புலிப்பூச்சாண்டியும், முழுப் பூசணிக்காயும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிரூட்டம் பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான ‘புலிவேட்டை’ என்ற போர்வையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தமிழீழத் தாயகத்தைப் படையாட்சியின் இரும்புப் பிடிக்குள் அடக்கி வைத்திருந்த சிங்களம் உச்சகட்ட நடவடிக்கையாக கடந்த வாரம் மூன்று தமிழ் இளைஞர்களை படுகொலை செய்துள்ளது.Eelamurazu 230_Eelamurazu 230.qxd

சிங்களப் படைகளால் தமிழ் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதும், காணாமல் போகச் செய்யப்படுவதும் புதிய விடயங்கள் அல்லவே. கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இவ்வாறு காதும்காதும் வைத்தாற் போன்று பல இளைஞர், யுவதிகள் சிங்களப் படையப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டும், காணாமல் போனோர் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

கடந்த வாரம் மணலாறு வெடிவைத்தகல் பகுதியில் அரங்கேறிய மூன்று இளைஞர்களின் படுகொலைகளும் இவ்வாறானவையே. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘புதிய தலைவர்கள்’ என்று இம்மூன்று இளைஞர்களுக்கும் முத்திரை குத்திச் சிங்களம் அவிழ்த்துவிட்டுள்ள புளுகு மூட்டைகள், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு அது முற்படுவதையே பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவர்கள் மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்கள் என்றும், மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த பொழுது படையினரால் இனம்காணப்பட்டு இவர்கள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சிங்களம் பரப்புரை செய்து வருகின்றது. அத்தோடு வெளிநாட்டில் உள்ள நெடியவன், விநாயகம் ஆகிய இருவரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை இவர்கள் மூவரும் மேற்கொண்டதாகவும், மற்றுமொரு அண்டப்புளுகையும் சிங்களம் அவிழ்த்து விட்டுள்ளது.

எமது கடந்த பத்திகள் பலவற்றில் நாம் சுட்டிக் காட்டியது போன்று புலம்பெயர்தேசங்களில் ‘நெடியவன் குழு’ என்ற பெயரில் எந்தவொரு குழுவும் இயங்குவது கிடையாது. தவிர இக் கற்பனைக் குழுவின் தலைவர் எனச் சிங்களத்தால் பரப்புரை செய்யப்படும் நெடியவன் என்பவர் 2009 யூலை மாதத்தில் கே.பியைத் தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரிலான கும்பல் தோற்றம் பெற்ற மறுகணமே தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர். இவரைப் போன்று இவரது சகாக்கள் அனைவரும் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியே இருக்கின்றார்கள். இவர்கள் எவருக்கும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் பற்றி இப்பொழுது எந்தக் கவலையும் கிடையாது. தாமும், தமது குடும்ப வாழ்க்கையுமாகப் பொது வாழ்விலிருந்து இவர்கள் அனைவரும் ஒதுங்கி விட்டார்கள். இப்படிப்பட்டவர்களின் அறிவுறுத்தலில் தமிழீழத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் முயற்சி இடம்பெற்றது எனக்கூறுவது நகைப்புக்கிடமானது.

