அமெரிக்கா – இந்தியா – ஈழத்தமிழர்களின் அரசியல் : 01-02

obama-indiaஅமெரிக்கா – இந்தியா – ஈழத்தமிழர்களின் அரசியல் : 01

மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம் பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்துவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மாதம் இடம் பெற்ற ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் அனைத்துலக நகர்வுகளின் மத்தியிலே குறிப்பாக அமெரிக்க இந்திய அரச நலன்களினதும் இதர எதிர்த்தரப்பு வல்லரசுகளின் நலன்களினதும் அரசியல் மேலாதிக்க போட்டிகளின் மத்தியில் தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு போராடும் நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இறுதியில் புலம் பெயர் தமிழர்களையும் ஈழத்தில் வாழும் தமிழர்களையும், சிறீலங்கா அரசிடம் நீதி வேண்டி நிற்க வேண்டிய நிலைக்கு இட்டு சென்றது அமெரிக்கா முன்மொழிந்த பிரகடனம். கொடுமைகளுக்கான நீதி என்ற பெயரில் உலக தமிழர்கள் அனைவரையும் சிறிய, சிறீலங்கா அரசினால் கொள்ளடக்கப்பட்டு விடுவதற்கான அடிப்படைகள் அந்த வரைவினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது சில தமிழ் ஆய்வாளர்களது குறிப்பாகும்.

இக்கூட்டத்தொடரினால் ஏற்பட்ட நன்மைகளின் பக்கம் பார்ப்பதானால் தமிழினத்தின் ஒரு படிக்கல் முயற்சியாக கருதப்படும் ‘இனஅழிப்பு’ என்ற பதத்தை நிறுவுவது என்ற முயற்சியில் இந்த கூட்டத்தொடர் சில வாய்ப்புகளை பெற்று கொடுத்திருக்கிறது.

அத்துடன் அரசுகளின் இராசதந்திரிகள் மத்தியில் அரசு-அற்ற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இராசதந்திர வரைமுறைகளை கற்று கொள்ளவும், அரசுகளின் இராசதந்திர கலாச்சாரத்தை புரிந்து கொள்ளவும் களம் அமைத்து கொடுத்திருக்கிறது.

தமிழர்களின் கொடுமைகளுக்கான தண்டனையை பெற்று கொடுப்பதற்கு அப்பால் தமிழர்கள் தமது சொந்த முயற்சிகளிலே ஒரே நோக்கத்தோடு கடமைகளை பகிர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டுமென்பதையும், இன்னும் நிறுவனமயப்படுத்தப்பட வேண்டிய தேவையையையும் இத்தகைய நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன.

இங்கே அனைத்துலக நாடுகளின் நிலைகள் குறித்தும் உலக ஒழுங்கு மாற்றத்திற்கேற்ப தமிழினத்தின் போராட்டம் புதிய பரிணாமத்தை பெறவேண்டியது குறித்தும் புரிந்து கொள்வதாக இக்கட்டுரைத்தொடர் அமைந்துள்ளது.

இந்த வகையிலே அனைத்துலக நாடுகளின் போக்குகள் குறித்தும் குறிப்பாக வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அமெரிக்க அணுகுமுறை, இந்திய அரசியல் மாற்றம் என்பன இனிவரும் காலங்களில் தமிழர் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் செய்ய வேண்டிய நகர்வுகள் குறித்தும் ஆய்வது சிறந்ததாக தெரிகிறது.

