சிங்கள – இந்தியப் புலனாய்வு நிறுவனங்களின் நாசகார நிகழ்ச்சித் திட்டம்

தூசி தட்டப்பட்ட உளவு அணிகள்TamilNadu-police-CID-India

சிங்களப் படையாட்சி அடக்குமுறையின் விளைவாகக் குரல்வளை நெரிக்கப்பட்டவர்களாகத் தமிழீழத் தாயக உறவுகள் வாழும் நிலையில், புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு அடுத்தபடியாக தமிழீழ மக்களின் குரலாக விளங்கும் தமிழக மக்களின் குரல் உலகின் எட்டுத் திசைகளையும் சென்றடைவதைத் தடுக்கும் நாசகார நிகழ்ச்சித் திட்டம் ஒன்றைக் காதும் காதும் வைத்தாற்போன்று சிங்கள – இந்தியப் புலனாய்வு நிறுவனங்கள் செயற்படுத்தி வருவது தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

பொங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழு ஆயுததாரிகளையும், வெளிநாடுகளில் உள்ள அக்குழுவின் உறுப்பினர்களையும், ‘அகதி’களாக சென்னையில் முகாமிட்டிருக்கும் ஈழத்தமிழ் ‘ஊடகவியலாளர்கள்’ எனக்கூறப்படும் ஒரு சிலரையும், இறுதிப் போரில் சிங்களத்திடம் சரணடைந்து, புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை சிதைக்கும் நோக்கத்துடன் இந்தியா ஊடாக மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரையும் பயன்படுத்தியே இந்நாசகார நடவடிக்கையை சிங்கள – இந்தியப் புலனாய்வு நிறுவனங்கள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நடவடிக்கையில் நான்கு சிங்கள – இந்தியப் புலனாய்வு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதோடு, இவற்றின் முதன்மை வெளிக்களப் பிரிவுகள் சென்னை, பெங்களூர் ஆகிய தென்னிந்தியத் தலைநகரங்களிலும், இலண்டன், பாரிஸ், கொப்பன்ஹேகன் போன்ற மேலைத்தேயத் தலைநகரங்களிலும் இயங்குவதாக அறியப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்சவின் நேரடி நெறியாட்சியின் கீழ் இயங்கி வரும் எஸ்.ஐ.எஸ் என்ற உளவு அமைப்பினாலும், சிங்கள தரைப்படையின் ஒரு பிரிவாக விளங்கும் எம்.ஐ.சி என்ற ஆங்கில அடைமொழியைக் கொண்ட படையப் புலனாய்வுப் படையணி என்று தமிழில் பொருள்படக்கூடிய புலனாய்வுக் கட்டமைப்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு அணிகள் சென்னை, இலண்டன், பரிஸ், கொப்பன்ஹேகன் ஆகிய நகரங்களில் ‘ஊடக’ மையங்களின் போர்வையில் இயங்கி வருகின்றன.

சென்னையில் உள்ள அணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கிளிநொச்சி இருந்த காலப்பகுதிகளில் தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பணியாளராக விளங்கித் தற்பொழுது தன்னை ஊடகவியலாளராக அறிமுகம் செய்துள்ள ஒருவர் அங்கம் வகிக்கின்றார். இவருடன் இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரும் உள்ளனர்.

இதேபோன்று இலண்டனில் இயங்கும் அணியில் சிங்கள ஊடகம் ஒன்றின் செய்தியாளராக விளங்கும் ‘மெத்தப்படித்த’ கனவான் ஒருவரும், பரிஸ், கொப்பன்ஹேகன் ஆகிய நகரங்களில் இயங்கும் ஏனைய இரு அணிகளில் முன்னாள் போராளிகள் இரண்டு பேரும் முதன்மையானவர்களாக இருக்கின்றனர். இவ்விரு முன்னாள் போராளிகளில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றியவர். இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த இந்நபர் வாயிலாக 2003ஆம் ஆண்டுக்குப் பின்னரான தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பற்றிய பல அரிய தகவல்களை சிங்களம் பெற்றுக் கொண்டது. அதிலும் இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளால் இழைக்கப்பட்ட இனவழிப்புக் குற்றச்செயல்கள் பற்றிய காணொளி ஆதாரங்கள் பிரித்தானிய, அவுஸ்திரேலிய தொலைக்காட்சிகளில் வெளிவந்த பொழுது, அவற்றை ‘பொய்யாக்குவதற்கு’ தேவையான எதிர்ப்பரப்புரைகளை சிங்களம் முன்னெடுப்பதற்கு இந்நபரே நடுநாயகமாக விளங்கினார். இவரைப் பயன்படுத்தியே மேற்குலக ஊடகங்களில் செவ்வி வழங்கிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், இனவழிப்புச் சாட்சிகள் பற்றிய அவதூறுகளை கனக்கச்சிதமாக சிங்களம் முன்னெடுத்தது. இதன் பின்னர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்நபர், அங்கு சிறிது காலம் இயங்கிய நிலையில் தற்பொழுது மேற்குலகை வந்தடைந்துள்ளார்.