அடுத்தவர் விநாயகம் என்பவர். இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் இந்தியாவில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இவர் தற்பொழுது பிரான்சில் அகதியாகத் தன்னைப் பதிவு செய்துள்ளார். தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்துக் கே.பியைத் தலைவராகக் கொண்டு ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பல் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் இவர் முக்கிய பாத்திரத்தை வகித்தவர். ஆனால் தமிழீழ மண்ணில் மீண்டுமொரு போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் இக்கும்பலை இவரோ அன்றி இவரது சகாக்களோ உருவாக்கவில்லை. மாறாகத் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை சிதைத்துத் தமிழீழத் தேசியத் தலைவருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் மாற்றீடாகச் சோரம்போகக்கூடிய தலைமை ஒன்றைத் தோற்றுவித்து, அதன் ஊடாகத் தமிழீழ மக்களின் விடுதலையுணர்வை மழுங்கடிப்பதே ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலையும், அதன் அரசியல் பிரிவாக ‘நாடுகடந்த அரசாங்கம்’ என்ற கும்பலையும் விநாயகமும், அவரது சகாக்களும் தோற்றுவித்ததன் நோக்கமாகும். ‘தலைமைச் செயலகம்’ என்ற இக்கும்பல் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இந்தியாவிலும், மலேசியாவிலும் தங்கியிருந்த இவர்கள், இயக்கச் சொத்துக்களைப் பயன்படுத்திக் கூண்டோடு தமது குடும்பங்களுடன் இப்பொழுது மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்து விட்டார்கள்.

தவிர இக்கும்பல் உருவாக்கப்பட்ட பொழுது ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்த அதன் பிரமுகர்களான கே.பி.ரெஜி போன்றவர்கள் ஏற்கனவே புலம்பெயர் தேசங்களில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வந்தவர்கள். அதிலும் கே.பி ரெஜி என்பவர் பிரான்சில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை மாவீரன் பரிதிக்கு எதிராகத் திருப்பி விட்டு, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட சேறுபூசும் படலங்களின் அரூப கரமாகத் திகழ்ந்தவர்.

தேசிய செயற்பாட்டாளர்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுப் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை சிதைப்பதும், போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகள், போட்டி விளையாட்டு விழாக்கள் போன்றவற்றின் மூலம் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே குழப்பங்களைத் தோற்றுவிப்பதையும் நோக்காகக் கொண்டு செயற்படும் இக்கும்பலுக்கும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளில் எவ்வித அக்கறையும் கிடையாது. இந்த வகையில் விநாயகம் என்பவரின் அறிவுறுத்தலில் தமிழீழத் தாயகத்தில் ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சிங்களம் கூறுவதும் நகைப்புக்கிடமானதே.

அடுத்தது வெடிவைத்தகல் பகுதியில் சிங்களப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட மூன்று இளைஞர்களின் பின்னணி பற்றியது. இம் மூன்று இளைஞர்களில் கோபி என்றழைக்கப்படும் செல்வநாயகம் கஜீபன் என்ற இளைஞர் மூன்று மாதங்களுக்கு முன்னரே சிங்களப் படையப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டவர். சிங்களப் படைகளால் காணாமல் போனோர் ஆக்கப்பட்டோரில் ஒருவராக விளங்கிய இவரைத் தேடி வந்த இவரது துணைவியாரான சர்மிளா என்ற கர்ப்பிணிப் பெண் கடந்த மாதம் சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டார். கொழும்பு நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொடூர வதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, கருச்சிதைவுக்கு ஆளாக்கப்பட்ட இப் பெண் தற்பொழுது காலி பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் படையப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்ட இவரது துணைவரையே கடந்த வாரம் வெடிவைத்தகல் பகுதியில் சுட்டுக் கொன்றிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கோபி என்ற பெயருடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘புதிய தலைவரைத்’ தேடுவதாகக் கூறிக் கடந்த மாதம் சிங்களம் மேற்கொண்ட புலிவேட்டையும், இவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தி திருமதி ஜெயக்குமாரி என்ற தாயைக் கிளிநொச்சியில் சிங்களம் கைது செய்தமையும், இப்பொழுது முற்றுகை நடவடிக்கையன்றில் இவரை சுட்டுக் கொன்றதாக சிங்களம் கூறுவதும் அப்பட்டமான நாடகங்கள் என்பதையே பட்டவர்த்தனமாக்குகின்றன.

