மன்மோகன் சிங்கின் சரணடைவு வாழ்வு அம்பலப்படுத்தும் அவரது உதவியாளரின் நூல்

manmohan-singh-sonia-gandhi-01

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பணியாற்றிய சஞ்சயா பாரு ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலில் கொங்கிரசின் ஆட்சிக் காலத்தில் நடந்த விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளதுடன், மன்மோகன் சிங்கின் அடிமைத்தனமான அல்லது சரணடைவான அவரது வாழ்வையும் அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் வெளிவந்து, தங்கள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதால் கொங்கிரஸ் கட்சி கடும் சீற்றம் அடைந்துள்ளது.

The Accidental Prime Minister – The Making and Unmaking of Manmohan Singh (தவறுதலாக வந்த பிரதமர் : மன்மோகன் சிங் செய்ததும், செய்யாததும்) என்ற அந்த 300 பக்க நூலில் அவர் எழுதியுள்ள முக்கிய விடயங்களை இந்திய ஊடகங்கள் போட்டிபோட்டு வெளியிட்டு வருகின்றன. அதில், பிரதமருக்கு இணையான அதிகார மையத்தை உருவாக்கி, பிரதமரை சோனியாகாந்தி பலவீனப்படுத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, தமது ஆட்சியின் 2வது ஐந்தாண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவிடம் முற்றிலுமாக சரணடைந்துவிட்டதாக சஞ்சயா பாரு அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவே கட்சிக்கு முற்றிலுமாக பணியும் போக்கை பிரதமர் மன்மோகன்சிங் கடைப்பிடித்ததாக சஞ்சயா பாரு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தான் எழுதிய நூல் நேர்மையான, சமநிலையான கருத்துக்களையும், தகவல்களையும் கொண்டதாகும் என்று கூறியுள்ள சஞ்சயா பாரு, மன்மோகன் சிங் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை மட்டுமே ஊடகங்கள் எடுத்து வெளியிட்டுவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், அவரது குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், இந்த நூல் வேண்டுமென்றே தாமதமாக இப்போது தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இன்னொரு பக்கம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், புத்தகம் வெளிவரும் நேரத்தை வெளியீட்டாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். தான் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார் சஞ்சயா பாரு.

இதேவேளை, ‘சஞ்சய பாரு தாம் எழுதிய புத்தகத்தின் விற்பனைக்காக தான் ஏற்கனவே வகித்த உயர்ந்த பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், பிரதமரின் மதிப்பை கொங்கிரஸ் குலைத்ததாக உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிப்பதாகவும் இந்தியப் பிரதமர் அலுவலகம் கண்டன அறிக்கையன்றை வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தத் தேர்தல் சூட்டுப் பிரச்சாரத்திற்குள் எதிர்க்கட்சியினருக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ‘பிரதமர் மன்மோகன் சிங், இதுவரை சுதந்திர இந்தியா கண்ட பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர்’ என்று பா.ஜ.க இன்றளவும் விமர்சித்து வருகிறது. அதை உறுதிப்படுத்துகிற வகையில், மன்மோகன் சிங்கைப் பற்றி அவருடன் இணைந்து பணியாற்றிய ஊடக ஆலோசகர் சஞ்ஜயா பாரு எழுதிய புத்தகம் படம்பிடித்துக் காட்டுகிறது என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. ‘மத்தியில் இரட்டை அதிகார பீடங்கள் இருப்பது குறித்து நான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவந்தேன். அதை இப்போது சஞ்சயா பாருவின் நூல் நிரூபித்துவிட்டது என பா.ஜ.க. தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

இதேவேளை, சோனியா குடும்ப இரகசியங்கள் மே 16 அன்று வெளியே வந்துவிடும் என பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சட்டீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

சஞ்சயா பாருவின் நூலில் இருந்து தொகுப்பட்ட விடயங்கள் இனி வருபவை….

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தனது சொந்தக் கட்சி (கொங்கிரஸ்) மூலம் முன்னெடுத்துச் செல்வது கடினம் என்று மன்மோகன் சிங் கருதினார். அப்போது, அவர் சோனியாவுடன் இந்த விவகாரம் குறித்து 2008ம் ஆண்டு யூன் 17ம் திகதி மாலையில் பேசினார். இந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நெருக்கடிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பணிந்தால், பிரதமர் பதவியை விட்டுத்தான் விலகுவேன் என்று அவர் சோனியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். பிரதமர் பதவிக்கு வேறு ஆளைப் பாருங்கள் என்றும் சோனியா காந்தியிடம் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

அத்துடன், பல்வேறு முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை பிரதமர் இரத்து செய்தார். இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகப்போவதாக ஊடகங்களில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்தன. அப்போது என்னை (சஞ்சயா பாரு) அழைத்த அவர், ஊடகங்களிடம் எதையும் கூறக் கூடாது என்று என்னிடம் தெரிவித்தார். அதன் பின் என்னை மீண்டும் அழைத்த பிரதமர், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை சோனியாவிடம் தெளிவாகத் தெரிவித்து விட்டதாக தெரிவித்தார்.

