சிங்களம் குறிவைக்கும் சொத்துச்சாம்ராஜ்யம்

தமிழீழ தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளைக் குறிவைத்துப் ‘புலிவேட்டையை’ மேற்கொண்டு வரும் சிங்களம், அண்மைக் காலங்களில் தனது ஒக்ரோபஸ் கரங்களை வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.gota ltte drama

2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிகழ்ந்தேறிய கே.பியின் கைது நாடகத்தின் தொடர்ச்சியாக கோலாலம்பூரில் வைத்து ராஜன் என்ற செயற்பாட்டாளர் மலேசிய – சிங்களப் புலனாய்வுப் பிரிவினரின் கூட்டு நடவடிக்கை மூலம் பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான மூன்று வணிகக் கப்பல்கள் சிங்களத்தால் கையகப்படுத்தப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டன. இதனை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என கே.பியால் காட்டிக் கொடுக்கப்பட்ட மேலும் பல இலட்சம் டொலர் பெறுமதியான தமிழ்த் தேசிய சொத்துக்களும் ராஜபக்ச சகோதரர்களால் இனம்காணப்பட்டு சத்தம் சந்தடியின்றி அமுக்கப்பட்டன.

எனினும் இவ்வாறான ஆட்கடத்தல்களும், சொத்து அபகரிப்புக்களும் 2010ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் ஓய்வுக்கு வந்திருந்தன என்றே கூறவேண்டும். கே.பியின் காட்டிக் கொடுப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்த நிலையில் இவை ஓய்வுக்கு வந்தன என நாம் கருத இடமுண்டு. இதன் வெளிப்பாடாகவே 2010ஆம் ஆண்டு யூன் மாதம் கனடா, யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தனது கையாட்களான மருத்துவர்கள் – தொழிலதிபர்களை கே.பி கொழும்புக்கு அழைத்து மந்திரலோசனை நடத்துவற்கு சிங்களம் இடமளித்ததோடு, கிளிநொச்சியில் உள்ள பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வதிவிடத்தை அவருக்குப் பரிசாகவும் வழங்கியிருந்தது.

இருந்த பொழுதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை சுவீகரிக்கும் இவ்வாறான நடவடிக்கைகளையட்டி சிங்களம் முழுமையாகத் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் கே.பியால் காட்டிக் கொடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களில் பெரும்பாலானவை 2003ஆம் ஆண்டின் முதற்கூறு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பிற்கு அவர் பொறுப்பாக இருந்த பொழுது அவருக்கு நெருக்கமாக இருந்து செயற்பட்டவர்களால் கொள்வனவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டவையே.

ஆனால் 2003ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் எவரிடம் இருந்தன என்ற முழுமையான விபரம் கே.பியிற்கு தெரியாது. இதற்குக் காரணம் வெளிநாட்டு வலையமைப்பிற்கான பொறுப்பிலிருந்து கே.பி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது தொடர்பு வலயத்திற்குள் இல்லாதோர் மூலமாகவே தமது வெளிநாட்டு நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். கொள்வனவு நடவடிக்கைகளாக இருந்தாலும்சரி, முதலீட்டு நடவடிக்கைகளாக இருந்தாலும்சரி கே.பியிற்கு தெரியாமலேயே இவற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

அத்துடன் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டங்களால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கருத்திற் கொண்டு வெளிநாடுகளில் நிதிசேகரிப்பிலோ அன்றி பரப்புரை நடவடிக்கைகளிலோ ஈடுபட்டவர்களைத் தவிர்த்தே தமது கொள்வனவுகளையும், முதலீடுகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

தவிர இவ்வாறான நடவடிக்கைகள் 2003ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பாக விளங்கிய அனைத்துலக தொடர்பகத்தால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழீழ நிதித்துறை, அரசியல்துறை, கடற்புலிகள், புலனாய்வுத்துறை ஆகிய கட்டமைப்புக்கள் ஊடாகவும் இவை மேற்கொள்ளப்பட்டன.

இவையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் சொத்துக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை கே.பி அறிந்திருக்காததற்கான காரணங்களாகும். இதனாலேயே கே.பியைப் பயன்படுத்தித் திட்டமிட்டபடி சொத்துச் சுவீகரிப்புக்களை சிங்களத்தால் மேற்கொள்ள இயலவில்லை. ஆனால் இப்பொழுது ஆகூழ் (அதிர்க்ஷ்டம்) மீண்டும் சிங்களத்திற்கு ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். கடந்த ஆண்டு செப்ரம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் போலியான கடவுச்சீட்டில் இலண்டன் செல்ல முற்பட்ட பொழுது கைதாகி மலேசிய குடிவரவுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் மலேசிய – சிங்கள புலனாய்வுப் பிரிவினரின் கூட்டு நடவடிக்கை மூலம் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு கடத்தப்பட்ட நந்தகோபன் என்றழைக்கப்படும் சுப்ரமணியம் கபிலன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் முன்னாள் போராளி மூலமாகவே மீண்டும் சிங்களத்திற்கு ஆகூழ் ஏற்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர், 1990ஆம் ஆண்டு தீவகத்திற்கு பொறுப்பாக விளங்கிய வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களின் மெய்ப்பாதுகாவலராக பணிநியமனம் பெற்றார். அதன் பின்னர் யாழ் மாவட்ட துணைத் தளபதியாக வீ.மணிவண்ணன் அவர்கள் விளங்கிய பொழுதும், 1991ஆம் ஆண்டு யூலை மாதம் ஆனையிறவுச் சமரில் வீ.மணிவண்ணன் விழுப்புண்ணெய்தியதைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தொடர்புப் பிரிவின் பொறுப்பாளராக அவர் திகழ்ந்த பொழுதும், 2003 ஆம் ஆண்டு அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளராக வீ.மணிவண்ணன் நியமிக்கப்பட்ட பொழுதும் அவருடனே நந்தகோபன் பணியாற்றினார்.

2009ஆம் பெப்ரவரி மாதம் சிங்களப் படைகளின் எறிகணை வீச்சில் காயமடைந்த இவர், மே 14ஆம் நாள் வரை முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தார். 2009ஆம் ஆண்டு யூலை மாதம் இலண்டனில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் நிதியுதவி காரணமாக வவுனியா வதைமுகாம்களில் இருந்து குடும்பத்துடன் வெளியில் எடுக்கப்பட்ட இவர், அதன் பின்னர் குடும்பமாக மலேசியாவிற்கு வந்து வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுடனும், தமிழ்த் தேசிய அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

2009 மே 18இற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி வெளிநாட்டில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் போன்றோருடன் தொடர்பைப் பேணியவர் என்ற வகையில் இவரை உயிருடன் பிடித்திருப்பது என்பது சிங்களத்தைப் பொறுத்தவரை மிகப் பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது எனக்கூறலாம். எவ்வாறு கே.பியூடாக 2003ஆம் ஆண்டிற்கு முன்னராக காலப்பகுதிக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளின் அர்த்தபரிமாணங்கள் பற்றிய புரிதலை சிங்களம் பெற்றுக் கொண்டதோ, அதே போன்று நந்தகோபன் ஊடாக 2003 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகள், கொள்வனவுகள், முதலீடுகள் பற்றிய தகவல்களையும், 2009 மே 18இற்குப் பின்னரான அரசியல் நடவடிக்கைகள் பற்றிய தரவுகளை சிங்களம் கறந்தெடுக்கும் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. தவிர தான் சிங்களப் படைகளால் பிடிக்கப்படும் பட்சத்தில், தனது உயிரைப் பாதுகாப்பதற்காகத் தனக்குத் தெரிந்த அனைத்து விடயங்களையும் ஒப்புவிப்பதற்கு தனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது என்றும், அடிவாங்குவதை விடக் காலில் விழுவது எவ்வளவோ மேலோனது என்றும் மலேசியாவில் தங்கியிருந்த பொழுது ஊடகவியலாளர் ஒருவருடன் உரையாடும் பொழுது நந்தகோபன் தெரிவித்ததாகவும் தகவல் உண்டு.

ஜெனீவா தீர்மானத்திற்குப் பதிலடியாக தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பதினாறு அமைப்புக்களையும், நானூற்று இருபத்து நான்கு தனிநபர்களையும் அவசர அவசரமாகத் தடைப்பட்டியலில் சிங்களம் இணைத்தமையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடியாக விளங்கிய தெய்வீகன் என்பவர் கடந்த 11ஆம் நாளன்று சிங்களப் படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், கடந்த 15ஆம் நாளன்று மலேசியாவிலிருந்து மற்றுமொரு போராளி மலேசிய – சிங்களப் புலனாய்வுப் பிரிவினரின் கூட்டு நடவடிக்கை மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டமையும், நந்தகோபன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற கருத்தையே வலுவடையச் செய்துள்ளது.

தவிர கொழும்பில் சொகுசு வீடொன்றில் நந்தகோபன் தங்கவைக்கப்பட்டு, இலண்டனில் உள்ள தனது துணைவியார், பிள்ளைகளுடனும், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது பெற்றோருடனும் உரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்களும், இவ்வாறான சந்தேகங்களுக்கு உரமூட்டுவதாகவே உள்ளன.

நந்தகோபனைப் பயன்படுத்திப் புலம்பெயர் தேசங்களில் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது சிங்களத்திற்கு நன்கு தெரியும். எத்தனை நந்தகோபன்கள் பிடிபட்டாலும், காட்டிக் கொடுத்தாலும் புலம்பெயர் தமிழர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க முடியாது. மிரட்டல்களுக்கு அடிபணியும் பண்பும் புலம்பெயர் தமிழர்களுக்கு இல்லை. அதேநேரத்தில் நந்தகோபன் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் தலைமறைவாக வாழும் முன்னாள் போராளிகளையும், செயற்பாட்டாளர்களையும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் அந்தந்த நாடுகளின் புலனாய்வுப் பிரிவினருடனான கூட்டு நடவடிக்கைகள் மூலம் சிங்களம் கொழும்புக்குக் கடத்திச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதை நாம் மறுக்க முடியாது.

