அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட, புலிக்கதையின் முதல் பாகம்

gota ltte drama

இந்த ஆண்டில் வெற்றிகரமாக திரையிடப்பட்டது கோத்தபாயவின் “புலிகள்” என்ற கொலிவுட் திரைப்படம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிற்கு சிறந்த திரைப்பட தயாரிப்பாளர் விருது வழங்கும் விழா நடத்த அரசாங்கம் வெகு விரைவில் ஏதாவது ஏற்பாடுகளைச் செய்தாலும் செய்யலாம். ஏனென்று அனைவரையும் யோசிக்கத் தோன்றுகிறதா?

இலங்கையில் அண்மைக்காலமாக பரப்பி விடப்பட்ட புலிக்கதையும், அது எவ்வாறு உருவாக்கப்பட்டு இன்று முற்றுப் பெற்றிருக்கின்றது என்பதையும் பற்றியே நாம் இங்கு சற்று பார்க்கவுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமான காலகட்டத்தில் என்ன செய்யலாம், போரில் நசுக்கப்பட்டு, மீளெழும்பும் தமிழர்களை மீண்டும் எவ்வாறு அடக்கி வைக்கலாம் என பல திட்டங்களை தீட்டி வந்த அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீளிணைப்பு என்ற புதிய தொடரை ஆரம்பித்து வைத்தனர்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, அத்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதை ஏற்கனவே அறிந்து கொண்ட அரசாங்கம் அதனைத் திசை திருப்பும் முயற்சியினையே மேற்கொண்டது.

அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில், விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக கோபி என்றழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம் நபர் செயற்படுவதாகவும் அவர், விடுதலைப் புலிகளின் இயக்கத்தை உயிரூட்டி மீளிணைக்க ஆள் திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசும் அரச ஊடகங்களும் பிரசாரம் செய்தன.

கோபி என்ற நபருடன், அப்பன், தேவியன், போன்றோரின் பெயரையும் இணைத்து, இலங்கை அரசாங்கம் புலிகள் என்ற புதிய திரைப்படத்திற்கு பிள்ளையார் சுழியை இட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு தேடுதல்களை நடத்தியதுடன், வடக்கு கிழக்கில் படைத்தரப்பினரையும் அதிகப்படுத்தியது. இந்த நிலைமையானது தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பதற்ற நிலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோபி என்பவர் கிளிநொச்சியில் மறைந்திருப்பதாகக் கூறி, அவர் மறைந்திருந்த வீட்டின் உரிமையாளர் என குற்றம் சுமத்தி, காணாமல் போன மகன்மாரை போராட்டங்களின் மூலம் தேடிய ஜெயக்குமாரி என்ற பெண்ணையும் அவரது மகளையும் அரசாங்கம் முதல் முதலில் சிக்க வைத்தது.

காணாமல் போனவர்களை தேடியறியும் போராட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டதே இவர்களின் கைதுக்கு காரணம்.

இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதுடன், காணாமல்போனவர்களைத் தேடியறியும் உறவுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைப்பது அரசின் திட்டங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை.

ஜெயக்குமாரியின் வீட்டுக்கு அருகில் சென்ற பாதுகாப்பு தரப்பினர், அவரிடம், உரையாடிக் கொண்டிருந்தபோதே வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்பதற்கு முன்னரே வீட்டுக்குள் பொலிஸார் சென்றிருந்தனர். புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறிய கோபி எனப்படுபவர் ஜெயக்குமாரியின் வீட்டில் மறைந்திருந்து பொலிஸாரின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக பாதுகாப்புத் தரப்பினர் செய்தி வெளியிட்டனர்.

அத்துடன், அவரது விட்டிலிருந்து புதைக்கப்பட்ட ஆயுதங்களைத் தேடியறியும் நவீன கருவிளை கைப்பற்றியதாக பாதுகாப்பு தரப்பினர் கதையினை புனைந்திருந்தனர்.

உண்மையில், ஜெயக்குமாரியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஜெயக்குமாரியின் வீட்டில் பாதுகாப்பு தரப்பினராலேயே வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வைத்த பொருளை அவர்களே எடுத்துவிட்டு, கோபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜெயக்குமாரியும் அவரது மகள் விபூசிகாவையும் புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு படையினரும், கைது செய்தனர். தற்போது தயாயும் மகளும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புலிக்கதையினைத் தொடர்வதற்கு, படையினரைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தேடுதலை நடத்தி பல பேரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டது.

இதனையடுத்து, கோபியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து, 7 பெண்கள் உட்பட 65 பேரை அரசாங்கம் கைது செய்தது.

அத்துடன், கோபி தேவியன் அப்பன் ஆகியோர் பற்றி சரியான தகவல்கள் வழங்குவோருக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பாதுகாப்பு தரப்பால் அறிவிக்கப்பட்டு, சுவரொட்டிகளும் பல இடங்களில் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் கோபியைக் கைது செய்துவிட்டதாக பாதுகாப்பு பிரிவினர் அறிவித்திருந்தனர்.

உண்மையில் கோபி என்பவர் யார்?, அவருக்கும் அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன?

கோபி என்ற நபர் இராணுவத்தின் உளவாளியாக பணியாற்றியுள்ளார். அவர் வாரத்தில் இரண்டு முறை இராணுவ முகாமிற்குச் சென்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவரை வழிநடத்தும் மேலதிகாரியாக இராணுவ கப்டன் ஒருவர் இருந்துள்ளார்.