ஓவ்வொரு நான்கு வருடமும் ‘பென்ரகன்’ – அமெரிக்க இராணுவ தலைமையகம் – அமெரிக்கப் பாதுகாப்பு கொள்கையின் மைய அதிகார முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிடுவது வழமையாக உள்ளது. 2014ம் ஆண்டு மார்ச்மாதம் வெளிவந்த அறிக்கையில், அவாகளால் 2011 ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு நிதி முடக்கத்தின் பிரதி பலன்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு வரவுசெலவு அறிக்கைகள் இரண்டு வகையான செலவீனக்குறைப்பு திட்டங்களுக்குள் வரையறை செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக வரவுசெலவு திட்டத்தினூடான கட்டுப்பாடு. அதாவது 2011ம் ஆண்டிலிருந்து அடுத்த பத்தாண்டுகளுக்குள் 487 பில்லியன் டாலர் பணத்தை இராணுவ செலவீனத்திலிருந்து மீதப்படுத்தி கொள்வது. இரண்டாவாதக அமெரிக்க காங்கிரசின் இரண்டு கட்சிகளும் அமெரிக்கத்தலைவரும் உடன்பாட்டின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்து கொள்ளக்கூடிய அரசாங்க செலவீன பணத்திலிருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருடா வருடம் மீதப்படுத்தி கொள்வது.

இவ்வாறு செலவைக்குறைக்கும் திட்டங்களே நான்காண்டு அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்ட நிலை இருந்தாலும் இதன் பின்விளைவுகள் பாரிய அளவு பூகோள கையாள்கை நிகழ்ச்சிகளை தாக்காத வகையில் இருக்கும் என்பதில் நிட்ச்சயப்படுத்தப்பட்ட தன்மையை காணகூடியதாக உள்ளது. நேரடி இராணுவ நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தயங்கி உள்ள இந்த அறிக்கை அவ்வப்போது பல்வேறு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் எழக்கூடிய நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ள பரிந்துரை செய்கிறது. பலாத்கார இராணுவ அரசியல் பிரயோகிக்கப்பட வேண்டிய நிலையில் இன்னுமோர் பிராந்தியத்திலும் அத்தகைய நிலையை உருவாக்குவதை தவிர்த்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த செலவீனக்குறைப்பு ஆளணிக்குறைப்பிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவ வேலை வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அமெரிக்கத் தலைமை உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலேயே தற்பொழுது பெருமளவு தங்கி உள்ளது என்பதை இந்த அறிக்கை மிகத்தெளிவாக காட்டி நிற்கின்றது.

அமெரிக்கப் பொருளாதாரம் உலக நாடுகளின் கூட்டு பொருளாதார வளர்ச்சியிலேயே பெருமளவில் நம்பிக்கை கொண்டு உள்ளது. உலகில் தொழில்நுட்ப முடிவுப்பொருட்களின் தேவை அதிகரிப்பதானது, அமெரிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய தூண்டுவதன் மூலம், அமெரிக்க உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்க வைப்பதற்கு வியாபார ஒப்பந்த முனைப்புகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளுடன் தன்னை இணைத்து கொண்டு கூட்டு பொருளாதார வளர்ச்சி மூலம் அமெரிக்க தொழில்நுட்ப பொருட்களின் தேவையை உலக நாடுகள் மத்தியில் மேலும் உருவாக்குவது என்பது அதன் திட்டமாக இருக்கிறது.

உலக நாடுகளிடையே சமநிலைப்படுத்தப்பட கூடிய பொருளாதார வளர்ச்சியானது பொருளாதார இடைவெளியை நிரப்புவதாக கொள்ளப்படுகிறது. இடைவெளிகளற்ற பொருளாதார சமநிலையும் பொருளாதார ஒப்பந்தங்களுடாக பெறக்கூடிய செல்வாக்கும், குறிப்பிட்ட பிராந்தியங்களில் மேலைத்தேய கோட்பாடுகளை ஏற்று கொண்டு உள்ளக அரசியலை வரை முறை செய்து கொள்ளக்கூடிய அரசுகளை இனங்காண கூடியதாக இருக்கும். இதன் முலம் பாதுகாப்பு முன்முன்முயற்சிகளை நகர்த்தவும் பல்துறைசார் பொருளாதார வளர்ச்சிகளை உயர்த்தி கொள்ளவுமான முனைப்புகளுக்கு ஏற்கனவே 2010 பாதுகாப்பு அறிக்கைகளில் பரிந்துரைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அமெரிக்க ஆய்வாளர்களின் அறிக்கைகளின் சாராம்சங்களும் இன்று அமெரிக்கா தனது பலத்தையும் செல்வாக்கையும் உத்தரவாதப்படுத்தி கொள்ள வேண்டுமாயின் இன்றய உலகின்; தலைமை வகிக்கும் தன்மையை, புதுப்பித்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்று கூறி வருகின்றனர்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு என்பது அதன் தனித்துவமான தேசிய தாரதரங்களை முன்நகர்த்த கூடிய செய்திறனிலேயே தங்கி உள்ளது என்பதையே மையமாக கொண்டுள்ளது என்பது அவர்களின் பார்வை.

