திறக்கப்படும் நிழல் யுத்த களம்

நவகால உலக அரசியலிலும் சரி, பண்டைக் கால உலக அரசியலிலும் சரி, நாடுகளுக்கிடையே நிழல் யுத்தம் நடைபெறுவது என்பது வழமையான ஒன்றுதான். ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் மரபுவழி யுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து நிழல் யுத்தத்தில் ஈடுபடுவதற்குப் பல காரணங்கள் இருக்கும். தத்தமது ஆயுதப் படைகள் தரப்பில் ஏற்படும் இழப்புக்களை தவிர்த்தல், நேச நாடுகளினது அல்லது நடுநிலையான நாடுகளினது உதவியை எதிரி நாடு பெறுவதற்கு தேவையான நியாயப்பாட்டை இல்லாதொழித்தல், மரபுவழி யுத்தத்தால் தமது நாட்டின் பொருண்மிய நலன்களுக்கு ஏற்படக்கூடிய நேரடிப் பாதிப்புக்களைத் தவிர்த்தல் எனப் பல்வேறு காரணங்களுக்காக நிழல் யுத்தத்தில் நாடுகள் ஈடுபடுவதுண்டு.

uno dead org

கிறிஸ்துக்கு முன் ஐந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முன்னணி அரசுகளாக விளங்கிய ஏதென்ஸ், ஸ்பார்ற்ரா ஆகிய இரு கிரேக்க அரசுகளுக்கிடையே நடைபெற்ற பெலோபொனீசியன் யுத்தத்தின் பெரும்பாலான பகுதி நிழல் யுத்தமாகவே வடிவம் பெற்றிருந்தது என்பார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இதேபோன்றதே கிறிஸ்துவுக்குப் பின் பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகளில் தென்னாசியாவில் சோழப் பேரரசுக்கும், பாண்டியப் பேரரசுக்கும் இடையில் நடைபெற்ற நீண்டகால யுத்தமாகும். இவ் யுத்தத்தின் பெரும்பாலான பகுதி ஈழத்தீவிலேயே நடைபெற்றது. அதிலும் சோழர்களுக்கு எதிரான நிழல் யுத்தத்தில் ஈழத்தின் தென்கோடியில் அன்று அமைந்திருந்த உரோகணை சிங்களச் சிற்றரசையே தமது மையக் களமாகப் பாண்டியர்கள் பயன்படுத்தினார்கள்.

இவ்வாறான நிழல் யுத்தம் ஒன்று மீண்டும் தென்னாசியக் களத்தில், அதுவும் ஈழத்தீவை மையப்படுத்தி, திறக்கப்பட இருப்பதற்கான அறிகுறிகள் அண்மைக் காலங்களில் தென்படத் தொடங்கியுள்ளன. நவகாலத் தென்னாசியப் பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே நிழல் யுத்தங்கள் நடைபெறுவது என்பது புதிய விடயம் அல்லவே. 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாளன்று வங்கதேசத்திற்குள் இந்தியப் படைகள் நுழைவதற்கு முன்னர் வங்கதேச விடுதலை இயக்கமான முக்தி பாகினி அமைப்பை மையப்படுத்தி இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஓர் நிழல் யுத்தம் நடைபெற்றது. அதேபோன்று 1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29ஆம் நாளன்று இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு முன்னர் ஈழத்தீவையும், தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் மையப்படுத்தி இந்தியாவிற்கும், மேற்குலகிற்கும் இடையில் நடைபெற்றதும் ஒரு நிழல் யுத்தமே. ஈழத்தீவில் நடைபெற்ற நேரடி யுத்தத்தில் அன்று தமிழர்களும், சிங்களவர்களும் மோதிக் கொண்டாலும், அதில் இந்தியாவும், மேற்குலகமே (அப்பொழுது மேற்குலகின் நேச நாடாகப் பாகிஸ்தான் விளங்கியது) குளிர்காய்ந்தன.

பனிப்போர் முடிவுக்கு வந்து இரண்டு தசாப்தங்கள் கடந்து விட்டாலும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பகைமை இற்றைவரைக்கும் முடிவுக்கு வந்துவிடவில்லை. 1990களின் முற்பகுதியில் எழுச்சி கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதம், பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு எதிரான நிழல் யுத்தத்தை முன்னெடுப்பதற்கான ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருக்கின்றது.