அடுத்த நாள் காலையில் பிரதமர் வீட்டுக்கு நேரில் வந்த அப்போதைய மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அதே நேரத்தில், பிரதமரைப் பதவி விலகாமல் இருக்க அவரைச் சமாதானப்படுத்துமாறு மாண்டேக் சிங் அலுவாலியாவை சோனியா கேட்டுக் கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதன் பின், அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசுக்கு கொங்கிரசின் அனுமதி கிடைத்தது. பிரதமரும் பதவியில் தொடர்ந்தார்.

******

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அந்த வெற்றி, தனது வெற்றி என்று மன்மோகன் சிங் கற்பனை செய்து கொண்டதுதான் அவர் செய்த முக்கிய தவறு. அவர் அந்த எண்ணத்தைக் கொண் டிருந்தார். தனது செயல்பாடுகளும், விதியும்தான் தன்னை மீண்டும் பிரதமர் ஆக்கியதே தவிர சோனியா காந்தி அல்ல என அவர் எண்ணினார். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக, சில வார காலத்திலேயே கொங்கிரஸ் கட்சியால் மன்மோகன் சிங் விசப் பல்லைப் பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டு விட்டார். மத்திய அமைச்சர்கள் நியமனம் உட்பட அனைத்திலும் சோனியாதான் முடிவுகளை எடுத்தார். மன்மோகன் சிங் சோனியா காந்தியிடமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடமும் சரணடைந்து விட்டதாகவே தோன்றுகிறது. ‘இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. அது குழப்பத்தை தந்தது. கட்சித் தலைவர்தான் அதிகார மையம் என்பதை நான் ஏற்க வேண்டியதாயிற்று. கட்சிக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது’ என்று மன்மோகன் சிங் என்னிடம் கூறினார். தனது விருப்பப்படி அமைச்சரவையையும் அமைச்சர்களையும் நியமிக்க முடியும் என மன்மோகன் சிங் கருதினார். ஆனால், அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிற அதிகாரத்துடன், அரசின் மீதான கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்துக்கொள்வதே சோனியாவின் நோக்கமாக இருந்தது. மன்மோகன்சிங்குடன் 1991-93ம் ஆண்டு காலக்கட்டத்தில் இணைந்து பணியாற்றிய சி.ரங்கராஜனைத்தான் நிதி அமைச்சராக ஆக்க வேண்டும் எண்ணினார். ஆனால் மன்மோகன் சிங்கை ஆலோசிக்காமல் பிரணாப் முகர்ஜியை சோனியா காந்தி தன் விருப்பப்படி நிதி அமைச்சராக்கினார். அத்துடன், அமைச்சர்களை நியமிப்பதில் மன்மோகன் சிங்கை சோனியா காந்தி ஆலோசிக்கக் கூட இல்லை.

அத்துடன், 2-ஜி ஊழல் அலைக்கற்றைப் பிரச்சினை பெரிதாவுவதற்கு முன், ஆ.ராசாவை அமைச்சரவையில் சேர்க்காமல் இருக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் முயற்சித்தார். ஆனால் 24 மணி நேரத்தில், அவர் தனது சொந்தக் கட்சி மற்றும் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து விட்டார். டி.ஆர்.பாலுவையும் அமைச்சரவையில் சேர்ப்பதை மன்மோகன் சிங் எதிர்த்தார். அதில் அவர் நினைத்ததை செய்து காட்டினார். ஆனால், ஆ.ராசா விடயத்தில் அது முடியவில்லை.

******

கொங்கிரஸ் கட்சியை வெற்றிக்கு வழிநடத்தியபோதும்கூட, 2004ம் ஆண்டு பிரதமர் பொறுப்பை சோனியா காந்தி ஏற்காமல் அதிகாரத்தை துறப்பது போல காட்டிக் கொண்டது அரசியல் குறிக்கோளை அடைவதற்கான உத்திதான். அதிகாரம்தான் ஒப்படைக்கப்பட்டதே தவிர, அதை செலுத்துகிற உரிமை அல்ல. கொங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் கொங்கிரஸ் தலைவர் சோனியாவின் மனதுக்கு உகந்தவர்களாகத்தான் நடக்க விரும்பினர். அரசியல் அவசியம் என்ற வகையில் கூட பிரதமருக்கு அவர்கள் விசுவாசமாக இருந்தது இல்லை. அந்த வகையில் சோனியா அல்லது அவரது கூட்டாளிகள் எதிர்பார்த்தபடி, மன்மோகன் சிங் இதை அவர்களிடம் எதிர்பார்க்கவும் இல்லை. பிரதமர் மன்மோகன்சிங் 2009ம் ஆண்டு இரண்டாவது தேர்தல் வெற்றிக்கு பின்னர் என்னைப் பிரதமர் அலுவலகத்தில் தனது செயலாளர் ஆக்க விரும்பினார். ஆனால் இது கட்சியில் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாகக்கூறி, என்னை தனது அலுவலகத்தில் பணி அமர்த்த இயலவில்லை என கூறி விட்டார்.

இவ்வாறு அவர் அந்த நூலில் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

– வெற்றிநிலவன்

நன்றி: ஈழமுரசு

Advertisements