ஒருகாலத்தில் பிரித்தானியா தனது கடற்பலத்தை கொண்டு உலக நாடுகளை பயமுறுத்தி இராசதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வந்தது. Gunboat diplomacy என்று அழைக்க கூடிய இந்த இராசதந்திரம் சக்தி மிக்க நாடுகள் பாரிய கப்பல்களை சிறிய நாடுகளின் கடற்பரப்புகளில் நிறுத்தி தமக்குரிய சலுகைகளை பெற்றுகொண்டது.

20ம் நூற்றாண்டில் அமெரிக்கா, உலக கடற்பலத்தை பெற்று கொண்ட போது பல்வேறு சந்தர்ப்பங்களில் இதேபாணியில் பயமுறுத்தி காரியங்களை சாதிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இந்த போக்கு இன்றுவரை Power projection என்ற மறு பெயரில் தமது பலத்தை வியாபகப்படுத்தி காட்டும் தன்மை அனைத்துலக இராணுவ அரசியலில் இருந்து வருகிறது.

அனைத்துலக அரசியலில் செயற்திறன் மிக்க அரசு ஒன்றின் பலத்தை காட்டும் முக்கியமான ஒரு தனிமமாக அந்த அரசின் பலம் காட்டும் வியாபகம் காணப்படுகிறது. அரசுகளின் தரை கடல் ஆகாய பலத்தின் வியாபகத்தை எடுத்துகாட்டும் இந்த தனிமம் வன்முறைப் பலத்தின் சொத்துகளாக பார்க்கப்படுகிறது. பாரிய பீரங்கிகள், காலாட்படைகள; பல் வகைப்பட்ட ஆகாயப்படை குழுக்கள், கடற்கலன்கள் இவை அனைத்தையும் நகர்த்துவதற்குரிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் நிலைகள் என அனைத்து பாதுகாப்பு ஆர்ப்பரிப்பு தன்மையும் அனைத்துலக உறவு அரசியலில் இன்றும் மிகமுக்கியமாக காணப்படுகிறது.

இருந்த போதிலும் வன்முறை பலம் காட்டும் வியாபகத்தின் முக்கியத்துவத்ததை தேவைக்கு தகுந்தாற்போல் முடக்கி வைக்க வேண்டிய நிலைக்கு தற்போதய உலக ஒழுங்கில் மென்முறை பலம் காட்டும் அரசியலின் வளர்ச்சி, அமெரிக்க உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவத்தில் முன்னுரிமை பெற வைத்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் அதாவது தொண்ணூறுகளின் கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பிற்பாடு சுதந்திரமான பண்டங்களின் நகர்வும் மூலதனப்பரிமாற்றமும் பிராந்தியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உள்ளன. புதிய பிராந்தியங்கள் உலக அரசியலில் புதிய ஒழுங்கை உருவாக்கி உள்ளன. தனிப்பட்ட நிறுவனங்களும், அரசு சார்பு நிறுவனங்களும் புதிய தொழில் நுட்ப வசதிகளால் புத்துயிர் பெற்று நிற்கின்றன. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் இதற்கு பல்வேறு வசதிகளை கொடுத்துள்ளது. பிராந்திய அரசுகள் ஒன்றுடன் ஒன்று பொருளாதார நிலையில் தங்கி உள்ள நிலையை எட்டி விட்டிருக்கின்றன.