அடுத்தது கோபியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்களில் இன்னுமொருவர் என சிங்களம் கூறும் அப்பன் என்றழைக்கப்படும் நவரட்ணம் நவநீதன் என்ற இளைஞர். இவரும் கோபியைப் போன்று ஏற்கனவே சிங்களப் படையப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டவர். தமிழீழத் தாயகத்தில் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்படுவதற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே இவரைக் கடத்திச் சென்ற சிங்களப் படையப் புலனாய்வாளர்கள், கோபியுடன் இவரையும் சுட்டுப் படுகொலை செய்து புலிவேட்டை நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருப்பதாகவே மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மூன்றாவது நபர் தெய்வீகன் என்பவர். 1995ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் வான்புலிகளின் வானோடிகளில் ஒருவராக விளங்கியவர். அனுராதபுரம் வான்படைத் தளம், கொலன்னாவ எரிபொருள் குதங்கள் ஆகியவற்றின் மீது வான்புலிகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் தமிழீழத் தாயகத்திலிருந்து வெளியேறிய இவரை, அண்மைய ஆண்டுகளில் இந்தியாவிலும், மலேசியாவிலும் கண்டதாகக் கூறுபவர்கள் ஐரோப்பாவில் இருக்கின்றார்கள். தவிர இவர் எரித்திரியாவில் தங்கியிருந்ததாகவும் கடந்த காலங்களில் சில கட்டாக்காலி தமிழ் இணையத்தளங்களை செய்தி வெளியிட்டும் இருந்தன.

இவ்வாறு வெளிநாட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்பட்ட இவர் எவ்வாறு கடந்த வாரம் வெடிவைத்தகல் பகுதியில் வைத்து சிங்களப் படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது மில்லியன் டொலர் கேள்வியாகவே உள்ளது. தேடப்பட்ட நபராக அறிவித்துக் கடந்த மாதம் இவரது படம் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைத் தமிழீழத் தாயகப் பகுதிகள் தோறும் சிங்களப் படைகள் ஒட்டிய பொழுது இவரது உறவினர்கள் எனக் கூறப்படுவோரால் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஆசியப் பிராந்தியத்தில் இவர் தங்கியிருப்பதாக சிலரும், வன்னியில் இவர் நிற்பதாக இன்னும் சிலரும் கூறி வந்தனர். எனினும் இத்தகவல்கள் எவையும் சுயாதீனமாக உறுதிசெய்யப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் முன்னாள் போராளியான நந்தகோபன் என்பவர் மலேசியாவில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக கட்டாக்காலி இணையத்தளங்கள் சிலவற்றில் செய்திகள் வெளிவந்த ஒரு வார இடைவெளிக்குள்ளேயே தெய்வீகனைத் தேடப்படும் நபராக அறிவிக்கும் சுவரொட்டிகளை தமிழீழத் தாயகத்தில் சிங்களப் படைகள் ஒட்டியிருந்தன. நந்தகோபனால் காட்டிக் கொடுக்கப்பட்டு தெய்வீகனைத் தேடப்படும் நபராக சிங்களம் அறிவித்ததா? இல்லையா? என்பது பற்றி ஆராய்வது இப்பத்தியின் நோக்கமன்று. அதேநேரத்தில் நந்தகோபன் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாகவே தெய்வீகனைத் தேடப்படும் நபராக சிங்களம் அறிவித்தது என்பதையும், தெய்வீகனின் படம் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் வெளியாகிய ஓரிரு நாட்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பதினாறு அமைப்புக்களையும், நானூற்று இருபத்து நான்கு புலம்பெயர் தமிழர்களையும் தடைசெய்யப்பட்டோராக அறிவிக்கும் முடிவை சிங்களம் எடுத்ததையும் நாம் உதாசீனம் செய்துவிட முடியாது.