இவை எஸ்.ஐ.எஸ், எம்.ஐ.சி ஆகிய சிங்களப் புலனாய்வு நிறுவனங்களின் தலைமையின் கீழ் இயங்கும் உளவு அணிகள். இவற்றைப் போன்று இந்திய உள்ளகப் புலனாய்வு நிறுவனமான ஐ.பி அமைப்பினதும், வெளியகப் புலனாய்வு நிறுவனமான ‘றோ’ அமைப்பினதும் வழிநடத்தலில் பெங்களூர், இலண்டன் ஆகிய நகரங்களில் மூன்று உளவு அணிகள் இயங்கி வருகின்றன. இதில் ஐ.பி அமைப்பின் வழிநடத்தலில் இயங்கும் இரண்டு அணிகளிலும் அங்கம் வகிக்கும் அனைவரும் ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் உறுப்பினர்கள். தமிழீழ தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் பல தமிழ் இளைஞர்களை உயிருடன் எரியூட்டிக் கொன்ற பரந்தன் ராஜன் என்றழைக்கப்படும் ஞானப்பிரகாசம் ஞானசேகரம் என்பவரின் தலைமையில் இவ்விரு அணிகளும் இயங்குகின்றன. பெங்களூர், இலண்டன் ஆகிய இரு நகரங்களில் இயங்குவதால் இவை இரு அணிகளாக அடையாளப்படுத்தப்பட்டாலும், சாராம்சத்தில் இவ்விரு அணிகளும் ஒரு அணிதான்.

இவற்றில் பெங்களூரில் இயங்கும் அணி பரந்தன் ராஜனின் நேரடி வழிகாட்டலிலும், இலண்டனில் உள்ள உப அணி என்று கூறக்கூடிய அணி, பரந்தன் ராஜனின் வலது கையாகவும், ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் ஐரோப்பியப் பிரதிநிதியாகவும் விளங்கும் முஸ்தபா என்ற போதைப்பொருள் விற்பனையாளரின் தலைமையிலும் இயங்குகின்றன. இவர்களில் பரந்தன் ராஜனுக்கு அவரை வழிநடத்தும் ஐ.பி அமைப்பின் ஒருங்கிணைப்பு அதிகாரியுடன் மட்டுமன்றி அவ் அமைப்பின் பணிப்பாளராக விளங்கும் சயீத் அசீவ் இப்ராஹ்ம் அவர்களுடனும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் ஐ.பி அமைப்பின் நீண்ட காலப் பணிப்பாளராக விளங்கிய எம்.கே.நாராயணனுடன் இருந்தது போன்றதே சயீத் அசீவ் இப்ராஹிமுடனான பரந்தன் ராஜனின் உறவு.

பெங்களூரில் இயங்கும் பரந்தன் ராஜனின் தலைமையிலான அணி தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களைக் குறிவைத்து இயங்க, முஸ்தபாவின் தலைமையிலான இலண்டன் அணி தமிழகத் தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் ஐரோப்பியத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும், ஊடகவியலாளர்களையும் இலக்கு வைத்துத் தனது நாசகார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

கடந்த காலங்களில் இந்திய – சிங்களப் படைகளின் ஒட்டுக்குழுக்களாக விளங்கிய ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணி ஆகியவற்றைத் தமிழ்த் தேசிய நலனைக் கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அனுமதித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, கூட்டமைப்பிற்குள் சித்தார்த்தனின் தலைமையிலான புளட் கும்பலோ, அன்றி பரந்தன் ராஜனின் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் கும்பலோ இணைவதற்கு எள்ளளவும் இடமளிக்கவில்லை.

அதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தை 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில் பரந்தன் ராஜன் வெளியிட்டார். 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் நாளன்று யாழ்ப்பாண நகரத்தை சிங்களப் படைகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஏறத்தாள எட்டு மாதங்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சிக்கு பரந்தன் ராஜனால் தூது அனுப்பப்பட்டது. அக்காலப் பகுதியில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்திப்பதற்கு பரந்தன் ராஜனின் ஆள் ஒருவரால் பல தடவைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டன. சமகாலத்தில் அப்பொழுது பாரிசில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான லோறன்ஸ் கிறிஸ்ரி திலகர் அவர்களைச் சந்திப்பதற்கும் முஸ்தபா அவர்களால் முயற்சி எடுக்கப்பட்டது.

இந்தியாவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவுப்பாலாக விளங்குவதற்கு ஈ.என்.டி.எல்.எவ் விரும்புவதாகவும், புலிகள் இணங்கினால் அதன் வெளிநாட்டுக் கிளைகளின் அரசியற் பிரிவாக செயற்படுவதற்குக்கூட அது தயாராக இருப்பதாகவும் கிளிநொச்சிக்கும், பரிசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தனது தூதுவர்கள் மூலம் பரந்தன் ராஜன் தகவல் அனுப்பினார். சிங்களப் படைகளால் யாழ்ப்பாண நகரம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அழியும் நிலையிலிருந்து தம்மைப் புலிகள் பாதுகாப்பதாயின் இந்தியாவின் சொல்லுக்கு ‘கீழ்ப்படிவதே’ நல்லது என்றும், இந்திய – புலிகள் உறவைப் புதுப்பிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஈ.என்.டி.எல்.எவ் எடுக்கும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பரந்தன் ராஜன் ஆசை காட்ட முற்பட்டார்.

ஆனால் இந்தப் பசப்பு வார்த்தைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மயங்கி விடவில்லை. மாத்தையாவின் தலைமையிலான சதி முறியடிக்கப்பட்ட பின்னர் தமது இயக்கத்திற்குள் ஊடுருவதற்கான புதிய முயற்சியன்றை ஒற்றுமையின் போர்வையில் ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவைப் பயன்படுத்தி இந்திய உளவு நிறுவனங்கள் மேற்கொள்வதாகவே பரந்தன் ராஜனின் தூது முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கருதினார்கள். தவிர இந்தியப் படைகளின் காலத்தில் இழைத்த கொடூரங்களுக்கு எவ்வித பாவ மன்னிப்பையும் பரந்தன் ராஜனோ அன்றி அவரது தூதுவர்களோ கோரவில்லை. விளைவு: பரந்தன் ராஜன் அனுப்பிய தூதுச் செய்திகள் அனைத்தும் பரிசீலனை ஏதுமின்றியே தமிழீழ விடுதலைப் புலிகளால் குப்பையில் வீசப்பட்டன.

இதன் பின்னர் 1997ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடைசெய்த பொழுது, மற்றுமொரு சமரசத் தூது முயற்சியை பரந்த ராஜன் எடுத்தார். அதுவும் எவ்வித பரிசீலனையும் இன்றித் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் சுயரூபம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியது. தமிழ்த் தேசிய எழுச்சியைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் இலண்டனைத் தளமாகக் கொண்டு இவ் ஒட்டுக்குழுவால் உருவாக்கப்பட்ட வானொலி, அரசியல் விவாதம், சனநாயகம், பேச்சுச் சுதந்திரம் ஆகிய கோசங்களை எழுப்பிய வண்ணம் தமிழ்த் தேசவிரோதக் கருத்துக்களை மக்களிடையே விதைக்கும் முயற்சிகளில் இறங்கியது. இதன் உச்சகட்டமாக 2001ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழ்த் தேசிய ஊடகங்கள் மீது சேறுபூசும் முயற்சியில் இக்கும்பலும், அதன் ஊதுகுழலான வானொலி நிறுவனமும் முற்பட்ட பொழுது, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களால் பகிரங்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, இக்கும்பலின் சுயரூபம் தமிழ் மக்களிடையே தோலுரித்துக் காட்டப்பட்டது. அத்தோடு நீலச்சாயம் வெளுத்துப் போன நரியாகத் தனது முகத்திரை கிழிந்த நிலையில் பகிரங்கமாகத் தமிழ்த் தேச எதிர்ப்புப் பரப்புரைகளை இவ் வானொலி முடுக்கி விட்டது.

