இந்தியத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா?

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் இந்திய அரசியல் தற்போது மிக சூடாக மாறிஇருக்கின்றது. பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மே மாதம் பிற்பகுதியில் வெளியிடப்பட இருக்கின்றன. இந் நிலையில் தமிழ் மக்கள் தமது அரசியலில் ஏதாவது சாதகமான மாற்றங்களை இந்திய தேர்தல் முடிவுகள் கொண்டு வருமா என்ற அங்கலாய்ப்பில் அத் தேர்தல் முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.India congress Cartoon

2009ம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இதை விட பன்மடங்கு அதிக ஆவலோடும் உணர்வோடும் எதிர்பார்த்திருந்தார்கள். காரணம் ஒரு சில சதுரகிலோ மீற்றர்களே கொண்ட ஓர் சிறிய நிலப்பரப்பிற்குள் பல லட்சக்கணக்கான மக்களும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை இராணுவத்தால் முற்றுகை இடப்பட்டிருந்த நேரமது. இந்திய ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தையும் முற்றுகைக்குள்ளான பல லட்சக்கணக்கான தமிழ் மக்களையும் பாதுகாக்க உதவும் என்ற வேணவாவில் இந்த ஆட்சி மாற்றத்தை முழுத் தமிழினமும் எதிர்பார்த்திருந்தது என்பது ஓர் மறக்கமுடியாத உண்மை.

அந்தளவு எதிர்பார்ப்பு தற்போது தமிழ் மக்களிடத்தில் இல்லாது விட்டாலும் இந்திய தேர்தல் முடிவுகள் எமக்கு ஓர் சாதகமான அரசியல் மாற்றத்தை கொண்டுவராதா?என்ற ஓர் அங்கலாய்ப்பு இருக்கவே செய்கின்றது.

இந்திய தேர்தல்களத்தை அவதானிக்கும் போது பெரும்பாலும் இந்தியாவில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகிவிட்டது. பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்ற மோடி பிரதமராவார் என்பதே பலரதும் கணிப்பு. தற்போது உள்ள கேள்வி என்னவெனில் மத்தியில் பா.ஜ.க தனித்து ஆட்சியைக் கைப்பற்றுமா அல்லது கூட்டணி ஆட்சி தான் வரப்போகின்றதா என்பதே. எது எவ்வாறெனினும் காங்கிரஸ் ஆட்சி கவிழப்போகிறது என்பது தமிழ் மக்களிற்கு இனிப்பாகத்தான் இருக்கும்.

உண்மையில் இந்திய ஆட்சி மாற்றம் தமிழர் அரசியலில் வசந்தத்தை கொண்டுவருமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. இந்திய ஆட்சி மாற்றம் என்பது தமிழர் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என்பது தான் “நம் தேசத்தின்” கணிப்பு. காரணம் இந்திய ஆட்சி மாற்றம் இந்திய வெளிவிவகார கொள்கையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தாது என்பது தான் யதார்த்தம். இந்தியா தன்னை உலக வல்லரசாக மாற்றிக் கொள்ள பகீரத பிரயத்தனம் செய்யும் ஓர் நாடு. உலக வல்லரசாக மாறுவதற்கு நாடுகளுக்கிடையிலான ப+கோள அரசியலிலும் உறவுகளிலும் ஓர் திடமான மாறாத நீண்டகால பார்வை, கொள்கை இருத்தல் என்பது அவசியம்.

வல்லாதிக்கப் போட்டிக்குள் நுழைந்து விட்ட இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் வெளிவிவகார கொள்கை என்பது ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து மாறி இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கரங்களிற்கு சென்று பலகாலம் ஆகிவிட்டது. காரணம் 5 ஆண்டுகளிற்கு ஒருமுறை மாறப்போகின்ற ஆட்சியாளர்களால் அடிக்கடி இந்திய வெளியுறவுக் கொள்கைகள் மாற்றப்படுமாயின் வல்லாதிக்க கனவிலிருந்தும் , போட்டியிலிருந்தும் இந்தியா வெளியே வீசப்படும் என்பது மட்டுமல்ல மிகப்பெரிய தேசமான இந்தியாவின் ஒருமைப்பாடும் பாதுகாப்பும் கூட கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடும். ஆக இந்தியாவை இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டாலென்ன. தமிழ்மக்களின் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படப்போவதில்லை என்றே “ நம்தேசம் “ கருதுகின்றது.

தமிழ் மக்களின் அரசியலில் சாதகமான மாற்றங்கள் உருவாக வேண்டுமானால் இந்திய,மற்றும் சர்வதேச நாடுகளின் வெளிவிவகார கொள்கைகளுடன் போட்டியிடக்கூடிய ஓர் திடமான வெளிவிவகாரக் கொள்கை என்பது தமிழ் மக்களின் அரசியல் உயர் பீடத்தினால் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முதலில் தமிழ் மக்கள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய ஒர் அரசியல் உயர்பீடம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய வெளிவிவகாரக் கொள்கை என்பது தமிழ் மக்களின் அரசியலில் எல்லாவற்றையும் விட பாரிய தாக்கத்தினை செலுத்தும் ஒன்றாகும். இந்திய வெளிவிவகாரக் கொள்கையை எமக்கு சாதகமாக மாற்ற எமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் தமிழ் நாட்டுத் தொப்புள் கொடி உறவுகள்தான்; தமிழ்நாட்டின் இலங்கைத்தமிழர் சார் அரசியலானது தமிழக அரசியல் வாதிகளின் கைகளைத் தாண்டி வெளியில் வரவேண்டும். அப்போது தான் தமிழகத்தில் ஏற்படக்கூடிய எழுச்சியை ஓர் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாத நிலைமை உருவாகும். ஊழல் மோசடி மிக்க தமிழக அரசியல் வாதிகளின் கைகளில் இலங்கைத் தமிழர் சார் அரசியல் விடப்படுமாக இருந்தால் அங்கு ஏற்படக்கூடிய எழுச்சி என்பது மறுகணமே புஸ்வாணமாக மாறும் ஆபத்து உள்ளது.

தமிழகத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய எழுச்சியானது இந்திய வெளிவிவகாரக் கொள்கைளை மாற்றும் அளவி;ற்கு வலுப்பெற வேண்டும். அதை உருவாக்கும் அளவிற்கு தமிழ் மக்களின் வெளிவிவகார கொள்கையும் அதனைச் செயற்படுத்தும் திறனும் இங்கு உருவாகவேண்டும்.

நன்றி
நம்தேசம்

Advertisements