இந்த நிலையில் அனைத்துலக அரசியல் நகர்வுகள்யாவும் மென்பலத்தை அடிப்படையாக கொண்டே நிகழ்கின்றது. மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம் பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்தப்படுவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றப்படுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன.

மென் பலத்தின் அதிகாரம் அதிக செல்வாக்கை செலுத்தும் நிலையில் பல சகாப்தங்களாக அனைத்துலக அரசியலில் தனது ஏகாதிபத்திய தலைமைத்துவத்தை நிலை நாட்டும் பொருட்டு பயமுறுத்தி காரியம் சாதிக்கும் அனைத்துலக அரசியலை நடாத்தி வந்த அமெரிக்க அரசு கூட இன்றய அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மென் பலத்தை கொண்டே தனது மேலாதிக்க போக்கை தக்க வைத்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையை வைத்து பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் கூட கடந்த முப்பதாண்டு காலங்களாக தீவிரவாதத்தையே தமது பிரதான உபாயமாக கையாண்டு பல வேளைகளில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றனர். இதன் விளைவாக இன்று தமிழர்களின் நேர்மையான அரசியல் கோரிக்கைகளையும் அந்த கோரிக்கைக்காக உழைக்கும் தமிழ் பிரதிநிதிகளையும் தீவிரவாதத்தின் ஆதரவாளர்களாக பலதரப்பினரும் சித்தரிக்க முற்படுகின்றனர்.

இந்திலையை மாற்றி அமைக்க தமிழர்களும் சில முன்னுதாரண நடவடிக்கைகளை செயலில் காட்ட வேண்டிய தேவை உள்ளது. அனைத்துலக அரசியலில் இராசதந்திர நடவடிக்கையில் இறங்கி உள்ள நடவடிக்கையாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக கூட இந் நடவடிக்கைகள் அமையலாம். தீவிரவாத போக்கு கொண்டவர்கள் தமிழர்கள் என்ற பேச்சை வாய்மூட வைப்பதற்கு இது நிச்சயமாக பயன்படும்.

உதாரணமாக ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஒரே நேரத்தில் பகிரங்கமாக பாதுகாப்பையும் சமாதானத்தையும் வேண்டி நிற்பதுடன் தமிழ் மக்கள் பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பதை பிரகடனப்படுத்துவதுடன். இந்தப்பிரகடனத்தை உலகின் அனைத்து நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கும் எட்டுவற்கான நடவடிக்கைகள் எடுப்பது ஒருமுறையாகலாம்.

தொடரும்…

அமெரிக்கா – இந்தியா – ஈழத்தமிழர்களின் அரசியல் : 02

இன்று பொது இராசதந்திரத்தில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆளுமை அரச பிரதிநிதிகளின் செயற்பாட்டை சிறுமைப்படுத்திவிடும் பொழுது அரச இராசதந்திரிகள் சமூக செயற்பாட்டாளர்களை இராசதந்திர தீவிரவாதிகள் எனும் புதிய பதம் கொண்டு அழைக்க முற்படுவதையும் காண கூடியதாக உள்ளது. ‘

அரசியல் சுதந்திரமும், சமாதானமும், பாதுகாப்பும் தமது வாழ்வின் மிக இன்றியமையாத அங்கமென ஈழத்தமிழர்கள் தம்மெண்ணத்தில் கொண்டுள்ளனர். இலங்கைத்தீவில் சிறீலங்கா ஒரு அரசாக உருவகம் எடுத்து விடுவதற்கு முன்பிருந்தே இந்த எண்ணம் உருவகப்பட்டிருந்தது.

1970களின் பிற்பகுதியில் அன்றைய உலக ஒழுங்கின் போக்கிற்கு ஏற்ப சிறீலங்கா அரசு தனது ஆட்சி முறையையே மாற்றி அமைத்து வெளியுறவுக்கொள்கை மூலம், தனது பேரம் பேசும் மூலோபாய தந்திரமாக பிராந்திய வல்லரசுக்கு எதிராக பலம்மிக்க வல்லரசுகளின்பால் நின்றது. இன்று வரை தனது பேரம் பேசும் பலத்தை பிராந்திய வல்லரசக்கு எதிராகவே உபயோகிக்கிறது.