இவ்வாறான பின்புலத்திலேயே ஈழத்தீவில் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான தகவல்களும், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தளமாக இலங்கையை பாகிஸ்தான் பயன்படுத்துவது பற்றிய விபரங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஈழத்தீவில் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் இயங்குவது என்பது இன்று நேற்று கண்டறியப்பட்ட விடயம் அல்ல. 1990ஆம் ஆண்டு யூன் மாதம் 10ஆம் நாளன்று இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்ததை தொடர்ந்து தென்தமிழீழத்தில் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம் ஆயுதக் குழு ஒன்று தோற்றம் பெற்றது. இந்தியப் படைகளின் காலத்தில் தென்தமிழீழத்தில் முகாம்களுக்குள் முடங்கியிருந்த சிங்களப் படைகளுக்கு தகவல் கொடுப்பவர்களாக விளங்கிய முஸ்லிம் உளவாளிகளையும், காடையர்களையும் உள்ளடக்கித் தோற்றம் கொண்ட இக்குழுவிற்குத் தேவையான ஆயுத உதவிகளையும், பயிற்சிகளையும் அப்போதைய பிரேமதாசா அரசாங்கம் வழங்கியிருந்தது. இக்குழுவுக்கு மேலதிகமாக தென்தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையன்றும், சிங்கள ஆயுதப் படைகளில் முஸ்லிம் அணிகளும் இருந்தன. இம்மூன்று இஸ்லாமிய ஆயுதப் பிரிவுகளால் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தென்தமிழீழ மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்டனர்.

வடதமிழீழத்திற்குள் இப்பிரிவுகள், அதுவும் ஜிகாத் குழு, ஊடுருவ முற்பட்ட பொழுதே, வடதமிழீழ மக்களினதும், முஸ்லிம்களினதும் பாதுகாப்புக் கருதித் தற்காலிகமாக முஸ்லிம்களை புத்தளத்திற்கும், தென்னிலங்கைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுப்பி வைத்தார்கள். இதன் மூலம் தென்தமிழீழத்தில் முஸ்லிம் ஆயுதப் பிரிவுகளால் நிகழ்த்தப்பட்டது போன்ற தமிழினப் படுகொலைகள் வடதமிழீழத்தில் நடைபெறாது தடுக்கப்பட்டன. வடதமிழீழத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது பற்றிக் கூக்குரல் எழுப்புபவர்கள் தென்தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு முஸ்லிம் ஆயுதப் பிரிவுகளால் இழைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றி வாய்திறப்பதில்லை என்பது வேறு கதை.

1995ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தென்தமிழீழத்தின் பல பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து ஓய்ந்திருந்த இஸ்லாமிய ஆயுதப் பிரிவுகளின் நடவடிக்கைகள், 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து மீண்டும் தீவிரமடையத் தொடங்கின. ஒருபுறம் பேச்சுவார்த்தைகளில் மூன்றாவது தரப்பாக முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் தென்தமிழீழத்தில், அதுவும் திருமலை மூதூர், மட்டக்களப்பு வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் கட்டவிழ்த்து விட்டன.