நந்தகோபனைக் கடந்த மார்ச் மாதம் 6ஆம் நாளன்று மலேசியாவிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்ததாக தற்பொழுது சிங்களம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள பொழுதும், நந்தகோபன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட செய்தி மார்ச் 6ஆம் நாளுக்கு பல நாட்களுக்கு முன்னரே புலம்பெயர் தேசங்களில் அரசல் புரசலாகக் கசிந்திருந்தது. அதுவும் கட்டாக்காலி இணையத்தளங்கள் செய்தி வெளியிடும் முன்னரே மலேசியாவில் இருந்து நந்தகோபன் கொழும்பு கொண்டு செல்லப்பட்ட செய்தி புலம்பெயர் தேசங்களில் பரவியிருந்தது.

தவிர இதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘புதிய தலைவர்’ எனப்படும் சீலன் என்பவரை இந்தோனேசியாவில் வைத்து சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றதாக கடந்த ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் கட்டாக்காலி இணையத்தளங்கள் சிலவற்றில் செய்திகள் வெளிவந்திருந்தன. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடிகளில் ஒருவராக விளங்கிய அச்சுதன் என்பவரே சீலன் என்றும், இவரையே சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாகவும் அதே கட்டாக்காலி இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் இத்தகவல்களை இற்றைவரைக்கும் சிங்கள அரசு அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.

இத்தகவல்கள் மூன்று கேள்விகளைத் தோற்றுவித்துள்ளன. முதலாவது, எப்பொழுது மலேசியாவில் இருந்து நந்தகோபன் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார் என்பது. மற்றையது சீலன் அல்லது அச்சுதன் என்ற பெயருடைய வான்புலி எவராவது ஜனவரி மாதத்தில் சிங்களப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டாரா என்பது. மூன்றாவது இந்தியாவிலும், மலேசியாவிலும் காணப்பட்டதாகக் கூறப்பட்ட தெய்வீகன் என்ற வானோடி எப்பொழுது தமிழீழம் திரும்பினார் என்பது. இவையும் மில்லியன் டொலர் பெறுமதியான கேள்விகள்தான் இக்கேள்விகளுக்கான விடைகள் என்னவாக இருந்தாலும் ஒரு விடயத்தை மட்டும் நாம் உறுதியாகக் கூறலாம். சிங்களம் கூறுவது போன்று வெடிவைத்தகல் பகுதியில் மறைந்திருந்த பொழுது தெய்வீகன் சுட்டுக் கொல்லப்படவில்லை. மாறாக கோபியையும், அப்பனையும் கடத்திவைத்திருந்து வெடிவைத்தகல் பகுதியில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்தமை போன்று தெய்வீகனையும் சிங்களம் கடத்தி வைத்திருந்து விட்டுத் தற்பொழுது படுகொலை செய்துள்ளது என்பதுதான் அது. தமிழீழத் தாயகத்தில் தெய்வீகன் தங்கியிருந்தது உண்மையாக இருந்தால் அங்கேயே அவரை எப்பொழுதுதாவது பிடித்து வைத்திருந்துவிட்டுத் தற்பொழுது சிங்களம் படுகொலை செய்திருக்க வேண்டும் அல்லது இந்தியாவிலோ, மலேசியாவிலோ அவர் தங்கியிருந்தது உண்மையாக இருந்தால் அங்கிருந்து அவரைக் கொழும்புக்குக் கொண்டு சென்று தடுத்து வைத்து விட்டுத் தற்பொழுது வெடிவைத்தகல் பகுதியில் வைத்து அவரை சுட்டுப் படுகொலை செய்திருக்க வேண்டும்.

அடுத்தது ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை கோபி, அப்பன் ஆகியோருடன் இணைந்து தெய்வீகன் மேற்கொண்டார் என்ற சிங்களத்தின் குற்றச்சாட்டு. கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியாகத் தெய்வீகன் இருந்தார் என்பது என்னவோ உண்மையென்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கோபியோ, அன்றி அப்பனோ அங்கத்தவர்களாக இருந்தமைக்காக எவ்வித ஆதாரத்தையும் இற்றைவரைக்கும் சிங்களம் வெளியிடவில்லை. எனவே இரண்டு அப்பாவி இளைஞர்களுடன் தெய்வீகனையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘புதிய தலைவர்களில்’ ஒருவராகப் புலிப்பூச்சாண்டி காட்டி இவர்கள் மூவரையும் சிங்களம் படுகொலை செய்துள்ளது என்று நாம் கருத வேண்டியுள்ளது.

