வனவெளி இராணுவ நாடகம்

gota ltte dramaதமிழீழத் தாயகப் பகுதியில் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தெருவெளி நாடகங்களை காட்டுவதை யாரும் மறந்துவிடமுடியாது. அது காலத்தின் தேவையாகவும் இருந்துள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துவிட்டதாக மார்தட்டும் சிங்களம், இன்று தனது ஆதிக்க இராணுவத்தினரை வைத்து ‘வனவெளி’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

இதற்கு நடிகர்களாக தமது அடிவருடிகளையும் வேலையற்றிருக்கும் இராணுவத்தினரையும் காவல்துறையினரையும் பயன்படுத்தியுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையே வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கமும் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தினால் முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியினில் விடுதலைப் புலிகள் மூவர் மோதலொன்றினில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை ஒரு நாடகமே என அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களது சடலங்கள் பதவியா அரசினர் வைத்தியசாலையில் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அருகாக முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையோ, கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையோ இருக்கின்ற நிலையில் எதற்காக சடலங்களை பதவியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததெனவும் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம், கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளிற்கு புத்துயிர் வழங்கி மீளக்கட்டமைக்க முற்படுவதாக தெரிவித்து சிறிலங்காவால் அறிவிக்கப்பட்டிருந்த கோபி மற்றும் அப்பன் ஆகியோருடன் தேவியன் ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. எனினும் சம்பவ இடத்திற்கு செல்ல பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட எவரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. பிரேத பரிசோதனை சிங்கள சட்டவைத்திய அதிகாரிகளினாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணியினில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு மரணவிசாரணையினை அனுராதபுரம் நீதிபதி செய்யவுள்ளாராம்.

வடக்கினில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாக கூறிக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு ஏன் சத்தமின்றி இவ்வாறு அனைத்தையும் மூடிமறைத்து செய்யவேண்டியிருக்கின்றதெனவும் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார். உண்மையில் சர்வதேசத்தை ஏமாற்ற, மூடப்பட்ட படைமுகாம்களினை மீள நிறுவ ஆடப்பட்ட நாடகமே இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என சிறீலங்கா அரசாங்கம் கூறும் கோபி என்பவருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறீலங்கா இராணுவச் சிப்பாய், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அவர் இராணுவ சிப்பாய் அல்ல எனவும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த உளவாளி எனவும் தெரியவந்துள்ளது. இந்த உளவாளி கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றிய செல்வராஜா கமலராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த உளவாளியின் கொலையை பயன்படுத்தி வேறு காரணம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் கிளிநொச்சியில் கோபி என்பவரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்ததாகக் கூறப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் பற்றிய தகவல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. கோபி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடந்தவாரம் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் குறித்த நெடுங்கேணி பிரதேசத்தில் சிறீலங்கா இராணுவத்தினால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவரின் சடலங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு சிறீலங்கா இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. சடலங்கள் காணப்படும் இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் இடை மறிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சடலங்கள் தொடர்பான புகைப்படங்களை பதிவு செய்து கொள்ள முடியவில்லை என செய்தியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் குறித்த செய்தி பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக அவதானிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நாடகத்தைக் காரணமாகவைத்து இதுவரை 65 பேருக்கும் மேற்பட்டோர் கைதான நிலையில் மேலும் பல அப்பாவிகள் கைதாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 10 பெண்கள் உள்ளிட்ட 65 அப்பாவிகளை சிறீலங்காப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் கைது செய்துள்ளார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்தே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் 05 பேர் விசாரணைகளைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் ஏனையவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சிறீலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பெண்களுள் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி சந்தேக நபர்களிடம் பாரியளவில் வெளிநாட்டுப் பணம் புழக்கத்தில் இருந்தமை தெரியவந்துள்ளதென சிறீலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. அத்துடன், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை கைதுசெய்வதற்கு, சர்வதேச காவல்துறையின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தட்டிக்கேட்க யாரும் இன்றி நடைபெறும் சிறீலங்காவின் தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து சர்வதேசத்திடம் முறையிடுவோம். நாம்சிந்திக்கும் நேரமல்ல, ஒருமித்து செயற்படும் நேரம் இது.

– கந்தரதன்

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி: ஈழமுரசு

Advertisements