எத்தகைய நிலையை எடுத்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அரசகளின் மேலைத்தேய அரசியல்தத்துவமும் அதன் கலாச்சாரமும் சிறீலங்காவை பாதுகாத்து வருகிறன. கடந்த ஜெனீவாகூட்டத்தொடர் காலங்களிலும் இன்னமும் அனைத்துலக அரசியல் கட்டமைப்பு இனஅழிப்புக்கு உள்ளாகி கொண்டிருக்கும் தமிழினத்திற்கு பாடம் கற்பிக்கும் போக்கிலேயே உள்ளதாக தமிழ் மக்கள் சார்பில் அக்கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

நாடுகள் மீதான படை எடுப்புகளின் போதும் மேலைத்தேய நாடுகளின் இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களிலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பெரிதாக எடுத்து கொள்ளாது விடப்பட்டுள்ள அதேவேளை. மனித உரிமை விவகாரம் எனும் ஆயுதம் சிறிய அரசுகளை தமது தேவைக்கேற்ப இராசதந்திர அழுத்தத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தை கொண்டதாக மட்டுமே இருக்கிறது.

பாதிப்பிற்குள்ளான தேசியமான தமிழினம் ஒருபொருட்டாக எடுத்து கொள்ளப்படாது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதற்கு ஒர் உதாரணமாக தமிழ் தரப்பினர் பார்க்கின்றனர்.

இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அனைத்துலக மனித உரிமைகள் குறித்த சரத்துகள் 1948 டிசம்பரிலேயே ஐக்கிய நாடுகள் சபையால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், 1989ம் ஆண்டு சீனாவின் தியனமன் சதுக்கத்தில் இடம்பெற்ற சனநாயக ஆதரவு போராட்டங்களின் போதே முக்கியத்துவம் பெற்றது. அதாவது அப்போராட்டங:களை நசுக்கும் முகமாக இடம் பெற்ற சீன அரசின் படுகொலைகளில் இருந்தே மனித உரிமையை அரசகளுக்கு எதிராக பயன் படுத்தும் ஆயுதமாக மேலைநாடுகளால் கையாளப்படுவது குறித்து கீழைத்தேய அரசுகளுக்கு ஆதரவாக பேசக்கூடிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலக பொருளாதாரத்தில் தனது முக்கியத்துவத்தின் காரணமாக சீனா தனது படுகொலைகளை மறந்து விடப்பட கூடிய ஒருவிடயமாக ஆக்கிவிட்டுள்ளது. ஆனால் மனித உரிமை என்பது அதன் அடிப்படை ஒழுங்கு விதிகளின் ஊடாக பார்காது உலகில் வல்லரசுகளின் நலன்களினூடாக பார்க்கப்படும் நிலையானது, மனித உரிமை மீறல்களை தாராள இனஒடுக்குமுறை கொள்கைக்கு சாதகமாக பயன் படுத்திய அரசுகள் கூட அனைத்துலக அரங்கில் வல்லரசகளை எதிர்த்து நிற்கும் துணிச்சலை கொடுத்துள்ளது என்பது பல மனிதஉரிமை கோட்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.

