புலத்தில் தமிழ்த் தேசியவாதிகளை அச்சுறுத்துவதற்காகவே இன்ரபோல் ,பொலிஸ் கதைகள்

தோல்விமேல் தோல்வியைச் சந்தித்துள்ள சிறீலங்கா அரசாங்கம் தற்போது தன்னைத் தளர்நிலையில் இருந்து தூக்கி நிறுத்தி தக்க வைப்பதற்கான செயற்பாட்டில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகவே புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் கை வைக்கத் தொடங்கியிருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பலமே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலையைத் தீர்மானிக்கும் என்று முழுமையாக தமிழ் மக்கள் நம்புவதைப் போன்று சிங்களமும் இந்த உண்மையை அறிந்துகொண்டுள்ளது. இதற்காகவே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது கையை வைத்துள்ளது.Geneva_rally_05_03_2012_02

தமிழீழ விடுதலைப் போராட்டம் பலவீனமடைந்துள்ள பின்னரேயே சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களைக் கருவறுக்கின்ற செயற்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கின்றது. தற்போது தமிழ் மக்களுக்கு எதிரான ஏதாவது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்ற போது அது தொடர்பில் பலமான கேள்வியெழுப்புவதற்கு யாருமே இல்லை. முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்தபோது தமிழ் மக்கள் மீது ஏதாவது வன்முறைகள் பிரயோகிக்கப்படுமானால் புலிகள் கொழும்பில் குண்டு வைப்பார்கள். அல்லது படை நிலைகள் மீது தாக்குதல் தொடுப்பார்கள் என்று அஞ்சிய சிங்கள அரசு மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்தியிருந்தது.

ஆனால், இன்று நிலமை அவ்வாறு இல்லை. தமிழ் மக்களுக்கு எதிராக யார் எதைச் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை. புலிகளின் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தமிழ் மக்களுக்கான பலமான சக்தி இப்போது இல்லை. இதனால் தமிழர்களை எதுவும் செய்ய முடியும் என்று சிங்களம் துணிந்து செயற்படுகின்றது.

தமிழர் தாயகம் தற்போது நிலை குலைந்து நிம்மதியிழந்து தவிக்கின்றது. கைதுக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. யாரும் எங்கும் நடமாடுவதற்கான சூழ்நிலை இங்கு இல்லை. அனைத்து தொழிலாளர்களைப் போன்று ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் இன்று அச்சுறுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. தனக்கு எதிராக யார் எதைக் கதைத்தாலும் அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்துகின்ற செயற்பாட்டை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயகம் எங்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆயிரக்கணக்கான புலனாய்வாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கருணா குழுவில் எஞ்சியிருந்த சிங்கள அடிவருடிகளான தமிழ் இளைஞர்களுக்கு சகல வசதி வாய்ப்புக்களை வழங்கியுள்ள சிறீலங்காப் படைத்தரப்பு அவர்கள் ஊடாக தகவல்களைத் திரட்டி வருகின்றது. இந்த தகவல்களைக் கொண்டு சந்தேகத்திடமானவர்களைக் கைது செய்கின்ற நடவடிக்கையில் சிறீலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டு வருகின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனத்திற்காகப் பலகோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ள மகிந்த அரசு அந்தப் பணத்தை புலனாய்வாளர்களுக்கு வாரி இறைப்பதன் மூலம் இந்தச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தின் மூலம் தமிழ் மக்களையே கண்காணிக்கின்ற செயற்பாடுகள் மிகத் தீவிரமாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழ் மக்களின் மீள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்பது சிங்களத்தின் கணிப்பீடு.

இந்த மீள் எழுச்சியைக் கட்டுப்படுத்தல் என்பதை சிங்கள அரசு பல் பரிமாண ரீதியின் முன்னெடுத்து வருகின்றது. பல் பரிமாண நோக்கில் தமிழர்களின் மீள் எழுச்சியைத் தடுத்தால் மட்டுமே அவர்களை அடக்க முடியும் என்று சிங்களம் நம்புகின்ற காரணத்தாலேயே ஒரே நேரத்தில் இந்தப் பல்பரிமாண முறையை சிங்களம் கைக்கொள்கின்றது. ஏற்கனவே தமிழ் மக்களின் கல்வியில் கைவைக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்து தமிழர்களின் வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பியர்களான போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் இடையிலான யுத்தத்தின் போது தமிழ் மன்னர்கள் காட்டிய வீரம், சிங்கள தமிழ் இராச்சியங்களுக்கிடையிலான யுத்தங்களின்போது தமிழ் மன்னர்களின் வீரம் போன்றன எல்லாம் தற்போது பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கான ஆசிரிய வளம், தளபாடம், நூல்கள் போன்றன உட்பட சகல வசதிகளிலும் சிறீலங்கா அரசாங்கம் குறைப்புச் செய்துள்ளது. மேலும் யுத்தத்தால் சேதமடைந்த பாடசாலைக் கட்டடங்களை திருத்தம் செய்து கொடுக்காததால் வன்னியிலுள்ள பல பாடசாலை மாணவர்கள் மரங்களுக்குக் கீழே இருந்து கல்வி கற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் மாணவர்களின் கல்வி பின்னடைவை எதிர்நோக்கியிருக்கின்றது.