26.06.2002 அன்று மூதூரில் உள்ள தமிழ்க் குடியிருப்புக்கள் மீது ‘ஒசாமா அணி’ என்று அழைக்கப்பட்ட இஸ்லாமிய ஆயுதக் குழு ஒன்றினால் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. இதன்பொழுது வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரின் இல்லமும், அவரால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகின. அத்தோடு அப்பொழுது ஊடகவியலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது பற்றி கிழக்கிலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் துணைத் தலைவராக விளங்கிய நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களால் அப்பொழுது பகிரங்க அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 28.06.2002 அன்று மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழர்களை இலக்கு வைத்து முஸ்லிம் ஆயுததாரிகளால் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சிறீலங்கா அரசாங்கத் தரப்பின் ஒரு பிரிவாக (மூன்றாவது தரப்பாக அல்ல) முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து இவ் இஸ்லாமிய ஆயுதக் கும்பல்களின் வன்முறை நடவடிக்கைகள் தணிந்திருந்தாலும், தென்தமிழீழத்தில் அவற்றின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் நாளன்று கருணா கும்பல் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து தூசி தட்டப்பட்ட இஸ்லாமிய ஆயுதப் பிரிவுகள், ஜிகாத் குழு என்ற பெயரில் மீண்டும் ஓரணியாக சீரமைக்கப்பட்டன. அப்பொழுது ஆட்சியிலிருந்த சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம், இதற்குத் தேவையான முழு ஏற்பாடுகளையும் மேற்கொண்டது. இதன் பின்னர் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாளன்று சிறீலங்காவின் அதிபராகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச, தனது சகோதரர் கோத்தபாயவின் நேரடி நெறியாட்சியின் கீழ் இக்கும்பலைக் கொண்டு வந்தார். இவ் இஸ்லாமிய ஆயுதக் கும்பலின் செயற்பாடுகள் பற்றிய துல்லியமான தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் திரட்டப்பட்டு, 2006ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாளன்று ஜெனீவாவில் நடைபெற்ற போர்நிறுத்த அமுலாக்கப் பேச்சுவார்த்தைகளின் பொழுது நோர்வே உட்பட இணைத்தலைமை நாடுகளிடம் கையளிக்கப்பட்டன.

இவ் இஸ்லாமிய ஆயுதக் குழு சிறீலங்கா அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கினாலும், இதற்கு தேவையான இதர உதவிகளை பாகிஸ்தான் போன்ற நாடுகள் வழங்கி வருவது உலகறிந்த இரகசியம். அதுவும் 1990ஆம் ஆண்டு பிரேமதாசா அரசாங்கத்தால் ஜிகாத் கும்பல் உருவாக்கப்பட்ட பொழுது, அதற்குத் தேவையான நிதியுதவிகளை பாகிஸ்தான் மட்டுமன்றி அப்பொழுது சதாம் உசேனின் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக்கிய அரசாங்கமும் வழங்கியது. சதாமின் உதவிகளுக்கான நன்றிக்கடனாக மட்டக்களப்பில் ‘சதாம் உசேன்’ கிராமம் என்ற பெயரில் கிராமம் ஒன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அப்பொழுது உருவாக்கப்பட்டது. இக்கிராமம் இன்றும்கூட இருக்கின்றது.

இவ்வாறு பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளின் நிதியுதவியுடனும், கோத்தபாயவின் நெறியாட்சியின் கீழும் ஜிகாத் குழு இயங்குவதோடு, சிறீலங்கா தரைப்படையின் படையப் புலனாய்வுப் படையணியாக விளங்கும் எம்.ஐ.சி என்ற பிரிவிலும், சிறீலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவான எஸ்.ஐ.எஸ் என்ற உளவு வலையமைப்பிலும் முக்கிய பொறுப்புக்களை முஸ்லிம் அதிகாரிகளே வகித்து வருகின்றனர்.

தவிர கொழும்பு புளேர்ஸ் வீதியில் இயங்கும் பாகிஸ்தானிய தூதரகத்தில் முக்கிய பொறுப்புக்களை அந்நாட்டின் புலனாய்வு வலையமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் அதிகாரிகளும், உயர்நிலை படையதிகாரிகளுமே வகிக்கின்றன. குறிப்பாக 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிறீலங்காவிற்கான பாகிஸ்தானிய தூதுவராக விளங்கிய பசீர் வலி முகமட் என்பவர் ஐ.எஸ்.ஐ அமைப்பின் முக்கிய அதிகாரியாவார். இவரை இலக்கு வைத்து 14.08.2006 அன்று கொழும்பில் கிளைமோர் தாக்குதல் ஒன்றும் நிகழ்த்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலைத் தமிழீழ விடுதலைப் புலிகளே நிகழ்த்தியதாக உடனடியாகவே சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த பொழுதும், இத்தாக்குதல் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்டது என்று அப்பொழுது பசீர் வலி முகமட் அவர்களே தெரிவித்திருந்தார்.

இப்பொழுது சிறீலங்காவிற்கான பாகிஸ்தானிய தூதுவராக விளங்கும் குவாசிம் குரேசி, மேஜர் ஜெனரல் தரத்தைச் சேர்ந்த படையதிகாரியாவார். இவருக்கு அடுத்த தரங்களில் மூன்றாம் நிலை அதிகாரியாக விளங்கும் விசா விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியான அமீர் சுபைர் சித்தீக்கி அவர்கள் ஐ.எஸ்.ஐ அமைப்பின் மூத்த அதிகாரிகளில் ஒருவராவர்.