இதன் பின்னர் ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் தமிழ்த் தேசவிரோதப் போக்கை முழுமையாகத் தோலுரித்துக் காட்டிய சம்பவம் ஒன்று 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாளன்று பொலனறுவையில் நிகழ்ந்தேறியது. அன்று அதிகாலை பொலனறுவை வெலிகந்தை சொருவில், வண்ணத்துறையடி ஆகிய பகுதிகளில் இருந்த கருணா ஒட்டுக்குழுவின் மூன்று முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய சமநேர அதிரடித் தாக்குதல்களில் ஒன்பது ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் உறுப்பினர்கள். ஒருவர் பரந்தன் ராஜனின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய விஜயன் என்றழைக்கப்படும் ராஜேந்திரன் பேரின்பநாதன். மற்றையவர் இந்தியப் படைகளின் காலத்தில் ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் முதன்நிலைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய கவி என்றழைக்கப்படும் செல்லையா குழந்தைவேலு என்பவர். இவர்கள் இருவரும் உமாமகேஸ்வரனால் புளட் கும்பல் உருவாக்கப்பட்ட பொழுது அதில் இணைந்து, பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்று பரந்தன் ராஜனின் தலைமையில் ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.

இத்தாக்குதல் நடவடிக்கை அன்றைய காலகட்டத்தில் கருணா ஒட்டுக்குழுவின் இதயபூமியில் நிகழ்ந்த தாக்குதலாக மட்டுமன்றி, தமிழீழத்தில் மீண்டும் களமிறங்கி இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பரந்தன் ராஜனின் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழு எடுத்த முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையாகவும் அமைந்தது. அத்தோடு, ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் முகத்திரையை முழுமையாகக் கிழித்தெறியும் நடவடிக்கையாகவும் இது அமைந்தது.

இந்நடவடிக்கையை தொடர்ந்து ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான கபிலம்மான் அவர்களின் தலைமையில் சிறப்புப் புலனாய்வு அணி ஒன்றும் நியமிக்கப்பட்டது. இப்புலனாய்வு அணி மேற்கொண்ட புலன்விசாரணைகளின் விளைவாக அக்காலப் பகுதியில் பரந்தன் ராஜனின் அனுசரணையுடனும், இந்தியப் புலனாய்வு நிறுவனங்களின் பாதுகாப்புடனும் பெங்களூரில் கருணா தங்கியிருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டு நோர்வேயிற்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாளன்று ஜெனீவாவில் நடைபெற்ற போர்நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களின் பொழுது தமிழீழ தாயகத்தில் கருணா ஒட்டுக்குழுவுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்த ஈ.என்.டி.எல்.எவ் ஆயுததாரிகளின் விபரமும், அவர்களை ஒருங்கிணைத்த சிங்களப் படையப் புலனாய்வுப் படையணி அதிகாரிகள் பற்றிய தகவல்களும் சிறீலங்கா அரசாங்க தூதுக்குழுவின் முன்னிலையில் நோர்வேயிடம் அறிக்கை வடிவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவால் கையளிக்கப்பட்டது. தவிர கருணாவிற்கும், பரந்தன் ராஜனுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்திக் கொடுத்ததில் இலண்டனில் உள்ள பரந்தன் ராஜனின் வலது கையான முஸ்தபா முக்கிய பங்கு வகித்தமையும் புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பொழுது இயங்கிய இவ் ஒட்டுக்குழுவின் உறுப்பினர்களே இப்பொழுது பெங்களூரிலும், இலண்டனிலும் ஊடக முகமூடி அணிந்து தமிழக மக்களின் குரல் வெளிவருவதைத் தடுப்பதற்கான நாசகார நடவடிக்கைகளை காதும் காதும் வைத்தாற் போன்று மேற்கொள்கின்றனர்.