இதற்கு அப்பால் தற்போது தமிழ் மக்களின் பொருளாதாரத்திலும் சிங்களம் கை வைத்திருக்கின்றது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் கடந்த கால வரலாறுகளை நோக்கினால் புலம்பெயர்ந்த நாடுகளே வடக்கு கிழக்கின் பொருளாதார வளத்தை தீர்மானித்து வந்திருக்கின்றன. ஈழ யுத்தம் தோற்றம் பெறுவதற்கு முன்னரேயே ஈழத் தமிழ் மக்கள் தொழில் நிமித்தம் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மலாயன் பென்சனியர் என்ற பட்டப்பெயருடன் பலர் வாழ்ந்திருக்கின்றனர். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து புலம்பெயர்ந்த அந்நிய நாட்டுப் பணத்தை தாயகத்திற்கு அனுப்பித் தாயகத்திலுள்ள தங்கள் உறவுகளின் வாழ்க்கை முறைகளை உயர்த்தியவர்களே இந்த மலாயன் பென்சியர்கள்.

இதேபோன்று யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தங்கள் சகோதரர்கள், உறவினர்கள் அனுப்பிய பணத்தைக் கொண்டே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு தமிழர் தாயக மக்கள் தொழில் நிலையங்களை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்தினர். ஆனால், தற்போது வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் தாயகத்திற்கு பணம் அனுப்ப முடியாத நிலையன்றை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தாயகத்திலுள்ள உறவினர்களுக்கு புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள உறவினர் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேல் பணம் அனுப்ப முடியாத நிலையன்று ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்பட்டால் அது புலிகளை வளர்ப்பதற்குத்தான் என்று சிறீலங்கா அரசாங்கம் கருதுகின்றது.

வங்கிகளை ஒன்லைன் மூலம் கண்காணிக்கின்ற சிறீலங்கா அரசாங்கம் இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து தாயகத்திலுள்ள ஒருவருக்கு பெருந்தொகையான பணம் அனுப்பப்பட்டால் அவரைக் கைது செய்கின்ற நடவடிக்கையில் இறங்குகின்றது. கடந்த ஒரு மாதத்ததிற்குள் இவ்வாறான சில கைதுகள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக கடந்த வாரம் ஊர்காவற்றுறையிலுள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவருக்கு புலம்பெயர் நாட்டிலிருந்து 60 இலட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணத்தை அவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முற்பட்டார் என்றும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

ஆனால், மேற்குறிப்பிட்ட ஊர்காவற்றுறை நபர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ‘ஹார்ட்வெயார்’ ஒன்றைத் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அதற்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் இடவசதியை ஏற்படுத்துவதற்குமே வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் இந்தப் பணத்தை அனுப்பினார்கள் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லையென்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் பொருளாதார வளத்தை அழிக்கவேண்டும் என்று மிகவும் திட்டமிட்டு மேற்கொள்கின்ற செயற்பாடுகளே இந்த பணம் வருவதை தடுத்தல் மூலம் அரங்கேற்றப்படுகின்றது என்பதே வெளிப்படையான உண்மை. பணம் வருகின்ற வழிகளைத் தடுப்பதன் மூலம் தமிழ் மக்களை தனது காலில் விழ வைக்கலாம் என்றும் மகிந்த அரசு கனவு காண்கின்றது. இதற்கு அப்பால் இது ஒரு நீண்ட கால நோக்கமாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. ஏனெனில், இவ்வாறு பணம் வருகின்ற வழிகளை அடைத்துவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழ் மக்கள் வறுமையான இனமாக மாறிவிடுவார்கள் என்றும் கையேந்தும் இனமாக மாறுவார்கள் என்றும் மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது.

புலம்பெயர்ந்த தேசத்தில் பணியாற்றுகின்ற தமிழ்த் தேசியவாதிகளுக்கு தடை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்திக்கொண்டு தமிழ் மக்களுக்கு வருகின்ற நிதியையும் முடக்குவதன் மூலம் மகிந்த அரசு எதை எதிர்பார்க்கின்றது என்பதை இனி யாரும் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. எனவே, இந்த எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய வேண்டிய தேவை மிகவும் அவசியானது. சிறீலங்கா அரசாங்கம் நினைப்பது போன்று தமிழ் மக்களை எதுவும் செய்துவிட முடியாது. தமிழ் மக்கள் பலமான சக்தி என்பதை அனைவரும் இணைந்து மகிந்தவுக்கு புரிய வைக்கவேண்டும்.

இந்த இடத்தில் புலம்பெயர்ந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒரு விடயத்தை மனதில் கொள்ள வேண்டும். மகிந்தவோ கோத்தாவோ நினைப்பது போன்று யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அந்தந்த நாடுகளில் நேர்மைத் தன்மையுடன் பணியாற்றுகின்ற எவரையும் மகிந்த அரசின் அடியாட்கள் கைது செய்ய முடியாது. நாடுகளுக்கென்று சில சட்டதிட்டங்கள் உள்ளன. அந்த நியதிகளை மீறி மகிந்த நடக்க முடியாது. தற்போது கைது செய்யப்பட்டு சிறீலங்காவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்ட்ட நந்தகோபன் என்பவர் கூட கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே சிறீலங்கா அரசின் பிடியிலேயே இருக்கின்றார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும் புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ்த் தேசியவாதிகளாகச் செயற்படுபவர்களையும் அச்சுறுத்துவதற்காகவே மகிந்த அரசு இன்ரபோல் பொலிஸ் கதைகளை அவிழ்த்து விட்டிருகின்றது. எனவே, சிறீலங்கா அரசாங்கத்திற்கு எவரும் அஞ்சவேண்டியதில்லை. உங்கள் பணிகளை நீங்கள் செவ்வனே செய்துகொண்டிருங்கள். இதுவே தமிழீழ விடுதலைக்கு நீங்கள் ஆற்றுகின்ற பெரும் பங்களிப்பாகும்.

– காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு

Advertisements