போர் வெற்றி நினைவகங்களும் பொருளாதார அபிவிருத்தியும் காயங்களை ஆற்றாது

இங்கு அமைக்கப்பட்டுள்ள போர் நினைவகமானது எந்தவொரு வெற்றியையும் மக்கள் மனதில் பதிக்கவில்லை. மாறாக கணவன்மார், பிள்ளைகள் மற்றும் சகோதரர்களை இழந்த மக்களின் கசப்பான தோல்வியாகவே இது காணப்படுகிறது.VANNI Bridging the narratives in Sri Lanka

இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் The Hindu ஆங்கில நாளேட்டில் ஜேர்மனியை சேர்ந்த ஆய்வாளர் Gerrit Kurtz* எழுதியுள்ள Bridging the narratives in Sri Lanka

கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதன் விபரமாவது:

வன்னியில் இராணுவ வீரர் ஒருவர் ஒரு கையில் ஏ.கே 47 ரகத் துப்பாக்கியுடனும் மறுகையில் சிறிலங்காக் கொடியுடனும் நிற்பதைச் சித்தரிக்கின்ற வகையில் கல்லால் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இயந்திரத் துப்பாக்கியில் புறா ஒன்று அமர்ந்துள்ளது. தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தம் மே 2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போது போர் வெற்றியை நினைவுகூரும் விதமாகவே இது அமைக்கப்பட்டுள்ளது. போர் வெற்றி நினைவுச் சின்னத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் வன்னியில் வாழும் பெரும்பான்மை மக்களின் மொழியான தமிழில் எந்தவொரு வாசகமும் எழுதப்படவில்லை.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் தற்போது இங்கு பயணம் செய்யும்போது, பல்வேறு வேறுபாடுகளைக் காணமுடிந்தது. தெற்கு மற்றும் மேற்கில் வாழும் மக்களைப் பொறுத்தளவில் போரின் முடிவென்பது தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான அச்சத்தை நீக்கியுள்ளது. தற்போது சிறிலங்காவின் தென்பகுதி வாழ் பெற்றோர் தமது பிள்ளைகளை முன்னால் போர் வலயத்திற்குக் கூட்டிச் செல்கின்றனர். இவர்கள் பேருந்துகளில் பயணம் செய்து இந்த இடங்களைப் பார்வையிடுகின்றனர். சிறிலங்காவின் மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்காவில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை, போக்குவரத்து, கட்டுமானம் போன்றன மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பில் புதிய சொகுசு விடுதிகள் அமைக்கப்பட்டு இவை தமக்கிடையே போட்டி போடும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் தமது வாழ்வைக் கழிப்பதில் பல்வேறு கடினங்களை எதிர்நோக்குகின்றனர். இங்கு புதிய வீதிகள், தொடருந்துப் பாதைகள், நிர்வாகக் கட்டடங்கள் போன்றன நிர்மாணிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் புதிய கடைத்தொகுதி ஒன்று மிக விரைவாகக் கட்டப்பட்டுள்ளமை உள்ளடங்களாக பல்வேறு தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மீளச்செப்பனிடப்பட்ட முல்லைத்தீவு, கண்டி வீதிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவில் காவற்துறைகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவதற்குப் பதிலாக சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள போர் நினைவகமானது எந்தவொரு வெற்றியையும் மக்கள் மனதில் பதிக்கவில்லை. மாறாக கணவன்மார், பிள்ளைகள் மற்றும் சகோதரர்களை இழந்த மக்களின் கசப்பான தோல்வியாகவே இது காணப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் படைக்கு ஆட்சேர்க்கப்பட்டவர்கள், சிறிலங்கா இராணுவத்தின் பாரபட்சமற்ற கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் எனத் தமது அன்பானவர்களை இழந்துவாழும் மக்களின் கசப்பான தோல்வியாகவே இந்த வெற்றி பார்க்கப்படுவதாக மனித உரிமை அமைப்புக்கள் சாடியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் சிறிலங்காவில் வாழும் சமூகங்களுக்கிடையில் பிரிவினையை உண்டாக்கியுள்ளன. பொதுவான மொழிநடையைப் பயன்படுத்துவதற்கான படிமுறையைக் கண்டுபிடிப்பதே வினைத்திறன் மிக்க தொடர்பாடலுக்கான முதலாவது நகர்வாகக் காணப்படுகிறது.

போருக்குப் பின்னான மீளிணக்கப்பாட்டு முயற்சியில், இந்தப் பொதுவான மொழிநடை என்பது சமூகங்களுக்கிடையிலான பிரிவினையைத் தீர்ப்பதற்கான பாலமாக உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் மக்களுக்கிடையில் நிலவும் விரோத மனப்பாங்கு தீர்க்கப்படும். சிறிலங்கா அமைச்சர்களாலும் சிங்களவர்களாலும் கைக்கொள்ளப்படும் மேற்குலக பன்மைவாதமும் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களால் கைக்கொள்ளப்படும் நவீன கொலனித்துவம் என்பதும் போரில் பங்குகொண்ட இருதரப்புக்களாலும் இழைக்கப்பட்ட மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களைத் தீர்த்து ஒரு நிலையான உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்காது.