அதேவேளை இரண்டு மையங்களை கொண்ட உலக ஒழுங்கு இருந்த காலப்பகுதியில் சிறிய நாடுகளும் வலு குறைந்த நாடுகளும் அனைத்துலக உறவு அரசியலில் தமது உரிமைகள் குறித்து அதிகளவு பேசிக்கொள்வதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்பது சிறிய நாடுகளின் புகாராக இருந்தது. வல்லரசுகள் தமது நலன்களை சிறிய நாடுகள் மீது மிரட்டல் பாணியான உறவுநிலை வைத்திருந்த காலமாக அக்காலப்பகுதி இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஈராக்கிய ஆப்கனிஸ்தானிய படையெடுப்புகளில் மேலைநாடுகள் எதிர்பார்த்த பலாபலன் கிடைக்காத அதே காலப்பகுதியில் சீன பொருளாதார வளர்ச்சி நீண்ட காலத்திற்கு மேலைத்தேயத்தை பாதிக்ககூடிய வளர்ச்சிநிலையை எட்டியது. கடந்த கட்டுரையில் பார்த்தது போல அமெரிக்க பொருளாதார மந்த நிலையும் புதிய தொலைத்தொடர்பு வளர்ச்சியும் இதனால் உற்பத்தி சந்தையில் புதிய வல்லரசகளின் வருகையும் பன்முகப்படுத்தப்பட்ட மைய உலக ஒழுங்குகளை உருவாக்கி உள்ளது.

சிறிய அரசகளிற்கு இத்தகைய தன்மை பதிய தெம்பை கொடுத்துள்ளது. இதன் மறுபுறத்தில் வல்லரசுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் நசக்கப்பட்ட தேசியங்களின் பிரதி நிதிகளாக தேற்றமளிக்க முனைகின்றன. தேசியங்களின் நலன்களில் எந்த ஆர்வமும் காட்டாத மேலைத்தேய வல்லரசகள் வெறும் அரசுகள் மீதான அழுத்த அரசியலையே நடாத்தி வருகின்றன.

தேசியங்களை பிரதி நித்துவப்படுத்தும் பாங்கில் வல்லரசுகள் செயற்படும் போது தமது சட்ட அங்கீகார நிலைமைகளை பெற்று கொள்ளும் சந்தர்ப்பத்தை தேசியங்கள் தவறவிட முடியாது. முக்கியமாக திண்ணிய மனதுடன் சதந்திரமான வாழ்வை நாடிநிற்கும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு குறிப்பாக இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

பொது இராசதந்திரம் என்பது அத்துறையின் பண்பாட்டுக்கமைய அரசுகள் சார்ந்தது என்றும் அரசகளின் வெளியுறவுக்கொள்கை உடன் தொடர்புடையதும் என்ற கருத்தே உள்ளது.. உலக மயமாக்கப்பட்ட அரசியல், பொது இராசதந்திரத்தில் புதிய தேசியம் சார்ந்த சமுக செயற்பாட்டாளர்களின் இராசதந்திரதுறை நோக்கிய நகர்வுக்கு உந்து சக்தியாக அமைந்து வருகிறது. உலக அரங்கில் சமுக செயற்பாட்டாளர்கள் தமது செல்வாக்கையும் சக்தியையும் இராசதந்திர வலை கட்டமைப்புகளை முன்னேற்றகரமாகவும் நம்பிக்கைக்கு உரிய முறையிலும் உருவாக்கி வருவது அரசுசார் இராசதந்திர நடவடிக்கைகளுக்கு தொந்தரவளிப்பதாக உள்ளது.

இதனை கடுதாசி இராசதந்திரமாக பார்க்கப்பட்டபோதும் அரச இராசதந்திர நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட அங்கீகாரத்தை பெற்று கொள்ளும் புதிய பரிமாணத்தை தேசியங்கள் இராசதந்திர துறையில் உருவாக்கி வருகிறன என்பது இத்துறைசார் ஆய்வாளர்களின் கருத்தாக அமைகிறது.

இன்று பொது இராசதந்திரத்தில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆளுமை அரச பிரதி நிதிகளின் செயற்பாட்டை சிறுமைப்படுத்திவிடும் பொழுது அரச இராசதந்திரிகள் சமூக செயற்பாட்டாளர்களை இராசதந்திர தீவிரவாதிகள் எனும் புதிய பதம் கொண்டு அழைக்க முற்படுவதையும் காண கூடியதாக உள்ளது.