தவிர மேற்குலக நாடுகளிலிருந்து இவ்வாறான தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பயணம் செய்வோரின் விபரங்கள் ஏற்கனவே சிங்களத்திடம் இருக்கும் பட்சத்தில் அவர்களையும், அதிலும் குறிப்பாக இரட்டைக் குடியுரிமை அல்லது இலங்கைக் குடியுரிமை வைத்திருப்பவர்களை, கூட்டு நடவடிக்கைகள் மூலம் காதும் காதும் வைத்தாற் போன்று கொழும்புக்கு சிங்களம் கடத்திச் செல்வதற்கான வாய்ப்புக்களையும் நாம் நிராகரிக்க முடியாது. இவ்வாறான கடத்தல்கள் நடைபெறும் பட்சத்தில் இதுவிடயத்தில் மேற்குலக நாடுகள் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் வைத்து சிங்களப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் நாளன்று வெலிக்கடைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய பிரசையின் விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் பிரித்தானியா எடுக்கத் தவறியதை இதற்கான சான்றாகவே கொள்ளலாம்.

இவ்வாறான கடத்தல்களை சிங்களம் மேற்கொள்வதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். ஒன்று வெளிநாடுகளில் இருந்து ஆயுதப் போராட்டத்தை ‘இறக்குமதி’ செய்வதற்கான முயற்சிகள் எவையாவது எடுக்கப்பட்டால் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவது. இரண்டாவது வெளிநாடுகளில் உள்ள தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களை மனவுளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும், தமிழ்த் தேசியச் செயற்பாடுகளுக்கும் இடையூறு விளைவிப்பது. மூன்றாவது இதுவரை இனம்காணப்படாத, அதுவும் கே.பியிற்கு தெரிந்திருக்காத, வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை சுவீகரித்து ராஜபக்ச சகோதரர்களின் கஜானாவை மேலும் நிரப்புவது. இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதாயின் மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கான பயணங்களை தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், செயற்பாட்டாளர்களும் தவிர்ப்பதே ஒரே வழி.

அதேநேரத்தில் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அமுக்கி வைத்திருந்து சொகுசு வாழ்க்கையை நடத்துபவர்களும் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆபிரிக்காவில் தங்ககங்கள், விடுதிகள், காணி விற்பனை நிலையங்களின் வடிவிலும், தென்கிழக்காசிய நாடுகளில் பல்பொருள் அங்காடிகள், பண்ணைகள் வடிவிலும், மேற்குலக நாடுகளில் தளபாட விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பயண முகவர் நிலையங்கள், உணவகங்கள், வீடுகள் வடிவிலும் சொத்துச் சாம்ராஜ்யங்களை நடத்துபவர்கள், தம்மிடமுள்ள தேசிய சொத்துக்கள் மூலம் தனிப்பட்ட முறையில் இலாபம் ஈட்டுவதைத் தவிர்த்து, இவற்றால் பெறப்படும் வருமானத்தை தமிழீழத் தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் வாழ்வை மேம்படுத்தும் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதே நியாயமானது. இதனை விடுத்து தேசிய சொத்துக்களைத் தொடர்ந்தும் இவர்கள் அமுக்கி வைத்திருந்தால் இவை ஏதோ ஒரு கட்டத்தில் சிங்களத்தால் இனம்காணப்பட்டு அமுக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் பற்றிய விபரங்களை அறிந்த ஒருவர் என்ற வகையில் இவை பற்றிய தரவுகளை சிங்களத்திடம் நந்தகோபன் ஒப்புவிப்பதற்கு வாய்ப்புண்டு. ஆபிரிக்க – தென்கிழக்காசிய நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணிவரும் சிங்களம், இத்தரவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசிய சொத்துக்களை இலக்கு வைத்து எதிர்காலத்தில் சுவீகரிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டாலும்கூட நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.

தவிர தமிழ்த் தேசியச் சொத்துக்களை இவ்வாறான சாம்ராஜ்யாதிபதிகள் அமுக்கி வைத்திருந்து வயிறு வளர்ப்பதால், கடந்த காலங்களில் வெளிநாடுகளில் வியர்வை சிந்திக் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறுகச் சிறுக நிதி சேகரித்த செயற்பாட்டாளர்களுக்கும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்குமே அவதூறு ஏற்படும். தேச விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தமை ஒரே காரணத்திற்கான பரிசாக இவர்கள் மீது திருட்டுப் பட்டமே சுமத்தப்படும். இதனை உரியவர்கள் உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்வது நல்லது.

– சேரமான்

நன்றி: ஈழமுரசு

Advertisements