மிகத் தீவிரமான கருத்துக்கள் வெற்றிகொள்ளப்பட்டு மீளிணக்கப்பாடு நோக்கி நகர்வதற்கு சிறிலங்கா அரசாங்கமோ அல்லது தமிழ்த் தலைவர்களோ தமது அரசியல் அடையாளங்களைக் கைவிடவேண்டிய தேவையில்லை. ராஜபக்ச சகோதரர்கள் ‘பயங்கரவாதத்தை’ ஒழித்ததன் மூலம் உள்நாட்டில் தமது ஆட்சியைப் பலப்படுத்தியுள்ளதாக போர் வெற்றியைக் குறிக்கும் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் தான் போர் வலயத்தில் பூச்சிய மக்கள் இழப்புக் கொள்கையைப் பயன்படுத்தியதாகவும் இதில் மக்களுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அறிவித்த போதிலும் பின்னர் மனிதாபிமான நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையில் மிகக் குறைந்தளவில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறியது. சிங்களவர்கள் மத்தியில் ஒரு பலமான தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பெருமைக்குரிய வெற்றியாளர், தனது அரசாங்கம் விட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டு இதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டித்திருக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது உறுப்பினர்கள் தமிழ்ப் புலிகளின் வரலாற்றுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வேதனைகளைக் களைந்தெறிவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் விரும்பினால், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அண்மையில் கூறியதுபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் குடும்பங்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயக்கம் காட்டக்கூடாது.

போரின் போது கொல்லப்பட்ட மற்றும் காணாமற் போன அனைத்து மக்களின் நினைவாகவும் கொழும்பில் நினைவாலயம் ஒன்றை அமைத்தது நல்லதொரு தொடக்கமாகும். போரில் என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளத் தவறக்கூடாது. விளம்பரப் பலகைகளில் புகழுரைத்துள்ளது போன்று ‘புதிய சிறிலங்கா’வைக் கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற மத்திய அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இவ்வாறான நினைவகம் ஒன்று தலைநகரான கொழும்பில் அமைக்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமானதாகும். வெவ்வேறு பெயர்களில் ஒரே தெய்வங்களை பௌத்தர்களும் இந்துக்களும் வழிபடுகிறார்கள் என அண்மையில் இடம்பெற்ற ஒளிப்படக் கண்காட்சியில் காண்பிக்கப்பட்டது போன்று, சிறிலங்காவில் பின்பற்றப்படுகின்ற பிரதான நான்கு மதக் கடவுள்களின் சிலைகள் தலைநகர் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் அமைக்கப்பட்டிருக்க முடியும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச்சில் சிறிலங்கா மீது அனைத்துலக சுயாதீன போர்க் குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதானது சிறிலங்காவில் திறந்த, வெளிப்படையான, மதிப்புமிக்க அரசியல் விவாதத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதற்கு உதவவேண்டும். இதேபோன்று பல்வேறு சமூகங்களுக்கிடையில் மும்மொழியில் உரையாடக் கூடிய வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கு மிகப்பலமான அனைத்துலக ஆதரவு கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த அடிப்படை முயற்சிகளின் மூலம், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் உண்மையைக் கண்டறியும் தென்னாபிரிக்காவின் பொறிமுறைக்கும் இடையில் தொடர்பைப் பேணுவதன் மூலம் அரசின் செல்வாக்குடன் சாத்தியமான சுயாதீன நிறுவகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான வழி பிறக்கவேண்டும்.

நாட்டில் இதயசுத்தியுடனான மீளிணக்கப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் மீண்டெழ முடியும். அனைத்துலக சமூகத்தின் கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணிப்பதால் ஏற்கனவே நாட்டில் முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறைந்துவிடுமோ என சிறிலங்காவின் வர்த்தக சமூகம் அச்சம் கொண்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற மாகாணத் தேர்தல்களில் சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன் எதிர்க்கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமையானது, ராஜபக்சக்களின் மேற்குலக எதிர்ப்பின் பிரதிபலிப்பு நாட்டில் எஞ்சியுள்ள பொருளாதார மற்றும் அரசியற் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியுள்ளது.

அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற சிறிலங்கா மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. இது சிறிலங்காவின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என இந்தியா அறிவித்திருந்தது. சிறிலங்காவில் உறுதியான மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் இடம்பெற வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சிறிலங்காவில் அரசியல் அதிகாரப் பகிர்வு இடம்பெறவேண்டும் மற்றும் கடந்த ஆண்டுத் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா அழுத்தத்தை வழங்கமுடியும். இவையிரண்டும் இந்தியாவின் நீண்டகால இலக்காகக் காணப்படுகின்றது. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கமும் தமிழ்த் தலைவர்களும் இணைந்து செயற்படுவதற்கு மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் உதவும். அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தால் தற்போது சிறிலங்கா அரசாங்கம் சில பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்துள்ளது.

காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பெண் சிங்கள இராணுவச் சிப்பாய்கள் அவர்களது மேலதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்கும், உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள நிலங்களை விடுவிப்பதற்கும் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளன. மன்னிப்பு மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த காலத் தவறுகள் மற்றும் மீறல்கள் ஆராயப்படும் போது மீளிணக்கப்பாடு சாத்தியமாகிறது. போர் வெற்றி நினைவகங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மட்டும் நோக்காகக் கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பன நாட்டில் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற இயலாது.

*(Gerrit Kurtz is with the Global Public Policy Institute, Berlin.)

புதினப்பலகை- நித்தியபாரதி.

Advertisements