இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு மறைக்க முடியாத உண்மைகளை புதைக்க முயலும் இரு தேசங்கள்!

india war crime partnerமகிந்த அரசின் இறுதிக்கட்ட பாரிய இன அழிப்புப் போரில் பல்வேறு நாடுகளும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தன. பல நாடுகளின் இராணுவ உயர்மட்டத் தளபதிகள் களமுனைக்கு நேரடியாகச் சென்றும் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். இதில் இந்திய இராணுவம் போரில் நேரடியாகப் பங்கெடுத்ததாக ஏராளமான செய்திகள் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே வெளிவந்துகொண்டிருந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய இராணுவத்தினர் சிறீலங்கா இராணுவத்தினருடன் களமுனையில் நிற்கும் சில நிழற்படங்களும் அப்போது வெளியாகியிருந்தன. இவற்றை இந்தியாவோ அல்லது சிறீலங்காவோ அப்போது மட்டுமல்ல இன்றுவரை மறுக்கவில்லை.

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளை எட்டும் நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தமிழின அழிப்புப் போருக்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 2008, 2009ம் ஆண்டுகளில் நடந்த இலங்கைப் போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு இந்திய அதிகாரிகளும் துணைபோனதாகக் கூறி, அவர்கள் மீது சிறப்பு விசாரணை நடத்த வசதியாக புலனாய்வுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில், டில்லி தமிழ் வழக்கறிஞர் சங்க செயலாளர் ராம் சங்கர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘சீக்கியர் ஒருவர் இலங்கையில் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தை வழி நடத்தியதாக’ அவர் குற்றம்சாட்டியிருந்ததுடன், ‘அவரை நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும்’ அவர் தெரிவித்திருந்தார். அத்துடன், ‘இந்திய அரசியல் அமைப்பின்படி இந்தியப் படையினரை இலங்கையில் போரில் ஈடுபடுத்தியமை சட்ட விரோதமானது என்று குற்றம்சாட்டியிருந்த அவர், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி அந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.

ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், உடனடியாகவே அதனைத் தள்ளுபடியும் செய்துவிட்டது. மனுதாரரின் கோரிக்கை ‘நீதிமன்ற வரம்புக்குள் வராது’ என்று கூறியே பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனைத் தள்ளுபடி செய்துவிட்டனர். இதனிடையே, டில்லி தமிழ் வழக்கறிஞர் சங்கத் தலைவர் தொடுத்த இந்த வழக்கை புலம்பெயர்ந்த தமிழர்களே தொடுத்ததாக சிறீலங்கா குற்றம்சாட்டியது. சிறீலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கில் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றம்சாட்டிய சிறீலங்காவின் சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறீலங்கா – இந்தியா உறவில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தார்.

ஆனால், அதேவேளை இறுதிப் போரில் இந்திய இராணுவம் பங்கேற்றது என்பதை சிறீலங்கா தரப்பு மறுக்கவில்லை. அப்போது போரை வழிநடத்திய சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மட்டும் அவசர அவசரமாக இந்தியா பங்கேற்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். உலகின் பல நாடுகளிடம் இருந்து சிறீலங்கா இராணுவத்திற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன என்றும் சில நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை ஏற்றுக்கொண்டன என்றும் கூறிய சரத் பொன்சேகா, இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக இந்தியாவினால் தடைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் இறுதிக்கட்டப் போரின் போது இந்திய இராணுவம் களத்தில் போரிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையுமில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், இறுதி யுத்தத்தின் போது இந்திய இராணுவம் களநடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்ததா அல்லது இல்லையா என்பதை தற்போதைய சிறீலங்கா இராணுவத் தரப்பு மறுக்கவில்லை. அது பற்றி எந்த கருத்தையும் வெளியிட சிறீலங்கா தரப்பு மறுத்துவிட்டது. கொழும்பிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் கடந்த வியாழக்கிழமை (17ம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இறுதி கட்ட யுத்தத்தின் போது இந்தியா இரகசியமாக சிறீலங்காவிற்கு படைகளை அனுப்பியது குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக் குறித்தும், இந்திய இராணுவத்தினர் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கவில்லை என்று சிறீலங்கா முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மறுத்திருப்பது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய, இந்திய இராணுவம் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.