தவிர ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்பதோ, புதிதாக ஆயுத எதிர்ப்பியக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவது என்பதோ சாதாரண விடயங்கள் அல்ல. ஒரு தலைமறைவு ஆயுத எதிர்ப்பியக்கம் தோற்றம் பெறும் பொழுது அதன் தோற்றுவாய் பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாகவே பேணிப் பாதுகாக்கப்படும். அவ் எதிர்ப்பியக்கத்தில் அங்கம் வகிப்பவர்களோ, அன்றி அதற்குத் தலைமை தாங்குபவர்களோ வெளியாட்களுடன் இலகுவதாகத் தொடர்புகளைப் பேண மாட்டார்கள். தமக்கான ஆயுதங்களை எதிரியிடம் பறித்தெடுத்தும், உணவையும், ஏனைய வளங்களையும் தாம் மறைந்திருக்கும் இடங்களில் உள்ள மக்களிடம் இருந்துமே இவர்கள் பெற்றுக் கொள்வார்கள். வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் தொலைபேசிகளில் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். உலக விடுதலை இயக்கங்களின் வரலாறு மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாறும் இப்பாடத்தையே புகட்டி நிற்கின்றது.

எனவே புலம்பெயர் தேசங்களில் நெடியவன் குழு என்ற பெயரில் எந்தவொரு குழுவும் இல்லை என்பதற்கு அப்பாலும், விநாயகம் குழு என்று கூறப்படும் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலுக்கும், அதன் அரசியல் பிரிவான உருத்திரகுமாரனின் தலைமையிலான ‘நாடுகடந்த அரசு’ என்ற கும்பலுக்கும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளில் எவ்வித அக்கறையும் கிடையாது என்பதற்கு அப்பாலும், ஒரு தலைமறைவு எதிர்ப்பியக்கத்தை ஆரம்பிக்கும் எண்ணம் தெய்வீகனுக்கு இருந்திருக்கும் பட்சத்தில் வெளிநாடுகளில் உள்ள எவருடனும் அதனைப் பற்றித் தொலைபேசியில் நிச்சயம் அவர் கதைத்திருக்க மாட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் லெப்.கேணல் தரத்தில் விளங்கியிருக்கக்கூடிய தெய்வீகனுக்கு தலைமறைவு வாழ்க்கையில் இரகசியம் பேணப்படுவதன் அவசியம் தெரியாத ஒன்றல்ல.

எனவே கோபி, அப்பன் ஆகியோரைப் போன்று தெய்வீகன் என்ற இளைஞரையும் புலிப்பூச்சாண்டி காட்டிக் கொடூரமான முறையில் சிங்களம் படுகொலை செய்துள்ளது என்றே நாம் கருத வேண்டியுள்ளது.

ஆனாலும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பது போல சிங்களத்தின் புலிப்பூச்சாண்டி நாடகமும் இப்பொழுது பிசுபிசுக்கத் தொடங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நியாயம் கற்பித்துத் தமிழீழத் தாயகத்திலிருந்து ஆயுதப் படைகளை விலக்க முடியாது என்று இவ்வாரம் சிங்களம் அறிவித்திருப்பதும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிபவர்கள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகளைக் கைது செய்தும், கடத்திச் சென்று காணாமல் போகச் செய்தும், படுகொலை செய்யும் சத்தம் சந்தடியின்றி தமிழின அழிப்பு நடவடிக்கைகளை சிங்களம் முடுக்கி விட்டிருப்பது, அதன் புலிப்பூச்சாண்டி நாடகத்தை தோலுரித்துக் காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.
– சேரமான்

நன்றி: ஈழமுரசு

Advertisements