இவ்விரு அணிகளைப் போன்று இன்னொரு அணியும் இலண்டனில் இயங்கி வருகின்றது. இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ நிறுவனத்தின் கீழ் இயங்கும் இவ் அணிக்கு இலண்டனில் உள்ள கணினி மென்பொருள் பொறியிலாளர் ஒருவர் முதன்மையான பாத்திரம் வகிக்கின்றார். கடந்த காலங்களில் கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டு, பின்னர் தனது பாவங்களைக் கழுவுவதற்காக வன்னி சென்று இரண்டு மடிக்கணினிகளை தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய இவர், தனது கடந்த கால கடன் அட்டை மோசடிகள் காரணமாக இந்தியா செல்ல முடியாத நிலையில் இருந்தார்.

எனினும் ஈ.என்.டில்.எவ் ஒட்டுக்குழுவின் தலையீடு காரணமாக 2010ஆம் ஆண்டு யூன் மாதம் கடன் அட்டை மோசடியாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இவர், டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ‘றோ’, ஐ.பி உளவு நிறுவனங்களின் மேலதிகாரிகளுடன் நடைபெற்ற உரையாடல்களை தொடர்ந்து புலம்பெயர் ஊடகங்களையும், ஊடக அமைப்புக்களையும் உடைக்கும் நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டார். சமநேரத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் வாயிலாகத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடனும் இவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

பாலியல் கிசுகிசுக்களையும், பரப்பரப்பான கற்பனைச் செய்திகளையும் வெளியிடுவதன் மூலம் மக்களிடையே அதிர்வை ஏற்படுத்த முடியும் என்ற நப்பாசையில் இவரால் கட்டாக்காலி இணையம் ஒன்றும் இயக்கப்படுகிறது. இணையத்தளங்களை ஒருங்கிணைத்தல், தமிழ் ஊடகங்களிடையே நட்புறவை ஏற்படுத்துதல் போன்ற கவர்ச்சிகரமான சுலோகங்களை ஏந்திப் பிடித்தவாறு கட்டாக்காலி இணையத்தளங்களைப் பயன்படுத்திப் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசிய எழுச்சியின் வீரியத்தைக் குறைப்பதோடு மட்டுமன்றி, தமிழக மக்களின் குரல் உலகின் எட்டுத் திக்கெங்கும் சென்றடைவதைத் தடுப்பதே இந்நபருக்கு ‘றோ’ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள பிரதான பணிகளாகக் கருதப்படுகின்றது.

ஏற்கனவே பிரித்தானியாவில் சிங்கள உளவு நிறுவனமான எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் இயக்கப்படும் சிங்கள ஊடகத்தின் செய்தியாளரான ‘மெத்தப்படித்த’ கனவானுடனும், ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் பிரித்தானியப் பிரதிநிதி முஸ்தபாவுடனும் ஒருங்கிணைந்தே இந்நடவடிக்கைகளை இந்நபர் மேற்கொண்டு வருகின்றார். இதற்கான சான்றாக இம் ‘மும்மூர்த்திகளும்’ கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்று அண்மையில் இலண்டனில் நடைபெற்றதை இங்கு குறிப்பிடலாம். இம் ‘மும்மூர்த்திகளின்’ உதிரியாக பூகோள-அரசியல் சித்தாந்தம் பேசும் பொறியியலாளர் ஒருவரும் இயங்குவது வேறு கதை.

புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களைக் குறிவைத்து, கே.பியின் வழிநடத்தலில் ‘தலைமைச் செயலகம்’, ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ ஆகிய பெயர்களில் முன்னாள் போராளிகள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், ‘மெத்தப்படித்த’ கனவான்கள் போன்றோரைப் உள்ளடக்கிய இரண்டு கும்பல்களை சிங்களம் இயக்கி வருவது ஏலவே அறியப்பட்ட ஒன்றுதான். ஆனால் தமிழகத்தின் குரல் உலகின் எட்டுத் திக்குகளையும் சென்றடைவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் சென்னை, பெங்களூர், இலண்டன், பாரிஸ், கொப்பன்ஹேகன் ஆகிய நகரங்களில் உளவு அணிகளை சிங்கள – இந்திய உளவு நிறுவனங்கள் இயக்குவது இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளது. இவற்றின் முழுமையான அர்த்தபரிமாணங்கள் வருங்காலத்தில் நிதர்சனமாகும் என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியும்.

– சேரமான்

நன்றி: ஈழமுரசு

Advertisements