சிறிலங்கா: போரும் பொய்த்துப் போகும் நல்லிணக்க முயற்சிகளும்

jeyakumari-vipoosikaதற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு The Platform என்னும் இணையத்தளத்தில் Anupama Ranawana எழுதியுள்ள Sri Lanka: Reconciliation After War கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் சிறிலங்கா தொடர்பில் அமுல்படுத்தப்பட்ட தீர்மானமானது நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவில் தொடரப்பட்ட போரின் போது அதில் பங்கு கொண்ட சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போர்க் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான வழியை உருவாக்கியுள்ளது.

“அனைத்துலக மனித உரிமைச் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் போன்றவை மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைவாத சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் அதனை மேலும் அதிகரித்தலுக்கான சிறப்பு அறிக்கையிடலாளரின் ஆணைகளை உணவுக்கான உரிமை என்ற அடிப்படையில் மேலும் விரிவுபடுத்துவதற்கும் சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் செயலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனத்தைச் செலுத்தி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையானது நாட்டில் நீதியையும் பொறுப்பளிப்பையும் நோக்கிய முதலாவது நகர்வாக சிறிலங்கா மீதான பேரவையின் தீர்மானம் அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அனைத்துலக சமூகத்திடம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த அடிப்படையில், மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கு ஏனைய நாடுகள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கான உந்துதலை இத்தீர்மானம் வழங்கியுள்ளது. 47 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையின் உறுப்பு நாடுகளில் 25 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தும், 13 நாடுகள் இதனை எதிர்த்தும், எட்டு நாடுகள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்தும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

தமிழர்கள் அதிகம் வாழும் இந்தியாவானது இதற்கு முன்னர் பேரவையில் முன்வைக்கப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் ஆதரித்து வாக்களித்தது. ஆனால் இந்தத் தடவை இந்தியா தீர்மானத்தை ஆதரிப்பதற்கான வாக்கெடுப்பைப் புறக்கணித்து நடுநிலை வகித்துள்ளது. இது இத்தீர்மானத்தின் பலம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பளிப்பதுடன், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. வடகொரியாவில் நிலவிய சூழல் தொடர்பாக கலந்துரையாடிய போது, நாங்கள் தற்போது அனைத்துலக சமூகத்திடம் சவாலை விடமுடியும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் மீது உண்மையான விசாரணையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் மனித உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு ஆணையாளர் நவி பிள்ளை விளக்கியிருந்தார்.

வரலாற்று ரீதியான பதிலை வழங்குவதில் சிறிய பிரச்சினை ஒன்று காணப்படுகிறது. கடந்த காலங்களில் அனைத்துலக சமூகத்தின் தலையீட்டை சிறிலங்கா நிராகரித்து வந்தாலும், சிறிலங்கா அரசாங்கமானது தான் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்பதாகவும், சிறிலங்காவுக்கு வெளியே இது தொடர்பில் வரையப்படும் எந்தவொரு கோட்பாடும் மேற்குலகின் புதிய கொலனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறிவந்தது. இதற்கு சீன அரசாங்கத்திடமிருந்தும் மிகப் பலமான ஆதரவு கிடைக்கப் பெற்றது. இந்த விடயமானது சிறிலங்காவின் சிவில் சமூகமும் அனைத்துலக சமூகமும் இணைந்து சிறிலங்கா மீது போர்க் குற்றச்சாட்டு விசாரணையை கிட்டிய எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கான ஆளுமையைக் கொண்டுள்ளனவா என்கின்ற கேள்வியை எழுப்புகிறது. சிறிலங்கா சமூகத்திற்குள் அதாவது சிறிலங்காவின் கீழ் மட்ட சமூகத்திலிருந்து சிறிலங்கா இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

சிறிலங்கா மீது போர்க் குற்ற விசாரணை முற்றிலும் சுயாதீனமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டால் இதன்மூலம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதன் இராணுவப் படைகளுக்கும் எதிரான பல்வேறு குற்றங்களை உறுதிப்படுத்த உதவலாம். இதேவேளையில், விசாரணையை மேற்கொள்வதற்கான நகர்வுகள் ஏற்கனவே பிளவுபட்டுள்ள, ஆழமாக உள்ள இனப்பிரச்சினையை மேலும் விரிவுபடுத்தலாம். தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. வடக்கில் கலாசார ரீதியான கொலனித்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கமானது இராணுவமயமாக்கல்கள் மற்றும் சிங்களமயமாக்கலை மேற்கொண்டு வருகிறது.

சிறிலங்காவில் அண்மையில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெற்ற நாட்களிலும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சிறிலங்காவின் வடக்கிற்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. போருக்குப் பின்னான சூழலில் சிறிலங்காவில் பெண்கள் பல்வேறு விதமான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

போரின் போது தமது கணவனை இழந்த பெண்கள் பலர் தமது குடும்பத் தேவைகளை நிறைவு செய்வதற்காக விபச்சாரத் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தி புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளது. இவ்வாறான பல்வேறு குழப்பங்கள் சிறிலங்காவில் நிலவுகின்ற போதிலும், தனது நாட்டில் சிறுபான்மை இனங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என தேசிய ஒற்றுமை மாநாட்டில் அண்மையில் உரையாற்றும் போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சிறிலங்கா அரசாங்கத்தின் தலைமையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் மீளிணக்கப்பாட்டுத் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்க விரும்புவதாகவோ அல்லது இதனைத் தவறாகப் புரிந்துள்ளதாகவோ நினைக்க முடியும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

போரின் இறுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். எனினும், சிறிலங்கா அரசாங்கத்தை முற்றிலும் முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணையும் தமிழீழ விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட மீறல்களைக் கூறமுன்வருபவர்களைப் புறந்தள்ளுவதாக அமையும். சிறிலங்காவில் நிலவும் பிரிவினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உள்ளுர் குழுக்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்பதை, அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நகர்வுகளைத் தடுப்பதற்காக சிறிலங்காவால் முன்னெடுக்கப்படும் அணுகுமுறைகள் சிதைவுறச் செய்துவிடும்.

விசாரணை என்பது சட்ட ரீதியான, நீதியான, நிறுவக ரீதியான பரிந்துரைகளுக்கு மட்டுமே பதிலளிக்கும். மீளிணக்கப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிலைமாறும் நகர்வுகள் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களையும், ஏற்கனவே ஏற்பட்ட வடுக்களையும் இல்லாமற் செய்யும். போரின் வடுக்களை ஆற்றுவதற்கான உறுதியான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டு மக்களின் வடுக்களை எவ்வாறு நீக்குவது, முறைசார் மன்னிப்புக்களைக் கோருவது, சாட்சியங்களின் பதிவுகள், மதத் தலைவர்களின் நடவடிக்கைகள் போன்றன கலந்துரையாடப்பட வேண்டும். துரித மீளிணக்கப்பாட்டை முதன்மைப்படுத்தாது, சிறிலங்காவானது மோதலிலிருந்து சமாதானத்திற்குச் செல்ல முடியாது. இதன்மூலம் வெற்றிகரமான போர்க் குற்ற விசாரணையைக் கூட மேற்கொள்ள முடியாது. இந்த விசாரணை முற்றிலும் செல்லுபடியற்றதாகவே இருக்கும்.

புதினப்பலகை- நித்தியபாரதி.

Advertisements