ஆகவே சமூக செயற்பாட்டாளர்கள் மிக முக்கியமான இரண்டு விடயங்களை தமது கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர் ஒன்று சட்ட அங்கீகாரம் இரண்டாவது காத்திரமான கருத்தியல் மற்றங்களை ஏற்படுத்தகூடிய தன்மை, இந்த இரண்டு விடயங்களும் சமூக செயற்பாட்டு இராசதந்திரிகளை தமது சமூகம் சார்ந்தவர்களின் நியாயத்தை பாதுகாப்பதுடன் அனைத்துலகின் முன்னால் கொண்டு செல்லுதலுக்காகவும், அனைத்துலக கருத்துகள் கொள்கைகள் பார்வைகள் ஆகியவற்றை தமது சமூகத்தில் தெளிவுக்குள்ளாக்குதல் ஆகிய இரு தொழிற்பாடுகளுக்காகவும் தேவையானதாக ஆக்கியுள்ளது.

ஒரு பண்பாட்டு பிரதேசத்தை தமக்காககொண்டு ஒரே மொழியை தமதாக கொண்டுள்ள அரச அல்லாத தேசியங்களுக்கு பல்வேறு இடங்களில் பேரம் பேசும் பலம் அதிகமாக உள்ளதாக இத்துறை குறித்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேவேளை செயற்பாட்டாளர்களிடையே ஆன கருத்து முரண்பாடுகளும் தீர்மானங்களை நிறுவ முடியாத தன்மையும், நிரந்தர பிரதிநிதிகளால் கையாளப்படாத கொள்கை கருத்துகளாலும் பலவீனங்கள் உருவாகுவதாகவும் கருதப்படுகிறது.

இந்த வகையிலே ஒரு அரசு அல்லாத தேசியம் ஒரு பிராந்தியத்தை தனது பலத்தின் அடிப்படையில் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்யும் அரசுபோல் செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது ஏனெனில் தம்மையும் தாம் சார்ந்த மக்களையும் எதிரிகளின் ஆட்சிப்பலம், இராசதந்திர சூழ்ச்சி ஆகிவற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு சட்ட அங்கீகாரம் பெற்று கொள்ள விளையும் தேசிய செயற்பாட்டாளர்களிடம் தன்னிச்சையாக வந்து சேர்கிறது.

இப்பொழுது… சில இந்திய ஆய்வாளர்களின் கட்டுரைகளுக்கு இணங்க ஐக்கிய அமெரிக்கா சிறீலங்காவில் இராணுவ தள நிலைகளை உருவாக்கவதற்கு ஏற்ப இடம் ஒதுக்கி தரும்படியான வேண்டுகோளை விடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.. அமெரிக்காவின் ‘ஆசியா நோக்கிய திருப்பம்’ என்ற கொள்கைக்கு இணங்க அமெரிக்க கடற்படையில் அறுபது சதவிகிதமான பாதுகாப்பு சொத்துகளை 2020ம் ஆண்டளவில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொள்ள வைக்க தீர் மானித்திருப்பதாக பென்ரகன் அறிவுறுத்தி உள்ளது.

ஆமெரிக்காவின் இராணுவ தளபாட நிலைகளுக்கான வேண்டுகோள் வல்லரசுகளுடனான பேரம் பேசுதலிலேயே தனது பௌத்த சிங்கள அபிலாசைகளை தீர்த்துக்கொள்ளும் போக்குடைய சிறீலங்கா அரசும் பௌத்த சிங்கள இனவாதத்திலேயே அரசியல் செய்யும் அரச தலைவர்களும், தற்பொழுது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் புலம்பெயர் சமுதாயத்தின் மீது நிச்சயம் திருப்பிவிடமுனைவார்கள். அப்படியான நிலை ஏற்படுமிடத்து. புலம் பெயர் தமிழர்கள் எதிர்பார்த்த புலம் பெயர் மக்களுக்கான முள்ளிவாய்கால் வெகு தூரத்தில் இல்லை.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

புதினப்பலகை-லோகன் பரமசாமி.

Advertisements