இவ்வாறான பின்புலத்தில் கடந்த வாரம் சென்னையில் மொகமட் சகீர் உசேன் என்ற இலங்கை இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அமீர் சுபைர் சித்தீக்கீ அவர்களின் கட்டளைக்கு இணங்க தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உளவு நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டு வந்ததாகவும் இந்நபர் வாக்குமூலம் அளித்திருப்பதும் ஆச்சரியப்பட வேண்டிய விடயங்கள் அல்லவே.

கோத்தபாய ராஜபக்சவின் நெறியாட்சியின் கீழ் ஜிகாத் கும்பல் இயங்குவது ஏற்கனவே அறியப்பட்ட தகவல் என்பதால், இந்நபருக்கும், சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் பற்றிய தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளிவந்தாலும்கூட நாம் ஆச்சரியப்பட வேண்டிய தேவையில்லை. தவிர கடந்த மே தினத்தன்று சென்னையில் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு மட்டுமன்றி, சிறீலங்காவின் எஸ்.ஐ.எஸ் அமைப்பும் தொடர்புபட்டிருப்பது பற்றிய ஆதாரங்கள் கூட வெளிவரலாம்.

எது எவ்வாறிருப்பினும் இப்பொழுது ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நிழல் யுத்த களம் ஈழத்தீவை மையப்படுத்தித் திறக்கப்படுகின்றது என்பதுதான் அது. ஆனால், இப்பொழுதுள்ள மில்லியன் டொலர் கேள்வி இதுதான்: ஈழத்தீவை மையப்படுத்திப் பாகிஸ்தான் திறக்கும் நிழல் யுத்த களத்தை எவ்வாறு இந்தியா எதிர்கொள்ளப் போகின்றது? என்பதுதான் அது.

ஏற்கனவே பெங்களூரை மையப்படுத்தி பரந்தன் ராஜனின் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவையும், ஒரிஸ்ஸாவில் மூடுமந்திரமாக இயங்கி வரும் வரதராஜப் பெருமாளின் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி ஒட்டுக்குழுவையும் இயக்கி வரும் இந்தியா, இறுதி யுத்தத்தில் காட்டிக் கொடுப்புக்களில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைக் கொண்ட குழுக்களையும் தமிழகத்தில் சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ளது. இக்குழுக்களுக்கு, வெளிநாடுகளில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீச்சை சிதைக்கும் நோக்கத்துடன் உருத்திரகுமாரனின் தலைமையிலான ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற கும்பலுக்குப் பக்கபலமாக இயங்கி வரும் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலுடனும் நெருங்கிய உறவு உண்டு. எனவே இவற்றைப் பயன்படுத்தி சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான நிழல் யுத்தத்தை எதிர்காலத்தில் இந்தியா தொடங்கினாலும்கூட நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனென்றால் இந்தியப் படைகளின் காலத்தை மீண்டும் ஈழத் தீவில் பிரசவித்து, தமிழீழத்தில் நிரந்தரமாகக் காலூன்ற வேண்டும் என்ற அவா இப்பொழுதும் இந்தியாவிற்கு உண்டு.

அண்மையில் தமிழீழத் தாயகப் பகுதிகளில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ‘புலிவேட்டை’களின் பொழுது கைது செய்யப்பட்டோரில் சிலர் இந்திய உளவு நிறுவனங்களின் கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் எவ்வித தங்குதடையுமின்றி தமிழகத்தில் நடமாடியவர்கள் என்பதும், இவர்களுக்கும் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலின் முக்கிய பிரமுகரான விநாயகம் என்பவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தமையும், இவர்களின் ஆலோசனைக்கு அமையவே கடந்த ஆண்டு போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளைத் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பல் இடைநிறுத்தியதும் தற்பொழுது வெளிவந்துள்ள தகவல்களாகும்.

எனவே இக்கும்பல்களின் நடவடிக்கைகளையிட்டுப் புலம்பெயர்வாழ் தமிழர்கள் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.

– சேரமான்

நன்றி: ஈழமுரசு

Advertisements