயற்படும் விடுதலைப் புலிகள் இயக்கம். இந்தியாவில் ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் கொண்டுள்ளது. எல்லாத் தமிழர்களுக்குத் தனித்தாயகம் (தமிழீழம்) என்ற இதன் கோட்பாடு, இந்தியாவின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலானது. இலங்கையில் 2009இல் விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டு விட்ட போதிலும், ஈழம் என்ற அதன் கோட்பாடு கைவிடப்படவில்லை. ஈழக் கோட்பாட்டை அடைய, ஐரோப்பாவில் இரகசியமாக நிதிசேகரிப்பு மற்றும் பிரசாரங்களில் ஈடுபடுகிறது. எஞ்சியுள்ள புலிகளின் தலைவர்கள் , போராளிகள், உள்ளூரிலும், வெளிநாடுகளிலும், மீண்டும் ஒன்றிணைய முனைகிறார்கள். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்திய அரசியல் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களுமே காரணம் என்று புலம்பெயர் தமிழர்கள் இணைய ஊடகங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். இணையம் மூலமான இத்தகைய பிரசாரங்களால், இந்தியாவில் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகளின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன” என்று தடை நீடிப்புக் காரணம் கூறியிருந்தது மத்திய உள்துறை அமைச்சு. ஆனால், இந்த முறை, இந்த தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்புச் செய்திருப்பதற்கான காரணம் என்னவென்று மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கம் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் கடைசி, வாழ்நாள் காலத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாக, 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில் தான், புதுடெல்லி இந்த அறிவிப்பை வெளியிட்டது. இது முற்றிலும் அரசியல் ரீதியான நடவடிக்கை என்பதுடன் – காங்கிரஸ் அரசாங்கத்தின் பழியுணர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இதற்கு முன்னர், விடுதலைப் புலிகள் பலமாக இருந்த பொது கூட, எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐந்து ஆண்டுகளுக்கு தடை நீடிப்புச் செய்யப்பட்டிருக்கவில்லை. திடீரென, தமது ஆட்சியின் கடைசி நாட்களில், காங்கிரஸ் அரசாங்கம், 5 ஆண்டுகள் தடை நீடிப்புச் செய்துள்ளதில் நிச்சயம் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவினது இந்தத் தடை பெரிதாக எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. இராணுவ ரீதியாக இலங்கையில் அடியோடு அழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தியாவில் தடை நீக்கப்பட்டு விட்டாலும் கூட, புலிகள் இயக்கத்தினால், வலுப்பெற முடியாது. ஏனென்றால், அதன் தலைமைத்துவக் கட்டமைப்பு அடியோடு பெயர்க்கப்பட்டு விட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர், வே.பிரபாகரன் உள்ளிட்ட அதன் தலைமைத்துவக் கட்டமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதை, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் பின்னர், அதன் தலைமைத்துவத்துக்காக வெளிநாடுகளில் போட்டியிட்டனர் என்பது உண்மை. ஆனால், இப்போது, அவர்களும் கூட அடக்கி வாசிக்கவே முனைகின்றனர்.

புலிகள் மீது தடை நீக்கப்பட்டாலும் கூட வெளிப்படையாக முன்வந்து அதற்குத் தலைமை தாங்க எவரும் தயாராகவும் இல்லை, அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமிழ் மக்களும் இல்லை என்பதே யதார்த்தம்.

இந்தநிலையில், இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள புலிகள் மீதான தடை, எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், இந்த தடை நீடிப்பு காங்கிரஸ் அரசாங்கத்தின் பழியுணர்ச்சியை, தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆட்சிமாற்றம் ஏற்படப் போகிறது என்று தெளிவாகத் தெரிந்த நிலையில் தான், இந்த ஐந்தாண்டுத் தடையை காங்கிரஸ் அரசாங்கம் பிறப்பித்தது. அடுத்த அரசாங்கம் பதவிக்கு வரமுன்னர், தடை நீடிப்பு அறிவிப்பை வெளியிடுவதானால், வழக்கம்போலவே, இரண்டு ஆண்டுகளுக்கு தடையை நீடித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். ஆனால், ஆட்சியின் கடைசி நாட்களில், 5 ஆண்டுகளுக்குத் தடையை நீடிக்கப்பட்டது. ஏனென்றால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசாங்கம் பதவியேற்றும் வரை இந்த தடை நீடிக்க வேண்டும் என்பது தான்.

பாஜக அரசாங்கம் பதவியேற்றால், சிலவேளைகளில், புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிக்காமல் விடக் கூடும் என்ற அச்சம், காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளது. பாஜக அரசாங்கம், புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க முனையாது, ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீடிப்புச் செய்யும் கால முறை வரும் போது, நீடிப்புச் செய்யாமல் ஒதுங்க முடியும்.

அது சர்ச்சையை ஏற்படுத்தாது.

ஆனால், தடை அறிவிப்பை ரத்துச் செய்ய முயன்றால் அது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தும்.

இதனால் தான், அடுத்து பதவியேற்கும் அரசாங்கத்தின் காலத்துக்கும் சேர்த்து, தடையை நீடித்துள்ளது மன்மோகன்சிங் அரசாங்கம்.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்பதில், இந்தியா உறுதியோடு இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான், போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போதும், காங்கிரஸ் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புலிகள் மீதான தடை விடயத்தில் மட்டுமன்றி, ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு எதிராக, நடந்து கொண்ட விதத்திலும், காங்கிரஸ் அரசின் பழியுணர்ச்சி ஏற்கனவே வெளிப்பட்டிருந்தது. அதேவேளை, மன்மோகன்சிங் அரசாங்கம், புலிகள் மீதான தடை நீடிப்பு விவகாரத்தில் மட்டுமன்றி, இந்திய இராணுவத் தளபதி நியமனத்திலும் குழப்பங்களை ஏற்படுத்தி விட்டே செல்கிறது.

அடுத்த இந்திய இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுக்காவை, கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் நியமித்துள்ளது மன்மோகன்சிங் அரசாங்கம்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

இராணுவ ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்ட ஒருவர், பதவி உயர்வுக்குத் தடைவிதிக்கப்பட்ட ஒருவரை, இராணுவத் தளபதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று, அதுவும், மன்மோகன்சிங் அரசின் கடைசி நாட்களில் இதற்கான முடிவு எடுக்கக் கூடாது என்றும் கடுமையான எதிர்த்தது.

இன்னொரு நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து விட்ட நிலையில் – அதில் மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பு என்னவென்று வெளிவருவதற்கு முன்னர், கொள்கை ரீதியான முடிவை எடுக்கும் அதிகாரம் இல்லை என்ற போதிலும், இராணுவத் தளபதி நியமன விவகாரத்திலும் குழப்பம் விளைவித்துள்ளது மன்மோகன்சிங் அரசாங்கம். இந்திய இராணுவத் தளபதி நியமன விடயத்திலேயே இவ்வாறு நடந்து கொண்ட இந்திய மத்திய அரசு, விடுதலைப் புலிகள் மீதான தடை விவகாரத்தில் இவ்வாறு நடந்து கொண்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதேவேளை, தமிழரின் அரசியல் போராட்டம், விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து கைமாற்றப்பட்டு ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், அதன் மீது தடையை நீடித்து திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையில், தான் உலகம் உள்ளது. இதனை செத்த பாம்பை அடித்து திருப்திப்பட்டுக் கொள்பவர்களின் செயலுக்கே ஒப்பாக கூறமுடியும்.

-சுபத்திரா