இதன் அடிப்படையில், நெடியவன் என்ற புலிகளின் தலைவரது அடுத்த தலைவர் என்று கூறப்படும் நந்தகோபன் என்பரை மலேசியாவில் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வந்ததாக பாதுகாப்பு தரப்பு ஊடகங்களில் செய்திகளைப் பரப்பியது.

அப்படியான ஒருவர் கைது செய்யப்பட்டாரென செய்தி வெளியிட்ட போதும், அவரது புகைப்படங்களையோ ஏனைய விபரங்களையோ பாதுகாப்பு தரப்பினர் வெளியிட வில்லை.

பாதுகாபபு தரப்பினர் மேற்கொண்டு வரும் புதிய புலிக்கதை, பொய்யானது என்பது சர்வதேசத்திற்கு தகவல் கசிய ஆரம்பித்ததும் அதனை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்த அரசாங்கம், புலிகளின் புதிய தலைவர் உட்பட மூன்று பேரை தேடுதல் நடத்துவதாக கூறி, யாரும் அறியாத மூவரைச் சுட்டுக் கொன்று விட்டு, தான் எழுதிய கதைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

இன்று வவுனியா நெடுங்கெணியில் பிரதேசத்தில் கோபி, அப்பன், தேவியன் என்ற மூவரையும் சூட்டுக் கொன்றதாக படைத்தரப்பு அறிவித்தது. கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட கோபி என்பவர் எப்படி காட்டுக்குள் சென்றார்?.

அவருக்கும் ஏனைய இருவருக்கு எப்படி ஆயுதங்கள் கிடைத்தன?. இவர்கள் காட்டுக்குள் இருக்கின்றனர் என்ற தகவலை வழங்கியது யார்? இப்படியான பல கேள்விகள் எழுகின்றன.

இவ்வாறான நிலையில், இராணுவச் சுற்றி வளைப்பிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்திற்கு சென்று செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பதவிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மரண விசாரணைகள் அனுராதபுரம் நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவும் பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட மூவரின் சடலங்களும் பதவிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன, ஆனால் பதவிய நீதவானிடம் விசாரணைகள் ஒப்படைக்கப்படாது, ஏன் அனுராதபுரம் நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டன என்பதே இதற்கான காரணமாகும்.

இந்த புலி வேட்டை ஒபரேஷனை நடத்தி முடிக்க அதிகம் செலவளித்துள்ள அரசாங்கம் நெடுங்கேணிப் பிரதேசத்தில் 2000 இற்கும் மேற்பட்ட படையினரையும் அப்பகுதி எங்கும் குவித்திருந்தது.

உயர் பதவியிலிருக்கும் சில பேருக்கு மட்டுமே தெரிந்த புலிக்கதை நாடகம் அநேக படையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது.

இலங்கை அரசாங்கம், தனது புலிக்கதையினைக் காரணம் காட்டியே புலம் பெயர் தமிழ் சிவில் அமைப்புக்களை, தடை செய்தது. மீண்டும் உருவாக்கப்படும் புலிகளுக்கு உதவி செய்வதாகக் கூறியே அரசாங்கம் இந்த தடை செய்துள்ளது.

அத்துடன், 424 தனிநபர்களையும் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது. உண்மையில், அரசாங்கம் இதனை மேற்கொள்வதற்கு என்ன காரணம்?

புலம் பெயர் அமைப்புக்கள் தாயகத் தமிழர்களுக்கு வழங்கும் உதவிகளை தடுத்து நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

அதேபோல், புலம் பெயர் அமைப்புக்கள் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட முக்கிய பங்காற்றின. இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தீவிரமாக சர்வதேச தளத்தில் செயற்பட்டன.

எப்படிப் பேசிப் பார்த்தாலும் தம் பக்கம் சார மறுக்கும் இந்த அமைப்புகளை பழி வாங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருந்தது. இதனால் புலிக்கதை கட்டி அந்த அமைப்புகளை பயங்கரவாதத்திற்கு உதவும் அமைப்புகள் என்று தடை செய்தது.

கிளிநொச்சியில் ஜெயக்குமாரியின் வீட்டில் ஆரம்பித்த “ புதிய புலிகள்” என்ற கோத்தபாயாவின் சர்வதேச விருதுக்கான கொலிவுட் திரைக்காவியம் வவுனியா நெடுங்கேணியில் முற்றுப் பெற்றது.

அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட, புலிக்கதையின் முதல் பாகம் முடிந்தாலும், அடுத்தடுத்த பாகங்கள் பல புதிய புலிக்கதைகளுடன் விரைவில் வெளிவரலாம்.

போரின் பின்னர் பயங்கரவாதத்தை அழித்துவிட்டதாக கோசம்பொட்ட மகிந்த அரசாங்கம் புலி வாலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றது. இதில்எத்தனை அப்பாவி இளைஞர் யுவதிகள், அப்பாவிக் குடும்பப் பெண்கள் பலிக்கடாவாகப் போகின்றனர் என்று தெரியாது.

இலங்கை வாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும். புலிக்கதை நாளை கிழக்கில் ஜிகாத் கதையாக மாறவும் சந்தர்ப்பம் உள்ளது.

இலங்கையில் நடக்கும் இந்த புனைக் கதைகளை அவதானித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

 

 

Advertisements