‘மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்திய இராணுவத்தினர் பங்கு கொண்டிருந்தனரா அல்லது இல்லையா என்பது பற்றி கூற முடியாது. ஏனெனில், இவ்விடயம் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. ஆகையால் இது பற்றி உத்தியோகபூர்வமாக எதையும் கூற முடியாது. இதன்மூலம், இந்திய இராணுவம் (இறுதிக்கட்ட யுத்தத்தின் போது) இங்கு இருந்தது அல்லது இருக்கவில்லை என்று எதனையும் நான் கூறவில்லை’ என்று மழுப்பும் பதிலை அளித்துள்ளார்.india mahida

எனினும், இதற்கு முன்னர் ஐரோப்பிய நீதிமன்றங்களில் இருந்த விடயங்கள் பற்றி இங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த விடயம் சிறீலங்கா நீதிமன்றமொன்றின் விசாரணையில் இல்லாததால் அது பற்றி கருத்து தெரிவிக்க முடியும்தானே என்று ஊடகவியலாளர்களால் பதில்கேள்வியன்று எழுப்பப்பட்டபோது, தகுந்த சட்ட ஆலோசனையின்றி இதில் தன்னால் எதுவும் கூற முடியாது என்று கூறி பிரிகேடியர் வணிகசூரிய தப்பித்துக்கொண்டுள்ளார். அதாவது, உண்மையிலேயே இந்திய இராணுவம் இறுதிப் போரில் பங்கேற்கவில்லை என்றால் அவர் அதனை ஆணித்தரமாக மறுத்திருப்பார். ஆனால், உண்மை அதுவல்ல என்பதால், மேலிடத்தின் கருத்தை அறியாமல் அவர் இதற்கான பதிலை வழங்க முடியாத நிலையில் இருந்திருக்கின்றார்.srilanka india partners

அத்துடன், கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டபோது அதனை மறுக்கமுடியாத நிலையில், 1987, 1990 காலப்பகுதியில் என்றால் இந்தியப் படையினர் இலங்கையில் கள நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை தெளிவாக குறிப்பிட முடியும் என்று கூறிய அவர், சிறீலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் ரீதியாக மட்டுமன்றி இராணுவ ரீதியாகவும் வெகு நீண்ட காலமாக உறுதியான பிணைப்பு இருப்பதாகவும் இலங்கையில் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும் கூட இரு நாடுகளின் படையினரும் மற்றைய நாட்டில் பரஸ்பரம் இராணுவப் பயிற்சிகளை பெற்றிருந்ததாகவும், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்து அந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தப்பித்துக்கொண்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற அனுமதி பெறப்படாது, நிலைமைகளுக்கு ஏற்றவாறு படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதால் இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இந்திய இராணுவம் நாடாளுமன்றத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும் தெரியாமல் பங்கெடுத்தமை தவறில்லை என்று இந்திய இராணுவ ஆய்வாளரும், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியும் 1987 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடனான போரில் பங்கேற்றவருமான கேணல் ஹரிஹரன் தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியப் படைகளை ஈடுபடுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது’ என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். ராம் சங்கரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தனது இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ள கேணல் ஹரிஹரன், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, அல்லது சில நெருக்கடியான நிலைமைகளின் போது படைகளை அனுப்பும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது. 1989ல் மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டபோது, அந்த நாட்டு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தியப்படைகள் அங்கு அனுப்பப்பட்டன. இலங்கையைப் பொறுத்த வரையில், 2008, 2009ற்கு முன்னரே நெடுங்காலமாக நெருக்கமான பாதுகாப்பு உறவுகள், குறிப்பாக கடற் படையுடனான உறவுகள் இந்தியாவுக்கு இருந்து வந்துள்ளன. அதைவிடப் போரின் இறுதிக்கட்டத்தில், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது இந்தியாவிடம் ஆயுதங்களை சிறீலங்கா கோரியது. அதற்கு போருக்குப் பயன்படும் ஆயுதங்களை வழங்க முடியாது என்று இந்தியா கூறிவிட்டது.indian+army-vannai2

எனினும், விமானத் தாக்குதலில் இருந்து தடுப்பதற்கான சில ஆயுதங்களையும், ரடார்களையும் இந்தியா வழங்கியது. அவை போருக்குப் பயன்படாத ஆயுதங்கள் என்று இந்தியா கூறியது. பயிற்சி, ஆயுத உதவிகள் தவிர்ந்த இந்தியப் படைகள் அங்கு நேரடியாகப் போரில் பங்கேற்றதாக நான் அறியவில்லை. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, படைகளை அனுப்பும் அதிகாரம் இந்தியப் பிரதமருக்கு உள்ளது.

எனினும் பின்னர் அது பற்றி நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது, அது உள்நாட்டிலாக இருந்தாலும், வெளிநாட்டிலாக இருந்தாலும் அதற்கெதிராக நடவடிக்கையில் இறங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போரில் கொங்கிரசின் பங்கு குறித்து பல்வேறு விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்து வருகின்றார். இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிப்பதற்கு ஆயுதமும் பணமும் கொடுத்தது சோனியா காந்தியும் கொங்கிரஸ் கூட்டமும் என வைகோ மட்டுமன்றி பல்வேறு தி.மு.க., கொங்கிரஸ் தவிர்ந்த தமிழகக் கட்சிகள் அனைத்தும் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

– வெற்றிநிலவன்

நன்றி: ஈழமுரசு

Advertisements